FEATUREDGeneralNewsஅறிவியல்

பருவநிலை மாற்றம்

Spread the love

#பருவநிலை_மாற்றம்
#சராசரி_வெப்பம்

ஏனுங் மாப்ள அதென்ன சராசரி வெப்பநிலை 1.5 செல்சியஸ்? பாரிஸ் ஒப்பந்தம், IPCC னு ஒரே கொழப்பமா இருக்குதுங்

அதொன்னுமில்லிங் மாமா, நம்மூர்ல அஞ்சு திணை இருக்கா? ஒவ்வொன்னுக்கும் ஒரு பருவ நிலை, வெப்ப அளவுனு இருக்கிதில்லீங், அதெ எல்லாத்தையும் கூட்டி வகுத்து கணக்கு போட்டு தமிழ்நாட்டுக்கு இது தான் சராசரி வெப்பநிலைனு சொல்ற மாதிரி மொத்த உலகத்துக்கும் ஒரு சராசரி வெப்பநிலைனு ஒரு பம்மாத்து வேலய பண்றானுங்

அதெப்படி ஊட்டிக்கும் தூத்துகுடிக்கும் ஒரே வெப்ப அளவு இருக்கும்?

இரண்டும் வேற தானுங் ஆனா ரண்டையும் கூட்டி இரண்டால வகுத்தா அது தான் இந்த இரண்டு இடத்துக்கும் உள்ள சராசரி வெப்பநிலை. நம்ம இந்தியாவுக்கு 27 செல்சியஸ், உலகத்துக்கு 13 செல்சியஸ்.

எந்த மாசத்துக்கு?

இது மொத்த வருச கணக்குங். 12 மாச வெப்பநிலை அளவை கணக்கு பண்ணி சொல்றதுங்.

அப்ப அந்த 1.5 செல்சியஸ்?

2014 வருசம் உலக சராசரி வெப்பநிலை 13 செல்சியஸ். நாம கரிமத்த எரிக்க ஆரம்பிச்சா வருசம் 1860. அந்த வருச வெப்ப அளவு 11.5 செல்சியஸ். அதை ஒரு அளவு வெச்சு தான் இந்த 1.5C, 2C னு சொல்றாங்க.

நாம எங்க எரிச்சோம்? அப்ப விறகு தான?

நாமனா மனித குலம், முக்கியமா இங்கிலாந்தில். ஏற்பட்ட தொழில்புரட்சியும் நிலக்கரி எரிப்பும்…இத தான் அளவா வெச்சு இருக்காங்க.

எவனோ பத்த வெச்சு நெருப்பு , இப்ப பூமியே எரியுதுனு எப்படி சொல்ற மாப்ள? வடதுருவம், தென்துருவம்லாம் பனி பாறை தான, அதெல்லாம் எப்படி உருகும்? மொதல்ல பத்த வெச்ச எடம் தான சூடாகனும்? நீ பனி பாறை உருகுதுனு சொல்ற? அங்க என்ன தொழில்சாலையா இருக்கு?

மாமா பூமில 70% தண்ணி, அதுல பெரும் பகுதி கடல்.

அதுக்கு?

நீங்க ஒரு குண்டாவ எடுங்க, அதுல துணிய வெச்சு ரண்டு பக்கம் ஐஸ் கட்டிய நல்லா கட்டுங்க. இப்ப மெதுவா தண்ணிய நடுவில் மட்டும் சூடு பண்ணுங்க, ஐஸ் என்னாகுதுனு பாருங்க, தண்ணி சூடாச்சானு பாருங்க

அட ஐஸ் தான் உருகும் மொதல்ல? அப்புறம் தான தண்ணி சூடாகும்?

இதே தான் துருவங்கள்ல நடக்குது. சூடான தண்ணி போய் பனிபாறைகள உருக்குது.

சுடு தண்ணி எப்படி துருவங்களுக்கு போகும்?

கடல் தண்ணி டம்ளர் தண்ணி இல்ல ஒரே எடத்துல இருக்க. ,தண்ணி சூடானா குண்டாவுக்குள்ளயே சுத்தும், பத்து இருக்கிங்களா? அடுப்பு பக்கம் சூடும், மேல சூடு கம்மியாவும் இருக்குமே?

அட ஆமா…

கடல் தண்ணியும் அப்படி தான், தண்ணி சுத்திகிட்டே இருக்கும். வெப்பம் தான் இப்படி தண்ணிய சுத்த வைக்குது, இதனால் தான் புயல், மழை எல்லாம் வருது. இந்த ஓட்டத்துக்கு பேரு கடல் நீரோட்டம். உலக கடல் எல்லாத்திலயும் இருக்கு, காத்திலயும் இருக்கு. இதெல்லாம் தான் வெப்பத்த பரவலா கொண்டு சேர்க்குது. இல்லனா ஆப்பிரிக்கா , இந்தியா நிரந்தர பாலையாவும் ஐரோப்பா, வட அமெரிக்கா நிரந்தர பனிபாறையாவும் இருக்கும்.

ஓஓ இது தானா சமாசாரம்?

ஆமாங் மாமா, உலக சராசரி வெப்பநிலை துருவங்களுக்கு பொருந்தாது. எல்லா வெப்பமும் அங்க தான் போய் சேருது. அதனால துருவங்கள், முக்கியமா வடதுருவம் 8 மடங்கு வெசையா சூடாகுது. அதனால் பனி பாறை சீக்கிரம் உருகி ஒடையுது.

கீழ இருக்கற மொத படத்துல 0 தான் 1860 வருசம், அப்ப காற்றின் கரிம அளவு கொறச்சல் தாங்க.

ரண்டாவது படம். நேற்றைய வட துருவத்தின் கடல் உறை பனி நிலை. சராசரி அளவை விட மிக குறைவான அளவு உறைபனி உள்ளது. சூடான கடல் நீரோட்டம் எப்படி பனிகட்டியை உருக்குதுனு நல்லாவே தெரியுது

#பருவநிலை_மாற்றம்
#கடல்_மட்டம்_உயர்வு
#புவி_வெப்பம்

ஏங் மாப்ள நீங்க சொன்ன செல்சியஸ் கணக்கெல்லாம் சரி தான் ஆனா அது எப்படி அதிகமாகுது? அடிக்கற வெயில் 300 வருசமா அடிச்சுகிட்ட தான இருக்கு?

மாமா ஒரே எடத்துல வெயில்ல கார் நின்னா காருக்குள்ள என்ன ஆகும்?

கார் மொத்தமும் சூடாகும்

கார் கண்ணாடிய ஏத்தி விட்டு?

கொதிக்கும்…வெளிய இருக்கற சூட்ட விட உள்ள அதிகமாக இருக்கும். சூடு வெளிய போக வழியில்லாம உள்ளயே சுத்துது

அதே தான் பூமிலயும் நடக்குது. நாம எரிக்கறதால, நவீன விவசாயம், ஏசினால உமிழபடற கரியமில வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைட் எல்லாம் பூமிக்கு மேல பல மைல் உயரத்துல ,போர்வையா பூமிய சுத்தி இருக்கு, இது வெப்பத்த வெளிய போக விடாம தடுக்குது.

ஆனா வெப்பம் எப்படி உள்ள வரும்?

வெயில்ல நிக்கற காருக்குள்ள கண்ணாடி ஏத்தி விட்டாலும் சூடு அதிகரிக்கற மாதிரி தான், சூரிய வெப்பம் உள்ள வந்தே தீரும். வரும் வெப்பத்தின் பெரும் பகுதி திரும்ப வெட்ட வெளிக்கே, காற்று மண்டலத்த தாண்டி போகும். பூமியோட நிலமும், கடலும் இந்த வெப்பத்த பிரதிபலிக்குது. ஆனா இந்த பசுமை குடில் வாயு இந்த பிரதிபலிப்ப தடுத்து வெப்பத்த பூமிலயே தக்க வைக்குது.

 

இப்ப புரிஞ்சுது. ஆனா வெப்பம் 300 வருசமா இங்கயே தங்கி இருந்தா நாம வெந்து போய் இருப்பமே?

நம்மோளட நிலக்கரி, கச்சா எண்ணை எரிப்பு, நவீன விவசாயம் எல்லாம் இரண்டாம் உலக போருக்கு பின்னாடி தான் வேகமெடுத்தது. 85% பசுமை குடில் வாயு உமிழ்வு நடந்த்தே இப்ப தான். இந்த வெப்பம் எல்லாத்தையும் (97%) கடல் தான் உள் வாங்கி வெச்சு இருக்கு. அதான் நாம இன்னும் வேகாம உயிரோட இருக்கோம்.

கடல் சூடாகாதா?

ஆகுது ஆனா ரொம்ப மெதுவா ஆகுது. அதனால் தான் பனி பாறை எல்லாம் முதல்ல உருகுது. இதுக்கே விளைவுகள் பயங்கரமா இருக்குதே?

புயலா?

இல்ல, கடல் மட்டம் உயர்வு. தண்ணி சூடானா விரியும்ல, விரிஞ்சா கரைய தாண்டி தண்ணி உள்ள வரும். இதுக்கு பனி பாறை எல்லாம் உருக வேண்டியதில்ல. புயலே இல்லாத நாள்ல கூட கடற்கரை ஓரத்துல கடல் நீர் உள்ள வருது. கடல் அரிப்பு அதிகமாகுது. நல்ல தண்ணி எல்லாம் உப்பு தண்ணியாகுது, விளை நிலம்லாம் உவர் நிலமாகுது.

ஆமா, நாங்கூட படிச்சேன், இனி தண்ணிக்காக தான் உலக போர்னு..

போரெல்லாம் வராது, ஊர்களுக்குல்ல தான் சண்ட வரும்.

அதெப்படி?

உலகத்துலயே மிக பெரிய கடற்படை தளம் அமெரிக்காவில் இருக்கற நார்போல்க் கப்பல் படை தளம். இதே சில வருசத்துல கடலுக்குள்ள போகும். அப்புறம் எங்க போய் போர் நடத்த….ஏற்கனவே பின்னால் விமான படை தளம் புயலில் சேதமாகிடுச்சு. இப்படி பருவநிலை மாற்றம் எதிர்பார்க்காத விளைவுகளை நடத்திகிட்டே இருக்கு.

அப்ப என்ன தான் வழி?

எந்த விண்வெளி கப்பலும் வராது, எந்த நவீன தொழில்நுட்பமும் காப்பாத்தாது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யற திறமைகளை வளர்த்துக்கறது, விதைகள் பாதுகாப்பு, சேமிப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு, மூலிகைகள் பற்றிய அறிவு, கால்நடைகள் பராமரிப்புனு மரபு சார்ந்த அறிவியல கத்துக்கனும். முதலில் அது எல்லாம் அறிவியல்னு ஒத்துகற மனசும் வேணும்.