FEATUREDPolitics

எவருக்கு மொழி ஆயுதம் தேவைப்படுகிறது

Spread the love

சமூகம் குறித்தும்,அதன் செயல்கள் குறித்தும் சில நேரம் சிந்தனை எழும்.நாம் சிந்தித்து ஒரு நெல் முனையளவு கூட மாறாதெனினும் சிந்தனை பரவிக்கிளைப்பதை ஏன் தடுக்க வேண்டும் என எண்ணுவதுண்டு.

திருக்கோளக்குடியில் சுந்தர பாண்டியரின் கல்வெட்டை கண்டபோது தமிழ் மொழி குறித்தும் அதன் இன்றைய அவலம் குறித்தும் வருத்தம் எழுந்தது.மொழி மீது உண்மையான அக்கறை கொண்ட எவராவது இன்று உண்டா எனில் எவருமில்லை.நீங்கள் மொழிப்போராட்டம்,அந்த எதிர்ப்பு,இந்த எதிர்ப்பு என வாதம் வைக்கலாம்.நேர்மையாக யோசித்தீர்களெனில் அவற்றின் அடி நாதம் அரசியல் அதிகாரத்தை அடைவதற்காக ,தன்னை நிலை நிறுத்திக்கொள்ள என்பதாகவே இருக்கும்.

மனிதர்களின் உணர்வுகளை சுலபமாக தூண்டக்கூடியவற்றில் சாதி,மொழி,இனம் என மொழிக்கு இரண்டாவது இடம்.எல்லாவித அரசியலும் இதற்குள் அடக்கம்.அரசியலில் எதை எப்போது எப்படி தூண்டவேண்டும் என கரைகண்டவர்கள் கட்சி நடத்துபவர்கள்.
எவருக்கு மொழி ஆயுதம் தேவைப்படுகிறது ?தமிழன் என்ற முகமூடி அதற்கு போராடுபவன் என்ற முகமூடி எவருக்கு தேவைப்படுகிறது என்று ஆழ்ந்து பின்புலம் ஆராய்ந்தீர்களெனில் அவர்கள் எவரும் இந்த மண்ணின் பூர்வ குடிகளாக இருக்க மாட்டார்கள்.

எல்லொருமே ஒவ்வோரு காலத்தில் புலம் பெயர்ந்தவர்கள் தான் எனினும் பல நூறு ஆண்டுகளாக வம்சாவழியாக ஒரு பகுதியில் வாழும் மனிதர்களுக்கு அந்த மண்ணின் மீது பற்று ஏற்படுவது இயல்பு.வரலாற்றின் போர்கள் அனைத்தும் மண்ணால் விளைந்தவையே.
ஆக மொழி மீது அக்கறை கொண்டவர்களாக ,அதற்கு போராடுபவர்களாக காட்டிக்கொண்டவர்கள் இவ்வளவு பேர் உண்மையில் ! இருந்திருந்தால் இன்றைக்கு எழுத்துப்பிழையொடு எழுதும் ஒரு தற்குறிச்சமூகம் உருவாகியிருக்காது.

இன்று எந்த பள்ளிக்கூடத்திலும் சென்று நீங்கள் சோதிக்கலாம் .பத்தாம் வகுப்பும் படிக்கும் எந்த மாணவனுக்கும் தமிழை பிழையின்றி எழுத தெரியாது.விளம்பர பதாகைகள் ,தொலைக்காட்சி செய்திகள் என எவற்றையும் கவனித்து பாருங்கள் நான் சொல்ல வரும் அவலம் புரியும்.

இன்று தாய் மொழியை பிழையற்று எழுத திறனற்ற சமூகத்தில் சங்க இலக்கியங்களும்,செய்யுள்களும், கவிதைகளும் பரவி செழித்த காலம் பொற்காலம்.
தனது மொழியை சிறப்பாக்க முயலாத ,காகிதத்தில் ஒழுங்காக எழுத முடியாத இதே சமூகத்தில் தான் கல்லில் எழுத்துக்களை வடித்தவனும் வாழ்ந்த்திருக்கிறான்.கல்வெட்டுக்கள் சொல்லும் தகவலை விட கல்லில் எழுதப்பட்ட எழுத்துக்களே வியப்பாக கொண்டாட வேண்டிய காலத்தில் அலைபேசியிலும் , மதுவிலும் தொலைந்து போன சமூகத்தில் இவையெல்லாம் இன்னும் பிழைத்திருப்பதே வியப்பு தான்.

ஸ்வஸ்திஸரீ
பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப நாமருவிய கலைமடந்தையும் செயமடந்தையும் நலம்சிறப்ப கோளார்ந்த சினப்புலியும் கொடுஞ்சிலையும் குலைந்தொளிப்ப வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாடருங்கடல் வலயத் தினிதறம் பெருகக்
கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
ஒருகுடை நீழல் ருநிலங் குளிர
மூவகைத் தமிழு முறைமையின் விளங்க
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியும் செய்வினை யற்ற
அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ
எழுவகைப் பாடலும் யலுடன் பரவ
எண்டிசை யளவும் சக்கரம் செல்லக்
கொங்கணர் கலிங்கர் கோசலர் மாளுவர்
சிங்களர் தெலிங்கர் சீனர் குச்சரர்
வில்லவர் மாகதர் விக்கலர் செம்பியர்
பல்லவர் முதலிய பார்த்திவ ரெல்லாம்
உறைவிட மருளென ஒருவர்முன் னொருவர்
முறைமுறை கடவதம் திறைகொணர்ந் திறைஞ்ச
லங்கொளி மணிமுடி ந்திரன் பூட்டிய
பொலங்கதிர் ஆரம் மார்பினிற் பொலியப்
பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த
மனுநெறி தழைப்ப மணிமுடி சூடி
வீரசிங்காதனத்து உலகமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோமாற பன்மரான திரிபுவன சக்ரவர்த்திகள் சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு . .

மனமிருப்போர் திருக்கோளக்குடி சென்று பாருங்கள் . கவியும் பொருளும் போட்டியிட தேனமுதின் சுவை போல தமிழின் முழுச்செழுமையயும் உள்ளடக்கி வாசிக்கும் உள்ளமெலாம் களிப்பேற கல்லிலே கவிதையாக வெட்டப்பட்டிருக்கும் பாண்டிய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியரின் மெய்க்கீர்த்தி நூற்றாண்டுகள் கடந்து கல்லில் எழுத்துகளை வடித்த அந்த கலைஞனை தூக்கி கூத்தாடத்தோன்றும்

Leave a Reply