FEATUREDNewsSocialmediaஅறிவியல்

முதல் மனிதன் ஆணா பெண்ணா?

Spread the love

முதல் மனிதன் ஆணா பெண்ணா?
மனிதனின் தோற்றம் படைப்பு என்றால், மிக எளிதாக பதில் சொல்லிவிடலாம். அதற்கு ஆதாரம் (?!) இருக்கின்றது. கடவுள் ஆதாமை (ஆண்) தூசியில் இருந்து படைத்தார். பின்னர், அவருக்குத் துணை வேண்டும் என்று கருதி அவரது விலா எலும்பில் இருந்து ஏவாளைப் (பெண்) படைத்தார். ஆக, முதல் மனிதன் ஆண்தான்.
இதற்குச் சான்று பகர்வதாக, ஆணுக்கு XY குரோமோசோம்களும், பெண்ணுக்கு XX குரோமோசோம்களும் இருப்பதால், முதலில் XY குரோமோசோம்கள் கொண்ட ஆண்தான் முதலில் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லக்கூடும்.
ஆனால், ஒன்றிலிருந்து பிரித்து எடுத்து மற்றொன்று வருகின்றது என்றால் அதில் புதிதாக எதுவும் வரக்கூடாது. அப்படி வந்தால், முதல் படைப்பு முழுமையானது அல்ல அல்லது அது படைப்பே அல்ல. அடுத்தடுத்த வழித்தோன்றல்களில் தன்னிச்சையாக ஏதோ மாறுதல் ஏற்படுகின்றது என்பது பரிணாமம் எனப்படும். மனிதர்களில் ஏன் இரத்தவகைகள் மாறுபடுகின்றன? ஒரே ஆணிலிருந்து படைக்கப்பட்ட பெண்ணோடு இணைந்து மனிதகுலம் வளர்ச்சி பெற்றிருந்தால், ஒரே மாதிரியான மனிதர்கள்தானே இருந்திருக்க வேண்டும் இன்று?
பரிணாமத்தின்படி பதில் சொல்வதென்றால்… மிகக்கடினம். கண்ணை மூடிக்கொண்டு எதையும் சொல்லிவிட முடியாது. ஏதேனும் ஆய்வு செய்திருக்க வேண்டும். அறிவியலார் ஏற்றுக்கொள்ளும்படி, ஆதாரப்பூர்வமாக கருத்தினை முன்வைக்க வேண்டும். முயற்சித்திருக்கிறார்கள்.
கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Peter Underhill மற்றும் அவரது குழுவினர், அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், 22க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட புவியிடங்களில் உள்ள 1000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களிடமிருந்து Y-குரோமோசோம்களை எடுத்து மரபணுச் சோதனைகளுக்கு உட்படுத்தினர். அதன் மூலம், மனிதனின் அண்மைக்கால மூதாதையர் ஒரு ஆண் என்றும், அவர் ஏறத்தாழ 59,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருக்கிறார் என்று முடிவிற்கு வந்தனர்.
எப்படிக் காலத்தைக் கணிக்கின்றனர்?
Mutational Clock அல்லது Molecular Clock என்றொரு முறை உள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட புரதப்பொருட்களிலும் ஏற்படும் பரிணாம மாற்றமானது ஏறத்தாழ மாறாத காலஇடைவெளியையே ஒவ்வொரு தலைமுறைகளிலும் கொண்டுள்ளது என்ற பொது ஆய்வு முடிவினை அடிப்படையாகக் கொண்டு இந்த முறை செயல்படுகின்றது.
எப்படி Carbon Dating முறையில் கார்பன்-14ன் ஆயுள் 5730 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு எலக்ட்ரானை இழந்து பாதியாகக் குறைவதை வைத்து புவிப்பொருட்களின் காலத்தைக் கண்டுபிடிக்கின்றார்களோ, அதைப்போன்றதுதான் இந்த மாலிக்யுலர் கடிகார முறையும்.
Y-குரோமோசோம்களை எடுத்து சோதனை செய்தது போல, Mitochondrial DNA – mtDNA (தமிழில் இழைமணிய டிஎன்ஏ)யை எடுத்தும் ஆய்வு செய்திருக்கின்றனர். அது என்ன மைட்டோகான்ட்ரியல் டிஎன்ஏ? உயிரினங்களின் ஆற்றல் கோபுரங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகான்ட்ரியாவில் இருக்கும் Eukaryotic (மெய்க்கருவுயிரி)யில் இருக்கும் ஒரு சிறு பகுதியான டிஎன்ஏ ஆகும். அந்த eukaryoticயே உணவை வேதியல் ஆற்றலாக மாற்றி நம் செல்கள் பயன்படுத்த வழி செய்கிறது.
மனிதர்களில் இந்த mtDNAவே மிகச்சிறிய குரோமோசோம் என்று சொல்லப்படுகின்றது. 37 ஜீன்களின் படிக்குறியீடுகளும், ஏறத்தாழ 16,600 ஜோடிகளும் உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். இது தாய்வழி மரபில் (Matrilineal) மட்டுமே கடத்தப்பட்டு வரும். நியூக்ளியர் டிஎன்ஏ (Nuclear DNA) தாய் மற்றும் தந்தை இருவழியாகவும் கடத்தப்பட்டு வரும். அப்படிக் கடத்தப்பட்டு வரும்பொழுது இரண்டும் இணைந்து மாற்றம் (recombination) பெற்று வரும். ஆனால், mtDNA மாற்றம் அடையாது அப்படியே கடத்தப்படும்.
அதாவது, தாயிடமிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும். ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் என்று கொள்வோம். ஒன்று ஆண் மற்றொன்று பெண். தாயிடமிருந்து mtDNA இருவருக்குமே கடத்தப்பட்டு வந்திருக்கும். இப்பொழுது அந்த இரண்டு குழந்தைகளுக்கும் குழந்தை பிறக்கின்றது என்று கொள்வோம். ஆண்குழந்தையிடமிருக்கும் mtDNA இப்பொழுது பிறக்கும் குழந்தைக்கு கடத்தப்படமாட்டாது. ஆனால், அந்தப் பெண்குழந்தைக்குப் பிறக்கும் குழந்தைக்கு mtDNA கடத்தப்பட்டிருக்கும்.
பெண்வழியாக மட்டுமே இந்த mtDNA கடத்தப்பட்டு வந்துகொண்டிருக்கும். காரணம், பெண்ணின் கருமுட்டையில் இந்த mtDNA அதிகளவில் இருக்கும். ஆணின் விந்தனுவிலோ சிறிய அளவிலேயே இருக்கும். இந்த மைட்டோகான்ட்ரியாவின் செயல்பாடு என்னவென்றால் அது இருக்கும் செல்லிற்கு ஆற்றலை வழங்குவதுதான். விந்தணுவனாது இந்த மைட்டோகான்ட்ரியாவைப் பயன்படுத்தி, பெண்ணின் கருமுட்டையை நோக்கிச் செல்லும் பயணத்திற்கான ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். கருமுட்டையை அடைந்து கருத்தரித்ததும், இதன் மைட்டோகான்ட்ரியா அழிந்துபட்டுப் போகும். ஆக, தந்தைவழியே வந்த mtDNA அழிந்துபட்டுப் போகின்றது.
பரிணாமவியலார்களுக்கு இந்த mtDNA மிக முக்கியமான ஒன்றாகும். காரணம், நம் உடம்பில் உள்ள எல்லா செல்களிலும் இது எந்த மாறுதலும் இன்றி ஒரே மாதிரியாகவே இருக்கும். ஒரு செல்லில் நியூக்ளியர் டிஎன்ஏ இரண்டே இரண்டுதான் இருக்கும். mtDNAவோ ஆயிரக்கணக்கில் இருக்கும். நியூக்ளியர் டிஎன்ஏவை பிரித்தெடுப்பதை விட இந்த mtDNAவை பிரித்தெடுப்பதும் எளிது.
ஆக, தாயிடமிருந்து எந்தவித மாறுதலுமின்றி, தந்தையின் மரபணுவோடு சேர்ந்து மூன்றாவது மாற்றம் பெறாமலும் கடத்தப்பட்டு வருவதால், இதனைக் கொண்டு மானுடவியல் காலத்தைக் கணிக்க முடியும்.
Mutational Clock முறையைக் கொண்டு இந்த mtDNAவின் காலத்தைப் பின்னோக்கிக் கணிக்கும்பொழுது அது ஏறத்தாழ 200,000 வருடங்களுக்கு முன்னர் இருந்து வந்திருக்கின்றது என்பதைக் கணக்கிட முடிந்தது. அதாவது 200,000 வருடங்களுக்கு முன்னர் இருந்த ஒரு பெண்ணிடமிருந்தே இன்றைக்கு இருக்கின்ற மனித இனம் வந்திருக்கின்றது என்பது தெரிகின்றது.
அந்தப் பெண்ணை Mitochondrial Eve (இழைமணியப் பழையோள் அல்லது இழைமணிய முதற்றாய்) என்று அழைக்கின்றார்கள். ஆக, ஆய்வுகளின் படி இன்றைய மனித இனம் ஒரு பெண்ணிடமிருந்து வந்திருக்கின்றது என்பது நிரூபணமாகின்றது.
இதுவரைக்கும் நம்மால் ஆய்வு மூலமாகப் பின்னோக்கிச் சென்று கண்டறிய முடிந்திருக்கின்றது. ஆனால், அன்றைக்கு இந்த இழைமணி ஏவாள் காலத்தில் இவள் மட்டும் தனிப்பெண்ணாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நன்கு வளர்ச்சி பெற்று இனப்பெருக்கம் செய்யும் ஒரு பரிணாம உயிராக இவள் இருந்திருக்கிறாள் என்றால், இவளைப் போன்று வேறு மனிதர்களும் இருந்திருப்பர்.
ஏன் அவர்களது வழித்தோன்றல்கள் இல்லை என்றொரு கேள்வியும் எழுவதைத் தடுக்க முடியாது. இதற்குப் பதிலாக பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர்.
1. ஏதொவொரு காரணத்தால் அந்த மனித இனம் அழிந்துபட்டுப் போயிருக்கலாம். இந்த இழைமணி ஏவாள் மூலமாக மட்டும் இன்றைய மனித வழித்தோன்றல்கள் வந்திருக்கலாம் என்று.
2. ஒரு வேளை இந்த இழைமணி ஏவாள் காலத்தில் வேறு பெண்களும் இருந்து, ஏதோவொரு கட்டத்தில் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்காது போயிருந்து இந்த mtDNA கடத்தும் செயல்பாடு நின்று போயிருக்கலாம்.
ஆக, Y-குரோமோசோம் மற்றும் mtDNA ஆய்வுகளின் படி நாம் கண்டுபிடித்துள்ள நமது அண்மை மூதாதை ஒரு பெண்.
ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நம் கேள்வி இன்னும் பதிலளிக்கப்படவில்லை. ஏனெனில் மனிதன் திடீரென்று தோன்றிவிடவில்லை. அவனுக்கு முன்னர் பற்பலபடிகளாக இருந்து வந்த உயிரினங்களின் வளர்ந்துபட்ட, மேம்பட்ட ஒரு உயிரினம்தான் மனிதன். எனவே, அவனுக்கு முன்னர் இருந்த உயிரினம் ஆணா பெண்ணா என்பதைப் பார்க்க வேண்டும்.
அதனைப் பார்த்தாலும், அதற்கு முந்தைய உயிரினம் ஆணா பெண்ணா என்றும் பார்க்க வேண்டும். எனவே, நாம் கேள்வியை சற்று மாற்றிக் கேட்டுக்கொள்வோம். உயிரினத்தோற்றத்தில் முதல் உயிர் ஆண் பாலினமா, பெண்பாலினமா?
எனது கருத்தாக இதனை முன்வைக்கிறேன். முதல் பாலினம் பெண்தான். துவக்கத்தில் ஒரு பாலினமாகவே இருந்து பரிணமித்து வந்திருக்க வேண்டும். மரபணுப்பிழைகள் நேர்ந்து புதிய உயிரினங்கள் தோன்றினாலும், அவற்றால் சூழலை எதிர்கொள்ளும் ஆற்றல் மிகக் குறைவாகவே இருந்திருக்கக்கூடும்.
ஒரே பெண்பாலினத்திடமே கருமுட்டையும் விந்தணுவும் இருந்து இனத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கையில், அதில் பெருத்த மாறுதல்கள், மேம்படுத்தல்களை எதிர்பார்க்க முடியாது. இங்கேதான் இயற்கை சற்றுச் சிந்தித்திருக்க வேண்டும். விளைவு, விந்தணுக்களை மட்டும் பிரித்தெடுத்துக்கொண்டு தனியொரு பாலினமாக ஆண்பாலினம் பரிணமித்து தனித்து சூழல்களை எதிர்த்து உயிர்த்திருக்க பரிணாமத்தில் வழி வகுத்துக் கொடுத்திருக்கக் கூடும்.
தனித்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடுவதால், புதுப்புது யுக்திகளையும் இந்த ஆண்பாலினம் கற்றுக்கொண்டிருக்கக்கூடும். பின்னர், பெண்பாலினத்தோடு இணைந்து அடுத்த உயிரை உருவாக்கும்பொழுது, இரண்டு பாலினத்தின் மேம்படுத்தல்களும் இணைந்து மூன்றாவதாக சில மேம்படுத்தல்கள் நிகழ வாய்ப்பாக இருந்திருக்கும்.
ஒரே பாலினம் தன்னை மேம்படுத்திக்கொள்வதை விட இரண்டு தனித்தனி பாலினமாக மேம்படுத்திக்கொண்டு வந்தால் நீடித்து நிற்கக்கூடிய, இன்னும் சிறப்பான மேம்படுத்தல்களோடு கூடிய பரிணாமம் நிகழும் என்பதால் இந்த அமைப்பு ஏற்பட்டிருக்கலாம்.
அதற்குக் காரணமாக, ஆண்களுக்கு பயனில்லாவிட்டாலும் இருக்கக்கூடிய மார்புக் காம்புகளைச் சுட்டிக்காட்டுகிறேன். ஒன்றிலிருந்து படியெடுக்கப்பட்டு வரும்பொழுது முன்னதின் சாயல் இருக்கும். புது முயற்சியாக பெண்பாலினத்திலிருந்து பிரிந்து வந்ததால், என்ன காரணத்திற்காகப் பிரிந்து வந்ததோ அதன் தேவை கருதி, கருப்பையை மட்டும் பெண் பாலினத்தில் விட்டு விட்டு, விந்தணுக்களை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு, மற்றபடி பெண்பாலினத்தின் அனைத்து கூறுகளையும் எடுத்துக்கொண்டு ஆண்பாலினம் கிளைத்திருக்கக்கூடும். பாலூட்டும் தேவை இல்லாததால் மடிச்சுரப்பிகள் (Mammary Glands) இல்லாது போயிருக்கும். மார்புக்காம்புகள் மட்டும் அப்படியே இருந்திருக்கும்.
என் கருத்திற்கு பதில் கருத்து தாருங்கள்.
ஆக, இன்றைக்குத் தேதிப்படி முதல் மனிதன் ஒரு பெண் என்பதாக அறிகிறோம்..

முகநூல் பதிவு…
பாபு