Uncategorized

ஜரி அருவி Jhari falls

Spread the love

அருவி என்னும் சொல்லே அலாதியானது , அருவியின் ஓசை , பாறையில் பட்டு சில்லென்று தெறிக்கும் சாரல் , சாரலும் ஒளிக்கதிரும் சங்கமிக்கும்போது தோன்றும் வானவில் வண்ணங்கள் என அருவி கொடையளிக்கும் அத்தனையும் அள்ள அள்ள குறையாத ஆனந்த செல்வங்கள் , காடுகளுக்கு நடுவில் மழைக்காலங்களில் மட்டுமே தோன்றும் சிறிய அருவிகளை பார்ப்பதுகூட மிகுந்த மனநிறைவை அளிப்பவை .

கர்நாடகாவில் இருக்கும் சிக்கமகளூரு மலைகளின் அரசி …பனி போர்த்திய மலைகளும் அடர்ந்த வனப்பகுதிகளும் , ஆர்ப்பரிக்கும் அருவிகளும் என இயற்கையை ரசிக்கும் எவரையும் நெகிழவைக்கும்… பெங்களூரு போன்ற பெருநகரத்தில் கோடையை கழிப்பது சவாலானது என்பதால் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சிக்கமகளூரு செல்லலாம் என ஒருமனதாக முடிவெடுத்து சென்றோம் , சுட்டெரிக்கும் சூரியன் ஏளனமாக சிரித்தபடி சிக்கமகளூருக்கு வரவேற்றது ,வானிலையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை பெங்களூரைப்போலவே இருந்தது , காடுகளை அழித்து ஏகப்பட்ட சொகுசு விடுதிகள் கட்டப்பட்டிருந்ததுதான் முக்கியமான காரணம் என நினைக்கிறேன் , நான் சிறுவயதில் பார்த்த சிக்கமகளூரு கோடையிலும் குளிரூட்டப்பட்ட அறையைப்போல இருந்தது , யாரை சொல்லி என்ன பயன் என்பதைப்போல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு , முதலில் முல்லையனகிரி(Mullayanagiri) என்னும் மலைப்பகுதிக்கு சென்றோம் புற்கள் எல்லாம் காய்ந்துபோய் , சில இடங்களில் புற்கள் எரிந்துபோய் இருந்தது , மீண்டும் ஏமாற்றம் கீழே இறங்கிவரும்போது ஒரு ஜீப் டிரைவர் “இது சீசன் இல்லை சார் ஆகஸ்ட் முதல் டிசம்பர் தான் சரியான நேரம்” என்றார் , பக்கத்தில் வேறு ஏதாவது நல்ல இடம் இருக்கிறதா என கேட்ட உடனே , “பக்கத்தில் ஒரு அருவி இருக்கிறது , கோடை என்பதால் அவ்வளவு தண்ணீர் வரத்து இல்லை ஆனால் குளிக்க ஏற்ற இடம் என்றார்” , எங்கள் முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது … “ஜீப்பில் தான் போக முடியும் என்றார் ” , சரி என கிளம்பினோம் … உண்மையிலேயே செங்குத்தான இறக்கம் , அனுபவம் இல்லாதவர்கள் ஜீப் இருந்தாலும் செல்ப் ட்ரைவிங் தவிர்ப்பது நல்லது , ஜீப் குலுங்க செம்ம த்ரில் பயணம் , அருவி நெருங்குவதை சத்தம் காட்டிக்கொடுத்தது , சீசன் இல்லை என்பதால் அங்கே யாருமே இல்லை நாங்கள் மட்டுமே , அருவியை பார்த்ததுமே உடைகளைக்கூட களையாமல் அருவியை நோக்கி ஓடினோம் , தண்ணீர் காலில் பட்டதும் ஒரு பரவச நிலைக்கே சென்று விட்டோம் ஐஸ் கட்டியை விட குளிர்ந்த தண்ணீர் , ஐந்து வினாடிகள் கூட தொடர்ச்சியாக நிற்க முடியவில்லை அப்படி ஒரு குளிர்ச்சி , உங்களை மறந்து சத்தமாக கத்தினால் பத்து வினாடிகள் தாக்குபிடிக்கலாம் , சூடான பாறைமேல் கொஞ்ச நேரம் படுத்துவிட்டு மீண்டும் அருவியில் நனைவது ஒரு வரம் .

*புகைப்படத்தில் இருக்கும் அருவியின் பெயர் ஜரி அருவி.”Jhari falls” (ஜரி என்றாலே கன்னடத்தில் அருவி என்றுதான் பொருள் ) , ஒரு சுட்டெரிக்கும் கோடையில் எடுத்தது.மழைக்காலங்களில் பாறை தெரியாத அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டும் ஆனால் அப்போது குளிக்க அனுமதி கிடையாது*

Leave a Reply