FEATUREDNewsSocialmediaஅறிவியல்

மனிதனால் எப்போதுமே காண முடியாத அண்டவெளி

Spread the love

ஒளியின் வேகத்திற்கு அதிக வேகத்தில் யாரும் செல்ல முடியாது என்கிறது இன்றைய இயற்பியல். ஆனாலும், ஒளியைவிட அதிக வேகத்தில் செல்லும் ஒரு விண்கலம் ஒன்று உங்களிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிகுமாரிடமோ , கருந்தேள் ராஜேஷிடமோ அந்த விண்கலத்தைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்போது அந்த விண்கலத்தினுள் ஏறி நீங்கள் பயணம் செய்யப் போகிறீர்கள். உங்கள் நண்பனொருவன் விண்கலத்துக்கு வெளியே நின்றுகொண்டு, நீங்கள் புறப்படும் அதேசமயம், ஒரு மிகப்பெரிய லேசர் ஒளிகொண்ட டார்ச் விளக்கை அடிக்கிறான். என்ன நடக்கும்?

நீங்கள் ஒளியைவிட அதிக வேகத்தில் பயணம் செய்து கொண்டிருப்பதால், அந்த டார்ச்சின் ஒளி உங்களை வந்து அடையவே முடியாது. டார்ச்சின் ஒளி உங்களுக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும். அதனால், அந்த டார்ச்சின் ஒளியை உங்களால் காணவே முடியாது. இது புரிகிறதா?

புரிந்தால், இதையும் பாருங்கள்.

பேரண்டத்தின் அளவு முடிவில்லாதது. அதாவது முடிவிலி (infinity). ஆனாலும், நம்மால் ஒரு குறிப்பிட்ட அளவுவரை அண்டத்தைப் பார்க்க முடிகிறது. நம்மால் காணக்கூடிய அந்த அண்டவெளிப் பரப்பை, Observable Universe என்கிறோம். அது 46 பில்லியன் ஒளியாண்டுகள் ஆரமுடைய வட்டமாகும். அதாவது 46 பில்லியன் ஒளியாண்டுவரை நம்மால் காணக்கூடியவாறு இருக்கிறது. 46 பில்லியன் எல்லையிலிருந்து ஒளியால் நம்மை வந்து அடைய முடிகிறது. அதற்குமேல் நம்மால் காண முடியவில்லை.
ஏன்???

அண்டவெளி (Space) எப்போதும் விரிந்து கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார்கள் அல்லவா? அதுவும், வேக முடுக்கத்துடன் (acceleration) விரிகிறது என்றும் சொல்கிறார்கள் இல்லையா? அண்ட வெளியின் வேகம், வேக முடுக்கத்தின் பயனாகப் படிப்படியாக அதிகரித்து அதிகரித்து, 46 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்துக்கு அப்புறம் ஒளியின் வேகத்தைவிட அதிக வேகமாக மாறுகிறது. அதனால், அதற்கப்பால் இருக்கும் ஒளியால் நம்மை வந்து சந்திக்க முடியவில்லை. காரணம், ஒளி நம்மை வந்து அடைய எடுக்கும் வேகத்தைவிட, அதிக வேகத்தில் நம்மைவிட்டு விலகிச் செல்கிறது அங்கிருக்கும் ஒளி. இப்போது நான் மேலே சொன்ன டார்ச் ஒளியின் விளக்கத்தை யோசித்துப் பாருங்கள். கொஞ்சம் புரிவதுபோல இருக்கும்.

முடிவாக, மனிதனால் எப்போதுமே அண்டவெளியை ஒரு அளவுக்கு அப்பால் (46 பில்லியன் ஒ.ஆ) காணவே முடியாது. டாட்.