GeneralNewsSocialmediaஅறிவியல்

2.0 வும் சிட்டுக்குருவிகளின் அழிவும்

Spread the love

2.0 வும் சிட்டுக்குருவிகளின் அழிவும்  – கோவை சதாசிவம்

திரைக்கலைஞர் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட “2.0 ” திரைப்படம் வெளியானதிலிருந்து பல முகநூல் நண்பர்கள் அலைப்பேசியில் அழைத்த வண்ணமாக உள்ளார்கள்!

2.0poster

என்னை அழைக்க வேண்டிய அவசியம் என்ன …?

2005-யில் “சிட்டு ” என்கிற தலைப்பில் ஒரு விவரணப்படத்தை இயக்கி சிட்டுக்குருவிகளின் அழிவையும் அதனை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தேன். இப்படம் வெகுமக்களுக்கு செல்லவில்லை என்றாலும் பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சென்றுள்ளது.

இப்போது 2.0- திரைப்படம் வெளியாகி சிட்டுக்குருவிகளைப்பற்றி பலரையும் பேச வைக்கிறது. இப்படம் பறவைகளின் அழிவைப்பேசுகிறது என்று ஆறுதல் கொண்டாலும் பல அபத்தங்களையும் உள்ளடக்கியது என்பதை கவனத்தோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்!

இப்படத்தின் சிட்டுக்குருவியும், செல்போன் டவர்களும் முதன்மையான பேசு பொருளாக உள்ளதாம் (நான் இன்னமும் படம் பார்க்கவில்லை) செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பதிற்கான அறிவியல் தரவுகள் நம்மிடமில்லை!

ஆனாலும் ஒரு செய்தியை இங்கே பதிவு செய்ய வேண்டும். இந்தியாவில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் பெரும் அளவில் தனியார் வசமுள்ளது. ஒரு செல்போன் டவரில் 10,000 செல்பேசிகளுக்கான சேவையை வழங்க வேண்டிய நிறுவனம். லாப நோக்கில் 30,000 செல்பேசிகளுக்கு வழங்க நேர்ந்தால் இழுவிசை, பரவுவிசை அதிகரித்து கசியும் கதிர்வீச்சில் தேனீக்கள் உள்பட சிறு பறவைகளின் வாழ்வும் திசைமாறும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது!

ஆனால் இவை மட்டுமே காரணம் என்று கருதிவிடக்கூடாது! 2005 – யில் சிட்டு விவரணப்படம் சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு முன்மொழிந்த காரணங்களை பார்ப்போம்!

கால நகர்தலில் உறைவிடங்கள் மாறின, உற்பத்தி பண்பாடும் உணவு முறைகளும் மாறின, உழவு முறை மாறியது, மனித உழைப்பை வேக, வேகமாக மென்று துப்பும் உலகமயத்தொழில் வளர்ச்சி உயிர்களிடம் கொண்டுள்ள அன்பின் ஈரத்தைக்காயடித்துவிட்டது. வெறும் எந்திரங்களாய் ஆனோம் நாம்.

தானியம் போன்ற திட உணவுகளை செரிக்கும் செரிமான உறுப்புகள் குஞ்சுகளுக்கு வளர்ச்சியுற்றிறாத நிலையில் வீடுகளைச்சுற்றிலும் வளர்ந்து கிடக்கும் அவரை, புடலை போன்ற கொடித்தாவரங்களில் தோன்றும் புழுக்களை தாய்பறவை கொத்தி வந்து குஞ்சுகளுக்குக்கொடுத்து வளர்க்கும். இப்புழுக்களை குஞ்சுகள் எளிதாக செரித்து விடும். புழுக்களில் நீர்ச்சத்தும், புரதச்சத்தும் இருப்பதால் குஞ்சுகள் விரைந்து வளரும்.

முன்பெல்லாம் வீடுகளில் தானியங்களை உரலில் இடித்து புடைக்கும் பழக்கம் இருந்தது. இவ்வகை வேலைகளை பாட்டிகள் திறம்படச்செய்வார்கள். புடைக்கும் போது சிதறும் தானியங்களை தாய்பறவை சேகரித்து குஞ்சுகளுக்கு கொடுப்பதோடு அவற்றை கொத்தித்தின்னப்பழக்கும். இப்போது உரல், உலக்கை, முறம், பாட்டி … யாருமில்லை ஊருக்குள்!

ஒற்றை உணவிற்குப்பழக்கப்பட்டு சோளம், கம்பு, கேழ்வரகு. குதிரைவாலி, தினை, சாமை போன்ற தானிய உணவுகளை இழந்தோம். விசாலமான வாழ்விடங்கள் சுருங்கி நாமே கூடுகளில் வாழ்கிறோம்! குருவிகள் எங்கே வாழும் ..?

மனிதர்களின் வாழ்வோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி ( பசுமை, வெண்மை புரட்சிகளைப்போல்) இயற்கைக்கு எதிரான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளின் காரணங்களால் சிட்டுக்குருவி மட்டுமன்று. ஒட்டுமொத்த சிற்றுயிர்களின் அழிவிற்கும் காரணியாக உள்ளது.

வெளிக்காற்று உட்புகாதவாறு கட்டமைக்கப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளின் வாழ்விடம் தகர்ந்தது.

காரீயம் நீக்கப்பட்ட பெட்ரோல், எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் “மெத்தைல் நைத்திரேட் ” எனும் வேதிக்கழிவுப்புகையால் காற்று மாசுபடுகிறது. அந்தக்கரிக்காற்றை சுவாசிக்க முடியாமல் பூச்சியினங்கள் மூர்ச்சையற்றுப்போகின்றன. பூச்சிகளை உணவாகக்கொண்டு வாழ்ந்து வந்த பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் போகிறது.

ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் பல்லுயிர்ப்பெருக்க வாழ்வு முறை தகர்கிறது. இதன் தாக்கத்தை உலகின் பல்வேறு நாடுகளும் உணர்ந்துள்ளன.எனவேதான் ஐக்கிய நாடுகள் சபை 2010- ஆண்டை பல்லுயிர் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளது.

வயல்களில் பயிர்களுக்கு தெளிக்கும் உயிர்க்கொல்லி இரசாயனங்கள் பூச்சிகளை அழித்து உணவையும் நஞ்சாக்கிய பிறகு, சாப்பிட எதுவும் கிடைக்காத பசித்த குருவிகள் கத்திக்கத்தி ஓய்ந்துவிட்டன. பல சரக்கு கடைகளில் உள்ள உணவுப்பொருட்கள் நெகிழிப்பைகளில் அடைத்து விற்கப்படுவதால் உணவுப்பொருட்கள் சிதறலுக்கு வாய்ப்பில்லை! புழக்கடையில் பாத்திரம் தேய்த்த காலம் போய் வீட்டுக்குள் சின்னத்தொட்டியில் பாத்திரம் கழுவ, மீதப்பட்ட சோற்றுப்பருக்கைகள் பாதாளச்சாக்கடையில் கழிவோடு கழிவாய் மூழ்கிவிடுகின்றன. நகருக்குள் மனிதர்களை அண்டி வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

பூவுலகில் இயற்கை உருவாக்கியுள்ள உயிர்ச்சூழலை சிதைப்பதும், அழித்தொழிப்பதும் எந்த வகையிலும் நேர்மையாகாது. இயற்கையை அழிப்பதும் ஓர் பயங்கரவாதம்தான்! அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நீடித்த வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். தற்காலிக முயற்சிகளுக்கும் ஒரு சிலரின் பேராசைக்கும் பூமியை பலியிட முடியாது! உலகில் தோன்றியுள்ள கோடான கோடி உயிர்களில் நமது உயிரும் ஒன்று.

சூழலுக்கும், நெடுங்கால வளர்ச்சிக்கும் பங்களிக்கும் கரிசனத்தை “சிட்டு ” விவரணப்படம் பேசியுள்ளது. “2.0” சிட்டுக்குருவிகளின் அழிவு குறித்து முன்வைக்கும் காரணங்களை அலசி, ஆராய்ந்து பார்க்க வேண்டும்!

– ஐயா கோவை சதாசிவம்
இவருடைய விக்கிபீடியா பக்கம்