13வது கனிம வைப்பு Deposit-13

Spread the love

“13வது கனிம வைப்பு” / “Deposit-13″

மதுரை நாயக்கர்களும், சோழர்களும், விஜயநகர சாம்ராஜ்ஜியங்களும் போஷித்து வளர்த்த கும்பகோணம் சாரங்கபாணி கோயில் ! ஹேமரிஷி முனிவரின் மகள் கோமளவல்லி தாயாரை மணந்துகொண்டு அருள்பாலிக்கிறார் சாரங்கபாணி. இந்த கோயிலுக்கு ஒரு ஆபத்து !.

ஆளுங்கட்சியின் மத்திய மந்திரி ஒருவர் இஸ்ரோவின் செயற்கைக்கோள் துணைகொண்டு கோயில் அமைந்துள்ள நிலத்துக்கடியில் பாக்சைட் தாது இருப்பதை கண்டுபிடிக்கிறார். ஒரு லட்சம் டன் அலுமினியம் தயாரிக்க முடியும். குத்தகையை 20 ஆண்டுகளுக்கு அதானிக்கு தரப்போகிறார்கள். அரசாங்கம் வாரியங்களை அமைந்துவிட்டது. அவர்களே கிராமசபை நடத்தி ஒப்புதல் வாங்கிவிட்டார்கள். உள்ளூர் மக்களின் மண் மீதான உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. ஏற்றுமதிக்கு தக்கவாறு காரைக்கால் துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டுவிட்டது. 8 வழிச்சாலை போடப்போகிறார்கள். பிரதமர் அலுவலகம் வெளிநாட்டுடன் ஒப்பந்தம் செய்துவிட்டது.

கோயில் இடிப்புக்கு எதிராக போராடும் பழமைவாதிகள் (!) எல்லோரையும் தூத்துக்குடியைப்போல வாயில் சுடமுடியாது. உதாரணமாக மாடத்தெருவில் 100 ஆண்டுகளாக வசிக்கும் கோமளா பாட்டி விழுந்துபுரண்டு அடம்பிடிக்கிறார். அவரை “கவனிக்க” மனவியல் மருத்துவர்கள் உள்ளார்கள். அடக்கிவிடுவார்கள்.

கோயில் பட்டர்களுக்கும், சிப்பந்திகளுக்கும் அதானி ஏற்றுமதி கழகத்தில் மாதச் சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது. போராடும் பக்தர்கள், ஊர்மக்கள், போலீசால் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனர். தேசிய பாதுகாப்புப்படை அக்கிரகாரத்தில் காவல் காக்கிறது. கன்னிப்பெண்கள் பயந்து ஓடுகிறார்கள். நாள் குறித்தாயிற்று. நாளைமாலை கோயிலை தகர்க்க போகிறார்கள். தேரடித்தெருவுக்கு ஏற்கனவே மஞ்சள்நிற ராக்கத இயந்திரங்கள் வந்துவிட்டன. பாறையை தகர்க்கும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்தாயிற்று. முற்போக்கு சிந்தனையுடைய வளர்ச்சி விரும்பிகள் இயந்திரங்களுக்கு பூஜைசெய்து வரவேற்கிறார்கள். கும்பகோணம், வருங்காலத்தில் பணக்கார நகரமாகிவிடும் என்று வீடு கட்டுபவர்கள் விளம்பரம் செய்கிறார்கள். நகைகளும் சிற்பங்களும் மாயமாகி வருடமாகிவிட்டது.

இப்படி ஒன்று நடந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் ? கோபமும், ஆத்திரமும், அருவருப்பும், இயலாமையும், ஆற்றாமையும் ஒருசேர தோன்றினால்….. அதை கொஞ்சநேரம் கிடப்பில் போடுங்கள்.

இது ஒரு கற்பனை தூண்டல்தான். யதார்த்தம் இதைவிட கொடுமையானது.

இப்படியான ஒரு விடயத்துக்காகத்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள டான்டேவாடா, பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் உள்ள 200 கிராமங்களைச் சேர்ந்த 7,000 க்கும் மேற்பட்ட ஆதிவாசிகள், ஜூன் 7 ம் தேதி அன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டம் அவர்களுக்கு புதிதல்ல. ஆதிவாசிகள்தானே !. வில்லும் அம்பும் கொண்டு ஓகோவென்று கொக்கரிப்பார்கள். போலீசை அனுப்பினால் கலைந்துபோவார்கள்.

பூர்வகுடிகள் அமைதியாக வாழ்ந்த அவர்களின் கானகத்தை பிடுங்கி, அவர்தம் வாழ்விடத்தை சிதைத்து, காட்டை அழிப்பதும் மலையை குடைவதும், மக்களை இடம் மாறுவதும், பழங்குடியை கூலியாக்குவதும், பெண்களை சீரழிப்பதும் உலகெங்கும் நடப்பதுதான். கனிம வளத்தை தோண்டி விற்பதற்காக இடைஞ்சலாக இருப்பவர்களை தூக்கவேண்டியதுதானே அரசின் கடமை !

இந்தியாவில் அரசாங்கம் அவர்களை செல்லமாக “நக்சலைட்” என்று அழைக்கும். பழங்குடி என்றாலே நக்சலைட் என்று பொய் பிரசாரம் செய்யப்பட்டுவிட்டது. ராணுவம் அவர்களை சுட்டுக்கொல்லும் பதிலுக்கு அவர்களும் நாட்டுத்துப்பாக்கியால் சுடுவார்கள். சிறைசெல்வார்கள். சித்திரவதைக்கு ஆட்படுவார்கள்.

இந்தமுறை அவர்கள் போராடுவது காணி நிலத்துக்காக அல்ல. 1956 முதலே அது ஏற்கனவே பிடுங்கப்பட்டுவிட்டது. போஸ்கொ போன்ற தென்கொரிய கம்பெனி தொடங்கி, இன்று வேதாந்தா, அதானிவரை சத்தீஸ்கரை, அங்குள்ள ஆரண்யத்தை, பலகாலமாகவே இரவும் பகலும் சகட்டுமேனிக்கு வன்புணர்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.

தண்டகாரண்யம் என்று அழைக்கப்படும் காடுகள். சபிக்கப்பட்டவர்கள் வாழ்ந்த அதே அடர்ந்த கானகம்தான். இராமனும், லக்குவனும், சீதையும் சுற்றித்திரிந்த அதே காடுகள்தான். திராவிட தேசத்தை பகைவர்கள் படையெடுத்து அளிக்கமுடியாமல் காத்த அதே காடுகள்தான்.

இரும்பு, நிலக்கரி, அலுமினிய தாதுக்களை துறைமுகத்துக்கு அனுப்பி ஏற்றுமதி செய்ய ரயில் கூட்ஸ் வண்டி போதாதென்று விசாகப்பட்டினம் வரை 9000 கோடியில் 400 கிலோமீட்டருக்கு உலகிலேயே நீளமான “சேற்றுக்குழாய்” (Slurry pipe) போட்டுள்ளார்கள். கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் தாதுக்களை துறைமுகம் வரை இந்த குழாய் இரவும் பகலும் கொண்டுசெல்கிறது. ஆனால் சதீஷ்கரில் வாழும் பழங்குடிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள்கூட கிடையாது. அந்நாளில் லண்டன் மகாராணியின் ராயல் கடற்படைக்கு தேவையான மரங்களை கொண்டுசெல்ல வெள்ளைக்காரன் காட்டுக்குள் ரயில் பாதை அமைத்தான். இன்றுவரை அதேபோல கனிம கொள்ளைக்காரர்கள் சாலைகளும், தொடர் வண்டிகளும், தற்போது குழாய்களும் அமைத்து இதே வேலையைத்தான் செய்கிறார்கள்.

கம்பெனிகளின் கனிம கொள்ளையை தடுத்தால் அரசாங்கத்தால் சுட்டுக்கொல்லப்படுவோம் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் இந்தமுறை அவர்கள் விட்டுக்கொடுப்பதாயில்லை. இந்துக்களான அவர்களின் பூர்வ குடி உணர்வுகள் மீது வன்கொடுமை திணிக்கப்படுகிறது. பெருமுதலாளிகளுக்கான நம் அரசு நாடி நரம்பெல்லாம் ஊறிப்போன கடவுள் வழிபாட்டு உணர்வை சிதைக்கப்பார்க்கிறது .

அவர்கள் வணங்குவது ஒரு மலையை. பிதோர் ராணி என்று பெயர். அவர்கள் வணங்கும் தெய்வத்தை (Pithora) காப்பாற்ற இப்போது போராடுகிறார்கள். பைலாதிலா என்ற மலைத்தொடரை காப்பாற்ற போராடுகிறார்கள். அடேயப்பா ! படிப்பறிவில்லாத, பட்டா நிலமில்லாத பூர்வ பழங்குடிகளுக்கு அவ்வளவு இருந்தால் நமக்கு எவ்வளவு இருக்கும் என்று நடக்கும் பலப்பரீட்சை.

ஆதிவாசிகளை பொறுத்தவரை மலைதான் கடவுள். மலையப்ப சுவாமி. பழங்குடிகள் வணங்கும் கிராம தேவதை, குல தேவதை, பூமி தேவதை மற்றும் நாக தேவதைகள் ஏராளம். கடவுள் நந்தராஜ் ஒரு மலை. நந்தராஜ் அவர்களின் பாடல், நடனம், இசை மற்றும் வாழ்வியலில் பின்னி பிணைந்துள்ளார். அவருக்கு இரு பெண்கள். “இலோமிட்டா” மற்றும் “பலோமிட்டா”. இவர்களும் குன்றுகள்தான். இவர்களின் தாயார்தான் “பிதோர்மிட்டா” அல்லது பிதோர் ராணி. நம்முடைய அரசு அந்த மலையை “13வது கனிம வைப்பு” என்று பெயரிட்டு தோண்ட ஆரம்பித்துள்ளது. தோண்ட அல்ல தகர்த்தெடுக்க.

பிதோர் ராணியின் மூதாதையர் “ராணி காளி கோயல்” நான்கு தடவைகள் பிரசவித்தார். முதலில் இலைகள், மலர்கள் மற்றும் பழங்கள் இரண்டாவது முறை வெவ்வேறு தானியங்கள் மற்றும் பருப்புகளுக்கு, மூன்றாவது மழை, காற்று, தீ, மின்னல், விலங்குகள் மற்றும் பூச்சிகள் போன்ற இயற்கைத் தெய்வங்களுக்கு மற்றும் நான்காவது ‘பித்தோரா’ என்னும் தேவதை. ஆண்டாளைப்போல ஆற்றில் விடப்பட்ட இந்த ஆண் மகவு. இந்த பரம்பரையில் பல்வேறு தெய்வங்கள். குஜராத்திலிருந்து கல்கத்தாவரை விரவி இருக்கின்றன.

எப்போதும்போல இந்திய தேசிய கனிம வளர்ச்சி ஆணையம் அந்த இடத்தில் இருக்கும் அபரிதமான இரும்பு தாதை எடுக்க சுரங்கத்தை அமைத்து குத்தகையை அதானி கம்பெனிக்கு கொடுப்பதற்காக ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறது. வருடத்துக்கு 10 மில்லியன் (ஒரு கோடி) டன் இரும்பை எடுக்கலாம். அந்த மலைக்கு பக்கத்தில் இருக்கும் ஹிரோலி கிராமத்தில் ஒரு கிராம சபையைக்கூட்டி போலியான அங்கீகாரத்தை தயாரித்துள்ளது அரசு. அதாவது 600 பேர் இருக்கும் இடத்தில் 106 பேரிடம் மிரட்டி கைநாட்டு. அடேயப்பா! இவ்வளவு இரும்பு கிடைக்கிறதென்றால் கடவுளை விரட்டவேண்டியதுதானே என்கிறீர்களா !. இந்த இரும்பு அப்படியே ஏற்றுமதியாகும்.

இதே தெலுங்கானாவில் பூபாலப்பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் சம்மக்கா சரளாம்மா என்ற அக்கா தங்கையர் தெய்வங்களுக்கு இந்த பிரச்சனையில்லை. முதலமைச்சரே அந்த ஜாத்ராவை சிறப்பாக நடத்திக்கொடுப்பார். ஏனெனில் அங்கெ கனிமங்கள் இல்லை.

எது எப்படியோ ! பிதோர் ராணியும் அவர் பெண்களும் வெறும் காவல் தெய்வங்கள்தானே. நான் வெஜ் சாப்பிடும் காட்டு தெய்வங்கள்தானே !. வடிவமைப்பில்லாத கற்கள்தானே என்று வெங்காயம் கூட சாப்பிடாத உயர்குடி பக்தன் வணங்கும் தெய்வம் எப்படிப்பட்டது !.

ரத்தம் சொட்ட குடலை மாலையாக உருவித்தோளில் போட்டுகொண்டு சிங்கமாக தங்க கவசத்துக்குள் உட்கார்ந்துகொண்டிருக்கும். இன்னொரு தெய்வம் நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு, நகத்தில் அரக்கனின் தலையை சொருகிக்கொண்டு , மண்டையோடு மாலை அணைந்துகொண்டுருக்கும். பழங்குடிகள் உணவுக்காக வேட்டையாட பயன்படுத்தும் அம்புவில்லை கோதண்டமென தோளில் மாட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு சாமி. அல்லது கொக்கின் வாயை கிழித்து விமோசனமளிக்கும் பிறிதொன்று. இவர்களெல்லோரும் குளிரூட்டப்பட்ட கர்ப்பக்கிருகத்தில் வசிக்கும் நகரத்து காவல் தெய்வங்கள். சாதுக்கள்!

இவர்கள் அல்லதை கொன்று நல்லதை காப்பவர்களென்றால் பழங்குடிகளின் பிதோர் ராணி எந்தவிதத்தில் குறைந்தவள் ?

புரியவில்லையென்றால் மீண்டும் முதல்பாராவை படிக்கவும்

 

alwarnarayanan.

Leave a Reply