FEATUREDLatestSocialmediaஅறிவியல்

நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி

Spread the love

நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி

இன்றைய அறிவியலில் ஆளவந்தானாக இருப்பது ‘கருந்துளை’ (Blackhole). இதைப்பற்றிப் பேசும்போதே ஒரு பிரமிப்புத் தோன்றிவிடுகிறது. நாம் நம்பியிருக்கும் இயற்பியல் விதிகள் எதுவும் அங்கு இல்லாமல் ஆகிவிடுகிறது. கருந்துளைகள் பற்றி எத்தனையோ அறிவியல் விளக்கங்கள் வெளிவந்து விட்டன. இன்டெர்ஸ்டெல்லார் படத்தின் துணைக் கதாநாயகனாகக்கூடக் கருந்துளை நடித்துவிட்டது. பேரண்டத்தில் எத்தனையோ கருந்துளைகள் இருக்கின்றன என்று தெரிந்தும், பால்வெளி உடுத்திரளின் (Milkyway) மத்தியில்கூட மாபெரும் கருந்துளை இருக்கின்றது என்று தெரிந்தும், அதை நேரடியாக அறிவியலாளர்களால் காண முடியவில்லை. அவற்றின் மாதிரிப் படங்களை உருவமைத்துக் கொண்டாலும், நிஜப் படம் கிடைக்கவில்லை. ஆனால், 2019ம் ஆண்டில் கருந்துளையொன்றின் படத்தைக் கண்டெடுத்தே தீருவோம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் அடித்துச் சொன்னார்கள். அவர்கள் அப்படித் திடமாகச் சொன்னதுக்குக் காரணம் ஒன்று இருந்தது. அது என்ன காரணமென்று தெரிந்து கொள்வவதற்கு முன், கருந்துளையொன்றின் நிஜமான படமொன்று கிட்டத்தட்டக் கிடைத்தே விட்டது என்ற நல்ல செய்தியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

கருந்துளையைக் கண்டுகொள்வது சாத்தியமே இல்லாதது. காரணம் அதன் பெயரிலேயே இருக்கிறது. அதன் கருமை நிறத்தினால் அதைக் காண்பதில் பெரும் சிரமம் உண்டு. அதன் வெளிப்பகுதியான நிகழ்வு எல்லையின் (Event Horizone) சுழற்சியினாலும், பேரீர்ப்பினால் உள்நுழையும் பொருட்களின் ஒளிவளைவுச் சிதறல்களாலும், ஹாக்ங் ரேடியேசனினாலும் ஏற்படும் அண்டவெளிச் சலனங்களைக் கணக்கில் கொண்டு, கருந்துளைகளின் இருப்பை இதுவரை புரிந்து வந்திருக்கிறோம். ஆனால், இப்போது அதன் நிஜமான படத்தை எடுத்திருக்கிறோம்.

2017ம் ஆண்டு உலக வானியல் இயற்பியலாளர்கள் ஒன்று சேர்ந்து, நம் பூமியளவு பெரிய தொலைநோக்கிக் கருவியின்றை உருவாகியுள்ளனர். என்ன நம்ப முடியவில்லையா?

MIT Haystack observatory ஐத் தலையிடமாகக் கொண்டு, இந்த உலகளவுள்ள தொலைநோக்கி இயங்குகிறது. பூமி முழுவதுமுள்ள ரேடியோ தொலைநோக்கிக் கருவிகள்மூலம் ஒரு குறித்த இடத்திலிருந்து வரும் தரவுகளைக் கிரகித்து, பூமியளவு பெரிய ஆண்டெனா டிஷ் போலத் தொழிற்படும் அதிசயத் தொலைநோக்கிக் கருவி அது. அதற்கு ‘Event Horizon Telescope’ (EHT) என்று பெயரிட்டிருக்கின்றனர். அதன்மூலமே கருந்துளையின் முதலாவது படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதுசரி, 2017 இலேயே ஆரம்பித்த இந்தத் திட்டத்தின் மூலம் கருந்துளையின் படத்தைப்பெற ஏன் இவ்வளவு நாட்களாயிற்று?

காரணம், தரவுகளைப்பெற்று அவற்றை ஒன்று சேர்க்க இவ்வளவு நாட்களாயிற்று. உலகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு தொலைநோக்கியும் செக்கனுக்கு 60 கிகாபிட் தரவுகளைப் பெற்றுக்கொள்கிறது. அவை அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். அவற்றை ஒன்று சேர்க்கவே பல மாதங்கள் பிடித்தன. அதன் பின்னர் சேகரித்த தகவல்களின் மூலம், கருந்துளையின் படத்தைப் பெற்றுக்கொள்ளவும் நீண்ட காலம் தேவைப்பட்டன.

Event Horizon தொலைநோக்கி, அண்டத்தின் முக்கிய இரு இடங்களைத் தனது குறிக்கோளாகக் கொண்டு உற்று நோக்கியது. ‘சஜிட்டாரியஸ் A’ ( Sagittarius A) நட்சத்திரத்தினூடாகத் தெரியும் பால்வெளிமண்டலத்தின் இராட்சதக் கருந்துளை ஒன்று. மற்றது M87 என்று அழைக்கப்படும் இன்னுமொரு காலக்ஸியான, ‘Messier 87’ உடுத்திரளின் மத்தியில் காணப்படும் மாபெரும் கருந்துளை. இரண்டாவது முன்னதைவிடப் பல மடங்குகள் பெரிய கருந்துளையாகும். இவையிரண்டில், நம் காலக்ஸியின் கருந்துளைப் படமே இப்போது கிடைத்திருக்கிறது. அத்துடன் கூட ஒரு சின்ன ஏமாற்றமும்.

‘இன்டெர்ஸ்டெல்லார்’ (Interstellar) திரைப்படம் மூலம், வானியல் இயற்பியலாளரான ‘கிப் தோர்ன் ’ (Kip Thorne) உருவமைத்து முன்வைத்த கோளவடிவக் கருந்துளையை, அதன் உருவமாக ஏற்றிருந்தோம். ஆனால், தற்போது கிடைத்த தரவுகளில் அப்படியானதொரு வடிவம் கிடைக்கவில்லை. இது சின்னதாக ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனாலும், இதையே முடிந்த முடிவாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. M87 இன் கருந்துளை மூலம் வேறு விதமான படம் கிடைக்கலாமென்று காத்திருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், நிஜமான அச்சு அசலான கருந்துளையின் படம் நமக்குக் கிடைக்க இன்னும் சில வருடங்கள் நாம் காத்திருக்கத்தான் வேண்டும். அந்த அதிர்ஸ்டத்தை இப்போதிருக்கும் இளைஞர்களும், குழந்தைகளும் பெற்றுக் கொள்வார்கள்.