FEATUREDLatestNewsPolitics

கஷ்மீர் கற்றுத்தர அழைக்கும் கர்ஃபியூ கலாச்சாரம்

Spread the love

கஷ்மீர் கற்றுத்தர அழைக்கும் கர்ஃபியூ கலாச்சாரம்

21 நாள் ஊரடங்கிற்காக மனம் தடுமாறுகிறது. காஷ்மீர், வட கிழக்கு மக்கள் ஏறத்தாழ வருடத்திற்கு 300 ஊரடங்கில் வாழ்கிறார்கள். அத்தகைய வாழ்வு எப்படி இருக்கும்?படியுங்கள். நிச்சயம் மனம் வலிக்கும்.

 

உங்களுக்கு கர்ஃபியூ என்றால் என்னவென்று தெரியும். அது ஓரிடத்தில் நிகழும் குழப்பங்களால் விளையும் பதற்றத்தை குறைக்க அரசு இடும் ஊரடங்கு உத்தரவு என்பதை குறிக்கும் மிக எளிய சொல். அந்த சொல்லினை நாட்டில் எங்காவது வர்க்க கலவரம் , மதச்சண்டை அல்லது அரசுக்கு எதிரான குடிமக்களின் போராட்டங்களின் போது அரசுகள் அறிவிக்கும் போது எப்போதாவது கேட்டிருப்போம். நாம் இப்போது தான் கர்ஃபியூவின் ப்ரீ.கே.ஜியில் அடியெடுத்து வைக்கிறோம்… கஷ்மீரிகள் அதில் பிஎச்டி முடித்தவர்கள்… வாருங்கள் உங்களுக்கு அது எப்படியிருக்கும் என கற்றுத்தர அழைக்கிறார்கள். அடி முதல் முடி வரை உங்களை நீங்களே ஒடுக்கிக்கொள்ளும் கலையை கற்றுத்தர அழைக்கிறார்கள்.

கன்னங்கள் சிவக்க சிறு புன்னகையும், பால் கலவாத ஒரு சுலைமானியும் உங்களை வரவேற்க எப்போதும் காத்திருக்கிறது. கர்ஃபியூ பற்றி தெரியணுமா…? இப்படி வந்து கஷ்மீரி வீட்டின் டோக்ரா பாறையில் செதுக்கிய வாசற்படியில் அமருங்கள். பால் கலவாத தேநீர் ஏன்? ஏன்னா அங்க பால் கிடைப்பது அரிது. பால்டீயும் பளிர் வெள்ளை சர்க்கரைக்கட்டியும் பணக்காரங்களுக்கு மட்டும் தான் .

முதலில் உங்களுக்கு 14 மணிநேர கர்ஃபியூவை பார்த்து பயமும் பதற்றமும் வரலாம், பின்னாளில் அது தொடர்கதையாக வாய்ப்புள்ளது. எங்களுக்கு வருடத்தில் 300 நாளும் கர்ஃபியூ தான். இது இப்போது நேற்றல்ல கடந்த 35 வருடங்களுக்கு மேலாக இதுதான். சாதாரண கர்ஃபியூ அல்ல… அதனுடன் 144ம் உண்டு. நாங்கள் அத்தியாவசிய காரணத்திற்காக தெருவில் இறங்கினால் கேள்வி கேட்பாடின்றி சுடப்படுவோம். எங்களில் காரணமின்றி துப்பாக்கி குண்டுகளை ஏந்தி செத்துப் பிணமானவர்கள் சிலர், எங்களை நினைத்து நடைபிணமாய் வாழுவோரே பலர்.

ஒருகாலத்தில் எங்களிடையே நிறைய மேய்ச்சல் கால்நடைகள் இருந்தன. அவற்றிலிருந்து பால் கறந்து எடுத்தாலே முழு கஷ்மீருக்கும் போதுமானது., ஆனால் நாங்களோ உடுத்து மாற்றுக்கு மறு உடை இல்லாமல் ஃபக்கீர்களை போல இருக்கிறோம். கஷ்மீர் சுற்றுலாத்தலங்களின் ராணி என்பதால் கால்நடையில் கறக்கும் பால் ,மொத்தமாக உல்லாச விடுதிகளில் வந்து தங்கும் வெளிநாட்டு பயணிக்களுக்காக நாங்கள் விற்றுவிடுகிறோம். அது ஒன்று தான் இப்போது எங்களது போதிய வருமானம்.

உங்கள் பகுதியில் கர்ஃபியூ என்றீர்களே?!, சொல்ல மறந்துவிட்டோம்… கடைகள் எதுவும் இருக்காதே, பொருட்கள் வாங்குஙதற்கு…! நீங்களும் எத்தனை நாளைக்கு தான் உணவு பொருளை இருப்பில் வைத்துவிட முடியும்? எங்களது நிலைக்கு ஆளாவதற்கு முன் தற்சார்பு வாழ்க்கைக்கு தயாராகிக்கொள்ளுங்கள். எங்களுக்கு விதவிதமான உணவுகள் கிடைக்காதபட்சத்தில் நாங்கள் ஒரே உணவான தெஹ்ரியில் (One Pot Food) சமைத்து உண்ணும் பழக்கத்திற்கு மாறிக்கொண்டோம். அரிசி,பருப்பு,இறைச்சி,காய்கறி அனைத்தையும் ஒரே சட்டியில் போட்டு சமைத்து உண்ணும் உணவுகளை தேடிக்கொண்டோம்

ஒருகாலத்தில் எங்களது வீடுகளில் ஹீட்டார் இருக்கும்… இப்போது அவற்றுக்கு மின்சாரம் இல்லை, எனவே நாங்கள் கங்கிரி சட்டி (அடுப்புக்கறியில் போடும் தனல்) வைக்க பழகிக்கொண்டோம். வீட்டில் உணவுக்காக கால்நடைகள் வளர்த்தாலே பொருத்துக்கொள்ளாத ராணுவம் ,இரவோடு இரவாக வந்து அவற்றை சுட்டுத்தள்ளிவிட்டு போய்விடும்…எங்களது கால்நடைகள் இராணுவத்தால் களவாடப்பட்டது அதிகம், வேட்டைக்கு நாங்கள் வளர்க்கும் நாயை கூட இராணுவ குண்டுகள் சுவைத்துப்பார்க்காமல் போகாது. பணத்தை பார்த்து பலநாள் ஆன எங்களுக்கு நாங்கள் வளர்க்கும் ஆடு,மாடு,கோழி – அது இடும் முட்டை இவை தான் எங்களுக்குள்ளான பண்டமாற்று. ஒருநாள் பண்டிகை கொண்டாட வேண்டும், அதற்கு இறைச்சி உணவு எடுத்தே ஆக வேண்டும் என்ற நடுத்தர வர்க்கத்தினர் எங்களுக்கு உடைகள் வாங்கி கொடுத்து அதற்கு பதிலாக இறைச்சி வாங்கிக்கொள்ளுவார்கள்.

அதுபோலவே குளிருக்கு எங்கும் நெருப்பு கொளுத்தினால் கூட எங்களுக்கு கொலைக்குற்றம் செய்ததற்கான தண்டனையை வழங்கும் ராணுவம். இங்கு அவர்களது இலக்கு முஸ்லிம் மட்டுமல்ல, சீக்கியர்,இந்துக்கள் என அனைவரும் இந்நிலைக்கு ஆளாகவே செய்தோம்.
கஷ்மீரி ஒருவனின் ஒரு தலைமுறைக்கான தலையெழுத்து இதுவாகவே இருந்தது. ஆயுசு முழுக்க அவன் கர்ஃபியூவில் தான் இருந்தான் எனும் வரலாற்றினை நீங்கள் இப்போது உணருவீர்கள்.

வருடக்கணக்கில் விவசாயம் பார்க்காமல் ,
பூத்துக்குலுங்கிய எங்களின் குங்குமப்பூ தோட்டங்கள் காய்ந்து கருகியதை கண்டு கண்ணீர் விட்டோம், பழுத்துத்தொங்கிய எங்களது ஆப்பிள் தோட்டங்கள் அடுப்பில் விழும் விறகுகளாகிப்போனதை கண்டு மனவிம்மி கதறினோம்…சிலநாளில் ஒரு முதலாளி வந்தார்…நிலங்களை நானே வாங்கிக்கொள்கிறேன்…உங்களுக்கு தேவையான பணத்தை தருகிறேன் என்றார்…. நாங்கள் பட்டினி கிடந்தாலும் சரி, எங்களது நிலங்கள் உயிர்பெறட்டும் என்றெண்ணி அவர்களின் சொற்ப பணத்திற்கு எங்களது நிலங்களை எழுதிக்கொடுத்தோம்…பின்னால் தான் தெரிந்தது இந்த கர்ஃபியூ எனும் பூதம் தான் நாங்கள் நிலத்தை பறிகொடுத்து ஏமாற்றப்பட காரணம் என்று. எங்களது இந்த வறுமை அரசாங்கத்தின் திட்டமிடல் என்று. நாங்கள் நிலமில்லாதவர்களாக ஆக்கப்படவே வருடத்தின் 300 நாளும் கர்ஃபியூவில் வைக்கப்பட்டோம் என்று. பணம் பறந்தோடிவிட்டது, நிலையான நிலம் எங்களைவிட்டு போனது.

எங்களில் 17 வயதில் ஒருவன் 7ம் வகுப்பு தேறியிருப்பதே பெரும்பாடானது.் வருடம் முழுக்க கர்ஃபியூ எனும்போது பாடசாலையில் நாங்கள் படிப்பதெப்படி? பரிட்சை எழுதி தேரூவதெப்படி? எனவே பரிட்சை நேர தொடர் கர்ஃபியூவிற்கு ஆளானால் அவன் அடுத்த ஆண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும். ஒருவன் மூன்று வருடமும் ஒரே வகுப்பில் தங்கிவிட்டால் நான்காம் ஆண்டு தான் அடுத்த வகுப்பிற்கு தூக்கிப்போடப்படுவான்.்.எனவே எங்களில் இருபது வயதில் ஒருவன் பத்தாம் வகுப்பு தேறிவிட்டால் அவன் தான் எங்களில் பிஸ்தா,வஸ்தாது எல்லாம். அதற்கு பிறகு கல்லூரி…. அதற்கு பிறகு வேலை… இதல்லாம் எங்களுக்கு சாத்தியமா யோசித்து பாருங்கள்.

எனினும் எங்களை போல கடும்போக்கு உங்களுக்கு இல்லை, சந்தோசப்படுங்கள்

உங்களுக்கு வீட்டிலிருந்தாலும் கண்டுகளிக்க பலதரப்பட்ட தொலைக்காட்சி சேனல்களும், பொழுதுபோக வானொலியும், விரல்நுனியில் ஆண்ட்ராய்டும் அதற்கு 4G வசதியும் இருக்கிறது. அதிலும் சலிப்பு தட்டினால் பொழுதுகழிக்க பல்வகை போக்கிடங்களும் உண்டு.

எங்களுக்கோ எப்போதும் தொலைத்தொடர்பு சாதனங்களுடனான தொடர்பு தான் முதலில் அறுபடும். இப்போது கூட பெரிய மனது செய்து 2G சேவைக்கு அனுமதி கொடுத்துள்ளனர். போனில் பேச மட்டும் முடியும். உங்களுக்கு அதுமட்டும் போதுமா? வீட்டில் பலசமயமும் மின்சாரமில்லை, நினைத்த நேரத்தில் தண்ணீர் இரைத்து நிறப்பிக்கொள்ள எங்களுக்கு மோட்டார் வசதி இருந்தும் மின்சாரமில்லை. கைகளால் இரைத்து நிறப்பிக்கொள்ளும் பழங்காலத்திலே இன்னும் நாங்கள்.

இவை எல்லாம் எங்களுக்கு புதியதாக இருந்தது, 30 வருடங்களுக்கு முன்பு வரை எங்களுக்கு இவை பழக்கப்படாத ஒரு கதியாக இருந்தது, உலகின் பணக்கார பிராந்தியங்களில் ஒருவராக, மன நிறைவோடு பூமியின் சுவர்க்கத்தில் வாழும் மனிதராக நாங்கள் இருந்தோம். செல்வமும் செழுமையும் எங்களை கட்டித்தழுவி அரவணைத்து வைத்திருந்தது. இப்போது நாங்கள் பூமியின் நரகத்தில் இருப்பதாக உணருகிறோம். எங்களுக்கு நிலமில்லை,உடையில்லை, உண்ண உணவில்லை என்பதற்காக அல்ல…எங்களோடு வாழ்ந்து கழித்த மனிதர்கள் அனைவரும் அநியாயமாக காரணமின்றி நரவேட்டையாடப்பட்டுவிட்டார்கள் என்பதற்காக.

இது எங்களுக்கு தான் புதிது…ஆனால் பலஸ்தீனியர்களுக்கோ இது எழுபது ஆண்டு வழக்கம். எங்களுக்கு முன்பாக ஃபக்கீராக ஆக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்களிலும் முஸ்லிம் மட்டுமல்லாது கிறுஸ்தவரும், யூத பழங்குடிகளும் சேர்ந்தே இந்த கொடுமைகளை அனுபவித்தார்கள். பலஸ்தீனின் வாரிசுகளாக நாங்கள் இருக்கிறோம்…எங்களது வாரிசுகளாக நீங்கள் மாறிவிட வேண்டாம்

இப்படிக்கு,
கஷ்மீரின் கர்ஃபியூவுக்கு பலியான குடிமக்கள்.

Ramasamy Selvam

Leave a Reply