பறவைகளை தேடி – how to start bird warching

Spread the love

பறவைகள்…..இந்த அழகிய உலகில் என்னை பிரமிக்கவைத்த மிகச் சிலவற்றில் பறவைகளும் ஒன்று. பள்ளி பருவத்தில் எனக்கு தெரிந்தவரை மைனா, காகம், பருந்து, கொக்கு இவை மட்டுமே. பருந்து என்றால் கோழி குஞ்சுகளை தூக்கி செல்லும்.. காகம் என்றால் கழிவுகளை சாப்பிட்டும் என்று மட்டும் தெரியும். கழிவுகளை அகற்ற மனிதற்களுக்கு உதவியாய் இருப்பதால் காகத்திற்க்கு “நகரத்தின் தோட்டி” என்று பள்ளியில் சொல்லி கொடுத்தது மனதிற்கும் வரும். கொக்குகளை பார்க்கும் பொழுது மட்டும் அதன் உடலமைப்பு குழப்பத்தை ஏற்படுத்தும். சில சிறியதாயும் சில பெரியதாயும், அலகு மற்றும் கால்கள் சில மஞ்சள் மற்றும் சில கருப்பு நிறத்திலும் இருந்தது…. ஆனால் அந்த குழப்பமே என்னையும் ஒரு பறவைகள் புகைப்பட கலைஞர் ஆக்க போகிறது என்று எனக்கு அப்போது தெரியாது.
18.3.15 அன்று எனது பெங்களுர் நண்பர் அசோக்குமாருடன் கர்நாடக மாநிலம் கபினி புலிகள் சரணாலயத்திற்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்டது எனது வாழ்க்கையின் திருப்புமுனை என்று சொல்லலாம். காட்டில் எண்ணிலடாங்கா பறவைகள் இனிய கானம் ஒலித்து கொண்டு எங்கள் ஜீப்பை கடந்து பறந்து சென்றது என்னை வியக்க வைத்தது. இந்தியாவில் இவ்வளவு அழகிய இருக்கிறதா? நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கவலை மனதில் மிகுந்த பாரமாய் அழுத்த துவங்கியது. ஜீப்பில் எங்களை தவிர அனைவரும் மிக பெரிய கேமரா உபகரணங்களுடன் பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுத்து தள்ளினர். சுமார் 40 வகையான பறவைகளை அனைவரும் அதனை இனம் கண்டு பெயரை சொல்லி ஆனந்தமைடைந்து கொண்டுயிருந்தார்கள். நாங்கள் இருவரும் மட்டும் பறவை இனம் எதுவும் தெரியாததால் கவலையுடன் ரசிக்கவும் முடியாமல் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தோம். அன்றே நாமும் பறவைகளின் இனங்களை கற்று கொண்டு பெரிய கேமராவுடன் வந்து ரசிக்க வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டேன்.
எனக்கு தெரிந்த கேமரா ஞானத்தில் சுமாரான Nikon P900 என்ற கேமரா வாங்கி கண்ணில் படும் பறவைகளை எல்லாம் போட்டோ எடுக்க துவங்கினேன்.ஏதாவது மரத்தில் அருகில் நின்று உற்று நோக்கினால் மரத்தின் உள்ள விதவிதமான பறவைகள் தென்பட்டது. அதன் பெயர், இனம் எதுவும் தெரியாமலே போட்டோ எடுத்து கொண்டிருந்தேன். நான் முன்பே கொக்குகள் பற்றி சொல்லியிருந்தேன். இப்பொழுது நான் எடுத்த கொக்குகள் போட்டோக்களை கம்ப்யூட்டர் திரையில் நிறுத்தி பார்த்து கொண்டிருந்தபொழுது எல்லாமே ஒன்றுகொன்று வித்தியாசமாக இருப்பது நன்றாக தெரிந்தது. சில பேரிடம் விசாரித்த பொழுது யாருக்கும் சரியாக தெரியவில்லை.
இறுதியில் BIRDS OF INDIAN SUBCONTINENT என்ற புத்தகம் கண்ணில் பட்டது. கொக்கு பற்றிய என்னுடைய சந்தேகங்களை அது தீர்த்து வைத்தது. தழிழ்நாட்டில் மட்டும் 4 வகையான கொக்குகள் இருப்பதை அறிந்து ஆச்சரியபட்டு போனேன். நான்கிற்கும் சிறு சிறு வித்தியாசங்களை இருந்தன. அது தவிர நான் போட்டோ எடுத்த அனைத்து பறவைகளின் இனம், பெயர்களை தெரிந்து கொள்ள அந்த புத்தகம் பெரிதும் உதவியது. பெயர்கள் தெரிந்த புகைப்படம் எடுக்க ஆரம்பித்தது உற்சாகம் பற்றி கொண்டது. நிறைய ஊர்களுக்கு பயணம் செய்து பறவைகளை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.ஒரு வருடத்தில் நான் பார்த்து புகைப்படம் எடுத்த பறவைகளின் எண்ணிக்கை 100ஐ தொட்டது. ஆச்சரியம் நம்மை சுற்றி இவ்வளவு பறவைகளா என்று.
13.3.17 அன்று என்னிடம் இருந்த Nikon P900 கேமராவுடன் மீண்டும் கபினி விஜயம். அங்கு ஒரு சபாரியின் போது George Jolly என்ற புகைப்பட கலைஞர் அறிமுகமானார். என் புகைப்படங்களை பார்த்து என்னை மிகவும் பாராட்டி நீங்கள் என்னை போன்ற விலை உயர்ந்த கேமரா வாங்கினால் நீங்களும் சிறந்த புகைப்பட கலைஞர் ஆகலாம் என்றார்…அவரிடமே என்ன கேமரா வாங்குவது என்று கேட்டு ஊர் திரும்பியவுடன் முதல்வேளையாக அவர் சொன்ன கேமரா வாங்கி விட்டேன். George Jolly அன்று ஆரம்பித்து வைத்த புகைப்பட கலைஞர் என்ற பயணம் இன்று வரை தொடர்கிறது.
பறவைகளை கண்டு ரசிக்க புகைப்படம் எடுக்க ஆரம்பத்தில் யாரும் ரொம்ப மெனக்கெட வேண்டாம்..நீங்கள் இருக்கும் இடத்தில் பறவைகள் ஒலி கேட்டால் ஒலி வந்த திசையில் இருக்கும் மரங்களை உற்று நோக்குங்கள்….சராசரியாக 10 முதல் 15 பறவை இனங்களை உங்களால் காண முடியும். அதன் பின்பு அதன் பெயர், இனம் பற்றிய விபரங்களை Merlin Birds ID app மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் எல்லா பறவைகளுக்கும் குஞ்சுகளாக இருக்கும் போது, பருவமடையும் முன்பும்,பின்பும் நிறங்களில் நிறைய மாறுபாடுகள் காணப்படும்.அப்பொழுது அதன் தோற்றம் நமக்கு குழப்பத்தை ஏற்படத்தும். BIRDS OF INDIAN SUBCONTINENT என்ற புத்தகம் கையில் இருந்தால் அது அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் .
பறவைகள் முன்பு போல அதிகம் இல்லை என்று குறை கூறுவதை விட்டு விட்டு உங்கள் சுற்றுபுறம், நீங்கள் பயணம் செல்லும் இடங்களில் உள்ள நீர் நிலைகள், அடர்ந்த முட்புதர்கள், தோட்டங்கள், வயல் வெளிகள், மரங்கள் அதிகம் உள்ள பூங்கா,மலை பாதைகளில் Hairpin bend போன்ற இடங்களில் உற்று நோக்க ஆரம்பியுங்கள்… எண்ணிலடங்கா பறவைகளை காண்பீர்கள்….
தனியாக பறவைகளை தேடி புகைப்படம் எடுப்பதை விட உங்கள் மன ஓட்டத்துடன் உள்ள புகைபட நண்பர்களுடன் பயணம் செய்யுங்கள். அது பயண செலவை குறைக்கும். பறவைகளை தேடி புகைப்படம் எடுக்கவும் எளிதாக இருக்கும். எங்கள் குழுவினருடன் பறவைகளை தேடும் சில காட்சிகள் உங்களுக்காக இங்கே …….

Feathers wings from facebook

Leave a Reply