FEATUREDLatestPoliticsSocialmedia

மூழ்கும் கப்பலாகும் இந்தியா

Spread the love

மூழ்கும் கப்பலாகும் இந்தியா. குமரிமைந்தன்

கடலில் ஒரு கப்பல் முழுகத் தொடங்கினால் அதன் உடனடியான அறிகுறி அதில் வாழும் எலிகள் வெளியேறுவதுதான். வெளியேறிக் கடலினுள் குதிக்கும் எலிகள் தப்பிப் பிழைக்கப் போவதில்லைதான். இருப்பினும் அவற்றின் நடவடிக்கை அதுதான்.

அது போல்தான் இந்தியாவிலிருந்து மக்கள், அதிலும் குறிப்பாக மேல்தட்டில் உள்ளோர் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். நம் நாட்டிலுள்ள தலைவர்கள், செல்வாக்குள்ள மனிதர்கள், பெரும் பதவியிலுள்ளோர், எழுத்தாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று யாரைப் பற்றிய செய்தியிலும் இருந்து அவர்களது பிள்ளைகளில் ஒருவராவது வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இவர்களில் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு நல்ல பிழைப்பைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கு நல்ல வருவாய் தரும் வேலைகளில் அமர்ந்து வசதியாக வாழ்கிறார்கள். இன்னொரு புறம் மேல்தட்டு மக்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், தொழில் – வாணிகப் பெரும்புள்ளிகள் ஆகியோரின் பிள்ளைகள் அங்கே தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அவர்களது பெற்றோர் ஆட்சியில் ஊழல் செய்து ஒதுக்கும் பணத்தை டாலராக மாற்றி அங்கே அனுப்புகிறார்கள். அங்கே அது தொழில் அல்லது வாணிகத்தில் முதலிடப்படுகிறது.

வருமான வரிக்கு அஞ்சி பணத்தை மறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட உத்திதான் ஏற்றமதியின் போது விலையைக் குறைத்தும் இறக்குமதியின் போது விலையைக் கூட்டியும் பட்டியல் போடுவது. இந்தத் தொகை ஒரு எல்லையைத் தாண்டிய போது அதற்காகவே ஏற்றமதி இறக்குமதிக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. இப்போது நம் நாட்டின் இரத்தத்தை உறிஞ்சும் அரத்தத் காட்டேரியாக இது மாறிவிட்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் அமெரிக்காவுக்கு இவ்வாறு கடத்தப்பட்ட பணம் ரூ 54,000 கோடி என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

இந்தக் கடத்தலின் அளவுகளுக்கேற்ப ஆட்சியாளர்கள் தங்கள் அயல் வாணிகக் கொள்கையை மாற்றிக் கொண்டு வந்திருக்கின்றனர்.

முதலில் பெருந்தலைகள் மட்டும் பெரும் ஊழல்களில் ஈடுபட்டபோது தங்கள் தேட்டையை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கிவைத்தனர். பல நேர்வுகளில் இத்தலைவர்கள் இறந்த பின் உரிய தடயங்களில்லாதபடியால் பதுக்கிய பணம் அவர்களது பிறங்கடைகளுக்கு(வாரிசுகளுக்கு)க் கிடைக்கவில்லை. எனவே அடுத்த கட்டமாக அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான சலுகைகள் என்ற பெயரில் ஊழல் பணத்தை உள்ளூருக்குக் கொண்டுவருவதற்கான சலுகைகளுடன் கூடிய திட்டத்தை அறிவித்தனர். அவாலா முறையில் உள்ளூரில் திருடிய பணமும் டாலராக மாறி அயல்நாட்டு இந்தியர் பணமாக உள்ளே நுழைந்தது. கள்ளப் பணத்தின் அளவு எல்லை மீறிய போது புதிய பொருளியல் கொள்கை, தராளமாக்கல், தனியாருடைமை ஆக்கல், புதிய ஏற்றுமதி – இறக்குமதிக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

இப்போது வெளியே பதுக்கப்பட்ட கள்ளப்பணம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் ஊடாக அயல் முதலீடு, மூலதனக் கூட்டு, தொழில்நுட்பக் கூட்டு என்ற பெயர்களில் உள்நாட்டில் நுழைகிறது. ஆதாயமாகவும் உரிமைக் கட்டணமாகவும் நம் நாட்டுச் செல்வத்தை வரியின்றி அள்ளிச் செல்கிறது.

பிழைப்புக்காக வெளி நாடு சென்றிருக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக நடுத்தரக் குடும்பத்தினர் தம் சொந்தச் செலவில் சென்று வருகின்றனர். இதனாலும் நம் டாலர் கையிருப்பு குறைகிறது.

ஆனால் ஆட்சியாளர்களாகிய பெரும்புள்ளிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி அரசுச் செலவில் அந்நாடுகளுக்குச் சென்று தங்கள் பிள்ளைகளையும் அவர்கள் நடத்தும் தொழில்களையும் கண்காணித்து வருகின்றனர். சென்ற ஆண்டில் பிரேசிலில்  நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரரின் எடையைப் பொறுத்து ஒரு சச்சரவு ஏற்பட்ட போது இங்கிருந்து சென்ற அதிகாரிகள் எவரும் அங்கு இல்லையாதலால் அவர் போட்டியிலிருந்து முறைகேடாக நீக்கப்பட்டார். ஒலிம்பிக் குழுவோடு அமெரிக்கா சென்ற அதிகாரிகள் அனைவரும் தங்கள் உறவினர்களைப் பார்க்கச் சென்றுவிட்டதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

அத்துடன் தொழில் ஒப்பந்தங்கள், பேச்சுகள் நடத்துவதற்கென்று செல்லும் தொழில் வாணிகப் புள்ளிகளும் இது போல் தங்கள் பிள்ளைகள் நடத்தும் தொழில்களைக் கண்காணித்துக் கொள்கின்றனர். அமைச்சர்களும் அவ்வாறே. முன்பு இராசீவ் காந்தி தன் பயணத்திட்டத்திலிருந்து விலகி சுவீடனிலும் பிரான்சிலும் தொழிற்சாலைகளுக்குச் சென்றது பற்றிக் கடும் கண்டனங்கள் எழுந்தன. குவாத்ரோச்சி போன்ற அயலவர்களுடன் உறவு வைத்திருந்தது இன்றும் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் மூலமாகத் தொழில்களை நடத்துவதால் அவர்களைச் சந்திப்பதை இப்போது யாரும் குறை கூற முடியாது. இந்த உறவினர்கள் விருப்பம் போல் இரு நாடுகளுக்கும் போய் வருவதற்கு வசதியாக இரட்டைக் குறியிருப்பு வசதிகளையும் செய்துதரப் போகிறார்கள். இவ்வாறு இவர்கள் அனைவரின் போக்குவரத்துச் செலவுகளில் நமது டாலர் கையிருப்பு கரைகிறது.

இந்த திருட்டுப் பணத்தின் விளைவாக உருவான உலகளாவுதல் கொள்கையினால் இறக்குமதியாகும் தொழில்களால் இங்கு வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. மாறாக இருக்கும் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. எனவே ஓரளவு வசதி படைத்தவர்களெல்லாம் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தால் உயர்கல்விக்காகப் போட்டி போடுகிறார்கள். இதனால் நம் நாட்டின் தேவையை விட மிகப் பலமடங்கு மூலதனம் உயர்கல்வியில் வீணடிக்கப்படுகிறது. கல்விக் கட்டணம், நன்கொடை, போக்குவரத்து, பெற்றோர்களின் உழைப்பு, அவர்கள் செலவு செய்யும் நேரம், தனிப்பயிற்சி. தேவையானால் கையூட்டு அத்துடன் அரசின் செலவுகள் என்று கணக்கிட்டால் தேசிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க விகிதம் நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்கல்வியில் செலவிடப்படுவது தெரியும். ஆனால் இப்படிப் படித்துப் பயன்பெறுவோர் இந்நாட்டில் இருக்கப் போவதில்லை. அல்லது படிப்பே பயனற்றுப் போகிறது. உடலுழைப்பை வெறுக்கும் மனப்பபான்மையை ஊட்டி வளர்க்கும் இக்கல்வியைப் பெறுவோர் தாங்கள் விரும்பும் வேலை வாய்ப்பைப் பெற முடியாத போது பல்வேறு முனைகளில் சமூகத்துக்குக் கேடு விளைப்போராக மாறிவிடுகின்றனர்.

அதே நேரத்தில் மேல்மட்டத்திலுள்ள இந்தப் பெரும் போட்டியின் விளைவாகக் கல்வியே மாபெரும் வாணிகமாகிவிட்டது. எனவே அதிலும் ஆதாயம் காண ஆட்சியாளர்கள் எண்ணற்ற தன் நிதிக் கல்வி நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்து அவற்றிலிருந்து நிலையான வருமானப் பங்கைத் தங்களுக்குப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இவ்வாறு வணிகமாகிவிட்ட கல்விச் சூழலில் ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்க வழியில்லாமல் தவிக்கிறார்கள். உலக வங்கியிடம் கடனை வாங்கி முறைசாராக் கல்வி என்றும் முதியோர் கல்வி என்றும் அறிவொளி இயக்கமென்றும் தெருவெல்லாம் பணத்தை இறைத்தலுடன் தம் பைகளையும் நிரப்பிக் கொண்ட ஆட்சியாளர்கள் தொடக்கக் கல்வியைப் பேணவோ விரிவாக்கவோ ஒரு தம்பிடி கூட ஒதுக்கவில்லை. பராமரிப்பின்மையால் அறைகளில் நடைபெற்ற வகுப்புகள் மரத்தடிகளுக்கு வருகின்றன. ஆசிரியர்களின்மையால் பல பள்ளிகள் செயலிழந்து கிடக்கின்றன. இவ்வாறு எழுத்தறிவில்லாத மக்களின் எண்ணிக்கையும் விகிதமும் உயரும் ஓர் எதிர்காலத்தை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். 21ஆம் நூற்றாண்டில் 19ஆம் நூற்றாண்டைக் காணப்போகிறோம். இதன் விளைவாகச் சிறார் உழைப்பு கூடப் போகிறது. சிறார் உழைப்பு ஒழிப்பு என்ற உயர் குறிக்கோள் ஒலிக்கும் முழக்கத்தினால் அவர்களது வேலை வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுவிட்டன. எனவே பட்டினியாலும் இல்லாமையாலும் கல்லாமையாலும் நாகரிக உலகத்திலிருந்து அயற்பட்டுவிட்ட ஒரு மாபெரும் மக்கட் கூட்டம் இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

வேளாண்மை, தொழில் ஆகியவற்றில் முதலிடப்பட்டு வேலைவாய்ப்பை விரிவுபடுத்த வேண்டிய பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டும் கல்வித் துறையில் தேவைக்கு மேல் வீணாக்கப்பட்டும் போவதால் வேலையின்மை பெருகி அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு மக்கள் ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடின்றி வேலை தேடிச் சென்று அங்கு சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இந்தியன் என்றால் இழிபிறவி என்ற நிலை உலகில் உருவாகியுள்ளது. இன்று நம் நாட்டில் வாழும் பெரும்பாலான மக்களின் கனவு ஏதாவது வெளிநாட்டுக்கு ஓடி விட வேண்டும் என்பதாகும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் நம் நாட்டு மக்கள் அங்கு மன அமைதியோடு இல்லை. அமெரிக்காவில் வெளிநாட்டவர்க்கு எதிராக உருவாகி வரும் எதிர்ப்புணர்வைக் கண்டு அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். எனவே அங்கிருப்போர் தங்களை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் பெருங்கோயில்களை அங்கு கட்டியெழுப்புவது. அக்கோயில்களில் பூசை செய்வதற்கென்று இங்கு வயிற்றுப் பாட்டுக்கு வழியில்லாத பூசாரிகளும் அங்கே ஒடுகிறார்கள்.

இங்கே படித்து நல்ல வாழ்க்கையை வெளிநாடுகளில் அமைத்துக் கொண்டவர்கள் மீண்டும் இங்கு வர விரும்பவில்லை. பாலைவனமாகிக் கொண்டு வரும், கல்லாத ஏழை மக்கள் நிறைந்த, தூய்மையும் துப்புரவும் அற்ற நீரும் நிலமும் காற்றும் மாசடைந்து போன, தொழில் வளர்ச்சி நாட்டு மக்களிடமிருந்து அயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாட்டுக்கு அவர்கள் எதற்காக வர வேண்டும்?

எனவே இங்கு மிஞ்சப் போவது காட்டுமிராண்டி நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஏழை மக்களும் அவர்களை உறிஞ்சிக் கொழுத்து ஒவ்வொரு தலைமுறையாக இந்நாட்டின் செல்வங்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி தாங்களும் அங்கு ஓடிப் போகிற மேல்மட்டத்தாரும்தாம்.

இந்த நிலையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி, தாராளமாக்கல், உலகளாவுதல் போன்ற ஏமாற்றுகளுக்கு எதிராகப் போராட வேண்டும். நம் நாட்டு மூலதனம், நம் நாட்டு வளங்கள், நம் நாட்டு மக்களின் உழைப்பு ஆகியவற்றின் பலன்கள் நம் நாட்டு மக்களின் வாழ்வை வளமுறச்செய்யும் வகையிலமைந்த பொருளியல் கொள்கையை வகுக்க வேண்டும். நம் நாட்டில் பெரும் முதலைகளைத் தொடாத வருமான வரி, நில உச்சவரம்பு, வேளாண் விளைபொருட்கள் மீதான தேவையற்ற கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நீக்குவதன் மூலம் அனைவரும் தத்தம் ஆற்றல்களை எவ்விதத் தடங்கலுமின்றிப் பயன்படுத்த வகைசெய்வதிலிருந்து தொடங்கி உடனடியாகச் செயலில் இறங்கினால்தான் முழுகிக் கொண்டிருக்கும் இந்தியா எனும் கப்பலைக் காப்பாற்ற முடியும்.

நன்றி – Kumarimainthan அவர்கள் பதிவு