5 Things for 2019

Spread the love

5 Things for 2019

Invest in Yourself
It’s Okay to Fail
Memento Mori
Family First
Live Life your way!

Invest in Yourself

இனி வரும் காலங்கள் எளிதாக இருக்கப் போவதில்லை. பண முதலீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தேவையானது திறன் முதலீடு. முக்கியமாய் கற்றுக் கொள்ள வேண்டியது – எப்படிக் கற்றுக் கொள்வது என்பதை தான். ரிட்டையர்மெண்ட் என்பதை மறந்து விடுங்கள். இப்போது 25 – 45களில் இருந்தால் நீங்களே நினைத்தாலும் 60தில் ஒய்வு பெற முடியாது [ 10 – 15 கோடிகள் வங்கியில் இருந்தாலேயொழிய]

65 வயது பெரியவர் ஏ.டி.எம் வாசலில் செக்யூரிட்டியாய் நிற்கிறார். 50+ நபர் ஸ்விக்கி டீசர்ட்டில் ஹாட் சிப்ஸில் பார்சலுக்கு நிற்கிறார். ஊரில் வணிகம் படுத்து போய், சம்சாரியான 45+ ஆள் ஓலாவிற்காக நைட் டுயூட்டி ஓட்டுகிறார். இங்கே நிரந்தரம் என்று எதுவுமே இல்லை. எல்லாம் மாறும். அதனால் தொடர்ச்சியாக உங்களை திறன் உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த முதலீட்டில் முக்கியமானது உடல் ஆரோக்யம். Health beats wealth any given day. பிட்டாக இருங்கள். சிக்ஸ் பேக்கெல்லாம் தேவையில்லை. உங்களுடைய மனம் போகிற இடங்களுக்கு எல்லாம் உடலும் போக வேண்டிய ஸ்டாமினாவையும், physical flexibilityயும் இருந்தால் போதும்.

Its’ Okay to Fail

ஏகப்பட்ட ஆட்களோடு இந்த வருடம் உரையாடி இருக்கிறேன். எல்லா மக்களிடமும் ஏதோ ஒரு இடத்தில் தவற விட்டது பற்றியும், தொலைத்தது பற்றியும், தோல்வியுற்றது பற்றியும், வீழ்ந்தது பற்றியும், இழந்தது பற்றியும் ஒரு அவமானம் உள்ளூர இருந்துக் கொண்டே இருக்கிறது.

எனக்கு சரியாய் திருமண வாழ்க்கை அமையவில்லை, அப்பவே எக்சாம் எழுதி இருந்தா கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சிருக்கும், வேலை பார்க்கவே பிடிக்கலை மேனேஜர் ஒரே டார்ச்சர், ஆனா EMI இருக்கு etc etc. முதலில் இந்த குமைவினை விட்டு வெளியே வாருங்கள். இங்கே ரஜினி படமும், மோடியுமே கூட தோற்கிறார்கள். அந்த உயரத்தில் இருந்துக் கொண்டு அவர்களே தோற்கும் போது நாமும் சில இடங்களில் மரண அடி வாங்குவோம். Failure is part and parcel of everyone’s life.

தோல்வியிலிருந்து என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது மட்டுமே முக்கியம். தோல்வி மேட்டரே அல்ல. இழப்பு, தோல்வி, வீழ்ச்சி பற்றிய மன உளைச்சலில் இருந்து வெளியேறுங்கள்.

Memento Mori

இது ஒரு இலத்தின் வாக்கியம் இதன் பொருள் “remember (that) you will die”. அதாவது “நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்க தான் போகிறோம்”. இதை எப்போதும் நினைவில் வையுங்கள். அந்த ஒரு நாள் என்பது 50 வருடங்கள் கழித்து இருக்கலாம். அடுத்த ஐந்து மணி நேரமாகவும் இருக்கலாம். Death is inevitable. அது தான் நம் அனைவருக்குமான முடிவு. அது தான் முடிவு என்று உள் வாங்கிய பின், எல்லா அலப்பறைகளும், ஆர்ப்பாட்டங்களும், அலம்பல்களும் அடங்கி விடும்.

நாளைக்கு காலையில் மரணமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சாந்த சொரூபியாக மாற ஆரம்பிப்பீர்கள் அல்லவா. அதை பழக்கப் படுத்தி கொள்ளுங்கள். உள் அமைதி எல்லாவற்றையும் மாற்றும். உங்களை நீங்களே மூன்றாவது மனிதர் போல பார்க்கக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய அபத்தங்கள் நமக்கே பிடிபட ஆரம்பிக்கும். தன்னை அறிதலை விட வேறெந்த கடவுளும் தேவையில்லை.

Friends & Family First

குடும்பமும் நட்பும் முதலில். எல்லா இடங்களும் நெஸ்கஃபே விளம்பரத்தில் வருவது போல பரிபூரணம் கிடையாது. சண்டைகள், கோவங்கள், மனஸ்தாபங்கள், எரிச்சல்கள், பொறாமைகள் எல்லா குடும்பங்களிலும், எல்லா வாட்ஸாப் நட்பு குரூப்பிலும் உண்டு. Ignore the micro, focus on the Macro. குடும்பத்திற்காக சுயநலமாக இருக்க வேண்டுமானால் தாராளமாக இருங்கள்.

பணம், புகழ், லைக்ஸ், சண்டைகள், விவாதங்கள் எதுவும் நான்கு நாள் வைரல் ஜுரத்தில் அடித்துப் போட்டாற் போல படுத்தால், கூட நிற்கப் போவதில்லை. அன்றைக்கு கஞ்சி ஊற்றப் போவது குடும்பமும், நண்பர்களும் தான். வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் குடும்பத்திற்கும், எது நடந்தாலும் துணை நிற்கும் நண்பர்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். பத்து வருடங்கள் கழித்து இதெல்லாம் அப்பவே பண்ணி இருக்கணும் என்று ஆற்றாமையில் புலம்பாதீர்கள்.

இந்திய சமூகத்தின் மிகப் பெரிய சிக்கல், மேற்கத்தியர்களைப் போல நாம் expressive ஆன ஆட்கள் கிடையாது. உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகும் “இதயம் முரளி” சமூகம் இது. பேசுங்கள். பாராட்டுங்கள். கொண்டாடுங்கள். வாழ்க்கையை இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Live Life your way!

சரியாக இப்படி தான் வாழ வேண்டும் என்கிற வரையறைகள் எதுவும் கிடையாது. அவரவர்களுக்கான சந்தோஷங்கள், துக்கங்கள், பார்வைகள், விருப்பு வெறுப்புகள் வெவ்வேறு. இது தான் சரி என்று இங்கே எதுவுமே இல்லை, சமூக ரீதியாக பார்க்கப்படும் சரி/தவறுகள் தவிர்த்து.

இது உங்களுடைய வாழ்க்கை, ஒரே ஒரு வாழ்க்கை, அதை உங்கள் விருப்பப்படி வாழுங்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. உங்களுடைய எல்லை எது என்பதை நீங்கள் தான் வரையறுக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு தொல்லை இல்லாமல் வாழும் எப்படிப் பட்ட வாழ்க்கையும் சரியே. அவர் இப்படி, இவர் அப்படி என்றெல்லாம் யோசிக்காதீர்கள். தமிழ்நாட்டின் பெரும் பணக்காரர்களின் அவஸ்தைகளை, சிக்கல்களை பர்சனலாக நான் அறிவேன். பணம் அதி முக்கியம். சிக்கல்களை தீர்க்க பணம் அவசியம், அதே சமயத்தில் எல்லா சிக்கல்களையும் பணத்தால் மட்டுமே முழுமையாக தீர்க்க முடியாது.

2019 கடுமையான ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதாக இருக்கும் என்று தான் நிபுணர்கள் சொல்கிறார்கள். என்ன நடந்தாலும் மேற்சொன்னவைகளை நினைவில் வையுங்கள். வாழ்க்கை இனிக்கும்.

Happy Holidays to everyone, and have a fruitful year ahead.

Love you all. Over and Out!!