General

விவசாயி மகன் என்ற திமிரோடு

Spread the love

மண்ணில் விளையாடீட்டு இருக்கும் இந்த பிள்ளைகளோட அப்பாவாகிய நான் பத்தாவது பாதியில் பள்ளிபடிப்பை கைவிட்ட திருமூர்த்தி என்ற விவசாயி
இன்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும், தேர்ச்சி பெறாமலும்
இருங்கும் பிள்ளைகளுக்காக எழுதுகிறேன்..

தனியார் பள்ளிதான் சிறந்தது என்று
81களில் என் தகப்பனோட மூளைக்கு எட்டியதோ என்னவோ
அப்போதே கொண்டு போய்
“சாரு வித்யாலயா ” என்ற பள்ளியில் என்னை சேர்த்தினார் ..

இருக்காதா பின்னே..?
எம்புள்ளையும் தன்னை போல விவசாயத்தில் கஷ்டபடகூடாதுனு நினைச்ச சராசரி குடியானவர்தானே எங்க அப்பா..!

LKG யிலிருந்து எட்டாம் வகுப்புவரை
மொத்தம் 12 வருடங்கள் அங்கதான் நம்ம படிப்பு..!

கணக்கு உதைக்குதாங்க..?

மூன்றாம் வகுப்பில் 2 வருஷம்,
எட்டாம் வகுப்பில் 2 வருஷம்னு படு ஸ்ட்ராங் நம்ம அஸ்த்திவாரம்..!!

அப்போ மொத்தம் 12 வருஷம்தானே ஆகும்..!!

அதன் பிறகு அரசு உயர் நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு படிப்பை(!!) தொடங்கினேன்..

எட்டாவதில் தேர்ச்சி..

ஒன்பதாவதிலும் தேர்ச்சி..

பத்தாவது காலடிவைத்தவுடன் கணித பாடத்திற்கு எழில் பழச்சாமி என்ற ஓர் ஆசிரியர் வந்தார்..

ஏற்கனவே நா கணக்குல புலி..

காலாண்டு தேர்வுக்குள் என்னை அடி பின்னி எடுத்து எனது பள்ளி வாழ்கைக்கு சுபம் போட்டு வைத்தார் எழில் வாத்தியார்..

இந்நேரத்தில் எனது நன்றி கலந்து வணக்கங்களை அவரது பாதைகளுக்கு காணிக்கையாக்குகிறேன்..

காரணம்..
அவர் மட்டும் கணக்கு பாடத்துக்கு வாத்தியாரா வராம போயிருந்தா
கடைசி பெஞ்சில் என்னோடு பயணித்த கணக்கு பாடத்தில் புலியான கார்த்தியை பார்த்தாவது எழுதி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அப்படியே மேல் படிப்புக்கு போயிருப்பேன்..

சரி மேல படிச்சிருந்தாலும் நல்லதுதானே.
நல்ல சம்பளத்தோட அப்போ உங்களுக்கு நல்ல வேலையும் கிடைச்சிருக்கும்னு உங்களுக்கு தோனலாம்..

உண்மைதான்..

ஆனா தப்பி தவறி நா படிச்சு வேலைக்கு போயிருந்தா இப்போ எங்க பண்ணையத்தோட நிலைமை..??

படிப்புக்கு முழுக்கு.
வெவ்வோறு தொழில்.
அனைத்துலும் சொல்லும்படியா சாதிக்க முடியல..

2009 ,10 ல் இயற்கை வேளாண்மையை முழுசா துவங்கினேன்..

இப்போ வரைக்கும் முன்னூறு டன்னுக்கு மேல வாழையும்,
ஐநூறு டன்னுக்கு மேல கரும்பும்,
ஒரு டன் அரிசி,
முன்னூறு கிலோ எள்,
சுமார் இரண்டாயிரம் லிட்டர் தேங்காய் எண்ணெயும்,
பத்து டன் மஞ்சளை மஞ்சள்தூளாகவும்
இந்த பத்தாண்டுகளில் விளைய வச்சாச்சு.
அதுவும் துளி கூட நஞ்சில்லாம..

இதுபோக செக்குல எங்க தேங்காயில் எண்ணெய் ஆட்டுவதும்,
மஞ்சளை பழைமுறைபடி சூடு இல்லாம அரைப்பதுமா வேலை அன்றாடம் போயிட்டே இருக்கு..

இது ஒரு பக்கம்..

மோட்டார் பழுபார்பதிலிருந்து (சின்ன வேலைகள்)
சொட்டுநீர் புதிதாக போடுவதிலிருந்து,
சூரியஒளி தகடு பொருத்துவதிலிருந்து,
CCTV கேமரா பொருத்துவதிலிருந்து,
பைப் லைன் வேலை பார்ப்பதிலிருந்து,
குட்டை வெட்டுவதிலிருந்து,
இயற்கை வேளாண்மையில் தகவமைச்சுக்கொள்வதிலிருந்து
நேரடி சந்தை வரைக்கும்
என்னோட அந்த 14 ஆண்டு பள்ளி வாழ்கை கற்று தரல என்பதுதான் நிதர்சனம் ..

அப்படி எல்லாம் ஆகனும்னு நான் நினைத்திருந்தால்
நானும் என் சித்தி பொண்ணை போல சென்னையில் மென்பொறியல் துறையிலோ
மாமன் மகனை போல வெளிநாட்டிலோ
குடிபெயர்ந்திருக்கலாம்..

ஆனா நான் சிறு வயதிலிருந்து அப்படி நினைத்ததே இல்லை..

அப்படி நினைத்திருந்தால் இப்போதும் கோடி கோடியாய் வெளிநாட்டில் சம்பாதித்து அதை இங்கே விவசாயத்தில் முதலீடு செய்ய என்னை போன்றொரிடம் உங்களுக்கு ஆலோசனை கேட்க்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்..

முடிந்தவரை நமக்கான பாதையை நாம் உறுவாக்குவதுதான் நிரந்தர சாதனைகளாகவும்
அச்சாலைகளில் நம்மை
பின்தொடருபவர்களுக்கு நாம் ஓர் முன் உதாரணமாகவும் இருக்க முடியும் என்பது எனது கருத்து..

மற்றபடி படிப்புக்கும்
அறிவுக்கும் துளி கூட சம்பந்தமில்லை..

அந்த பதிநான்கு ஆண்டுகள் பள்ளியில் செலவு செய்யாமல் போயாருந்தல்
இப்படி உட்காந்து ஒன்றரை மணி நேரம் கை பேசியில் இந்த பதிவை பகிரமுடியாமல் போயிருக்கலாமோ
என்னமோ..
அது தெரியல..

ஆனா அடிப்படை புத்தி,
பட்டறிவு ,
இந்த ரெண்டுமில்லாம போயிருந்தால்
இப்போது தினசரி அஞ்சு பேருக்கு வேலை கொடுக்க முடியாமலும்
நிறைய பேருக்கு நஞ்சில்லாத விளைபொருளையும் கொடுக்க முடியாம போயிருக்கும்..

அதே போல சூழலை பாதிக்காத என்னோட பசுமை தொழிலும் செயல்வடிவம் பெறாமலே போயிருக்கும்..

இப்பவும் நா என்னொட மகன் கிட்ட சொல்லும் ஒரே வசனம்..

இஷ்டமான வரை படி..
கஷ்டமா
அப்பனோட விவசாய கல்வியை கத்துக்கோ..

அப்பனோட சேர்ந்தா சோக்கா சுத்தலாமோ இல்லையோ,
சோறு இல்லேனு குறையில்லாம சுத்தலாம்
#விவசாயி_மகன்_என்ற_திமிரோடு..

அம்புட்டுதான்..
நம்ம படிச்ச படிப்புங்க..!

உங்களுக்கு என்னங்க.??
உங்க அப்பா சம்பாதிச்சு வச்சுட்டாரு.
அதனால பேசுறீங்கனு மட்டும் கேட்டுவிடாதீங்க..

ஏன்னா இன்னைக்கு புதுசா மண்ணை சம்பாதிச்சிடலாம்..
ஆனா அந்த மண்ணை உயிரோட்டமா நம்மளோட அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிவிடபடுகிற கஷ்டமிருக்கே
எங்க இடத்தில் வந்து நின்னு பாருங்க புரியும்..

வாழ்த்துக்கள்
பிராய்லர் கோழிகளாக இல்லாமல்
நாட்டுக்கோழிகளாக நம் பிள்ளைகளை வளர்க்க..!.