FEATUREDLatestNature

செய்வனவற்றை திருந்தச் செய்வோம் சுற்றுச்சூழல் காப்போம்

Spread the love

குரங்கின் கண்கள் அந்த கண்ணாடியில் பதியும்படி படம்பிடிக்க எனக்கு சில மணி நேரம் ஆகின!… அழகான குட்டிக் குரங்கை அரவணைத்துக் கொண்டு, அதன் தாய் கண்ணாடித் துண்டு ஒன்றைப் பார்த்து பிரமித்துக்கொண்டிருந்து… அவற்றை சுற்றி நிறைய குரங்குகளும் சூழந்திருந்தன! பரந்திருக்கும் புற்காட்டில் சிங்கங்கள் உலாவுவதைப் போல, அந்த சிறிய புல் மேட்டில் நிறைய குரங்குகள் உலாவிக்கொண்டிருந்தன!

முதன் முதலாக தனது உருவத்தை மிக அருகில், பல்வேறு கோணங்களில் பார்க்கும் வாய்ப்பு அக்குரங்கிற்கு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்! நீர் நிலைகளில் தனது பிம்பத்தை அக்குரங்கு பார்த்திருந்தாலும், அதன் வசதிக்கேற்ப கண்ணாடியைத் திருப்பி திருப்பி பார்த்து தன்னை ரசிக்கும் வாய்ப்பு அக்குரங்கிற்கு கிடைத்திருந்தது.

ஒளிச்சிதறல்களை கண்ணாடியின் மூலம் உண்டாக்குவது… வெப்பத்தை கண்ணாடியின் மூலம் பெறுவது… தனது முகத்தின் ஒவ்வொரு பகுதியையும் மாறி மாறி ரசிப்பது… குட்டிக் குரங்கை கண்ணாடியில் பார்ப்பது என ரகளை செய்தது அக்குரங்கு!… நான்கு திசையிலும் மாறி மாறி அமர்ந்து, கண்ணாடியின் முன் மெய்மறந்தது அக்குரங்கு!… பல இடங்கள் மாறினாலும் தன்னை ரசிப்பதை விடவில்லை அக்குரங்கு!

நான் அதை படம்பிடிக்கிறேன் என குரங்கிற்கு நன்றாக தெரியும்! ’வெவ்வேறு கோணங்களில் என்னை அழகாக காட்டு’ என சொல்வதைப் போல, அவ்வப்போது கண்ணாடியைப் பார்ப்பது, என்னைப் பார்ப்பது, பின் சுற்றிப் பார்ப்பது என தனது ஆசையை வெளிக்காட்டியது. சில நேரங்களில் திரும்பி அமர்ந்துக்கொண்டு, இவன் படம்பிடிக்கிறானே இல்லை ஏதாவது செய்ய முற்படுகிறானா என்று கண்ணாடியின் வழியே நோட்டமிட்டது!…

இரண்டே நொடிகள் தான்… சட்டென தனது கண்களைப் பார்த்து வெட்கித்து தலை குனியும்… இரண்டே நொடிகள் தான், தனது நாசியைப் பார்த்து பிரமித்து தலைகு னியும்…அதன் வெட்கத்தையும் பிரமிப்பையும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரசித்தேன் நான்!…

நாம் மிகப்பெரிய தவறுகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்! விலங்குகளும் பறவைகளும் புழங்குகின்ற ஒரு பகுதியில் கண்ணாடி துண்டுகளை வீசும் மானிடர்களை என்ன சொல்வது!…

அக்கண்ணாடித் துண்டை வாங்க முற்பட்ட அக்குட்டி குரங்கின் பிஞ்சு கைகளில் எத்தனை கீறல்கள் பதிந்தன தெரியுமா!… அதை கடிக்க முற்பட்ட தாய்க் குரங்கின் மெல்லிய வாய்ப்பகுதியில் எத்தனை ரணங்கள் உருப்பெற்றிருந்தன தெரியுமா!… அருகில் இருந்து நான் உணர்ந்தேன்!…

நம்மை சூழந்திருக்கும் குப்பைகளை எடுத்து பிற உயிரினங்களின் வாழ்விடங்களில் சேர்க்கக்கூடாது!… செய்வனவற்றை திருந்தச் செய்வோம்!… திருந்துவோம்!… சுற்றுச்சூழல் காப்போம்!…

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

https://www.facebook.com/drvikramkumarsiddha?__tn__=%2CdC-R-R&eid=ARBGr6g1wbVKc2XN4iqTwodCNv9zxcEB0-wF7IXcIcfUPQpfFu_HQl4rIircoDJtSEuJ8TgYacNrfrqx&hc_ref=ARS4zNmb4YRhH2mBZ1jNQZevFX8tT4Gr2UDCKW-8rA_LrdIq1VKn_oTr9XJibITFfMo&fref=nf

Leave a Reply