தினம் ஒரு பறவை-சில்லைகள்-Munia

Spread the love

தினம் ஒரு பறவை – சில்லைகள் (Munia’s)

by: Kalai Selvan

இன்னைக்கு நாம பாக்கவிருப்பவை சில்லைகள்.
சில்லைகள் குட்டியான அழகுப்பறவைகள்.
தினையுண்ணிகள் என்றும் இவற்றை அழைக்கலாம். இவற்றின் அலகின் அமைப்பு சிறுதானியங்களான தினை,கம்பு, சோளம் முதலானவற்றை உண்ணும் வகையில் (சிறிய தடித்த முக்கோண வடிவில்) அமைந்திருப்பதால் இந்த வகை அலகினை தினையுண்ணி அலகு (Grain Eating) என அழைக்கலாம்.

அதற்கு முன்னதாக பறவைகளின் உடல் பாகங்கள் சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்லிவிட்டால் அதன் ஆங்கிலப் பெயர் வைத்து நீங்கள் எளிதில் இனங்காணலாம்.

தலை உச்சி – Crown/ Crest
மீசை – Whisker
கன்னம்-Cheak
பிடரி – Nape
அலகு — Bill
தொண்டை – Throat
முதுகு – Back-
அடிவயிறு – Belly
தொடை – Thigh
கழிவாய் அல்லது மலத்துவாரம் – Vent
வால் — Tail
பிட்டம் – Rump

இதனை நான் முதல் கட்டுரையிலேயே சொல்லியிருக்க வேண்டும்.ஏனெனில் பறவைப் பெயர்களை ஆங்கிலத்தில் சொல்லும்போது மேற்கண்ட உடல் பாகங்களை சொல்லி அந்த பாகத்தின் அமைப்பு பற்றியோ அல்லது வண்ணம் பற்றியோ குறிப்பு கொடுப்பார்கள்.

உதாரணத்திற்கு Black-naped என்று பறவை பெயர் தொடங்கி இருந்தால் ‘கரும்பிடரி’ என படிக்கலாம். white- throated என ஒரு பறவையின் பெயரில் வந்தால் ‘வெண்தொண்டை’ என நீங்கள் படிக்கலாம். (சிலவற்றிற்கு விதிவிலக்கு இருக்கிறது)

எல்லாப் பறவைகளுக்கும் நம் முன்னோர்கள் நிச்சயம் தமிழ்ப்பெயர்கள் கொடுத்திருப்பார்கள்/ கொடுத்திருக்கிறார்கள். எனவே பறவைகளுக்கு நேரடியாக மொழியாக்கம் செய்யாமல் தமிழில் வேறு பெயர்கள் இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு அவற்றை வழங்க முயற்சிக்க வேண்டும் என சூழலியலாளர் தியடோர் பாஸ்கரன் ஐயா வலியுறுத்துவார்.

முனைவர் க.ரத்னம் அவர்கள் தனது ‘தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்’ என்னும் நூலில் இலக்கியத்தில் எவ்வளவு அழகான பெயர்களோடு பறவைகள் கூறப்படுகின்றன என தொடர்புபடுத்துவார்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

நாம் பார்க்கும், நம்மிடையே வசிக்கும் சில்லைகள் இனங்களாவன:

1.வெண்தொண்டைச் சில்லை(white -throated munia/Indian silverbill – உயிரியல் பெயர் – Euodice malabarica)

2.வெண்முதுகுச் சில்லை (white -rumped munia உயிரியல் பெயர் – Lonchura striata)

3.கருந்தொண்டைச் சில்லை (Black -throated munia உயிரியல் பெயர் – Lonchura kelaarti)

4.புள்ளிச் சில்லை (Scaly-breasted munia உயிரியல் பெயர் Lonchura punctulata)

5.கருந்தலைச் சில்லை/ மூவர்ணச் சில்லை (Black – headed munia/ Tricoloured munia உயிரியல் பெயர் Lonchura malacca)

இவற்றின் பெயர்களைப் பார்க்கும்போது மேலே பறவைகளின் உடல் பாகங்களை ஆங்கிலத்தில் சொன்னது எவ்வளவு பயனுடையது என நீங்கள் ஊகிக்க முடியும்….

சில்லைகள் குட்டியாய் அழகாய் இருப்பதால் வேட்டையாளர்களால் பிடிக்கப்பட்டு செயற்கையாய் வண்ணங்கள் பூசி விற்கப்படுகின்றன. ( கலர் கோழிக்குஞ்சுகள் போல).இது வருந்தத்தக்க ஒன்று..தவிர்க்கப்பட வேண்டும்.


வெண்தொண்டைச் சில்லை

வெண்தொண்டைச் சில்லை (white -throated munia) தொண்டை,கழுத்து, வால்பகுதி வரை வெண்மை நிறம்.இந்த வெண்மை பளிச்சென இல்லாமல் சற்று பழுப்பு தோய்ந்திருக்கும்.உச்சந்தலை தலை முதல் வால் வரை இளம்பழுப்பிலிருந்து அடர்பழுப்பாக கூடிக்கொண்டே போகும்.

 

வெண்தொண்டைச் சில்லை
வெண்தொண்டைச் சில்லை, கோவிந்தம்பாளையம், தலைவாசல்

 

 

ஓய்வெடுக்கும் வெண்தொண்டைச் சில்லைகள்
மதிய வேளையில் சாவகாசமாய் ஓய்வெடுக்கும் வெண்தொண்டைச் சில்லைகள், நங்கவள்ளி

 

குளிக்க ஆயத்தமாகும் வெண்தொண்டை சில்லையொன்று. கோவிந்தம்பாளையம், தலைவாசல்
குளிக்க ஆயத்தமாகும் வெண்தொண்டை சில்லையொன்று.கோவிந்தம்பாளையம், தலைவாசல்

வெண்முதுகுச்சில்லை (white -rumped munia)
வெண்முதுகுச்சில்லை (white -rumped munia) தலைமுதல் மார்பு வரையும், முதுகு,வால்பகுதி வரையும் அடர்பழுப்பு நிறம். மார்பு முதல் பிட்டப்பகுதிவரை நல்ல வெள்ளை.

'பால்' சோளத்தை ரசித்துண்ணும் வெண்முதுகுச் சில்லை, வாழப்பாடி, சேலம்.
‘பால்’ சோளத்தை ரசித்துண்ணும் வெண்முதுகுச் சில்லை,வாழப்பாடி, சேலம்.
கம்பு உண்ணும் வெண்முதுகுச் சில்லை, செல்லியம்பாளையம், சேலம்.
கம்பு உண்ணும் வெண்முதுகுச் சில்லை, செல்லியம்பாளையம், சேலம்.

ஓய்வாய் வெண்முதுகுச் சில்லைகள்ஓய்வாய் வெண்முதுகுச் சில்லைகள், நங்கவள்ளி, சேலம்.

 

கருந்தொண்டை சில்லை
கருந்தொண்டை சில்லையின் (Black -throated munia) தலை, முதுகு , வால் பகுதி அடர்பழுப்பு மார்பு, வயிறு இளம்பழுப்பு.தொண்டையில் உள்ள கருப்புநிறம் இதற்கு கருந்தொண்டைச்சில்லை என பெயர் பெற்றுத்தந்திருக்கிறது.மற்ற எல்லா சில்லைகளையும் சமவெளிப்பகுதியில் பார்த்துள்ளேன்.ஆனால் இவற்றை மலைப்பகுதியில் பெரும்பாலும் காணலாம்.நான் முதன்முதலில் இவைகளை ஏற்காட்டில் கண்டேன்.

கருந்தொண்டைச் சில்லை, ஏற்காடு, சேலம். படம்: ஏஞ்சலின் மனோ
கருந்தொண்டைச் சில்லை,ஏற்காடு, சேலம். படம்: ஏஞ்சலின் மனோ

 

புள்ளிச்சில்லை (Scaly-breasted munia)
தலை, முதுகு, வால் பகுதிகளில் அடர் காவி நிறம் கொண்டும், மார்பு, வயிற்றுப் பகுதிகளில் சிறு சிறு கருப்பு வளையங்களை தனித்த அடையாளமாகப் பெற்றிருக்கிறது.

புள்ளிச்சில்லை, நீர்முள்ளிக்குட்டை, சேலம்
புள்ளிச்சில்லை, நீர்முள்ளிக்குட்டை, சேலம்

புள்ளிச்சில்லை, செல்லியம்பாளையம், சேலம்..லபக்… புள்ளிச்சில்லை, செல்லியம்பாளையம், சேலம்..

 

குளித்த ஈரத்தை கோதி உலர்த்தும் புள்ளிச்சில்லை, கோவிந்தம்பாளையம், தலைவாசல்
குளித்த ஈரத்தை கோதி உலர்த்தும் புள்ளிச்சில்லை, கோவிந்தம்பாளையம், தலைவாசல்

 

கருந்தலைச்சில்லை (Black – headed munia/ Tricoloured munia)
பெயருக்கு ஏற்றபடி கருப்பு தலை, வயிற்றில் கருப்பு, குறுக்கே பிரித்து பக்கவாட்டில் விரியும் தடிமனான வெள்ளைக்கோட்டை கொண்டுள்ளது.இறக்கைகள் அடர்காவி நிறம் என மூன்று வண்ணங்கள் பளிச்சென பார்க்கும்போதே தெரிவதால் மூவண்ணச்சில்லை என்னும் பெயரும் இதற்குண்டு.

மூவண்ணச்சில்லை அல்லது கருந்தலைச்சில்லை
மூவண்ணச்சில்லை அல்லது கருந்தலைச்சில்லை, செல்லியம்பாளையம், சேலம்

மேற்கண்ட சில்லைகள் அனைத்தும் குழுவாய் வசிப்பவை..தமிழ்நாடு முழுவதும் இவை பரவலாய் உள்ளன.(கருந்தொண்டை சில்லை நீங்கலாக) . சில்லைகளை எந்த அளவில் பார்த்துள்ளீர்கள் எனத்தெரியாது.ஆனால் கிராமங்களில் விவசாயம் நிலம் வைத்துள்ளவர்களின் வீடுகளிலும், அவர்களது வாசல்களிலும் நிறைய சில்லைகள் திரிவதைக் கண்டிருக்கிறேன்.

புள்ளிச்சில்லைகளும், கருந்தலைச்சில்லைகளும் ஒற்றுமையாய் ஒரு சோளக்காட்டில் விளைந்திருந்த சோளங்களைச் சாப்பிடும் காட்சியை எங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தேன்.

கருந்தொண்டை சில்லைகளை நான் படமெடுத்ததில்லை ஆகையால் அதற்கு சகோதரி ஏஞ்சலின் மனோ Angeline Mano அவர்களின் படத்தினைப் பயன்படுத்தியுள்ளேன்.

சில்லை இனங்கள் அனைத்தும் கூடுகட்டி குஞ்சு பொரிப்பவை.கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் உள்ள துளைகளில் கூட புல் முதலானவற்றைக் கொண்டு கூடமைத்து வசித்து வருவதைப் பார்த்திருக்கிறேன், சிட்டுக்குருவிகள் போல ( House sparrow) .சில்லைகள் குட்டியாய் அழகாய் இருப்பதால் வேட்டையாளர்களால் பிடிக்கப்பட்டு செயற்கையாய் வண்ணங்கள் பூசி விற்கப்படுகின்றன. ( கலர் கோழிக்குஞ்சுகள் போல).இது வருந்தத்தக்க ஒன்று..தவிர்க்கப்பட வேண்டும்.

என்ன நண்பர்களே! பயனுள்ளதாய் இருந்ததா? அடுத்த கட்டுரையில் சந்திப்போம் நண்பர்களே!

அன்புடன்,
கலை,
சேலம்.

Leave a Reply