FEATUREDGadgetsLatest

புகைப்படக்கலையின் ஆத்மா

Spread the love

புகைப்படக்கலையின் ஆத்மா
******Sanjayan selvamanickam

இன்று ஒரு புகைப்படக் கடையைக் கடந்து சென்றபோது அங்கு பல பிலிம்ரோல்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள். அருங்காட்சியகத்தில் பழம் பொருள் ஒன்றை கண்டதுபோன்றிருந்தது அக் காட்சி.

நான் நோர்வே வந்து அடுத்த ஆண்டு, 1988 மொழிக்கல்வியுடன் இயற்கையும் புகைப்படக்கலையும் என்னும் துறையைக் கற்பதற்கு வடக்கு நோர்வேக்கு இடம்பெயர்ந்திருந்தேன்.

அந்நாட்களில் அந்நாட்களில் உலகின் முதலாவது Auto focus (Minolta 9000)புகைப்படக் கருவி நோர்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 5 மாதமாக அந்தக் கடைக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் செல்வேன். கடைக்காரும் நான் வாங்க மாட்டேன் என்று தெரிந்தாலும் அலுக்காமல் அதை காண்பித்துக்கொண்டிருந்தார். அன்றைய காலத்தில் அது ஆயிரம் பொற்காசுகள் பெறுமதியான விலை.

எனது சிறியதாயாரின் உதவியினலும் எனது சில மாதச் சம்பளத்திலும் அதனை வாங்கிக்கொண்டேன். கல்லூரில் Auto focus camera என்னிடம் மட்டும்தான் இருந்தது. அதில் Spot meterம் இருந்ததாகவே நினைவு.

அன்றில் இருந்து 2000ம் ஆண்டுகள்வரை எனது உழைப்பில் கணிசமான அளவு புகைப்படக் கருவிகள், உபகரணங்கள், படங்களை கழுவி எடுத்தலுக்காகவே செலவழித்திருக்கிறேன். புகைப்படக்கலை தந்த மகிழ்ச்சியான பொழுதுகளுக்கும் அனுபவங்களுக்கும் அளவில்லை. இப்போது ஆர்வமிருந்தாலும் மனநிலையில்லை.

அந்நாட்களில் இப்போதைய இலத்திரனியற் புகைப்படக் கருவிகள் இல்லை. எல்லாவற்றையும் நாமே செய்யவேண்டும். ஒளியின் அளவு, ஒளி உட்புகும் நேரம், பிலிம்ரோலின் தன்மை, மேலதிக ஒளி தேவையா இல்லையா என்று அனைத்தையும் நாமே கணிக்கவேண்டியிருந்தது. இப்போதெல்லாம் ISOவை நினைத்தவாறு மாற்றலாம். முன்பு ஒரு பிலிம் ரோலுக்கு ஒரு ISO தான். வேறு ISO இல் படம் எடுக்கவேண்டுமானால் பிலிமரோல் மாற்றவேண்டும். 36 படங்கள் எடுக்காமல் வேறு பிலிம்ரோல் மாற்றுவது ஒரு கலை.

36 படங்களில் 20 படங்கள் மீதமிருந்தால் அவற்றை Lensஇனை மூடி இருட்டாகவே பதிவுசெய்யவேண்டும். பின்பு மற்றைய பிலிம்ரோலினை போட்டு படம் எடுக்கவேண்டும். அதன்பின் மீண்டும் முன்னைய பிலிம்ரோலினை இட்டு 20 படங்கள் வரை ஒளி புகாது படம் எடுக்கவேண்டும். தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்கான 22 வரை நான் ஒளியில்லாமல் எடுப்பேன். மேற்கூறிய இந்தச் செயற்பாட்டின்போது கமராவில் இருக்கும் பிலிம் களற்றும்போது முழுவதுமாக பிலிம்ரோலின் உள்ளே செல்லாமல் களற்றுவதும் ஒரு பெருங்கலை. பிலிம் ஒருபக்கத்தில் இருந்து களன்றுவரும் ஒலியைக்கேட்டுத்தான் அதை உணரலாம். முழு பிலிமும் உள்ளே சென்றுவிட்டால் கமரா கடைக்காரனிடம் பிலிமை சற்று வெளியே எடுத்துத் தா என்று கெஞ்சநேரிடும்.

Double exposure எடுப்பதும் ஒரு திரில்லிங் அனுபவம். பிலிம்ரோல் முன்னால் சுற்றக்கூடாது, ஆனால் பிலிமை முன்னால் சுற்றும் சுற்றும் பகுதி ஒரு முறை இயங்கவேண்டும்.

இப்போதைய Photoshop திருவிளையாடல்கள் அந்நாட்களில் இல்லை. படத்தில் ஒரு சிறுபகுதியை அகற்றுவது என்பது இலகுவானதல்ல.

1989 காலத்தில்த்தில் Oslo Camera club இல் ஒரு கறுப்பு வெள்ளை படம் கழுவும் அறை இருந்தது. ஏறத்தாள அங்கு குடியிருந்த நாட்களும் இருந்தன. கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை கழுவி இறுதியாக Fix மருந்திட்டு படத்தைப் பார்ப்பது பிரசவத்தின் பின் முதன் முதலாக குழந்தையைப் பார்ப்பது போன்றது. அத்தனை படபடப்பும் ஆர்வமும் மனதை அக்கிரமித்துருக்கொண்டிருக்கும்.

கறுப்பு வெள்ளையில் Zones என்று ஒரு பகுதி உண்டு. அதாவது கடும் கறுப்புக்கும் கடும்வெள்ளைக்கும் இடையே இருக்கக்கூடிய கறுப்பு வெள்ளை நிறங்களைக் குறிக்கும். இன்றைய கணிணி உலகில் 8 bit செயலியில் கடும் கறுப்புக்கும் கடும் வெள்ளைக்கும் இடையே 256 கறுப்பு வெள்ளை நிறங்கள் இருக்கும். இதுவே 16 bit செயலி என்றால் 65,536 நிறங்கள் இருக்கும்.

இதற்கு அந்நாட்களில் பிலிம் ரோலின் தன்மை, மருந்துகள், உபயோகிக்கும் பேப்பர், கழுவும்போது ஒளி கொடுக்கும் நேரம் என்று பலதையும் கவனிக்க வேண்டும். இதற்காகவே Google இல்லாத அந்நாட்களில் Ansel Adams இன் புத்தகங்களை தேடி தேடிப் படிக்கவேண்டியிருந்தது.

ஒரு படத்தை வெற்றிகரமாக திருப்தியாக கழுவி எடுத்து கையில் வைத்துப் பார்க்கும் ஆத்ம திருப்பி இப்போது Photoshop செய்யப்பட்ட படங்களில் கிடைப்பதில்லை.

அப்பொதெல்லாம் கண்டவிதத்தில் படங்களை எடுத்துத் தள்ளவும் முடியாது. செலவு அப்படியானது. காத்திருந்து பதிவுசெய்யவேண்டும்.

1990களில் ஒரு வயதான புகைப்பட நண்பர் ஒரு காட்சியை ஓரு முறைதான் எடுப்பார். பலமுறை எடுத்தால் தான் புகைப்படக்கலைஞன் என்னும் நிலையில் இருந்து விலகிவிடுவதாக உணர்கிறேன் என்பார். மனிதர் எடுத்தால் அந்தக் கணம் சற்றெனும் பிசகாது. படம் எப்படி வந்திருக்கிறது என்பதும் பிலிம்ரோல் கழுவுப்பட்டு வரும்போதுதான் தெரியும். இப்போதைய கமராபோன்று மறுகணம் அதனைப் பார்க்க முடியாது.

ஒருவரின் புகைப்படத்தை மற்றையவர் களவு எடுப்பதும் அந்நாட்களில் மிகச் சிரமம். இப்போதைய நாட்களைப்போன்று Copy – Paste செய்துவிட்டு, நான்தான் இதனை ஆவணப்படுத்தினேன். விரும்பினால் சர்வதேச வல்லுனர்களை அழைத்துவந்து நிரூபி என்று திருடர்களும் அவர்களுக்கு ஊன்று கொடுப்பவர்களும் வெற்றுவாதம் செய்யமுடியாது.

இதுவெல்லாம் இன்றைய இலத்திரனியற் கமராவினை வாங்கி அனைத்தையும் Automatic setting இல் விட்டு கடகட வென்று ஆயிரம் படம் சுடும் KIDS க்கு தெரிந்திருக்க வாய்பில்லை.

கணிணியுலகம் புகைப்படக்கலையை ஒரு விதத்தில் வளர்த்திருக்கிறது என்றாலும் அது அதன் ஆத்மாவை காயப்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

Leave a Reply