லாங்வுட் சோலைக்காடுகள் LONGWOOD SHOLA FOREST

Spread the love

லாங்வுட் சோலைக்காடுகள் LONGWOOD SHOLA FOREST
#லாங்வுட்_சோலா_காடுகள்
LONGWOOD_SHOLA_FOREST

கோத்தகிரியிலிருந்து
மூன்று கிலோமீட்டர்கள் தூரத்தில்
அமைந்துள்ள
ஒரு அற்புதப்பரப்பே
இந்த லாங்வுட் சோலா
என்னும்
சோலைக்காடுகள்…

உரிய அனுமதியுடன்
உடன் வரும் பாதுகாவலரோடு
நீங்கள்
இந்த அற்புத வனத்திற்குள்
நடைபோடலாம்….!

ஒளிபுகாத அந்த காட்டுக்குள்
பறவைகளும் விலங்குகளும்
பூச்சிகளும்
புல்பூண்டுகளும் நிம்மதியாய்த்தானிருக்கின்றன
நம் காலடிகள் படாதவரைக்கும்…!

சோலைக்காடுகள் உருவாக
எத்தனையெத்தனை ஆண்டுகள்
தேவைப்படுகின்றன…?

நன்னீரை உருவாக்கி
சேமித்தளிக்கும்
சதுப்பு நிலப்பரப்புகளைத்
தன்னகத்தே கொண்டுள்ள
மனித நடமாட்டங்களைப் பெரிதும்
கொண்டிராத இவ்வகைக்காடுகளே
எண்ணிலா
எத்தனையோக்களின்
மூலமெனலாம்….!

பல்லுயிர்ச்சூழலைப்
பாதுகாக்கவும்
விழிப்புணர்வுகளின்வழி
கொண்டுசேர்க்கவும்
விருப்பப்படுகிற ஒவ்வொருவரும் கட்டாயம்
பார்க்க வேண்டிய இடங்களில்
முதன்மையான ஒன்று
இவ்வகை சோலைக்காடுகளே…!

எவ்வாறு புலிகளின் எண்ணிக்கையைக்கொண்டு
ஒரு காடு
ஆரோக்கியமான காடு என்று
தீர்மானிக்கிறார்களோ
அப்படித்தான்
இந்த சோலைக்காடுகளும்…!

மிகக்குறைவான வெப்பநிலையைக் கொண்டிருக்கும் இவ்வகைக்காடுகளில் பயணிக்கும் போது
முன்னெச்சரிக்கையுடன்
ஷூ அணிவதுடன்
முழுநீள ஆடைகளை அணிவதும்
மிகச்சிறந்தது….

அப்போது
வேட்டையாடப்பட்டு இறந்த காட்டெருதுகளின்
கொம்புகளைக் கூட
நீங்கள் கண்டிருக்கலாம்..
இரண்டாண்டுகளுக்கு முன்
இரத்தகாவு வாங்கிய அட்டைப்பூச்சிகளின் கடியைப் புகைப்படமாகக்கூட பதிவிட்டிருந்தேன்…

மொத்தம்
116 ஹெக்டேர்களைக் கொண்ட
( 1 ஹெக்டேர் என்பது 2.41 ஏக்கர்கள்
எனக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் )
லாங் வுட் சோலா
காடுகளின்
புதை நீர்ப்பகுதிகளை உள்ளடக்கிய
பகுதியென இதைக்கூறலாம்….

நுரையீரலென நீலகிரியைக் கொண்டாடக் காரணம்
என்னவென வினவும் பலருக்கு
ஆக்ஸிஜனை அழகாய் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள்தான்
இந்த சோலைக்காடுகள் என்று விளக்கமாகச் சொன்னால்
எளிதில் புரியலாம்…

அரியவகை தாவரங்கள்
பூஞ்சைகள்
பூச்சிகள்
காளான்கள்
சதுப்பு நிலங்கள்
ஓடைகள்
பெரிய அணில்களின் கூடுகள்
சிறுத்தைகளின் நடமாட்டங்கள்
அவற்றின் காலடித்தடங்கள்
கடித்தால் மரணவலியோடு
மிகப்பெரியதாய் வீங்கச்செய்யும்
எறும்புக்கூட்டங்கள்
அவற்றின் கூடுகள்
மரமே கொடியென
உயர்ந்தேறிய பிரம்மாண்டத்திரிபுகள்
என அதன் பட்டியல்
நீண்டுகொண்டே இருக்கும்…

அகப்பட்ட சிலவற்றை
இங்கே புகைப்படமாகப்
பதிவுசெய்தால்
காண்போர் கலந்துரையாடவும்
கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும்
ஏதுவாய் இருக்குமென
சிலவற்றைப் பதிவிட்டுள்ளேன்…

ஆங்கிலேயன் காலத்தில் காணப்பட்ட
எண்ணற்ற சோலைக்காடுகளை
அவர்களின் காலத்திலும்
அதற்குப்பின்னும்
கன்னாபின்னாவென அழித்து
அதன் தடம்தெரியாமல்
புதைத்த பெருமை
நம்மனைவரையுமே சேரும்…

புல்வெளிக்காடுகளை
Waste lands என்று
இவற்றை
இழந்த வரலாற்றையே
நாம் பெரிய பதிவாக
பதிவிடலாம் போல…

அவலாஞ்சி உள்ளிட்ட சில இடங்களில்
மிஞ்சியிருப்பதைக் கண்டு
ஆறுதல் அடையலாமே தவிர
வேறென்னத்தைச் சொல்ல…

அவற்றையாவது காப்பாற்ற
எல்லோரும் முன்வந்தாலன்றி
ஆக்ஸிஜனைக் கேன்களில்
வாங்கிக்கொண்டும்
நீருக்குப்பிச்சையெடுத்துக்
கொண்டும்தான்
காலத்தோடு காலமாக நாமும்
கரைய வேண்டியதுதான்
என்று சொல்லவும் வேண்டுமா ?

உணவுச்சங்கிலியின்

மண்ணிலிருந்தே துவங்குகிறது…
அது நீரின்வழி
வளர்கிறது…
தாவரமென நிற்கிறது…
மேய்வனவெல்லாம் அவற்றை உட்கொள்கிறது…
மாய்த்து அவற்றை
ஊன் உண்ணிகள்
சமநிலைப்படுத்துகிறது…

உணவுச்சங்கிலியில் ஒன்றை
அறுத்துவிட்டாலும்
அதன் விளைவு
அபாயம்தான்…

இரும்பின் உரமேறிய
ஆரஞ்சு நிறத்தில்
உருவாகும் நன்னீர்
இயற்கையாய் நடக்கும்
சவ்வூடு பரவல்
முறையால்
தெளிந்த ஓடைகளாய்
இங்கிருந்தே உருவாகிறது….

நீர்குறையும்போதெல்லாம்
தேக்கிவைத்த நீரை
ஸ்பான்ச் போன்ற
அருமையான வழியால்
நிலமும் நீரும் காடும்
செய்யும் விந்தையை
என்னவென்று சொல்வது…?

இவையே அரவேனு பகுதியில்
வாழும் 50000க்கும் மேற்பட்ட
மக்களுக்கு
நீர் ஆதாரம்….

அவலாஞ்சியின் சோலைக்காடுகள்
பவானி ஆற்றுக்கெல்லாம்
ஆதாரம்….

சோலைக்காடுகளைக்
காத்துக்கொள்ளும் வரையில்தான்
மனித நாகரீகத்தின்
அடுத்தடுத்த படிக்கட்டுகள்
நீளும் என்பதை
சொல்லித்தான் ஆக வேண்டுமா ?

பூக்கடைகள் இருக்கையில்
சாக்காடைகளை
உருவாக்கிக்கொள்வதுதான்
மாண்பென்றால்
நீருக்குப் போரும்
காற்றுக்குக் காசும்
இனியெங்கும் இயல்பாகும்…

#Save_shola_forests
#long_wood_shola_209

கா.ர.ப🚶

Parameswaran Rangaraj
LONGWOOD SHOLA FOREST

Leave a Reply