குவார்க்-குளுவான் கூழ்

Spread the love

புத்தகக் கண்காட்சியால், எழுத்தாளர்கள், கவிஞர்களின் அலப்பரைகளைக் கேட்டு அலுத்துப்போய் இருப்பீர்கள். இதனிடையே நானும் என் நூலைப்பற்றி நூல்விடுவேன். எல்லாம் சேர்ந்து, நீங்கள் நொந்து நூலாகிப் போயிருப்பீர்கள். அதனால், மாற்றத்துக்காக ஒரு அறிவியல்.

நீங்கள் அனைவரும் சூப் (Soup) பருகியிருப்பீர்கள். கூழ் குடித்தல் என்றும் சொல்லலாம். அதுபோன்ற ஒரு கூழில் இருந்தே அண்டமும் உருவானது. பிக்பாங் பெரிவிருவு நடந்த கணத்தின், பத்து மில்லியனில் ஒரு பங்கு செக்கனின் பின் (0.00000001 செக் என்னும் மிகமிகச்சிறிய காலத்தில்) அங்கே ஒரு கூழ் உருவாகியது. அதைக் குவார்க்-குளுவான் கூழ் (quark-gluon plasma soup- QGP) என்பார்கள். ஆதிக்கூழ் (primordial soup) என்றும் அதைச் சொல்லலாம்.

இந்த ஆதிக்கூழிலிருந்தே, மெல்ல மெல்ல அண்டத்தில் பிண்டங்கள் தோன்றின. இது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள்ளச் சமீபத்தில் நடந்த பரிசோதனையில் வெற்றி கண்டுள்ளார்கள்.

சேர்னில் இருக்கும் பெரும் ஹாட்ரான் மோதியில் (அந்த மோதி இல்லை இது Large Hadron Collider – Cern) தங்கத்தின் புரோட்டோன்களை மோதவிட்டபோது, ட்ரில்லியன் சதமபாகை வெப்பநிலை தோன்றி, இந்த குவார்க்-குளுவான் பிளாஸ்மாவும் உருவாகியது. இதிலிருந்து பிக்பாங் கணத்தில் ஆதிக்கூழ் உருவானது உண்மைதானெனத் தீர்மானிக்க முடிகிறது.

“இந்தக் குவார்க்-குளுவான் பிளாஸ்மா, அண்டத்தையே உருவாக்குமளவுக்கு அப்படியென்ன அப்பாடக்கரா?” என்று நீங்கள் நினைத்தால், ஒரு தகவலை மட்டும் சொல்லி அமர்கிறேன்.

ஒரு கன செமீ (cubic centimeter) அளவுள்ள குகுபி (அதாங்க குவார்க்-குளுவான் பிளாஸ்மா), 40 பில்லியன் டன்களைவிட அதிக எடை கொண்டது. இப்போது புரிகிறதா குகுபியின் வீரியம் என்னவென்று?

@ ராஜ் சிவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *