FEATUREDGeneral

கல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்

Spread the love

Alwar Narayanan

உங்களுடைய வீட்டுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள். நேராக குளியலறைக்கு சென்று நோட்டம் விடுகிறார்கள். கழிவறைக்கு சென்று பார்க்கிறார்கள். படுக்கையறைக்கு செல்கிறார்கள், கட்டிலை வியக்கிறார்கள். பிறகு உங்களை அவதானிக்கிறார்கள். இந்த செய்கை உங்களுக்கு அடுக்குமா ?

இதைத்தான் நீங்கள் ஆயிரக்கணக்கில் ருபாய் செலவழித்து அடிக்கடி செய்கிறீர்கள். குழித்துறைக்கு பேருந்தை பிடித்துப்போய் பத்மநாபன் அரண்மனையில் வளவளவென்ற தரையுடன் கூடிய கக்கூசை பார்த்திருக்கலாம். அல்லது வண்டிகட்டிக்கொண்டு ஜெய்ப்பூருக்கு போனாலும் அங்கேயும் கல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்.

பிறகு என்ன பார்த்தீர்கள் ? ராணிமார் குளிக்கும் கிணற்றை பார்த்திருக்கலாம் ! ராஜா படுத்த படுக்கை, உடுத்த உடை அல்லது வெற்றிலை துப்பும் கிண்ணங்கள் !

தர்பாரை பார்த்தீர்களா ? இல்லை. கஜானாவை பார்த்தீர்களா ? இல்லை. சாமி கும்பிடும் அறையையாவது பார்த்தீர்களா ? இல்லை. அவை களவு போய்விட்டன. குலக்கொழுந்துகள் வெளிநாட்டுக்கு விற்றுவிட்டார்கள். ராஜா காற்று வாங்க அமர்ந்திருந்த உப்பரிகையை பார்த்திருக்கலாம். அவன் சல்லாபம் செய்த அந்தப்புரத்தை பார்த்திருக்கலாம். ஏன் ! இறந்தவன் பிணத்தை அலம்பும் தொட்டியை கூட பார்த்திருக்கலாம். அவனது அழுக்கான கால்சராயைப் பார்த்து வியந்து இருக்கலாம். உங்களுக்கு வாய்த்தது அவ்வளவுதான்.

வைர வைடூரியங்கள் இறைந்துகிடந்த கோல்கொண்டாவில் ராணி குளித்த நீரூற்றைத்தான் பார்க்கவேண்டும். மிஞ்சிப்போனால் வெந்நீர் குழாயை காட்டுவார்கள். மைசூர் அரண்மனையில் மகாராஜாவின் படுக்கைதான் பார்ப்பதற்கு மிச்சம். சீரங்கபட்டணம் போனால் சிறைச்சாலைதான் பார்க்கவேண்டும். சிவாஜி மகாராஜாவின் ராய்கட் போனாலும், சிவநேரி கோட்டைக்குப்போனாலும் மிச்சமிருப்பது ராஜா ஒளிந்துகொண்ட நிலவரைகள்தான்.

ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் காற்று வாங்கும் ராஜாவுக்கு கீழே லாங்கர் ஹவுஸ் பகுதியில் பல மைல் தூரத்தில் தெருவில் யாரும் தயிர் சட்டி கொண்டு போகக் கூடாதாம். தயிர் என்றாலே ராஜாவுக்கு அலர்ஜி. கஜானா காலியானாலும் நன்கு தின்றுவளர்ந்தவர்கள்.

உத்தரபிரதேச லக்னோவில் ஒரு தாராளபிரபு இருந்தார். அந்த நவாபுக்கு கபாப் என்றால் உயிர். இறைச்சியை 5 மணிநேரம் வேகவைத்து வெண்ணையைப்போல மிருதுவாக செய்யப்படும் “கலோட்டி கபாபை” கண்டுபிடித்து உருவாக்கியவர். கிழவனுக்கு பல்லு கிடையாது. சாப்பிட ஆசை. தினம் ஒரு தினுசான 150 வகை கபாபை விழுங்கினார்.

இப்போதும் ராஜாக்கள் அப்படித்தான். ஆந்திராவில் அதிகாலையில் அரைக்கிலோ நாட்டுக்கோழியை முழுங்கிய ராஜா இருந்தார். தில்லியில் தற்போது உள்ள ராஜா தாய்வானிலிருந்து தருவிக்கப்படும் காளானை முழுங்குவதாக கேள்வி.

ராஜாவைப்பற்றிய வீரதீர பராக்கிரம கதைகள் முக்கால்வாசி கட்டுக்கதைகள். திண்ணைக்கிழவிகள், பேரப்பிள்ளைகளை திங்கவைக்க மிகையாகச்சொன்ன கட்டுக்கதைகள். முனீஸ்வரன் சுருட்டுக்குடித்த கதைகள். மோகினி புளியமரத்தில் ஊஞ்சலாடிய கதைகள். சாந்தா கிழவன் சிம்னிவழியாக இறங்கிவந்த கதைகள். பாட்டுப்பாடி சொர்ணமழை பொழிவித்த ஊக்க கதைகள். அல்லது பசித்த வயிறுக்கு ராஜாவை வாழ்த்திப்பாடி பிச்சையெடுத்த புலவனின் அபரித கற்பனைகள்.

அநேகமாக ராஜாவும், மந்திரியும், சாமியாரும் பாதம் பிஸ்தாவை அரைத்துக்குடித்து மப்பு தட்டி ஆடல்பாடல், கலவி கொண்டிருந்திருப்பார்கள். வாழ்நாளில் 20 வருடத்துக்கு ஒரு போர் வந்தால் அதிசயம். அதையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். உயிர் பயத்தால் ஓடி ஒளியாத ராஜாவே கிடையாது. இப்போதுவரை அப்படித்தான். இன்றைய ராஜாக்கள் விமானத்தில் வெளிநாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.

ஒவ்வொரு அரண்மனையிலும் சீனத்து பாண்டங்கள். ஜெர்மன் கண்ணாடிகள். ஹாலந்து பொம்மைகள்….. எல்லா ராஜாக்களுக்கு இவற்றைவிற்க புரோக்கர்கள். பதவியை அடைய கலப்புமணம். காக்காத்திய மன்னன் ஹொய்சல பெண்ணை மணந்தான். ஹொய்சல மஹாராஜா தஞ்சையோடு சம்பந்தம் வைத்தான். வீர சேரன், சோழன், பாண்டியன் உண்மையிலேயே ஒழுங்காக இருந்திருந்தால் சரபோஜி வந்திருப்பானா ? நாயக்கன் வந்திருப்பானா, மாலிக்காபூர் வந்திருப்பானா அல்லது வெள்ளையன் நுழைந்திருப்பானா.

வெள்ளையனால், சுற்றத்தானால் வஞ்சிக்கப்பட்டு தெருவுக்கு வந்த ராஜாக்களும் உண்டு. திருச்சி பஸ்ஸ்டாண்டில் டவுன் பஸ்சுக்காக நிற்கும் தலைப்பாகட்டிய உறையூர் ராஜாக்களை இன்றும் பார்க்கலாம்.

அந்தம்மா 600 செருப்பு போட்டார், இவர் காளான் சாப்பிடுகிறார், அவர் வைரத்தில் மணிபர்ஸ் வைத்துள்ளார், இன்னொருவர் லட்சத்தில் கோட்டு அணிந்துள்ளார் என்று சாமானியன் வாயைப்பிளந்து வியக்கவேண்டியதுதான். போஸ்டருக்கு பாலூற்றிக்கொண்டிருக்கும்போது வாயில் ஆப்பு சொருகிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். படத்தில் உள்ளது விஜயநகர பேரரசின் கக்கூஸ். இப்போது சுற்றுலாத்தலம்.

பாலிவுட்டில் பார்க்கும் தர்பார் கூடுவதெல்லாம் என்றைக்கோ, எப்போதோ. தற்போதைய பார்லிமென்ட் போலத்தான். அதிகாரம் அதிகம். குறைந்த வேலை. அவ்வப்போது பொதுமக்களை ஏமாற்ற கையில் துடைப்பம்.

செவி வழி வரலாற்றோடு புவியியலை இணைத்துப் பார்த்தால் அது இணையாது. முன்னது கட்டுக்கதை. பின்னது யதார்த்தம்

கடுமையான பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட கோட்டைகள். அதற்குள் ராஜாக்கள். கோட்டைக்கு கோட்டை நிற்காமல் தாவி கொண்டிருந்தார்கள். அல்லது வேட்டையாட, விளையாட, காதலியை பார்க்க வெளியில் சென்றார்கள். இடையில் கருத்த நீண்ட நெடிய கடினமான காடு மலை மேடுகளும் , பாலைவனமும், ஆறுகளும் சாமானிய மக்கள் வாழும் கிராமங்களாக இருந்தன.

கள்ளர்களும், வன விலங்குகளும் மக்களை அவ்வப்போது பதம் பார்த்தன. வரிவசூலிக்க மிராசுதார்கள், ஜமீன்தார்கள், அவர்களை காப்பாற்ற பட்டாளம். பொழுதுபோக்க ஆடல் மகளிர். கேளிக்கைக்கு நகர்வலம்.

எதிரி படையெடுத்துவரும்போது கிராமங்கள் கொள்ளையடிக்கப்படும், கற்பழிக்கப்படும். ராஜாவுக்கோ, பிரஜைக்கோ ராணியை, ராஜகுமாரனை (பாகுபாலியைப்போல) எப்படியாவது, உயிர்பலி கொடுத்தாவது காப்பாற்றினால் போதும். சாமானியன் மற்றும் சிப்பாய் காவுகொடுப்பதற்கு தயாரான கறிக்கோழிகள்தாம்.

ராஜாக்கள் வாழ்ந்த விதம் வேறு. சமூகம் வாழ்ந்தது வேறு.

சமூகம் ஒரு பொருட்டே அல்ல. அடித்து தூக்கிவிடலாம். அடிமைகள்தானே. ராஜாவுக்காக பீத்த பெருமைக்காக எதையும் கூட்டிக்கொடுக்கும் மூடர்கள். பொற்காசு கிடைக்குமென்றால் எதையும் போட்டுக்கொடுப்பார்கள். பெண்ணையும் பொன்னையும் காட்டினால் எவரையும் போட்டுத்தள்ளுவார்கள். ஓட்டுக்கு முக்கால் துட்டை விட்டெறிந்தால் கொலைகாரனை கூட ராஜாவாக்கி மகிழ்வார்கள்.

ராஜாவுக்கு கூஜா தூக்கும் கூறுகெட்டவன் அன்றைக்கும் இருந்தான். பணக்கார பிள்ளையின் கால்செருப்பை தூக்கிக்கொண்டு காருக்கு ஓடும் ஈனப்பிறவி இன்றைக்கும் இருக்கிறான். தேர் சக்கரத்தையும், டன்லப் டயரையும் நக்கிப்பிழைப்பவன் எப்போதும் உண்டு. பணக்காரன் வசிக்கும் தெருவில் அண்ணாந்துபார்த்து நடைபயின்றால் நாய் விட்டையைத்தான் மிதிக்கவேண்டும். தலாய்லாமாவின் மலத்தை தாம்பாளத்தில் சுமந்து தினமும் ஆராய்வதற்கே மூத்த மருத்துவர்கள் அப்போது இருந்தார்கள்.

உணவு, உடை, உறையுள் இதை கிடைக்கவொட்டாமல் கதறடிப்பவன் மந்திரி. ஒன்றுமே தெரியாததுபோல் சலுகை செய்பவன் ராஜா. எல்லோரையும் கோர்த்துவிடுபவன் சாமியார். இதுதான் பார்முலா.

ஓரிரவில் பலகோடி சொத்துக்கு அதிபதியான பணக்கார வீட்டுப்பிள்ளைகள் உண்டு. தலைமுறையாக சேர்த்த சொத்தை துவம்சம் செய்த தருதலைகளும் உண்டு. அப்படித்தான் ராஜகுமாரர்களும். 19 வயதில் ராஜ்ஜியத்தை நிறுவினான் என்றால் அதற்க்கு முன்பு நிறைய விசுவாசிகள் வீட்டுப்பாடம் செய்திருப்பார்கள்.

நிகழ் காலத்திலேயே பார்க்கலாம். ஒரு ராஜா. அவருக்கு பேராசை. 3000 கோடியை கஜானாவிலிருந்து உறுவிக்கொடுத்து ரகசியமாக சீனாவில் சிலைசெய்து கொண்டுவந்தார். அதை தன்னந்தனியாக திறந்துவைத்தார். திறப்புவிழாவுக்கு கூட யாருமில்லை. அதைப்பற்றி பேசினாலே கொடுஞ்சிறை.

இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்து உலக அதிசயமாக இதை வரலாறு எழுதும். ஒரு மாமன்னன் உலகிலேயே மாபெரும் சிலையை நிறுவினான் என்று புகழும்.

ராம் சுத்தார் என்ற சிற்பி வடிவமைத்து 7000 வெண்கல துண்டுகளாக செய்து 42 மாதத்தில் இரண்டு காலில் நிற்கும்படி 127 மீட்டர் உயரத்துக்கு சிலையை இணைத்தார்கள் என்று வரலாறு பேசும். இந்த ராஜா சீனா வரை ஜோலியில்லாமல் சென்று சிலையை எட்டிப்பார்த்துவிட்டு வந்தார் என்பதும் வரலாறு.

பிரச்சனை என்னவென்றால் உங்களுக்கு, உங்கள் சந்ததிக்கு ராஜாவின் புகழ் பாடுவதைத்தவிர எது மிஞ்சும் என்பதுதான்.

50 வருடம் முன்பு அப்போல்லோ 11 ராக்கெட்டில் நீல் ஆம்ஸ்டிராங்கும், எட்வின் ஆல்டரினும் நிலவில் இறங்கினார்கள். நடந்தார்கள். கொடி நட்டார்கள். ஒரு தங்கத்தில் வைரக்கல் பதித்த ஆலிவ் அமைதி இலையை விட்டு வந்தார்கள். 22 கிலோ கல்லையும் மண்ணையும் அள்ளினார்கள்.

கடைசி 8 நிமிடத்தில் வேண்டாத பொருட்கள் எல்லாவற்றையும் நிலவில் கொட்டினார்கள். அதில் பெரிய குப்பை, அவர்களின் மலம், மூத்திரம் கொண்ட பை. பின்னாளில் நிலவுக்குச் சென்ற அப்போல்லோ 17 வீரர்கள் இதை பார்த்தார்கள். அவர்களுக்கு குப்பையே தெரிந்தது.

கொண்டுவந்த நிலவு மண் முழுவதும் இப்போது நாசாவிலிருந்து திருடப்பட்டு கள்ளச்சந்தையில் பலகோடிக்கு விலைபோய்விட்டது, நம் கோயில் சிலைகளைப்போல.

பின்னொருநாளில் உங்கள் பேரப்பிள்ளைகள் நிலவுக்கு போவார்கள். அங்கே தங்க ஆலிவ் இலை இருக்காது. நிலாவில் உங்கள் அபிமான ஹீரோ விட்டுச்சென்ற கக்கூஸ் தொட்டி மட்டும் உங்கள் பேரனின் பார்வைக்கு இருக்கும்.

இதுதான் நேற்றைய, இன்றய , நாளைய வரலாறு.

வரலாற்றை பார்த்து, சூதனமாக அணுகுங்கள்