FEATUREDHealthLatest

பருவகால நோய்களை தடுக்க ஆதண்டங்காய்

Spread the love

பருவகால நோய்களை தடுக்க ஆதண்டங்காய் – நமது பாரம்பரிய கிழங்கு வகை. ஆடிப் பழஞ்சோறும் ஆதண்டங்காய் வற்றலுமுண்டால், தேடி வரும் தெய்வப் பெருவாழ்வு.

ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது.. அன்னைக்கு ஆடி அமாவாசை. சென்னையில, மேற்கு மாம்பலம் பகுதியில உள்ள நண்பரைப் பார்க்க காலை நேரத்துல போயிருந்தேன். ‘‘ஆதண்டங்காய், ஆதண்டங்காய்’’னு கூவியபடி விதம்விதமான காய்கறிகள குவிச்சு வெச்சபடி தள்ளுவண்டியை தள்ளிக்கிட்டு வந்தாரு காய்கறி வியாபாரி..

இதுக்காகத்தான் காத்திருந்தபடி, அக்கம் பக்கத்து அடுக்குமாடியில இருந்தவங்க எல்லாம், அந்தக் காய்கறி வண்டியைச் சூழ்ந்து நின்னு, காய்கறிகளை வாங்க ஆரம்பிச்சாங்க. சுவாரஸ்யமா பேசிக்கிட்டிருந்த நண்பரும், பேச்சை நிறுத்திட்டு, ஒரு பை நிறையக் காய்கறிகள வாங்கிட்டு வந்தவர், ‘‘ஆடிப் பழஞ்சோறும் ஆதண்டங்காய் வற்றலுமுண்டால், தேடி வரும் தெய்வப் பெருவாழ்வுனு பெரியவங்க சொல்வாங்க.

ஆடி அமாவாசை தினம், ஆதண்டங்காய் சமைச்சு படையல் போட்டுச் சாப்பிடறது சம்பிரதாயம். இதுல நிறையச் சத்து இருக்காம். குறிப்பா, பருவத்துல வர்ற நோய் நொடியை தடுக்குற சக்தி ஆதண்டங்காய்க்கு இருக்குனு எங்க தகப்பனார் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆடி அமாவாசை அன்னைக்கு, ஆதண்டங்காய் இல்லாம, சமையல் செய்யமாட்டோம்.

ஒரு காலத்துல இந்த ஆதண்டங்காய் அதிகமா கிடைச்சுது. ஆனா, இப்போ ஆடிக்கு ஒரு தரம்தான் கண்ணுல பார்க்க முடியுது’’னு சொன்னவர், ‘‘உங்களுக்கும்கூட நாலுகாய் எடுத்துக்குங்கன்னு’’ கைநிறைய ஆதண்டங்காய்களைத் திணிச்சுவிட்டார்.

அந்தக் காய்கறிகாரர்கிட்ட, ஆதண்டங்காய் எங்க இருந்து வருதுன்னு கேட்டேன், ‘‘திருச்சி, பெரம்பலூர், சேலம் பகுதில இருந்து வருதுங்க. அதுவும் மலைப்பகுதியிலதான் விளையுதாம்’’னு சொன்னாரு.

அந்தக் காயை எடுத்துப் பார்க்கும்போதுதான், அட, இந்தக் காய்க்கா இவ்வளவு மவுசு?னு தோணுச்சு. ஆதண்டன், ஆதண்டைனு ஒவ்வொரு பகுதிக்கும் பேரு மாறுபடுது.

பல விவசாயிங்க இந்தக் காயைத் பார்த்திருப்பாங்க. ஆனா, இதோட பயன்பாடு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.

இந்த ஆண்தண்டங்காய் கொடி வேலியிலேயும், பெரிய மரங்களிலும் படர்ந்திருக்கும். கொடியில முள் இருக்கும். அதனால உயிர்வேலிக்கு இந்த ஆதண்டங்காய் கொடியைத் தேர்வு பண்ணி பயன்படுத்தியிருக்காங்க.

இதோட காய் பச்சை நிறமாவும், பழம் சும்மா, தக்காளிப் பழம் கணக்கா சிவப்பா இருக்கும். இந்தக் கொடி படர்ந்து, வளர்ந்து பலன் கொடுக்க சுமார் பத்து வருஷம் ஆகும். ஆக, பத்து வருஷம் காத்திருந்தாத்தான் இந்தக் கொடியில ஆதண்டங்காயைப் பார்க்க முடியும்.

பருவகால நோய்களை தடுக்க ஆதண்டங்காய்:

ஆடி மாசத்துலத்தான் ஆதண்டங்காய் காய்ச்சுத் தொங்கும். இதைப் பொரிச்சு சாப்பிட்டா, கசப்பும் துவப்புமா சுவையா இருக்கும். ஆதண்டங்காய் வற்றலும் அருமையா இருக்கும்.

அந்தக் காலத்துல கோயிலுக்குச் சொந்தமான காட்டுல, நிச்சயம் ஆதண்டங்காய் கொடி படர்ந்து வளர்ந்திருக்குமாம். இப்பவும் கூட சில விவசாயிகளோட தோட்டங்கள்ல, இந்த ஆதண்டங்காய் கொடி வேலியில வளர்ந்திருக்கிறதை பார்த்திருக்கேன். அதாவது, உயிர்வேலியில மட்டும்தான், இந்தக் கொடி படர்ந்து வளரும். உயிர்வேலியை தோண்டி எறிஞ்சுட்டு, கம்பி வேலிக்கு மாறிட்டோம், கோயில் காடுகளோட நிலையைச் சொல்லவே வேணாம். ஆக, ஒரு அரிய பயிர் நம்ம கண்ணு முன்னாடியே அருகி வருது.

‘ஒருபிடி ஆதண்டை இலையைக் கால் படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர, கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை மறைத்தல் குறையும்’னு சித்த மருத்துவம் சொல்லுது.

ஆதண்டங்காய் மாதிரியே, இந்த மண்ணுக்கு சொந்தமான ஏராளமான பயிர்கள், இந்தத் தலைமுறைக்குத் தெரியாம மறைஞ்சு கிடக்கு.

புதுச்சேரி, விழுப்புரம் மாவட்ட பகுதியில வெற்றிலை வல்லிக்கிழங்கு பயிர் செய்றதை பார்த்திருக்கேன். வெற்றிலை வல்லிக்கிழங்குக் கொடியோட இலை, வெற்றிலை மாதிரியே இருக்கும். வெற்றிலை வல்லிக்கிழங்கை பெரும்பாலும் ஊடுபயிராத்தான் சாகுபடி செய்வாங்க. ஆறுமாத பயிரான இந்த வெற்றிலை வல்லிக்கிழங்கைப் பொங்கல் சமயத்துல விற்பனைக்குக் கொண்டு வருவாங்க. ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய் வரைக்கும் விலை போகும்.

இதேமாதிரி, மயிர்க்கிழங்கை சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில மஞ்சள் பயிரோட ஊடுபயிராகச் சாகுபடி செய்யறாங்க.

உருளைக்கிழங்கு வெளிநாட்டுல இருந்து வந்த பயிர். அதுக்கு முன்னாடி வரையிலும், வெற்றிலை வல்லிக்கிழங்கு, மயிர்க்கிழங்கு, ஆதண்டங்காய்… மாதிரியான பாரம்பர்ய கிழங்கு வகைங்களைதான், சமையலுக்குப் பயன்படுத்தியிருக்காங்க. இதுல என்ன சிறப்புன்னா, நம்ம பாரம்பர்ய கிழங்கு வகைங்க, வெறும் உணவு மட்டுமில்லீங்க. வெப்ப மண்டல பிரதேசத்துல வாழக்கூடிய நமக்கு நல்ல மருந்தும் கூட.!

#AramSeiThamizha அறம் செய் தமிழா

Leave a Reply