FEATUREDLatestஅறிவியல்

Ten scientists

Spread the love

கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு முன்னர்

மகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக இந்த பத்து விஞ்ஞானிகள் பெயரையும் ஸ்கெட்ச் பேனா கொண்டு ஒரு அட்டையில் எழுதி வைத்தது.

அதை பதிவாகவும் எழுத நினைத்தேன்.

அப்படியே மறந்து விட்டேன்.

இப்போது ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை L2 என்ற லக்ராஞ்சி புள்ளியை சுற்றவிடப் போகிறார்கள் என்று படித்ததும் தேடினேன்.

வேறு ஒரு அட்டை வேலை செய்வதற்காக அதை மகள் வெட்டி இருக்கிறாள். நல்லவேளை விஞ்ஞானிகள் பெயரை வெட்டவில்லை.

ஆகையால் அதையே போட்டோ எடுத்து பதிவாக கொடுக்கிறேன். மிக முக சுருக்கமான சுருக்க விவரிப்புதான் இது.

1. Ptolemy : பூமிதான் நடுவே. சூரியன், சந்திரன், வெள்ளி, வியாழன் எல்லாம் பூமியை சுற்றுகின்றன என்பதை உண்மை என்று நம்பினார். அதையே உலகத்தோரும் உண்மை என்று அக்காலத்தில் ஏற்றுக் கொண்டனர்.

2.Copernicus : கோப்பர்நிக்கஸ் இல்லை இல்லை பூமி நடுவில் இல்லை. சூரியன் தான் நடுவில் பூமி, வெள்ளி, வியாழன், புதன் எல்லாம் சூரியனை சுற்றி வருகின்றன என்ற உண்மையை உலகிற்கு முதலில் அறிவித்தவர்.

3. Tyco Brahe : இவர் வித்தியாசமான விஞ்ஞானி. Ptolemy சொன்னதையும் Copernicus சொன்னதையும் கலந்து ஒரு தியரி சொன்னார். அதாவது பூமியை சந்திரன் சுற்றுகிறது. அது போலவே சூரியனும் சுற்றுகிறது. ஆனால் சூரியன் புதன், வெள்ளி, வியாழன் போன்ற கோள்களை தன்னை சுற்ற வைத்து பூமியை சுற்றுகிறது என்றார்.

படமாக பார்க்காமல் எழுத்தில் வாசித்தால் இது குழப்பமாய் இருக்கும். படம் பார்க்க.

பூமி நடுவே இருக்கிறது சரியா. பூமியை சூரியன் சுற்றுகிறது. அந்த சூரியனை மற்றகிரகங்கள் சுற்றுகின்றன. ஆனால் சந்திரன் பூமியை தனியாகவே சுற்றுகிறது. பிராகேவின் தியரி அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது.

எப்படி சூரியன் காலை உதித்து மாலை மறைகிறது. எப்படி சந்திரன் மாலை வந்து காலை மறைகிறது என்பதற்கு சரியான விளக்கத்தை பிராகே கொடுத்துவிட்டதாக அப்போதைய விஞ்ஞான உலகம் அவரை புகழ்ந்தது. பிராகே மறையும் வரை தன் தியரி சரி என்றே நினைத்து வந்தார்.

4.Kepler : இவர் Tyco Brahe என்ற பணக்கார விஞ்ஞானிக்கு உதவியாளராக வந்த ஏழை விஞ்ஞானி. Tyco Brahe ஏராளமான புள்ளிவிபரங்களை ஆய்ந்து எடுத்து வைத்திருந்தார். கெப்ளருக்கு அவை அனைத்துமே ஆராய்ச்சிக்கு அல்வாதுண்டு போல உதவின.

தான் எடுத்த புள்ளிவிபரங்கள் அனைத்துமே தன் தியரியை நிருபிக்க உதவும் என்று Tyco Brahe நம்பினார். தன் உதவியாளர் கெப்ளரை மரணப்படுக்கையிலும் கூட “ தம்பி என் தியரி என்று நிருபித்து விடுவாயா” என்றே கேட்டார். அதற்கு கெப்ளர் “ ஆங் சார் ஜோரா பண்ணிரலாம்” என்றே சொல்லி வைத்தார்.

கெப்ளர் அப்படி சொன்னாலும் ஆராய்ந்து பார்த்தால் தனக்கு அடைக்கலம் கொடுத்த Tyco Brahe வின் தியரி தவறாக வருவதாகவே கண்டறிந்தார். பிராகே மேல் கொண்ட அன்பு மற்றும் மதிப்பின் காரணமாக அம்முடிவுகளை வெளிடாமல் அப்படியே அமைதிகாத்தார்.

அவர் காலத்துக்கு பிறகு கோப்பர்நிக்கஸ் சொன்ன சூரியன் நடுவே பூமி, புதன், வியாழன், வெள்ளி எல்லாம் பூமியை சுற்றுகின்றன என்ற தியரிதான் சரி என்றார்.

அப்படியானால் பூமிக்கு மட்டும்தானே துணைக்கோள் இருக்கிறது. மற்ற கிரகங்களுக்கு துணை கோள் இல்லையே. அது கோப்பர்நிக்கஸ் தியரிக்கு எதிராக இருக்கிறதே என்று பலரும் சொன்னார்கள். அப்போதுதான் அதற்கொரு தீர்வு கண்டார் கலீலியோ.

5.Galileo: இவர்தான் பூமியை தவிர மற்ற கிரகங்களுக்கும் துணைகோள்கள் இருக்கின்றன என்பதை முதன்முதலில் கண்டுபிடித்து கோப்பர்நிக்கஸ் தியரியை உறுதிபடுத்தியவர். வியாழனுக்கு துணைக்கோள்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்து சொல்லி பூமியை தவிர மற்ற கிரகங்களுக்கு துணைகோள்கள் இருக்கின்றன என்பதை உறுதிபடுத்தினார்.

அது மட்டுமில்லாமல் கெப்ளரும் கலீலியோவும் நிறைய கிரகங்கள் மற்றும் துணைக்கோள்களி பாதையான Curves களை கண்டுபிடித்தார்கள். அதை எல்லாம் எப்படி அறிவியல்பூர்வமாக யூகம் செய்வது கணிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு தீர்வு காண வந்தார் சூப்பர் ஸ்டார் டெஸ்கார்த்.

6.Descartes : டெஸ்கார்த் தத்துவ அறிஞர் மட்டுமில்லை அவர் அறிவியலாளர் மற்றும் கணித அறிஞரும் கூட. Analytical geometry ஐ கண்டுபித்த அற்புத மனிதரும் இவர்தான். எந்த ஒரு வடிவத்தையும் கணித தேற்றமாக எழுத்தில் கொண்டு வர முடியும். எந்த கணித தேற்றத்தையும் வடிவமாக கொண்டு வரமுடியும் என்பதற்கான முறையை கண்டுபித்தவர்.

இது அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியாகும். டெஸ்கார்த்தேயின் இம்முறையை பயன்படுத்தி கெப்ளர் கலீலோ வின் Curves பற்றிய கேள்விகளுக்கு பிற்கால விஞ்ஞானிகள் தீர்வு கண்டனர். அதில் முக்கியமானவர் ஐசன் நியூட்டன் ஆவார்.

7.Newton : கெப்ளர் மற்றும் கலீலோவின் கண்டுபிடிப்புகளை டெஸ்கார்த்தின் முறைகொண்டு மேலும் செதுக்கினார். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்குக்கும் இடையே உள்ள ஈர்ப்பை ஒரு பார்முலாவாக்கி உலகத்தை வியக்க வைத்தார். இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள உறவை சொல்லியது. புவி ஈர்ப்பை விளக்கிற்று. இப்படித்தான் நியூட்டன் புவி ஈர்ப்பை கண்டுபிடித்தார்.

நியூட்டன் மேல் ஆப்பில் பழம் விழுந்து அவர் புவி ஈர்ப்பை கண்டுபிடித்தது என்பது அமெரிக்க அறிஞர் பெஞ்சமின் ப்ராங்களின் ஒரு சுவாரஸ்யத்துக்கு இட்டுகட்டிய இனியமையான பொய் என்றும் சொல்கிறார்கள்.

8. Euler : நியூட்டன் சொன்ன இரண்டு பொருள்களுக்கு இடையே ஆன ஈர்ப்பு பற்றி கணிதமாக ஆராய்ந்தார். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஆன ஈர்ப்பு பற்றியும் கணிதமாக ஆராய்ந்தார். அவருடைய முடிவின்படி சூரியனில் ஈர்ப்பும் பூமியின் ஈர்ப்பும் சில புள்ளிகளில் ஒன்றை ஒன்றை வெட்டுகொடுத்துக் கொண்டு அவ்விடத்தில் எந்த ஈர்ப்பும் இல்லாமல் இருக்கும். அப்படி அவர் மூன்று புள்ளிகளை வெளியிட்டார்.

அவற்றை லக்ராஞ்சி புள்ளிகள் என்கிறோம். ஆய்லர் தன் முடிவை வெளியிட்டாரே தவிர அவரால் ஏன் அப்படி என்று விளக்க முடியவில்லை. அதை விளக்க வந்தார் விஞ்ஞானி லக்ராஞ்சி

9. Lagrange : இவர் ஆய்லர் கண்டுபிடித்த் ஈர்ப்பில்லாத சமநிலை புள்ளிகளில் ஏன் அப்படி இருக்கிறது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்கினார். அதனால்தான் அந்த ஐந்து புள்ளிகளுக்கு லக்ராஞ்சி புள்ளிகள் என்று பெயர். அப்படிப்பட்ட L2 லக்ராஞ்சி புள்ளியைத்தான் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் சுற்றிவரப் போகிறது.

10. Einstein : இவர் அதுவரைக்குமான செவ்விலக்கிய பிசிக்ஸை அப்படியே மாற்றிப் போட்டார். ஏன் சூரியனை பூமி சுற்றுகிறது என்பதற்கு முற்றிலுமாக வித்தியாசமாக Spacetime விளக்கம் கொடுத்தார்.

சூரியன் Spacetime என்னும் மாபெரும் ஷீட்டை அமுக்கிறது. அந்த குழியில் விழப் போகும் உருளைப்பந்தான பூமி விழுவதற்கு முன்பு சுற்றுகிறது. அதனால் ஈர்ப்பு வருகிறது என்றார். வானியல் அறிவுலகத்தில் முற்றிலுமான புதிய பாதையை இவர் திறந்து வைத்தார்.

இந்த பத்து விஞ்ஞானிகளையும் இப்படி கோர்வையாக ஒரு பத்தாம் வகுப்பு மாணவருக்குள் அவர் மனத்துக்குள் ஏற்றிவிட்டால் அது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மை என்பேன்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் முயற்சி செய்து பாருங்கள். –

 

Vijay Bhaskarvijay ex

Leave a Reply