EntertainmentGeneralLatestகாமிக்ஸ்

வேதாளர் -The Phantom

Spread the love

வேதாளர் (The Phantom)

• உலகின் முதல் சிறப்பு உடை (Costume) அணிந்த காமிக்ஸ் ஹீரோ யார் தெரியுமா?
• தினமும் 10 கோடி வாசகர்கள் படித்த காமிக்ஸ் எது தெரியுமா?
• உலகில் மிகவும் அதிகமாக அறியப்பட்ட/பிரபலமான காமிக்ஸ் ஹீரோ யார் தெரியுமா?

அந்த ஹீரோதான், வேதாளர் (The Phantom). 1936ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 17ஆம் தேதிதான் இவர் உலகிற்கு முதன்முறையாக அறிமுகம் ஆனார். கொலம்பசுடன் பணிபுரிந்த ஒருவரின் மகன் (வாக்கர்), அநீதிக்கெதிரான காவலனாக மாறியது, மிகவும் சுவையான ஒரு கதை. கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் தப்பிப் பிழைத்த ஒரே ஆளான இவரை, ஆப்பிரிக்க பாந்தர் இனத்தவர் காப்பாற்றுகின்றனர்.

தந்தையைக் கொன்றவனின் மண்டையோட்டின்மீது அநீதியையும், கொள்ளையையும் எதிர்த்துப் போராடுவதாக சத்தியப்பிரமாணம் செய்யும் வாக்கர், பாந்தர் இனத்தவரை அடிமைத்தளையில் இருந்து காப்பாற்றுகிறார். அவர்கள் ஆழ நெடுங்காட்டில் இருக்கும், நீர்வீழ்ச்சியால் மறைக்கப்பட்ட கபால குகைக்கு (மண்டை ஓட்டு மாளிகை) அழைத்து சென்று, அவரையே தலைவராக ஏற்றுக்கொள்கின்றனர்.

அதுமுதல் வாக்கரும் அவரது வாரிசுகளும் குற்றங்களை எதிர்த்துப் போரிடும் நாயகர்களாக வலம் வருகின்றனர். வெளியுலகைப் பொறுத்தவரையில், வேதாளர் என்பவர், சாகா வரம் பெற்றவர். 400 ஆண்டுகளாக நீதிக்காவலனாக வாழ்ந்து வருபவர். அவரைக் கொல்லவே முடியாது என்ற கருத்து பரவியது. அதுமுதல், 20 வேதாளர்கள் நீதிக்காக போராடினர். இப்போதைய கதைகளில் ஹீரோவாக வருபவர் நமது 21 ஆவது வேதாளர். (2017 முதல் வேதாளரின் வாரிசுகளும் சாகசங்கள் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர்).

வேதாளரின் மோதிரங்கள்: வலது கையிலிருப்பது மண்டையோட்டு சின்னம் கொண்ட கபால மோதிரம். இதைக்கொண்டு வேதாளர் ஒருவரைக் குத்தினால், அவரது முகத்தில் என்றுமே அழியாத சின்னமாக இது பதிந்துவிடும்.

இடக்கையில் இருப்பது, அனைவரும் மதிக்கும் நற்சின்னம். வேதாளரின் நண்பர்கள் என்று பொருள்கொண்ட இச்சின்னம், காலம்காலமாக மக்களைக் காப்பாற்றும் ஒன்று. இது எங்கே இருக்கிறதோ, அங்கே வேதாளர் இருக்கிறார், அவ்விடம் அவரது பாதுகாப்பில் உள்ளது என்று பொருள்.

தமிழில் வேதாளர்: 1964ஆம் ஆண்டு இந்திரஜால் காமிக்ஸ் மூலம் தமிழில் அறிமுகமான வேதாளர், பின்னர் குமுதம் (முகமூடி), முத்து காமிக்ஸ், முத்து மினி காமிக்ஸ், ராணி காமிக்ஸ் (மாயாவி), மாலை முரசு, தேவியின் கண்மணி காமிக்ஸ், கொமிக் வேர்ல்ட் ஆகிய இதழ்களிலும் தமிழில் பேசினார். வேதாளரின் இருப்பிடம் பெங்காலி (பெங்கல்லா)தான். ஆனால், இந்தியாவில் அப்படி ஓர் இடம் இருப்பதால், அதனை இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யும்போது, டென்காலி (டெங்கல்லா) என்று மாற்றிவிட்டனர்.

மாற்று ஊடகங்களில்: 1943-ஆம் ஆண்டு & 1956ஆம் ஆண்டுகளில் வேதாளரின் சாகசங்கள் தொலைக்காட்சித் தொடராக வெளியானது. 1996ஆம் ஆண்டு (டைட்டானிக் வில்லன்) பில்லி ஜேனை வேதாளனாகக் கொண்டு, திரைப்படம் வெளியானது. இதைத்தவிர, கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் வடிவில், பல தொடர்கள் வந்துள்ளன. இந்தியாவில் தொண்ணூறுகளில், வேதாளரை இன்ஸ்பிரேஷனாக கொண்டு, இந்தியில் பேதாள் பச்சிஷி என்ற தொடர் வெளியானது.

வேதாளர் – 2017 முதல்: இதுவரையில் 21 வேதாளர்களும் ஆண்களாகவே இருக்க, முதல்முறையாக, தற்போதைய வேதாளரான கிட்டின் மகள் ஹெலாய்ஸ், ஒரு பெண் வேதாளராக சாகசம் புரிய ஆரம்பித்து உள்ளார். பெண்களுக்கான சம உரிமை என்பதைக் கடந்து, இப்போதைய ட்ரென்ட்டில் இருப்பதால், இந்தப் புதிய தொடர் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் வேதாளரது கதைகள் ஏன் தலைமுறை, தலைமுறையாக படிக்கப்பட்டு வருகிறதென்றால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அவரது கதைகளில் சொல்லப்படும் நற்பண்புகள். 83 ஆண்டுகளாக நன்மை எப்போதுமே வெல்லும் என்பதற்கான உதாரணமாக திகழ்பவர்தான் வேதாளர். ஹேப்பி பர்த் டே, வேதாளரே.

உருவாக்கியவர்: லீ ஃபாக் (அமெரிக்க எழுத்தாளர்)

முதலில் தோன்றிய தேதி: 17-02-1936

பெயர்: கிட் வாக்கர்
மனைவி: டயானா பாமர்

வாரிசு: கிட் (மகன்), ஹெலாய்ஸ் (மகள்)

வளர்ப்பு மகன்: ரெக்ஸ் கிங்

குதிரையின் பெயர்: ஹீரோ

நாய்: டெவில் (உண்மையில் இது ஒரு மலை ஓநாய்)

யானை: ஜூம்பா

சிங்கம்: கேட்டீனா (பெண் சிங்கம்)

இருப்பிடம்: ஆழ்கானகத்தில் நீர்வீழ்ச்சிக்கு அப்பால், மண்டைஓடு போல இயற்கையாகவே அமைந்த கபால குகைதான்.

தற்போதைய இருப்பிடம்: மவிட்டான் நகர எல்லையில், மர உச்சியில் கட்டப்பட்ட மரவீடு.