இந்திய கொம்பன் ஆந்தை

Spread the love

இந்திய கொம்பன் ஆந்தை

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

கூத்தங்குளம் பறவைகள் சரணாலயம் சென்றிருந்த போது, ஐந்து கி.மி தொலைவிலிருக்கும் மலைக்கு சென்றால் உறுதியாக கொம்பன் ஆந்தைகளைப் பார்க்கலாம் என்றார் ’பறவை மனிதர்’ திரு.பால்பாண்டி! மதியம் சுமார் இரண்டு மணி! ’பசி வந்தால் பத்தும் பறந்துப் போகும்’ என்ற அவ்வையின் நல்வழிக்கு நேர் எதிராக, ’பறவை வந்தால் அந்தப் பசியே பறந்துப் போகும்’ எனும் உணர்வு எனக்குள் தோன்றியது. வாழைப் பழம்… தேன் மிட்டாய்… கடலை உருண்டை… சில குடல் அப்பளம்… இவையே ஆந்தையை நான் தரிசிக்க இருக்கும் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கான உணவு ஆற்றல்!…

மூன்று சக்கர வாகனத்தைப் பிடித்துக்கொண்டு, நான், நண்பன் மற்றும் திரு.பால்பாண்டி அவர்கள் அம்மலையை நோக்கிப் புறப்பட்டோம். பசுமையான வயல்வெளிகள்… வறளக் காத்திருந்த நீர்நிலைகள்… எண்ணிவிட முடியாத அளவிற்கு மூன்று வகையான அரிவாள் மூக்கன்கள் (Black headed ibis, Red naped ibis, Glossy ibis)… நிறைய பனங்காடைகளும் பஞ்சுருட்டான்களும் மின் கம்பிகளில் இடம்பிடிக்க போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. கிராமத்து வாழ்வியல்… வளைந்து நெளிந்த பாதையில் பயணித்த மூன்று சக்கர வாகனம் மலையின் காலடியை அடைந்தது.

மதிய வேளை… சூரிய வெப்பத்தால் சூடேற்றப்பட்ட பாறை மலை அது! ’கொம்பன் ஆந்தை இவ்வளவு வெயிலில் வெளியில் தலைக்காட்டுமா… இல்லை எங்காவது கண்ணுக்குத் தெரியாமல் அடைந்திருக்குமா!’ என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் ஓடின. இருகண்ணோக்கிக் கொண்டு பார்வையிட்ட பால்பாண்டி அவர்கள், ’இரண்டு கொம்பன் ஆந்தைகள் இருக்கின்றன… போய்ப் பாருங்க’ என்றார்!… சில நிமிடங்கள் என்னால் அடையாளம் காண முடியவில்லை!… அப்படியொரு உருமறைத் தோற்றம்!…

பாறையின் உடலில் நீர் வழிந்து படிந்திருந்த கருமைக்கு நிகராக, கொம்பன் ஆந்தையின் உடலில் இயற்கையாக படிந்திருந்த கருத்த வரிகள்… உயிருள்ள பாறையையும் உயிரற்ற ஆந்தையையும் பிரித்தறிய கடினமாகவிருந்தது. ஆந்தை லேசாக உடலை அசைக்க, பாறையிலிருந்து அந்தையை இனம் பிரித்துவிட்டேன்!

ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன் கொம்பன் ஆந்தைகளை! ஒரு ஆந்தை முழுவதுமாக வெளித்தெரிய, மற்றொரு ஆந்தை அந்தப் பாறை இடுக்கில் முளைத்திருந்த புற்களின் இடையே ஒளிந்துக்கொண்டிருந்தது. பாறையில் இருந்த மெத்தைப் போன்ற அமைப்பு, ஆந்தைக்கு தோதான ’பள்ளி அறை’ ஆனது! ஆந்தையின் கொம்புகள் இறகுகளால் ஆன கற்றையானலும் தூரத்தில் இருந்து பார்க்கும் போது, வலிமைமிக்க கொம்புகள் எனும் பிரமையைக் கொடுத்தது.

நான் அதை நோட்டமிடுகிறேன் என்று அனுமானித்துக்கொண்ட ஆந்தை, விடாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. தனது இடப்பக்கத்திலிருக்கும் இணை நோக்கித் திரும்பிய ஆந்தை, ஒரு கோணத்திலான பார்வையின் மூலம் என்னைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தது. சட்டென பறந்த ஆந்தை, இன்னும் உயரத்திற்கு சென்று மறைந்துக்கொண்டது. பறக்கும் போது அப்படியொரு கம்பீரம் அந்த ஆந்தைக்கு!… பறந்த ஆந்தைக்கு கம்பீரம், அதைப் பார்த்த எனக்கு பெருமிதம்!…

கொம்பன் ஆந்தைகளைப் பற்றிப் பாட, ’கம்பனாக’ பிறவி எடுக்க வேண்டும் என்ற ஆசை உருப்பெற்றது.

அந்த மலையை சுற்றியும் ஆங்காங்கே மஞ்சள் கற்கள் புதைத்த பிளாட்கள்!… வெற்று நிலங்களாக மாறிய விவசாய நிலங்கள்… சில பகுதிகளில் பாறைகளும் குடையப்பட்டிருந்தன!… எதற்காக ஆந்தைக்கு பள்ளி அறை அமைப்பதற்காகவா? இல்லை… வெகு விரைவில் அங்கு ஒரு தனியார் பள்ளி முளைத்தெழும்பக்கூடும்! சற்று கலக்கத்தைத் தந்தாலும், அது தான் நிதர்சனம்.
மீண்டும் வருவேன் கொம்பன் ஆந்தையே உனது பள்ளியறையை அளவெடுக்க!…

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

Leave a Reply