Spread the love

எச்சரிக்கை: நீண்ட, செறிவான சிந்தனைச் சொற்றொடர். பொறுமையற்றோர் அப்பால் விலகி செல்லுங்கள்)

2018: செப்டம்பர் : நளராஜபுரம், ஸ்ரீவைகுண்டம் :
—————————————————————–

திருமலை நாயுடு தெருவில் ஒட்டிய சுவரொட்டி இது. மஞ்சள் நீராட்டு விழாவோ, கால்கோள் விழாவோ கிடையாது. பிறகு என்ன எழுதி இருக்கிறது ?

வருடத்தில் ஒரு மாதம் மட்டும் (டிசம்பரில்) பொதிகை மலையில் அபரிதமாக பொழிந்து காட்டாறுகள்மூலம் வழியும் மழைநீர், பாபநாசம் அணைக்கட்டு வந்தடைகிறது. அங்கிருந்து வடியும் நீர் தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகள் வழியாக வீணாக, வங்க கடலில் சென்று கலக்கிறது. இல்லை செலுத்தப்படுகிறது.

“கடல் வற்றிவிட்டதென” தாமிரபரணியின் தண்ணீரை கடலுக்கு திருப்பிவிட்ட பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு நன்றியறிவிக்கும் சுவரொட்டியை அச்சிடுகிறான் ஒரு உழவன் !

அம்பாசமுத்திரத்தில் இருந்து, ஸ்ரீவைகுண்டம் வரை, நதியுன்னி, வடக்கு கோடைமேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், கன்னடியன், திருநெல்வேலி, பாளையங்கால். மருதூர் கீழக்கால், மேலக்கால், ஸ்ரீவைகுண்டம்கீழக்கால், மேலக்கால் என, 10க்கும் மேற்பட்ட கால்வாய்களில் தாமிரபரணி தண்ணீரை திருப்பி விட முடியும். ஆனால் செய்வதில்லை. அதனால் ஆண்டு முழுவதும் வறட்சி, தண்ணீர் பஞ்சம்.

தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு இவற்றை இணைக்க போடப்பட்ட வெள்ளநீர் கால்வாய் திட்டம், அரசியல் காழ்புணர்ச்சியால் 30 வருடமாக அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் தனியார் திட்டங்களுக்காக, தொழிச்சாலைகளுக்காக, சைனியத்தின் தேவைகளுக்காக தாமிரபரணி நன்னீர், குழாய்மூலம் நாங்குநேரி போன்ற கால்வாயில்லாத வறண்ட ஆனால் குளங்கள் நிறைந்த பகுதிகளுக்கு கூட துரிதகதியில் கொண்டுசெல்லப்படுகிறது.

பெப்சி குளிர்பான நிறுவனத்துக்கு அம்மையார் எழுதிக்கொடுத்த பட்டயம் ஊரறிந்தது. கங்கைகொண்டானில் பெப்சி, கொக்ககோலா உட்பட சிப்காட் தயவால் 27 நிறுவனங்கள் தாமிரபரணியை உறிஞ்சுகின்றன. அதன் தேவைக்குமட்டுமே அணைக்கட்டில் தண்ணீர் வைத்துக்கொண்டால்போதும். மிச்சம் மீதி கடலுக்கு.

விவசாயம், அரசாங்கத்துக்கு ஒரு பொருட்டே அல்ல.

கடந்த பருவத்தில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பார்வையிட்ட மாவட்ட ஆட்சி தலைவர் சந்திப் நந்தூரி சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என கூறினார். ஆனால் கால்வாய் வறண்டு தான் கிடந்தது. அவர் ஏன் பொய் சொன்னார் ? வடிநில கோட்ட கண்காணிப்பு இன்ஜினியர் ஏன் விவசாயிகளை கடிந்துகொள்கிறார் ?

தண்ணீரை திறந்து விடுவது தடுப்பது போன்றவைகளை அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகளே செய்து விடுவார்கள். ஆனால் தற்போது அந்த அதிகாரம் முழுவதும் சென்னைக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆங்கே யார் தீர்மானிக்கிறார்கள் ?

மருதூர் மேலக்காலில் மிகப்பெரிய குளங்களான வெள்ளூர் குளம், தென்கரைக்குளம், நாசரேத்தை சுற்றியுள்ள 5 குளங்கள் நிரம்ப வில்லை. நெற்பயிர்கள் கருகுமென தென்கரைக்குளம், நொச்சிக்குளம் பெண்கள் ஆட்சியரை முற்றுகையிட்டு கதறி அழுவது வாடிக்கை.

மருதூர் கீழக்காலில் உள்ள சிவகளை குளம், பேரூர் குளம், பெருங்குளம் போன்ற குளங்களுக்கு 10 சதவீத தண்ணீர் கூட வந்து சேருவதில்லை. அமலை செடி, கொடிகள் கால்வாயை அடைத்துள்ளன.

ஸ்ரீவைகுண்டம் தென்காலில் கடம்பா குளம் உள்பட பல குளம் நிரம்புவதில்லை. வடகாலில் கடைசி குளமான கோரம்பள்ளம் குளத்துக்கு தாமிரபரணி தண்ணீர் போய் சேருவதில்லை. தூர் வருவதில்லை. மடையர்கள் பணிப்புரிவதில்லை. காலியிடங்களை நிரப்பப்படவில்லை. ஆட்களே இல்லை.

அல்லது ரெண்டே நாள் மழையில் குளங்கள் உடையும் அபாயம். கீழபுதுக்குளம், முதலைமொழி குளம், வெள்ளரிக்காயூரணி புதுக்குளம், தேமான்குளம், கடம்பாகுளம் பகுதிகள் எல்லாமே வறட்சி அல்லது வெள்ளம். காரணம் மதகுகள் மேலாண்மை (இன்மை).

ஊழலும், அக்கறையின்மையும், மேலிடத்து வணிகர்களின் வஞ்சனையும் புரையோடிவிட்டது.

அதனால்தான் சாமிதோப்பு உழவன் தன் கைக்காசுபோட்டு சுவரொட்டி அடித்தான். அறச்சீற்றம் கொண்டவன், சொந்த காசை செலவழித்து ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டான்.

2019: ஏப்ரல் : தெல் அவிவ், இஸ்ரேல் :
—————————————————————-

 

“யாரெல்லாம் சந்திரனுக்கு செல்ல போகிறீர்கள் ?” என்று பால் கலக்காத கசப்பான துருக்கி காப்பியை கையில் வைத்துக்கொண்டு முகநூலில் வினவுகிறார் யாரிவ் பாஷ். கணினி துறையில் இருக்கும் ஒரு வல்லுநர். அது 2011ல். உடனே நூற்றுக்கணக்கில் நண்பர்கள் “நான்”, “நான்” என்று பதில் போடுகிறார்கள்.

2007ல் கூகுள் நிறுவனம் “நிலவுப்பரிசு” போட்டியை அறிவிக்கிறது. பரிசுத் தொகை 200 கோடி ருபாய். “நிலவில் ஒரு எந்திரத்தை இறக்கவேண்டும். அது நிலாவில் 500 மீட்டர் ஓடவேண்டும். பூமிக்கு படம் அனுப்பவேண்டும். அரசு சாரா தனியார் முயற்சியாக இருக்கவேண்டும்”. இதுதான் போட்டியின் விதி.

இந்த பரிசை அடைய ஆசைப்படுகிறார் யாரிவ் பாஷ். “ஸ்பேஸ்ஐஎல்” (SpaceIL) என்ற கம்பெனி மூன்று பேரால் துவங்க படுகிறது. 200 பேர் தன்னிச்சையாக வேலை செய்கிறார்கள். நிலவுக்கு அனுப்ப பேரஷீட் (Beresheet) என்ற விண்கலத்தை தயாரிக்கிறார்கள். பேரஷீட் என்றால் ஹீப்ரூ மொழியில் “ஆதியில்” என்று பொருள்.

முதலில் ஒரு தண்ணீர் புட்டியளவு உள்ள எந்திரத்தை அனுப்பத்தான் நினைத்தார்கள். ஆனால் அதுபோதாது என்று இறுதியில் ஒரு மகிழுந்து அளவு 600 கிலோ எடையுடன் கூடிய விண்கலம் தயாராகிறது.

“அம்டாக்ஸ்” கம்பெனியை தோற்றுவித்த மோரிஸ் கான் எனும் செல்வந்தர் நிதி உதவி புரிகிறார். கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்றுவது இவரது பொழுதுபோக்கு.

இது நிலவில் பொத்தென விழும்போது பழுதாகாமல் இருக்க கால்களின் குழாயினுள் அதிர்ச்சியை உறிஞ்சும் விதமாக ஹைட்ராலிக் திரவத்துக்கு பதில் அலுமினிய நெளி தகட்டை சுருட்டி வைத்திருந்தனர். அதேபோல எடை குறைப்பை
செய்வதற்கு மேலதிக காப்பு இயந்திரம் (backup engine) இல்லாமல் அனுப்புகிறார்கள் .

22 February 2019 அன்று அமெரிக்காவின் “ஸ்பேஸ்எக்ஸ்” (SpaceX) என்ற தனியார் நிறுவனத்தின் Falcon 9 booster வாடகை ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. அந்த சவாரியில் இந்தோனேசியாவின் விண்கலமும் ஒரு அமெரிக்க ராணுவ விண்கலமும் அடங்கும்.

எரிபொருள் சிக்கனத்தை முன்னிட்டு, தாவீது கோலியாத்தை பார்த்து கவண்கல் எரிவதைப்போல பூமியை நீள்வட்டப்பாதையில் பல முறை சுற்றவைத்து நிலவுக்கு தூக்கி வீசுகிறது, அதை செலுத்தும் ராக்கெட்.

மொத்த உலகமும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, 11 April 2019 அன்று அந்த வெண்கலம் நிலவில் (Mare Serenitatis) தரையிறங்கும்போது கடைசி நேரத்தில் எதோ ஒரு காரணத்தால் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு நிலவில் மென்மையாக இறங்கவில்லை.

மிஷன் கட்டுப்பாடு அறை தோல்வி என்று அறிவித்தது. இஸ்ரேலிய விண்வெளி அதிகாரிகள் குறைந்த செலவு, சிறு-விண்கலத்தின் வெற்றி என்று பாராட்டினார்கள். அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து நிலவில் இறங்கிய நான்காவது நாடாக இஸ்ரேல் அறிவிக்கப்பட்டது. அந்த மக்கள் நெகிழ்ந்துபோய் அறிவியல் விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஊட்டுவதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பார்க்கின்றனர்.

நிலவில் கொண்டு இறக்கிய பொருட்களுள் பைபிள், குழந்தைகள் வரைபடங்கள், நாஜி இனப்படுகொலையின் உயிர்தப்பிய ஒருவரின் நினைவுகள், இஸ்ரேலின் தேசிய கீதம், நாட்டின் தேசிய கொடி மற்றும் இஸ்ரேலின் சுதந்திர பிரகடனத்தின் பிரதி என்று எல்லாமே சாமானியனுக்கு பெருமை சேர்க்கும் விடயங்கள்.

இது அறிவியல் சோதனைக்கான பயணமல்ல. போட்டியில் தோற்றாலும், பரிசு போட்டி காலாவதியானாலும் ஆறுதல் பரிசாக கூகுள் நிறுவனம் 1 மில்லியன் டாலரை வழங்குகிறது.

2010 டோமலூரு, பெங்களூரு, இந்தியா :
———————————————————–

சற்றேறக்குறைய அதே நேரத்தில் இந்தியாவில் அறிவியல் ஆர்வலர்கள் கூகுள் நிலவுப்பரிசை பரிசை தட்டிச்செல்ல திட்டமிடுகிறார்கள்.

“முரண்பட்ட மற்றும் வழக்கத்துக்கு மாறான தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கூட்டு” என்று கூறிக்கொள்ளும் ஒரு 30 மக்கள், ராகுல் நாராயண் தலைமையில் டீம் இண்டஸ் (Team Indus) என்ற கம்பெனியை தோற்றுவித்து ஒன்றுசேர்கிறார்கள்.

பிறகு நிதியளிக்க நந்தன் நீல்கனி (ஆதார்) போன்றோர் சேருகிறார்கள் .ரதன்டாடா, பிளிப்கார்ட் பன்சால் போன்றோர் நன்கொடை அளிக்கிறார்கள். 450 கோடி வேண்டும். 260 கோடி வரை கிடைத்துவிட்டது.

விண்வெளியைப்பற்றி அனுபவம் இந்திரனில் சக்ரவர்த்தியை தவிர யாருக்கும் கிடையாது. ஆர்வம் மட்டுமே இருந்தது. சிக்கனமாக அனுப்பவேண்டும். இஸ்ரோ உதவியை நாடுகிறார்கள். அதை நம்பி நிலவில் இறங்கும் ரோபோவை ஆர்வத்துடன் வடிவமைக்கிறார்கள். சில இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவுகிறார்கள்.

துடிப்பான இளைஞர்கள் தினமும் நிலவில் இறங்கும் வாகனத்தை கரடு முரடான தரையில் தூக்கிப்போட்டு சோதனைகள் செய்கிறார்கள். நாளுக்கு நாள் அதை முகநூலில் பகிர்ந்து மகிழுகிறார்கள். மொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் இருக்கிறது.

இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் தினமும் பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். நிலவு, கையெட்டும் தூரத்தில் தெரிகிறது.

என்னதான் உசுப்பேத்தினாலும் கடைசியில் பணம்தான் பேசும். இந்தியாவின் இஸ்ரோ PSLV ராக்கெட்டின் வாடகை கூலி 139 கோடி ரூபாய். தனியார் மயமான இஸ்ரோவை, கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த்ரிக்ஸ் (Antrix) நிறுவனம் மறுத்துவிட்டது. கெஞ்சி பிரயோஜனமில்லை. கூகுள் கொடுத்த கெடு முடிந்துவிட்டது.

ஜனவரி , 2018 நிலவு பயணம் கனவாகிப்போனது. இஸ்ரோ “எங்களுடைய சந்திரயான் கோளை நிலவுக்கு அனுப்புகிறோம். நீங்கள் வேண்டாம்” என்று சொல்லிவிட்டது. வெளிநாட்டு செயற்கைகோள்களை 15 ராக்கெட்டுகள் மூலம் ஏவி, 1300 கோடி சம்பாதித்ததாக மந்திரி ஜிதேந்திர சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதுசரி. இஸ்ரோ, நம் இந்தியாவுக்கு உதவாமல் யாருக்காக உழைக்கிறது ? சந்திராயன் 1 கலம், சந்திரனின் துருவத்தில் தண்ணீர் கண்டுபிடித்தது என்றும் 70 ஆயிரம் புகைப்படங்கள் எடுத்தது என்றும் சொல்லுகிறார்கள். ஒன்றுகூட பொதுவெளியில் இல்லை.

சந்திராயன் 2 விண்கலத்தை இன்னமும் சந்திரனில் இறக்காமல் ஆறுமுறை தள்ளிப் போடுவதேன் ?. “விக்ரம்” மற்றும் “பிரக்யான்” என்று பெயரிடப்பட்டுள்ள வாகனமும், நிலவைச்சுற்றி வரும் துணைக்கோளும், நிலவில் உள்ள கனிம வளத்தை மட்டுமே அளப்பதற்காகும் கருவிகளைக் கொண்டது. வான ( சூரியன்)ஆராய்ச்சிக்காக ஒரேயொரு சாதனம் மட்டுமே இடம்பெறுகிறது.

சந்திரனுக்கு அனுப்பி தண்ணீர் மற்றும் கனிமவளம் கண்டுபிடிக்கவேண்டுமென்று இப்போது யார் அழுதார்கள் ?

தற்போது டீம் இண்டஸ் முயற்சியை கைவிட்டாலும் புதிய உத்வேகத்தோடு தனியார் விண்வெளி வியாபாரத்துக்கு தயாராகிவருகிறது. பழைய இஸ்ரோ நிபுணர்கள் அதில் வேலைசெய்கிறார்கள். ஆனால் தற்போது அது ஒரு லாபநோக்கத்துடன் இயங்கும் கம்பெனி. இதேபோல உலகெங்கிலும் தனியார் கம்பெனிகள் பல உள்ளன.

திசம்பர், 2018 : ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரா :
—————————————————————

இந்த காட்சி உங்களுக்கு பழக்கமான ஒன்றுதான். இஸ்ரோவின் தலைவர், கைலாசவடிவு சிவன், திருப்பதி பெருமாளை தரிசிப்பர். அல்லது காளஹஸ்தி. பிறகு PSLV அல்லது GSLV ராக்கெட் பற்றவைக்கப்படும். பன்னாட்டு செயற்கைகோள்களை அள்ளிக்கொண்டு போய் விண்வெளியில் தூவிவிடும். நீங்கள் மார்பு புடைக்க பாரத மாதாவை வணங்கி மூச்சு வாங்குவீர்கள். (பிள்ளைகளுக்கு காண்பிக்க மட்டும் நாசாவுக்கு அனுப்புவீர்கள்).

அந்த சீன் எல்லாம் வேண்டாம். இஸ்ரோ/அந்த்ரிக்ஸ் ராக்கெட்டுகள் “லோடு லாரிகள்” ஆகி வருடங்கள் ஆகிவிட்டன. எப்போதாவது அனுப்பும் “அஸ்ட்ரோசாட்” போன்ற நட்சத்திர ஆய்வு கோள்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால் இது ஒரு பெரிய விண்வெளி வணிகம். பன்னாட்டு கம்பெனிகளின் வாடகை வண்டி.

இனிமேல் புயல், மழை எல்லாம் நாமே பார்த்துக்கொள்ளவேண்டியது. புல்வாமா, பால்கோட் போன்ற முக்கிய நிகழ்வுகளைக்கூட காலத்தில் படமெடுத்து சொல்லமுடியாத கேவலமான நிலைமையில் தான் இருக்கிறோம். செயற்கைகோள்கள் சத்தீஷ்கரில் சுரங்கத்தை கண்டுபிடிக்கவும், பழங்குடிகளை வேவுபார்க்கவும் பயன்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சியை தனியாருக்கு விற்று நாளாகிறது. அமெரிக்காவில் நாசா மூடி பலவருடமாகிறது. அங்கே இப்போது தனியார்தான். சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு கொண்டுபோவதை ரஷ்யா செய்துகொண்டிருந்தது. தற்போது அதுவும் நிறுத்திவிட்டது. இப்போது அந்த வேலையை செய்வது ஸ்பெஸ்எக்ஸ். கூலி வாங்கிக்கொள்ளும். இரண்டு ராக்கெட்டுகள் வெடித்தால் கம்பெனியை இழுத்துமூடி விடுவார்கள்.

ரஷ்யாவில் அப்படித்தான் நடந்தது. 10 வினாடியில் புரோட்டான் எனப்படும் ராக்கெட் வெடித்து 982 கோடி ருபாய் பஸ்பமானது. மாதம் ஒன்றாக இந்தியா அனுப்பிய ராக்கெட்டுகள் நின்றுபோனதற்கு PSLV-C39/IRNSS-1H ராக்கெட் வெடித்ததும் GSAT 6A செயற்கைகோள் செயலிழந்ததும் காரணம்.

வரிப்பணத்தில் அனுப்பாமல் விற்பனைக்காக வெளியாருக்கு சேவைசெய்வதால் உங்கள் பேச்சு எடுபடாது.

முன்னணியில் மாணவர்கள் ஓய்வுபெற்ற விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். அவர்களுக்கு பின்னால் பெருமுதலாளிகளும் அவர்களுக்கும் பின்னால் உலக முதலீட்டாளர்களும் அணிவகுப்பார்கள். அப்படியென்றால் உங்கள் பேரப்பிள்ளைகள் விண்வெளி ஆய்வு மேற்கொள்ளமுடியாதா ? முடியும். செய்வார்கள்.

சொல்லப்போனால் எதிர்காலத்தில் சாமானியனின் வாழ்வில் எல்லாமே விண்வெளி தொழில்நுட்பம் கலந்திருக்கும். இப்போதே உங்களுக்கு தெரியாமல் டெலிவிஷன் சானல்கள் வருவது விண்வெளியிலிருந்துதானே. அதற்குத்தானே இத்தனை செயற்கைகோள்கள் !.

வணிக விண்வெளி தொழில் 2005ல் $175 பில்லியன் ஆக இருந்தது தற்போது 2017ல் $385 பில்லியன் ஆகிவிட்டது என்கிறது அமெரிக்க வணிக அறிக்கை. அதாவது 27 லட்சம் கோடி. இந்த அவசரத்தில் உங்களுக்கு கஜாபுயலில் எத்தனை படகுகள் அழியும் என்று கண்டுபிடித்துச்சொல்வதுதான் வேலையா ? எத்தனை பிணங்கள் மிதந்தது என்று எண்ணவேண்டுமா ?

இப்போது IMD சொல்வதெல்லாம் எதோ கடவுள் புண்ணியத்தில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் இன்சாட் 3D மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள் மூலம்தான். அதுகூட “இதோ வந்துவிட்டேன்” என்று புயல் சொல்லிகொண்டுவந்தால் மட்டுமே துல்லியமாக ஆரூடம் சொல்வார்கள்.

உங்கள் பேரன் விண்வெளியிலிருந்து பத்ரிநாத்தையும், காவேரி, கங்கை, வைஷ்ணோதேவி என்று என்று எல்லாவற்றையும் ஆய்வான். அவன் கண்களுக்கு அவை சைவ, வைணவ புனித தளங்கள் கிடையாது. அவற்றினடியில் கிடக்கும் புதையல் மட்டும்தான் தெரியும். உங்கள் கிராமத்தின் வயல்வெளிகளுக்கடியிலும், கானகத்திலும் உள்ள கனிம வளம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். இப்போதே டெல்டாவில் அப்படித்தான்.

உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் மடிந்தாலும் அவை கணக்கில் வராது. அப்படி நீரை நம்பி இருப்பதே அவனுக்கு தெரியப்போவதில்லை. அவற்றை சொந்தம் கொண்டாடுவோர் இல்லை. காசுகொடுத்தால்தான் குடிநீர். இல்லாதவர்கள் சாகவேண்டியதுதான். பஞ்சம், பட்டினி வந்தால் இந்த கம்பெனிகளுக்கு கொண்டாட்டம். அப்போதுதான் தண்ணீர் வியாபாரம் ஜோராக நடக்கும்.

தற்போது விண்வெளி ஆய்வாளர்களின் முக்கிய குறி கனிமம். அது நிலவிலும், அங்காரகத்திலும், விண்கல்லிலும் உள்ளது. விண்வெளிக்கு சென்று பறந்துவரும் விண்கல்லை, வால் நட்சத்திரத்தை குடைந்து கனிமங்களை எடுக்க முயற்சிகள் துவங்கிவிட்டன. Bechtel என்ற அமெரிக்க ராட்சத கம்பெனி ஒரு மாதிரி.

விண்வெளி அனைவருக்கும் சொந்தம். குத்தகை தேவையில்லை. ஐரோப்பாவின் ரோசட்டா விண்கலம் ஏற்கனவே 67P/Churyumov–Gerasimenko என்ற விண்கல்லை அடைந்துவிட்டது.

முக்கியமான கனிமப்பொருள் தண்ணீர். அதன் பிறகுதான் பிளாட்டினம், தங்கம் எல்லாம். அதுதான் ஆச்சரியம். ஆனால் உண்மை. எதிர்காலத்தில் விண்வெளி கேந்திரங்களுக்கு பயிர் செய்ய, கதிரியக்கத்தை கட்டுப்படுத்த, குடிக்க, எரிபொருள் தயாரிக்க தண்ணீர்தான் இருக்கப்போகிறது. அதை எடுத்து விற்கும் விற்பனை நிலையங்கள் விண்வெளியில் தோன்றும்.

தண்ணீர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும்.

“காவேரில தண்ணியெல்லாம் வராது. குடுக்கமுடியாது. தண்ணி வேணுன்னா சொல்லுங்கோ. இஸ்ரேல்லேந்து மெஷின் கொண்டுவந்து கடல் உப்புத்தண்ணிய சுத்தப்படுத்தி தரேன்” என்று டெல்டா மக்களைப்பார்த்து ஒரு மூதேவி நக்கலடித்தது நினைவுக்கு வரவேண்டும்.

இன்னொரு கொள்ளையன் ஜீப் எடுத்துக்கொண்டு நதிகளை இணைக்கிறேன் என்று தலா 5 ஆயிரம் கோடியை ஒவ்வொருமாநிலத்திடமிருந்தும் வாங்கிக்கொண்டு அமேரிக்கா சென்றது பசுமையாக நினைவில் வரவேண்டும்.

கோயமுத்தூரிலும் நீர் நிலைகளை சூயஸ்) தனியாருக்கு விற்றது நினைவுக்கு வரவேண்டும். சட்டெஸ்கரில் சிவநாத் ஆறு என்று ஒரு ஆற்றையே “ரேடியஸ் வாட்டர் லிமிடெட்” என்ற தனியாருக்கு தாரைவார்த்துவிட்டனர். பிறகு தனியாரிடம் அரசாங்கமே அதிக விலையில் தண்ணீரை வாங்கி குறைந்தவிலையில் தொழிச்சாலைகளுக்கு விற்கும் அவலம்.

எதுவுமே நினைவில் இல்லையென்றால் உங்கள் வீட்டில் தண்ணீர் வடிகட்டியை ஒரு நாள் அணைத்துவிட்டு டாங்கியிலிருந்து மேல்நிலைத்தொட்டியில் நிரப்பப்படும் அழுக்குத் தண்ணீரை குடித்து பாருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இதுகூட கிடைக்க வாய்ப்பில்லை. காக்கை புள்ளினங்களை சொல்லவே வேண்டாம்.

இதற்குமேலும் எழுதினால் படிக்கமாட்டீர்கள். எனக்கும் வயிறு எரியும். வாந்தி வரும். நிறுத்திக்கொள்வோம். முதல் பாராவில் சொன்ன உழவனின் மகன், பிறந்தநாளுக்கு அடுமனை பண்டத்தை சீவலப்பேரி அரிவாளால் ஒரே வெட்டாக வெட்டி பிறந்தநாள் கொண்டாடினான். மிஞ்சினால் அதுதான்.

இனிமேல் போஸ்டர் பேசாது.