ஒரு சின்ன விளையாட்டு விளையாடுவோமா

Spread the love

கொஞ்சநேரம் பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் தலையை உருட்டுவதை கொஞ்சம் நிறுத்திவிட்டு தாயத்தை உருட்டி ஒரு சின்ன விளையாட்டு விளையாடுவோமா ?

நீங்கள் கையில் காசில்லாத ஒரு பரம ஏழை என்று வைத்துக்கொள்வோம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. “கையில் 500/- ருபாய் ரொக்கம் வேண்டுமா அல்லது ஒரு நாணயத்தை சுண்ட போகிறீர்களா”. தலை விழுந்தால் 2000/- கிடைக்கும். பூ விழுந்தால் ஒரு ரூபாய்கூட கிடைக்காது. நீங்கள் எதை விரும்புவீர்கள் ?

அதேதான் ! கையில் 500/- நிச்சயமாக கிடைக்கும் பட்சத்தில் சூதாட துணிய மாட்டீர்கள். உங்கள் அதிட்டத்தின்மீது நம்பிக்கை இல்லை. ஜெயிக்க 50% வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும்…….

இப்போது இன்னொரு கேள்வி. நீங்கள் ஒரு பணம்படைத்த கனவான். கையில் 50,000/- வைத்துள்ளீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. உங்களிடம் 10,000/- பிடுங்கபடும் அல்லது ஒரு நாணயத்தை சுண்டவேண்டும். தலை விழுந்தால் நீங்கள் எதுவும் தர தேவையில்லை. பூ விழுந்தால் 25,000/- இழக்க வேண்டும். உங்கள் பதில் என்னவாக இருக்கும் ?

அதேதான் !. போனால் போகிறது. நட்டம் 10,000/- த்தோடு நிற்கட்டும். அதிட்டத்தை நம்பி இறங்கினால் ஒருவேளை பாதிப்பணம் போய்விடும். இப்படித்தானே உங்கள் எண்ணஓட்டம் இருக்கும் ?

இந்த இரண்டு விளையாட்டிலும் தெரிந்துகொள்ளவேண்டியது ஆயிரம் உள்ளது.

ஒரு பரம ஏழை, உறுதியாக கண்ணில் தெரிவதை, கைக்கு கிடைத்ததை மட்டும்தான் ஏற்றுக்கொள்வான். தேனில் தோய்த்த “அச்சேதீன்” வாக்குறுதிகள் அவனை பொறுத்தவரை வெறும் வெட்டிப்பேச்சு. அதைவிட பிரியாணி பொட்டலம் மேல். அதனால்தான் எப்போதுமே இலவசங்கள் மற்றும் ஓட்டுக்கு பணம் சமூகத்தில் நன்றாக வேலை செய்கிறது.

ஏழையாகவும் முட்டாளாகவும் இருப்பவன்தான் சூதாடுவான். லாட்டரி வாங்குவான். தலைவன் பேச்சை நம்பி பாலூற்றுவான். பணத்தை பெருக்க சாமியார் பின்னால் ஓடுவான். இதில் திடீர் பணக்காரனும் நடுத்தர வர்க்கமும் அடங்கும்.

அதற்க்கு நேர்மாறாக ஒரு பரம்பரை பணக்காரன் அல்லது தொழிலதிபன் , தான் பொருளை இழக்கப்போவது உறுதி என்று தெரிந்தால், அவனே வலிய சென்று இழப்பை குறைக்க மட்டும் வழிவகை செய்வான். வரி கட்டாமல் லஞ்சம் தருவான். வெளிநாட்டுக்கு ஓடுவான். கம்பெனியை இழுத்து மூடுவான். நட்டத்துக்கு ஒரு புதிய கம்பெனி தொடங்குவான். பங்கு சந்தையில் வாங்குவான். கருப்பு பணத்தில் நட்டத்திலாவது வைரம் வாங்குவான்.

பணம் ஈட்ட அல்ல, பணம் இழக்க (பொழுதுபோக்கு) சூதாடுவான்.

ஒரு ஏழையை பொறுத்தவரை எதுவுமே கிடைத்தவரை லாபம். அது கொஞ்சம் கிடைத்துவிட்டால் பிறகு “ரிஸ்க்” எடுப்போம். குதிரை வாலில் கட்டுவோம். போட்டுப்பார்ப்போம். வந்தால் உறுதி. வராவிட்டால் நட்டமில்லை. புதுப்பணக்கார்கள் மற்றும் நடுத்தரவர்க்கம் “டிஸ்கவுண்டுக்கு” அலைவது இதனால்தான். மலிவுவிலை டிக்கெட் கிடைத்தால் அமெரிக்கவரை போய்வருவான். (கிடைத்தால் !). இல்லையென்றால் தொன்னையில் இலவச பிரசாதம் உட்கொண்டு படுத்துகிடப்பான். எல்லாமே சாத்தியம்.

அதேசமயம் பரம்பரை பணக்காரர்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கம் பம்மிக்கொண்டு நாட்டில் என்ன நடந்தாலும் அமைதியாக இருப்பதற்கு காரணம் இதுதான். எத்தனை அடித்தாலும் தங்குவார்கள். எவ்வளவு வரி ஏற்றினாலும் இழப்பை குறைக்க வேறுநாட்டுக்கு ஓடுவார்கள். ஆனால் எதிர்க்க மாட்டார்கள். மிரட்டிக்கொண்டே இருந்தால் அம்பானிக்கள் சோத்துக்கட்சிக்கு வாய்க்கரிசி போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆட்சிமாறினாலும் காட்சிமாறாது. ஆளும் பிஜேபிக்கு இது நன்றாக தெரியும்.

காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் பன்னெடுங்காலமாக ஊழல்செய்து அளவுக்கதிகமாக சம்பாதித்துவிட்டன. அதை பாதுகாப்பதுமட்டும்தான் அவர்கள் நோக்கமாக இருக்கும். ரெய்டுவிட்டாலும் அமுக்கி வாசிப்பார்கள். இதுவும் பிஜேபிக்கு தெரியும்.

பிஜேபியின் கதைவேறு. ஏழையிலிருந்து திடீர் பணக்காரன் ஆன கதை. துவரையில் ஆரம்பித்து, அகல் விளக்குவரை நூதன ஊழல் செய்து லட்சம்கோடி சம்பாதித்தாகிவிட்டது. இப்போது அதை காப்பாற்றியாகவேண்டும். இதுபோக எதிர்கட்சியிலிருந்து வந்துள்ள பாரம்பரிய திருடர்களுக்கு அடைக்கலம் கொடுத்தும், சர்வதேச ஹவாலா மோசடிகளை வெள்ளையடித்தும் சட்டத்தை வளைத்து ஒப்பேத்தி வைத்துள்ளது.

இதனால்தான் உயிரே போனாலும் ஒரு ஊழல்கூட பதிவாகாமல் அவசரமாக மறுப்பதும், எப்படியாவது பதவியை தக்கவைத்துக்கொள்ள தடாலடியாக நடந்துகொள்வதும் நடந்துவருகிறது . காங்கிரசைபோல இன்னமும் தொண்டன் வரை சொத்துவாங்கி குவிக்கவில்லை (நேரமில்லை) ஆதலால், அதுவரை பதவியில் இருந்தால்தான் சம்பாதித்ததை காப்பாற்றமுடியும். மஹாராஷ்டிராவில் தற்போது அதிகாரம் அடைய நடக்கும் போட்டி இதனால்தான்.

அன்றியும் அதேகட்சியில் புதுப்பணக்காரனான நடுத்தரவர்க்கமும் உண்டு. அளவுக்கதிகமான ஆசை. கொளுத்திப்போடுவோம். கிடைத்தால் லாபம் இல்லையென்றால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. இப்படி எடுக்கும் “ரிஸ்க்”. அதுதான் இன்று அதிரடி தேசியவாதம் என்று கொண்டாடப்படுகிறது. ஏழைத்தாயின் புதல்வர்களை ஆபத்தான விளையாட்டுக்கு துணியவைக்கிறது. கிடைத்தால் லாபம். இல்லையென்றால் ஹைகோர்ட்டு.

பொய்யாமொழிப்புலவர் தலையை உருட்டுவதும் இதனால்தான்.

நீங்கள் ஏழையா, பணக்காரனா என்று எனக்கு தெரியாது.

விளையாட்டு முடிந்தது.

Alwar narayanan

Leave a Reply