FEATUREDLatestNewsPolitics

தெய்வம் நின்று கொல்லும்

Spread the love

முதன்மை சேவகர் நாளும் பொய் சொல்லலாம். அவர் பக்தர்கள் மாபெரும் பொய்யுலகையே கட்டமைத்து அதில் வாழலாம்…… தவறில்லை. அவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் நம்மை ஆளும் இந்திய அரசாங்கமே வருடக்கணக்கில் நம்மிடம் பொய் சொன்னால் ?

மக்கள் நலன் கருதி அதை விளக்க வேண்டியது நம் கடமை. அதேபோல உண்மையான ஆன்மீகவாதியாக அப்பாவி பசுவை காப்பாற்றவேண்டிய பொறுப்பும்….

இந்த பதிவுக்கு காரணம் ஆங்கில நாளிதழில் வந்த ஒரு சிறு செய்தி.

“கத்தார் நாட்டிலிருந்து 28 டன் மாட்டிறைச்சி இறக்குமதி செய்த வழக்கில், அலிபாக் செசன்ஸ் கோர்ட், தமிழர்கள் மூன்றுபேருக்கு அபராததுடன் கூடிய தற்காலிக விடுப்பு அளித்துள்ளது”.

இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா ? இருக்கிறது.

நம்மிடையே சிலர் இருக்கிறார்கள். இரட்டைவேடம் போடுவதையே ஒரு கலையாக செய்பவர்கள்.

பெண்களை புனிதமாக்கி போற்றுவது, கோயில் கட்டுவது. ஆனால் அவர்களை கூட்டாக கதற கதற கற்பழித்து, கொலைசெய்வதைக்கூட கண்டுகொள்ளாமல் இருப்பது. அதே சிறுமிகளை பழித்துப் பேசி, கற்பழித்தவனை பாதுகாத்து அவனுக்கு ஓட்டும் போட்டு பரிசுகளும் பட்டங்களும் வழங்குவது.

ராணுவவீரனை பக்திப்பரவசத்துடன் போற்றுவது, ஆனால் அவனை எல்லையில் தீவிரவாதியிடம் பலியாக்கி நெற்றியில் திலகம் சூட்டி, தங்கள் நாட்டுப்பற்றை பறைசாற்றுவது. தினம் அவனை ரொட்டித்துண்டுக்காக, பிள்ளைகளின் கல்விக்காக, பெற்றோர் பாதுகாப்புக்காக அலையவிடுவது, ஓய்வூதியத்தை பிடுங்குவது. தெருவை அல்ல ஊரையே கூட்டிப்பெருக்கி துடைக்க பணிப்பது, சித்தாளைப்போல பாலம் கட்டச்சொல்வது…

தலித்துக்களை ஒருபுறம் ஜனாதிபதியாக்கிவிட்டு மறுபுறம் மலக்குழியில் இரங்குபவனையும், மாட்டுத்தோலை பதப்படுத்துபவனையும், குப்பை பொறுக்குபவனையும் வெட்ட வெளியில் சாலையில் தோல் உரியுமளவு அவனை அடித்து கொல்வது, செல்போனில் படம்பிடித்து தம்பட்டம் அடிப்பது, கொலையாளிகளுக்கு மாலை மாட்டி தாரைதப்பட்டையுடன் சிறையிலிருந்து வரவேற்பது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படியெல்லாம் செய்து ரசிப்பவர்கள் யார் ?

இறைச்சி என்றவுடன் “சிவ சிவா” முகத்தை திருப்பிக்கொள்ளும் ஒரு கூட்டம், கூடாரை வெல்லும் சீர்கோயிந்தா என்று மாடுமேய்க்கும் கண்ணனை துதி பாடும் இன்னொரு கூட்டம். இந்த கூட்டங்கள் புனிதமாக போற்றுவது பசு. “கோமாதா குலமாதா” என்று கொண்டாடும் இவர்களுக்கு பசுவைக்கண்டாலே பக்தி பரவசமாகிவிடும். நரம்பு முறுக்கேறிவிடும்.

அதனால் அரசாங்கம் மூலம் ஏற்பாடு செய்து “பேலு கான்”, “அக்ரம் கான்” போன்ற அன்றாடங்காச்சிகளை, மாடுமேய்ப்பவரை, ரயில் பயணிகளை அடித்துக்கொல்லும். சங்கிலியால் பிணைத்து, ஆடையை களைந்து, பட்டையால் அடித்து, கற்பழித்து கொலையும் செய்யும். வேடிக்கை பார்க்கும். கள்ள மௌனம் சாதிக்கும். கொன்றவனை பாராட்டி பரிசு வழங்கும். “பகத் சிங்”கோடு ஒப்பிட்டு பேசும். அரசாங்கம் மூலம் சம்பளமும் சன்மானமும் கொடுக்கும். அடிபட்டவனின் குடும்பத்தையோ சிறையில் அடைத்து மேலும் வதைக்கும்

பசுவதை.

அடேயப்பா !. இருக்காதா பின்ன. பசுவை கொல்வதற்கு துலுக்கனுக்கு எவ்வளவு தைரியம் ? பாடம் புகட்டவேண்டாமா. அதற்காகத்தான் 15 வயது சிறுமி காஷ்மீரத்தில் கோயிலுக்குள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாள். இன்றுவரை எவரும் கைதுகூட செய்யப்படவில்லை. போலீஸ் உடந்தை. விளிம்புநிலை மனிதர்களுக்கு அரசு விடும் எச்சரிக்கை.

சதா சர்வகாலமும் பொய் !

ஆனால் மாட்டுக்கு மஞ்சள்தடவி பசுவை கும்பிடும் மேலே சொன்ன கூட்டத்துக்கு மட்டும் ஒரு உண்மை தெரியும். அது, “இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகில் முதலிடத்தில் இருக்கிறது. 2017ஆம் ஆண்டுமட்டும் 1.56 மில்லியன் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதியாகி உள்ளது.” அதாவது 86 லட்சம் மாடுகள்.

தன் கைபடாமல் மாட்டை கொன்று ஏற்றுமதி செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஹைதராபாத்தில் “அல் -கபீர்” என்ற ஆசியாவின் மிகப்பெரிய தானியங்கி கசாப்பு தொழிச்சாலை. அதன் உரிமையாளர் புல் பூண்டைக்கூட கொல்லாத கொள்கைகொண்ட ஜைன மதத்தவர். இந்த தொழிச்சாலை ஒரு நாளைக்கு 10,000 மாடுகளை கொல்லும் . கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி, வாலை முறுக்கி, கடைசி சொட்டு சக்தி இருக்கும்வரை நடத்தி கொண்டுவந்து வெந்நீரை பாய்ச்சி தோலை உரிப்பார்கள். மேட்டுக்குடி முஸ்லிம்களோடு கைகோர்த்து கச்சிதமான ஏற்றுமதி. இதேபோல நாடெங்கும் பாதுகாப்போடு பணக்கார கொலைக்களங்கள்.

இந்தியா ஏற்றுமதி செய்வது எல்லாம் எருமைக்கறி (?). அதுவும் நீர் எருமை (!). தற்போதைய பசு காப்பாளர்களின் சட்டப்படி அப்படித்தான் மருத்துவர் சான்றிதழ் கொடுப்பார். பழைய சட்டப்படி மாடுகள் ஊனமுற்றிருக்கவேண்டும். காலை ஒடித்து ஊனப்படுத்துவார்கள். இதெல்லாம் ஏற்றுமதி வாணிப கழகத்தினர், அரசாங்க அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்.

என்ன செய்வது? அரசியல்வாதி அப்படித்தான். சாமி பார்த்துக்கொள்ளும் என்று நீங்கள் வடிக்கும் நீலிக்கண்ணீர் நிஜக்கண்ணீராகும். எச்சரிக்கை !

நாடெங்கும் தேடினாலும் கறி எருமை பண்ணைகளை நீங்கள் பார்க்கமுடியாது. நான்காண்டுகளில் அரிவாளுக்கு தப்பிய மாட்டு தெய்வங்களையும் நான் பார்க்கமுடியவில்லை. நீங்கள் பார்த்தீர்களா ? அவை பெருகவில்லை. ஏழைகளிடம் பறித்து பிடுங்கும் கொஞ்ச நஞ்ச மாடுகளும் புதிய கோசாலைகளில் பட்டினியால் சாகின்றன.

தினமும் பசுநெய்யில் தீபமேற்றி வழிபடும் இந்த பக்தர்களுக்கு இது எல்லாமே தெரியும். இவர்களுள் பலர் தோல் பதனிடும் தொழிச்சாலையும், எலும்பு சுண்ணாம்பு காளவாய்களையும் வைத்துள்ளார்கள். சர்க்கரைக்கு எலும்பு பொடி விற்பார்கள். தோலில் டம்பப்பை தயாரித்து ஏற்றுமதி செய்வார்கள்.

அடிக்கடி “நாய்விற்ற காசு குறைக்காது” என்று மனசாட்சியிடம் பேசுவார்கள். இவர்களுக்கு பணம் முக்கியம். சாதுரியம் அதைவிட முக்கியம்.

தற்போதைய ராணுவமந்திரி நேற்று வெளியுறவு துறையில் இருந்தபோது 40 ஆண்டுகளாக அமலில் இருந்த “டாலோ” எனப்படும் மிருகக்கொழுப்பு ஏற்றுமதி தடையை முதலாளிகளுக்கு சாதகமாக துடைத்தெறிந்தார். அதனால் சமையல் நெய்யில், டால்டாவில், மிருகக்கொழுப்பு தாராளமாக கலப்படமாகும் என்று இந்த சைவ கூட்டத்துக்கு நன்றாகவே தெரியும். அமெரிக்க விசா கையில் வந்தவுடன் சிக்கனை எறிந்துவிட்டு பர்கரை தின்னும் இந்த கூட்டத்துக்கு பகுத்துப்பார்க்கும் திறன் மிக அதிகம்.

ஆதாரமில்லை. சட்டப்படி எல்லாமே சரி.

இங்கேதான் மேலே சொன்ன செய்தி முழுமை பெறுகிறது.

மூன்று தமிழர்கள். போன வருடம் ஆகஸ்டு 2017, பசுக்கறியை இறக்குமதி செய்ததாக இவர்கள் மீது போலீஸ் வழக்குபோடுகிறது. இந்த மூவரும் நாகாலாந்தில் கசாப்பு நிலையம் வைத்திருப்பவர்கள். “எலும்பில்லாத பதப்படுத்தப்பட்ட எருமைக்கறியை” ஏற்றுமதி செய்ய உரிமம் பெற்றவர்கள். அங்கிருந்து சென்னை வழியாக கத்தாருக்கு 28 டன் மாமிசத்தை அனுப்பியுள்ளனர். இதனை எருமைக்கறி என்று நாகாலாந்து மருத்துவர்களும், “இந்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு மைய்யமும்” சான்றிதழ் கொடுத்துள்ளன.

கத்தார் நிறுவனமோ, அதை இறக்குமதி செய்தபின் பணம் அனுப்பவில்லை. தொடர்ந்து வற்புறுத்தியவுடன் மொத்த சரக்கையும் திருப்பி அனுப்பிவிட்டது. திரும்பி வந்த பார்சல் 28 டன் மாட்டுக்கறி !. பசு நேசர்களால் முடுக்கிவிட்ட போலீஸ் இவர்களை “லபக்” என்று பிடித்துக்கொண்டது. அவர்களுக்கு இது திரும்பி வந்த பார்சல் என்று தெரியாது. கம்பெனியார் கொடுத்த மேற்படி சான்றிதழை நம்பாமல் பரிசோதித்ததில் அது மாட்டுக்கறி !!

28 டன் எருமைக்கறி திடீரென்று மாட்டுக்கறியானது எப்படி ?

அரசாங்கம் இதை மூடி மறைக்க இவர்களை அவசரமாக விடுவிக்கிறது. ஏனெனில் இதுவரை நான்கு வருடத்தில் 1 கிலோகூட மாட்டுக்கறி இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகவில்லை. வெளிநாட்டினரும் எருமையே போதும் என்று சொல்லிவிட்டார்கள். அப்படித்தான் நீங்கள் நம்பவேண்டும். இது அரச கட்டளை. இனிமேல் யோசித்து புதுக்கதை ஜோடியுங்கள். பொய் சொல்ல பஞ்சமா என்ன ?

இந்திய அரசாங்கம் உண்மையான இந்துக்களை ஏமாற்றி வருகிறது.
இல்லை. நீங்கள் மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்.

ஆனாலும்……. கோதை ஆண்டாளும், காமதேனு பசுவும் மேற்சொன்ன “தீட்டு கழிய மாட்டு மூத்திரத்தை தெளிக்கும்” கூட்டத்தின் இரட்டை வேடத்தை, கள்ள மௌனத்தை, அதிகார லீலைகளை, பணத்திமிரை, அரசியல் அக்கிரமங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாவத்தில் சம்பாதித்த பணத்தை வைத்து பொற்கூரை வார்த்துவிட்டால் கதையில் வருவதுபோல மெச்சி, மன்னித்துவிட உங்களைப்போல முட்டாள்களல்ல தெய்வங்கள்.

பசிக்காக கொன்று தின்பவனை இறைவன் மன்னித்துவிடுவான். ஆனால் பசுவுக்கெதிராக “மாமா” வேலை பார்த்து பாராமுகம் காட்டும் சமய விரோதிகளுக்கு என்றுமே விமோச்சனம் கிடையாது.

மதத்தை வைத்து வாணிகம் செய்யும் பொய்யர்களால் கொல்லப்படும் ஒவ்வொரு மாடும் அம்மாவென்று அலறுவது இறைவனின் செவிப்பறையை கிழிக்காமல் போகாது.

தெய்வம் நின்று கொல்லும் !

முதன்மை சேவகர் நாளும் பொய் சொல்லலாம். அவர் பக்தர்கள் மாபெரும் பொய்யுலகையே கட்டமைத்து அதில் வாழலாம்…… தவறில்லை. …

Posted by Alwar Narayanan on Wednesday, August 8, 2018