FEATUREDGeneralஇயற்கை மருத்துவம்

எதிர்ப்புகளில் உங்களுக்கான செய்தி உள்ளது

Spread the love

எதிர்ப்புகளில் உங்களுக்கான செய்தி உள்ளது!_
செம்மை மரபுக் கல்வி வகுப்பில் ம.செந்தமிழன் அவர்கள் உரை
கட்டுரை -ஆனந்த் செல்லையா

காகிதப்பை செய்தல்
செம்மை மரபுக்கல்வி வகுப்பு சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் 2.2.19 அன்று நடத்தப்பட்டது. இது சென்னையை மையமாகக் கொண்டு ஐந்தாவது முறையாக நடக்கும் வகுப்பு. ஏறத்தாழ அறுபது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வகுப்பில் பங்கேற்றனர். இம்முறை காகிதப்பைகள் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. செம்மையைச் சேர்ந்த ஓவியர் பார்வதி பாலா பயிற்சி அளித்தார். கூடவே, பைகளின் மீது இலைகளை ஒட்டி அலங்கரிக்கவும், மண்ணைக் குழைத்து வரைவதற்கும் கற்றுத்தரப்பட்டது.


மதிய உணவுக்குப் பிறகு செம்மைப்பாடல்களில் ஒன்றைக் குழந்தைகள் பாடினர். அதைத் தொடர்ந்து ம. செந்தமிழன் அறிவியல் பாடம் நடத்தினார். காய்களில் உள்ள நீர்த்தன்மை, இலைகளின் வடிவம் ஆகியவற்றை வைத்துச் செடிகளுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை அறிந்துகொள்ளும் வழிமுறையை அவர் விளக்கினார். செடிகள் தண்ணீரை அதிகம் சேர்ப்பது, வெளியேற்றுவது ஆகிய செயல்பாடுகளுக்குப் பின்னால் இலை, காய்களின் வளைவான வடிவம் இருப்பது சுவாரசியமாக விளக்கப்பட்டது.
கொத்தவரங்காய், பீர்க்கங்காய் போன்ற நாட்டுக்காய்களைப் பல குழந்தைகள் அறிந்திருக்கவில்லை. ஆசிரியர்கள் உடனடியாக அவற்றை வாங்கிக்கொண்டுவந்து காட்டினார்கள்.
வகுப்பு முடிந்ததும், பெற்றோர்கள் செந்தமிழனுடன் உரையாடினர். குழந்தைகள் தவறு செய்வது, பெற்றோர் அதை எதிர்கொள்ளும் முறை குறித்து ஒருவர் ஐயம் எழுப்பினார். அதற்குச் செந்தமிழன், “ஒரு கோடு போட்டால் அத்தனை பேரும் அதையொட்டி ஒரே மாதிரி நடக்க வேண்டும் என்பதுதான் விதி என நீங்கள் நம்புகிறீர்கள். இது மனிதர்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால் மனிதர்களுக்குத்தான் மனம் இருக்கிறது. ஒருவர் கோட்டை மிதித்துக்கொண்டு நடப்பார். இன்னொருவர் அதன் பக்கவாட்டில் நடப்பார். வேறொருவர் அதன் ஒரு பக்கம் ஒரு காலையும் மறுபக்கம் இன்னொரு காலையும் வைத்துக்கொண்டு நடப்பார். கோட்டை எங்கே பின்பற்ற வேண்டும், எங்கே விலகிக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நாம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். தவறு செய்யும் குழந்தைகள் அவர்களாகவே அதிலிருந்து வெளியே வர நாம் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதுதான் என்றைக்கும் நிலையாக இருக்கும்” என்ற கருத்தை முன்வைத்துப் பேசினார்.
வழக்கமான கல்விமுறையிலிருந்து குழந்தைகளுக்கு விடுதலை அளிக்கும் விதத்தில் வேறொரு கல்விமுறைக்கு மாற்ற பெற்றோர் விரும்பும்போது, சுற்றியுள்ளவர்கள் கடுமையாக எதிர்ப்பது குறித்துச் சிலர் கவலை தெரிவித்தார்கள். “உங்களைச் சுற்றியுள்ளவர்கள் காட்டும் எதிர்ப்பில் சில உண்மைகள் இருக்கின்றன. அவற்றை ஏற்றுக்கொண்டு உங்கள் பக்கம் இருக்கும் குறைகளைச் சரிசெய்துகொள்ளுங்கள். ஒரு சமூகமாக வாழக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் ஒரே இடமாகப் பள்ளிகள்தான் இன்றுவரை இருக்கின்றன. அவர்கள் அங்குதான் வாழ்க்கையைக் கற்றுக்கொள்கிறார்கள். பள்ளி என்ற அமைப்பிலிருந்து அவசரப்பட்டு வெளியே நீங்கள் வந்துவிடக்கூடாது. முதலில் தமிழ்வழிக்கல்வியில் படிக்கும் வாய்ப்பைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுங்கள். அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதுதான் தற்போதைக்கு இத்தகைய பெற்றோர் தரப்பில் நிகழ வேண்டிய ஒரு மாற்றம். மரபுக்கல்வி குறித்த உங்கள் புரிதல் இன்னும் மேம்பட வேண்டும். இங்கு வந்தால் இயற்கைவழி வேளாண்மை கற்றுக்கொள்ளலாம். மரபு வீடு கட்டக் கற்றுக்கொள்ளலாம் என்று நன்மைகளைக் கணக்குப் போட்டு அணுகாதீர்கள். அப்படி மதிப்பிடும்போது நாளை யாரேனும் அதன் பிரச்னைகள் குறித்துப் பட்டியலிடும்போது குழம்பிப்போய்விடுவீர்கள். நீங்கள் தெளிவடைந்துவிட்டால் யாரும் உங்களுக்குத் தடைபோட முடியாது” என்று செந்தமிழன் கூறினார்.