FEATUREDLatestஅறிவியல்

வெள்ளைச்சத்தம்-சத்தத்துக்கு நிறம் உண்டா?

Spread the love

“என்னைத் தாலாட்ட வருவாயா…?”
-ராஜ்சிவா(ங்க்)

நீங்கள் விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் கொஞ்சம் பொறுத்திருங்கள். விமானத்தை முடித்துவிட்டு வந்து பேசுகிறேன். ஆம் என்றால், உங்களின் முதல் விமானப் பயணத்தை நினைவுபடுத்துங்கள். நீங்கள் விமானத்தினுள் ஏறி உட்காரும்போதே, பறக்காத நிலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் விமான இயந்திரங்களின் இரைச்சல் காதடைக்கும் சத்தமாகத் தோன்றும். விமானத்தின் அளவு பெரிதாகப் பெரிதாகச் அச்சத்தமும் அதிகமாக இருக்கும். உள்ளே ஏறி, உங்கள் இருக்கையில் அமரும்போதே, இந்தச் சத்தத்தைக் கேட்டபடி எப்படிப் பயணிப்பது, இதில் எப்படி நித்திரை கொள்வது என்ற எண்ணமெல்லாம் தோன்றும். ஆனால், விமானத்தின் சகல பயணிகளும் ஏறி, விமானம் புறப்படும் நாற்பது நிமிட நேரத்திற்குள் அப்படியான இரைச்சல் இருப்பதையே மறந்து போயிருப்பீர்கள். புறப்பட்டு சில மணி நேரத்தில் தூங்கவும் ஆரம்பித்து விடுவீர்கள். ஆனால், அப்போதும் அந்தச் சத்தம் இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் அச்சத்தத்திற்குப் பழகிப் போய்விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

சரி, இப்போது விமானத்தை விட்டு இறங்கி, அதில் பயணம் செய்யாதவர்கள் பக்கம் வருகிறேன். மகிழுந்திலோ, பேருந்திலோ, தொடருந்திலோ நெடுந்தூரத்திற்கு நீங்கள் நிச்சயம் பயணம் செய்திருப்பீர்கள். அப்படிப் பயணம் செய்யும்போது, அவ்வளவு வாகன இரைச்சலிலும் தூங்கிப் போய்விடுவீர்கள். எப்படி முயன்றாலும் விழிக்க முடியாமல், கண்கள் போதையாய்ச் சொக்கும். விழிப்பதற்கு மனமே வராது. அப்போதும் பயணக் களைப்பில் நீங்கள் தூங்குவதாகவே நினைத்துக் கொள்வீர்கள். ஆனால், அதுவும் உண்மையல்ல.

களைப்பில் தூங்கும் சமயங்கள் உண்டுதான். போரில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அருகில் குண்டுகள் வெடிக்கத் தூங்கியவர்கள் உண்டு. அப்படியான நிலையை இங்கு நான் சொல்லவில்லை. அப்படியெனில் மேலே கூறியபடி, அவ்வளவு இரைச்சலிலும் நாம் எப்படித் தூங்குகிறோம்? சாதாரணமாக, அருகில் படுப்பவர் கொறட்டை விட்டாலே நம்மால் தூங்க முடிவதில்லை. இந்தச் சந்தர்ப்பங்களில் நம்மை யாராவது தூங்க வைக்கிறார்களா, என்ன? ஆமாம்! யாரோ தூங்க வைக்கிறார்கள் என்பதே உண்மை. யார் தூங்க வைக்கிறார்கள்? சொன்னால் நம்ப மாட்டீர்கள். எந்தச் சத்தத்தால், எந்த இரைச்சலால் நீங்கள் தூங்க முடியாது என்று நினைத்தீர்களோ, அதே சத்தம்தான் உங்களைத் தாலாட்டித் தூங்க வைக்கிறது. “என்ன சத்தமும், இரைச்சலும் தூங்க வைக்கிறதா? சும்மா விளையாடாதீங்க ராஜ்சிவா?” என்று கேட்க வேண்டும்போல் இருக்கிறதல்லவா? சரி பரவாயில்லை. தொடர்ந்து படியுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் புரிந்துகொள்ளாமல் தவறவிட்டு, அப்புறமாய்ப் புரிந்துகொண்ட எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. அதுபோல இதையும் இப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள்.

சூரியனில் இருந்து வரும் ஒளியில், ஏழு நிறங்கள் உண்டென்பதை ஆறாம் வகுப்பிலேயே படித்திருப்பீர்கள். வானவில்லின் வர்ணங்களாய்க் காதலியை வர்ணிக்கும் பாடல்களையும் அறிவீர்கள். அறிவியல் வானவில்லின் ஒவ்வொரு நிறத்தையும் தனித்தனி ஒளியாக வேறு படுத்துகிறது. எல்லா நிறங்களும் சேர்ந்த ஒளியை ‘வெள்ளை ஒளி’ என்றும் சொல்கிறது. இவையெல்லாம் நீங்கள் அறிந்தவைதான். ஆனால், ‘வெள்ளை ஒலி’ என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். கவலை வேண்டாம். நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள். வெள்ளை ஒலியேதான். அதாவது வெள்ளைச் சத்தம். இப்போது உங்கள் புருவம் ஆச்சரியத்தில் மேலும் உயரும். “அம்மாடியோவ், அது என்ன வெள்ளைச் சத்தம்?” என்று ஆச்சரியத்தில் விழி விரிப்பீர்கள். வெள்ளைச் சத்தம் மட்டுமல்ல, சிவப்புச் சத்தம், நீலச் சத்தம், மண்ணிறச் சத்தம், பச்சைச் சத்தம், ஊதாச் சத்தம், மென்சிகப்புச் (பிங்க்) சத்தம் என்று பலவகைச் சத்தங்கள் உண்டு. அதுசரி, சத்தத்திற்கு ஏது நிறம்?

ஒளியாய் இருந்தாலென்ன, ஒலியாய் இருந்தாலென்ன, எல்லாமே அதிர்வுகள்தான் (Frequency). மனிதனால் பார்க்கக்கூடிய ஒளியான (Visible Light) ஏழு நிறங்களுக்குமெனத் தனித்தனி அதிர்வெண்கள் உண்டு. அதுபோலக் கேட்பதற்கும் அளவு இருக்கிறது. 20 ஹேர்ட்ஸ் (Hz) இலிருந்து 20,000 ஹேர்ட்ஸ் வரையிலான அதிர்வெண்ணுடைய ஒலியையே மனிதனால் கேட்க முடியும். ஏழுநிற ஒளியையும் ஒன்றாகச் சேர்த்தால், வெள்ளை ஒளி தோன்றுவதுபோல, 20 இலிருந்து 20,000 ஹேர்ட்ஸ் ஒலிகளை ஒன்றாகச் சேர்த்தால் வருவது வெள்ளை ஒலி அல்லது வெள்ளைச் சத்தம். வெரி சிம்பிள்.

கேட்கும் ஒலியின் அனைத்து அதிர்வுகளையும் ஒன்றுசேர்த்து, சீரற்ற (Random) முறையில் ஒலிக்கவிட்டால், அது வெள்ளைச் சத்தமாகிறது. அந்தச் சத்தம் எங்கே இருக்கிறது என்று தேடி நீங்கள் எங்கும் ஓட வேண்டியதில்லை. கனமழை பெய்யும்போது ஒரு சத்தம் வருமே, அதுதாங்க பழைய துக்ளக் ஆசிரியர் போலப் பெய்யுமே மழை. அப்படி மழை பெய்யும்போது நீங்கள் கேட்பதுதான் வெள்ளைச் சத்தம் (white noise). இயற்கையாகவே அமைந்த இன்னுமொரு சிறப்பான வெள்ளைச் சத்தம், கடற்கரையில் ஒலிக்கும் அலைஓசை. அவை மட்டுமல்ல, பழைய தொலைக்காட்சிகள் எந்தவித நிலையங்களும் பிடிபடாத நிலையில் புள்ளி புள்ளியாக ‘ஸ்ஸ்ஸ்…’ எனச் சத்தமிடுமே, அதுவும் வெள்ளைச் சத்தம்தான். விமான இயந்திரங்கள், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றிலும் இந்த வெள்ளைச் சத்தம் வரும். இந்த வெள்ளைச் சத்தத்திற்கு இருக்கும் சிறப்பான இயல்பு என்ன தெரியுமா? நித்திரைகொள்ள வைப்பது. Insomnia என்னும் நித்திரைகொள்ள முடியாத உபாதையுடையவர்களுக்கு வெள்ளைச் சத்தமிடும் கருவிகளைச் (white noise machines) சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அனைத்து விதமான ஒலிகளையும் இந்த வெள்ளைச் சத்தம் உள்ளடக்கியதால், வெளியே இருந்துவரும் ஏனைய ஒலிகளைக் கிரகிக்க விடாமல் மூளைக்கு ஒருவித மாஸ்க்கைப் போட்டுவிடுகிறது. அதனால் எதுவிதத் தடைகளும் இல்லாமல் மெல்ல உறக்கத்திற்குள் கொண்டு செல்கிறது.

வெள்ளைச் சத்தமிடும் கருவிகள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் விற்பனையாகின்றன. பலர் தங்கள் குழந்தைகளை நித்திரையாக்குவதற்காக வெள்ளைச் சத்தக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளைச் சத்தம் அமைதியாக நித்திரையாக்கும் குணமுடையதாக இருந்தாலும், அதன் சத்தத்தின் அளவு அதிகமாக இருக்கக்கூடாது. அதிக டெஸிபல் (Decibel)அளவுகொண்ட வெள்ளைச் சத்தம் குழந்தைகளுக்கு ஆபத்தாகவும் ஆகலாம். அதனால், 50 டெசிபலுக்கு அதிகப்படியாக இல்லாத வெள்ளைச் சத்தமே குழந்தைகளுக்கு உகந்தது. அதனால், வெள்ளைச் சத்தத்தின் மாற்று வழியாக, அதே இயல்பைக் கொண்ட ‘மென்சிகப்பு’ (Pink) சத்தத்தை, நித்திரை கொள்ளும் கருவிக்கெனப் பயன்படுத்துகிறார்கள். மென்சிவப்புச் சத்தத்திலும் அனைத்து அதிர்வுகளையும் கொண்ட ஒலிகள் அடங்கியிருக்கின்றன. ஆனாலும் அதன் சத்த அளவு மிகக்குறைவாகவே இருக்கும்.

இப்போதெல்லாம், வெள்ளைச் சத்தம் மற்றும் மென்சிகப்புச் சத்தத்தைக் கேட்பதற்கு, அதற்கான கருவிகளை நீங்கள் வாங்க வேண்டியதில்லை. இணையத்தில், குறிப்பாக யூட்டியூபில் அவை ஆயிரக் கனக்கில் கொட்டிப்போய் இருக்கின்றன. நித்திரை கொள்ளாமல் அடம் பிடிக்கும் உங்கள் குழந்தைகளுக்கு, மென்சிகப்புச் சத்தத்தையோ, சத்தம் குறைந்த வெள்ளைச் சத்தத்தையோ ஒலிக்கவிட்டுப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கலாம். குறிப்பாய் நித்திரை வராமல், பேஸ்புக்கையே நள்ளிரவுகளில் நோண்டுபவர்கள் இதைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

அலையோசையும், ஆங்காங்கே மெல்ல ஒலிக்கும் சீகல் பறவையின் கீச்சலும் கேட்டால், உறங்க முடியாதவர் யார்தான் உண்டு?

-ராஜ்சிவா(ங்க்)

Leave a Reply