பத்து நியூட்டன் ஆட்டுக்கறி வேணுமா

Spread the love

ரொம்ப நாளைக்குப் பின்னர் ஒரு அறிவியல் பதிவு.

“கடலில் வாழும் ஒரு திமிங்கிலத்தின் எடையைவிட (Weight), நிலத்தில் வாழும் ஒரு மனிதனின் எடை அதிகமானது” என்று நான் கூறினால், ட்ரம்பைப் பார்ப்பதுபோல என்னைப் பார்ப்பீர்கள். இவ்வளவு கேவலமாக அவரால்கூட உளற முடியாது என்றும் நினைப்பீர்கள். ஆனால், நான் சொல்வதில் அறிவியல் ரீதியாக எந்தத் தவறும் கிடையாது. அவ்வளவு ஏன், கடலில் செல்லும் மிகப்பெரிய கப்பலைவிட, மனிதன் எடை கூடியவன் என்பதும் உண்மையே!

“அது எப்படி 180,000 கிலோவுடைய திமிங்கலம், 70 கிலோவுடைய மனிதனைவிட எடை குறைவாக இருக்க முடியும்?”

இங்குதான் அறிவியலின் அடிப்படையொன்றை நீங்கள் தவறவிடுகிறீர்கள். எடை என்பதைத் தப்பாகப் புரிந்துகொள்வதே இதற்குக் காரணம். ஒரு பொருளின் எடை, எப்போதும், எல்லா இடத்திலும் ஒன்றாக இருப்பதில்லை. சென்னையில் இருக்கும் ஒரு கிலோ எடையுள்ள பொருள், திபெத்தில் ஒரு கிலோவுக்கும் கம்மியாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில் 70 கிலோவாக இருக்கும் நீங்கள், சைபீரியாவில் எடை கம்மியாக இருப்பீர்கள். இதைக் கொஞ்சம் விரிவாய்ப் பார்க்கலாம்.

ஒவ்வொரு பொருளும் எத்தனை புரோட்டோன்களையும், நியூட்ரோன்களையும் எண்ணிக்கையாகக் கொண்டிருக்கின்றனவோ, அதற்கேற்றவாறு அப்பொருளுக்குத் திணிவு (mass-தமிழகத்தில் நிறை) இருக்கும். இது பேரண்டத்தில் எந்த இடத்துக்குச் சென்றாலும் மாறாது. பூமியில் எவ்வளவு திணிவோ, அதேயளவுதான் சந்திரனிலும். யாழ்ப்பாணத்தில் எதுவோ, அதுவே சைபீரியாவிலும். ஆனால், எடை (Weight) அப்படியானதில்லை.

ஒரு பொருளின் எடையை (Weight-ஈழத்தில் நிறை) கிலோகிராமில் அளக்கிறோம். ஆனால், அது தப்பு. ஒரு பொருளின் எடை என்பது, அதை ஈர்க்கும் ஈர்ப்புவிசையுடன் சேர்த்தே அளக்கப்படுகிறது. பூமியில் ஒரு குழந்தையின் எடையை, 1 கிலோகிராம் என்று சொல்வது பிழையானது. ஒரு வசதிக்காக அப்படிச் சொல்லிக் கொள்கிறோம். எடை என்பது ஒரு விசை. நிஜத்தில், 1 கிலோவுடன், 9.8 மீ/செ/செ என்னும் பூமியின் ஈர்ப்புவிசையைப் பெருக்கி வருவதே குழந்தையின் எடை. அந்தக் குழந்தையின் எடை, 9.8 நியூட்டன் என்பதே சரியானதாகும். ஒரு கிலோகிராம், பூமியில் 9.8 நியூட்டன் ஆகும். உங்கள் எடையை 70 கிலோ என்று நீங்கள் நினைத்திருந்தால், நிஜத்தில் அது 70X9.8 நியூட்டன் ஆகும். பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எடை கிலோ அல்ல, நியூட்டன்.

இப்படி நான் சொல்லிவிட்டேன் என்று, நாளைக்குக் கறிக்கடைக்குப் போய், “பத்து நியூட்டன் ஆட்டுக்கறி தாங்க” என்று கேட்டீர்களென்றால், அந்தக் கறி வெட்டும் கத்தி உங்கள் கழுத்தில் இறங்கும் சாத்தியமும் உண்டு. அதனால், அந்த விளையாட்டுக்கே போகாதீங்க. சரி, இனி நம்ம விசயத்துக்கு வரலாம்.

மனிதன் நிலத்தில் வாழ்கிறான். அதனால், அவன் எடையை நிலத்தில் வைத்தே அளக்கிறோம். கடலில் வைத்து அளப்பதில்லை. நிலத்தில் அவன் எடை 100 நியூட்டன் என்று வைத்துக் கொள்வோம். அதுபோலத் திமிங்கலத்தின் எடையையும் கடலில்தான் அளக்க வேண்டும். நிலத்தில் வைத்தல்ல.

கடலில் புவியீர்ப்புவிசை இருந்தாலும், அதில் மிதக்கும் பொருட்களுக்கு நீர் கொடுக்கும் மிதப்புவிசை, பொருளின் அடர்த்தி ஆகியவை புவியீர்ப்புவிசைக்கு எதிராகத் தொழிற்பட்டுத் திமிங்கிலத்தை மிதக்க வைக்கிறது. அப்போது, திமிங்கிலத்தின் எடையும் பூச்சியமாகிறது. கடலில் மிதக்கும் திமிங்கலத்தின் எடை, 0 நியூட்டனாகவும், நிலத்திலிருக்கும் மனிதனின் எடை 100 நியூட்டனாகவும் இருக்கிறது. அவரவர் வாழும் இடங்களை மனதில்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதனே திமிங்கலத்தைவிட எடை அதிகமுள்ளவனாக இருக்கிறான். பெரும் கப்பல்களுக்கும் அதுவே! விண்வெளியில் மிதக்கும் அஸ்ட்ரோனாட்சின் எடையும் கிட்டத்தட்டப் பூச்சியமே!

ஆனால், திணிவை எடுத்துக் கொண்டால், திமிங்கிலத்திற்கு அருகில் மனிதன் வெறும் பூச்சி.

ராஜ் சிவா

Leave a Reply