GeneralLatestSocialmedia

பேராசை பிடித்த மானிடப் பதர்கள்

Spread the love

பேராசை பிடித்த மானிடப் பதர்கள்!

உணவும் உறக்கமும் இன்றி, குடும்பத்தினரின் அன்பு, ஒத்துழைப்பு எதுவும் இன்றி ஒவ்வொரு பொருளையும் அல்லது புதுப் புது கண்டுபிடிப்புகள் நாளும் உலகில் நிறுவப்பட்டன. நிறுவிய விஞ்ஞானிகள் தங்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பூமியை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதைப் பார்த்திருந்தால் தங்கள் செயலுக்கு வருந்தியிருப்பார்கள்!

அவர்கள் உழைப்பு அனைத்தும் பேராசையும் நயவஞ்சகமும் நிறைந்த ஒரு சில மனிதர்கள் பெருமுதலாளிகள் ஆவதற்கு மட்டுமே உதவுகிறது.

எனக்கொரு சந்தேகம்! மனிதர்களுக்கு ஆறறிவு இருக்கிறது என்று சொன்னது யார்? நமக்கு நாமே ஆறறிவு இருக்கிறது, மற்றவைகளுக்கு ஓரறிவு முதல் ஐந்தறிவு என்கிறோம். இதுவும் ஆறறிவுடைய நமது கண்டுபிடிப்பே!

அந்த ஓரறிவு உயிர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்? மனிதர்களுக்கு சுத்தமாக அறிவே இல்லை என்றல்லவா நினைக்கும்? அவைகளுக்கு சாதியில்லை, மதமில்லை, கீழ் வர்க்கம், மேல் வர்க்கம் எதுவும் இல்லை, நாளைக்கு என்றோ, ஏழு தலைமுறைக்கு என்றோ எதுவும் சேமிப்பதில்லை. உன் நாடு, என் நாடு என்று பிரிக்கவில்லை. இன்னும் எத்தனையோ எல்லையற்ற இல்லைகள்! இப்போது பசிக்கிறது! சாப்பிட வேண்டும், தேவை முடிந்தால் வயிறு நிறைந்தால் போதும். அடுத்து பசி வரும் வரை விளையாட்டு அல்லது ஓய்வு.

வேறு எதைப் பற்றியும் அவை சிந்திக்குமா? கௌரவத்துக்காக, வெட்டி நியாயம் பேசாது. சும்மா இருக்க முடியாமல் அழிவு வேலைகளை அவை எப்போதும் செய்வதில்லை. நுகர்வு குறைவு.

ஆனால் ஆ….றறிவு படைத்த மனிதர்கள் பூமியை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளோம். அன்று அதிகாரத்தில் இருந்த அரசன் உழைக்கும் மக்களை அடிமைகளாக்கி அவர்களது உழைப்பைச் சுரண்டி கோயில் கட்டினான், ஆடம்பரமான அரண்மனைகள் கட்டினான், எதற்காக? ஊர் உலகம் எல்லாம் தன்னைப் புகழ்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அற்ப மகிழ்ச்சிக்காக!

இன்று வரை அதில் மட்டும் குறைவே இல்லை. நான் பெரிதா நீ பெரிதா? என்ற போட்டியில் என் மதம் பெரிதா உன் மதம் பெரிதா? என்று ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாகிறோம். எந்த மதமும் இல்லாமல் மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் அனைத்தும் தமக்கு எத்தனை அறிவு என்று கூட சிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன் ? அறிவு என்ற சொல் கூட அவைகளிடம் இல்லை. அவைகளுக்கும் மொழி உண்டு. ஆனால் நமக்குப் புரியுமா என்ன?

இன்று மனிதர்கள் செய்த நாசகார செயல்களால் பூமி வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. இதற்கு காரணம் ஆறறிவு, கடவுள், மதம், புனிதம், நம்பிக்கை என்று பலவாறு ஏமாற்றிப் பிழைக்கும் மனிதர்களே அன்றி மற்ற உயிர்கள் அல்ல!

இனியாவது அவைகளைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்வோம்! உங்கள் ஆறறிவின் பார்வையில் அவைகளுக்கு அறிவு குறைவுதான். ஆனால் அந்த அறிவு பூமியை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லவில்லை. வளர்ச்சி, டெக்னாலஜி என்ற பெயரில் நம்மை வாழ்க்கையை அனுபவிக்க விடாமல் செய்யவில்லை.

விலங்குகளும் பறவைகளும் வாழ்கின்றன! நாம் பிழைப்புக்கே வழியின்றி பலநூறு நோய்களால் நொந்து சாகிறோம்! இதில் எந்த சாமி எப்படிப் போனாலும் நமக்கேன் கவலை? எனக்கு பெரியாரோ, நம்மாழ்வாரோ ஏன் இப்படி மார்க்ஸோ கூட வேண்டியதில்லை. ஆனால் பட்டாம்பூச்சிகளும் தேனீக்களும் குயில்களும் மயில்களும் வாழும் எளிமையான வாழ்க்கை போதும்! அவைகளுக்கு துன்பம் வந்தாலும் அது மனிதர்களால் தான். அவைகளின் வாழிடங்கள் கோயில்களின் பெயரால் அழிக்கப் பட்டது யாரால்? எனக்கு தஞ்சைப் பெரிய கோயிலைப் பார்த்தால் பக்தியோ பிரமிப்போ வரவில்லை. ஒட்டிய வயிறுடன் அந்தக் கற்களை உடைத்து, சுமந்து அங்கு வேலை செய்த சில நூறு தொழிலாளிகளின் வியர்வை, ரத்தம், கண்ணீர் இவையே நினைவுக்கு வருகின்றன. தங்கக் கிரீடம், விலையுயர்ந்த சீனப் பட்டாடைகள், நகைகள் அணிந்து அதிகார ஆணவத்தோடு, ஏழைகளைத் தன் பெருமைக்காக மட்டுமே கொடுமை செய்த மன்னன் மீது வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது!

எனவே எனக்கு ஓரறிவு நுண்ணுயிர்கள் முதல் மனிதன் தவிர்த்து அனைத்து உயிர்களும் உயர்வானவையாகத் தோன்றுகின்றன. அவைகளைப் போல, நீங்கள் நினைக்கும் ஆ…..று அறிவின்றி வாழ்ந்து விடுகிறேன்!

என்னை அன்பற்றவள், அறிவற்றவள், மிருகம் போல் வாழ்பவள் என்று என்ன வேண்டுமானாலும் நீங்கள் சொல்லுங்கள். எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நான் காக்கை குருவி எங்கள் சாதி என்பது போல அந்த சாதியில் சேர்ந்து வாழ்கிறேன். என்னை மனித சாதியில் சேர்க்காதீர்கள்! அவைகளுக்கு ஓரறிவு, அல்லது ஐந்தறிவு, உங்களுக்கு ஆறறிவு என்று நிர்ணயம் செய்யும் அளவு நீங்கள் அறிவாளிகளா?

முகநூல் பதிவு – சரோஜா குமார்