FEATUREDNewsPoliticsTOP STORIES

தீர்ப்புகளைப் புரிந்து கொள்வோம்

Spread the love

தீர்ப்புகளைப் புரிந்து கொள்வோம்!

—–உ.வாசுகி

ஆதார் கட்டாயம், தன்பாலின உறவு குற்றம்அல்ல, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் போகலாம், திருமணம் தாண்டிய உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல போன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அண்மைக் காலத்தில்வெளியாகியுள்ளன. இவற்றில் ஆதார் குறித்த தீர்ப்பு தான் மக்களின் வாழ்வுரிமைக்கும், தனியுரிமைக்கும் எதிரானது. ஆனால் சமூக ஊடகங்களோ, பொது விவாதங்களோ இத்தீர்ப்பு குறித்ததாக அதிகம் வரவில்லை. மற்றமூன்றும் சூடாக விவாதிக்கப்படுகின்றன. இவை குறித்துதெளிவு பெறவேண்டியிருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இபிகோ 377

இயற்கைக்கு மாறான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றம் என்று இபிகோ 377 வரையறுத்திருக்கிறது. இது பிரிட்டிஷ் காலத்தில் 1861ல் இருந்த சட்டத்தில் இடம் பெற்றிருந்த பிரிவாகும்.‘‘இயற்கைக்கு மாறாக தன்சொந்த விருப்பத்தின்அடிப்படையில் ஆண், பெண், மிருகத்துடன்பாலியல் உறவு வைக்கும் எவரொருவரும் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை அனுபவிப்பது” என்று 377 கூறுகிறது. தன்பாலின உறவாளர்கள் இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். இதை ரத்து செய்ததன் மூலம் தன்பாலின உறவு குற்றமல்ல என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகவெளிவந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கோரி வந்தது. எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைக்கு இதுதடையாக இருந்தது என்று முன்வைத்தது. ஐநா சபை,தன்பாலின உறவைத் தடை செய்வது சர்வதேச சட்டங்களை மீறுவதாகும், இச்சட்டங்களுக்கு ஏற்கனவே இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறது. பியுசிஎல் அமைப்பு, பாலின சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து இரண்டு அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறது. 2008ல் மும்பை உயர்நீதிமன்றம் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுகூறியது. 2009ல் தில்லி உயர்நீதிமன்றம், பெரும்பான்மைசமூகத்திலிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களை விலக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை, பாகுபாடற்ற கண்ணியமான வாழ்க்கைவாழ அனைவருக்கும் உரிமை உண்டு, பாகுபாடு என்பதேசமத்துவத்துக்கு எதிர்மறையானது என்று கூறி, தன்பாலினஉறவை அங்கீகரித்தது.இத்தீர்ப்பைக் கேள்விக்குரியதாகவும், நகைப்புக்குரியதாகவும் பலர் எண்ணுகின்றனர். சிலர் இதை வக்கிரம்என்று முகம் சுளிக்கின்றனர். ஆனால் தன்பாலின ஈர்ப்புஉடல்/உணர்வு ரீதியானது, எனவே இதைக் குற்றமாக்குவது ஒரு தனி நபரின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஈர்ப்பு ஏற்படுவதைப் போல சிலருக்குத் தன் பாலினம் நோக்கிய ஈர்ப்பு உருவாகும். பாலினஈர்ப்பு யார் யாருக்கிடையே இருக்க வேண்டும் என்றுபெரும்பான்மை சமூகத்துக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. அதற்கு மாறுபட்டதாக இருப்பதாலேயே இது குற்றமாகக் கருதப் பட்டது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுரேஷ் கவுஷல் வழக்கில் தன்பாலின உறவு குற்றம் என்ற 2013 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை,இந்தத் தீர்ப்பு ரத்து செய்கிறது. எல்ஜிபிடிகியு (LGBTQ) என்ற இந்த சமூகத்தினருக்கு மற்றவர்களைப் போலவே அரசியல் சாசனம் சம உரிமைகளை அளித்திருக்கிறது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமூகம் இவர்களுக்கு இதுகாறும் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று ஒரு நீதிபதி பதிவு செய்திருக்கிறார்.பெண் மீது பெண்ணுக்கு ஈர்ப்பு, ஆண் மீது ஆணுக்குஈர்ப்பு, பெண்ணுக்கோ ஆணுக்கோ தன் பாலினம் மீதும்எதிர் பாலினம் மீதும் ஈர்ப்பு, திருநங்கையர், இவற்றுக்குள் ஒன்று அல்லது கூடுதலான வகையில் இருப்போர் என்றுபல பிரிவுகள் எல்ஜிபிடிகியு சமூகத்துக்குள் உண்டு.நீதிபதி சந்திரசூட், தன்பாலின சேர்க்கையைக் குற்றப்பட்டியலில் இருந்து அகற்றுவது என்பது முதல் கட்டம்தான், இச்சமூகத்தினருக்கு இதர அரசியல் சாசன உரிமைகளையும் அளித்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசு இத்தீர்ப்பைப் பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும்,காவல்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இச்சமூகத்தினர் தங்களுக்குள் திருமணம் செய்வது,இணையர் என்கிற அந்தஸ்து பெறுவது, குழந்தை தத்தெடுக்கும் உரிமை, சொத்துரிமை , செயற்கை முறையில் கருத்தரித்தல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வேண்டும் என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இவை படிப்படியாக இவர்களுக்குக் கிடைக்கக் கூடும். பாலியல் தேர்வு அல்லது சார்பு (ளநஒரயட டிசநைவேயவiடிn)என்பது சட்டத்துக்கு உட்பட்டு, வயது வந்த இருவர் பரஸ்பரம் சம்மதித்து எடுக்கும் முடிவு. பெரும்பான்மை சமூகம் ஒரு குறிப்பிட்ட வகையான தேர்வை செய்வதனாலேயே, அனைவரும் அதைத் தான் செய்ய வேண்டும்என்று எதிர்பார்க்க முடியாது. அதே போல் அனைவரும்எல்ஜிபிடிகியு (LGBTQ) சமூகமாகி விட வேண்டும் என்றபொருளும் இத்தீர்ப்பில் இல்லை.

இச்சமூகத்தினரைக்கிரிமினல்களாகப் பார்க்கக் கூடாது என்பது தான்சாராம்சம். உலகின் பல்வேறு நாடுகளில் இது அங்கீகரிக்கப்படுகிறது. 18 வயதுக்குட்பட்டவர்களுடனோ அல்லதுவயது வந்தவருடன் அவரது சம்மதமின்றியோ செய்தால்பாலியல் வல்லுறவு என்ற அடிப்படையில் குற்றம். ரத்த சொந்தங்களுக்கிடையே நடந்தால் அது inஉநளவ என்ற குற்றம்.இவையெல்லாம் இதர சட்டங்களின் அடிப்படையில் குற்றங்களாகவே தொடர்கின்றன. இத்தீர்ப்பு இவற்றை மாற்றிஅமைக்கவில்லை.தற்போதைய தீர்ப்பு, “பாலியல் தேர்வின் அடிப்படையில் பாகுபாடு என்பது தனிப்பட்ட நபரின் கண்ணியத்துக்கும், சுய மதிப்புக்கும் ஊறு விளைவிப்பதாகும். ஒவ்வொரு மனிதரின் பாலியல் சார்பும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.விடுதலை மற்றும் சுதந்திரத்தின் கூறுகளில் இதுவும் உண்டு” எனக் குறிப்பிட்டிருக்கிறது. அந்தப் பரந்த பார்வையுடன் இப்பிரச்சனையை அணுக வேண்டும்.

இபிகோ 497

திருமணம் தாண்டிய உறவு (யனரடவநசல) தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புபரவலாகத் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இபிகோ 497 என்ன வரையறுத்தது? “திருமணமானஒரு பெண்ணுடன் அவளது கணவரின் இசைவு இல்லாமல்உறவு வைத்தால், அது பாலியல் வல்லுறவாக இல்லாத பட்சத்தில், அடல்டரி என்ற குற்றமாகக் கருதப்படும். 5ஆண்டுகள் வரை தண்டனையும், அபராதமும் தவறு செய்த ஆணுக்கு விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண்,இதற்குத்துணை போனார் என்று அவரின் மீது நடவடிக்கைஎடுக்க முடியாது.” இச்சட்டப்படி கணவரின் இசைவுஇருந்தால் இது குற்றமல்ல, அதே போல் திருமணமாகாத பெண்ணுடன் தொடர்பு வைத்தாலும் குற்றமல்ல. வழக்கு யார் போட முடியும் என்றால், பெண்ணின் கணவர்தான் போடமுடியும். தவறு செய்த ஆணின் மனைவி அவர் மீது போட முடியாது. இந்தப் பிரிவும் 158 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. திருமணம் தாண்டியஉறவுகளில் சிலவற்றைத் தேர்வு செய்து அவற்றை மட்டும் கிரிமினல் குற்றம் என்று கூறுகிற பிரிவு இது.இப்பிரிவின் நோக்கம் திருமணம் தாண்டிய அனைத்துஉறவுகளையும் தண்டிப்பது என்றால் மேற்கூறிய பாகுபாடுகள் இருந்திருக்க முடியாது. கணவரின் இசைவு இருந்தால்குற்றமல்ல என்பதும், திருமணம் ஆகாத பெண்ணுடன் தொடர்பு வைத்தால் குற்றமல்ல என்பதும், குற்றம் செய்தகணவர் மீது அவர் மனைவி வழக்கு தொடுக்க முடியாதுஎன்பதும் … மனைவி கணவனின் உடமை என்பதை மையப்படுத்தியே இருக்கிறது. இது குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவராக ஆணை மட்டுமே வைக்கிறது. இச்சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு குறிப்பிட்டிருக்கிறது. நீதிபதி சந்திரசூட், “இச்சட்டம், பெண்ணை ஆணின் உடமையாக்கி, பெண்ணின் கண்ணியத்தையும், சுய மரியாதையையும் தகர்க்கிறது” என்றும்,தலைமை நீதிபதி ‘‘கணவன், மனைவியின் எஜமானன் அல்ல” என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா, “பிரிவு 497 அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. ஆனால் அது ஒரு தார்மீக குற்றம்” என்று கூறியிருக்கிறார்.இச்சட்டத்தை ரத்து செய்து விட்டால் நியாயம் கிடைத்துவிடுமா என்ற கேள்வி எழும். திருமணம் தாண்டிய உறவுஎன்பதை விவாகரத்துக்கான காரணமாகப் பயன்படுத்தலாம். அதாவது இப்படிப்பட்ட கணவனுடன் அல்லது மனைவியுடன் திருமண உறவு வேண்டியதில்லை என்றுமுடிவெடுக்க தீர்ப்பு இடம் கொடுக்கிறது. இணையர் இத்தவறை செய்ததால் மற்றவர் தற்கொலை செய்துகொண்டால், தகுந்த சாட்சியம் இருந்தால், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு தொடுக்க முடியும். எனவே,இது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமல்ல, இது தனி நபர்களுக்கிடையே நடக்கும் சிவில் பிரச்சனை, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் சிவில் நிவாரணம்தேட வழி இருக்கிறது என்பதே தீர்ப்பின் சாராம்சம்.இத்தீர்ப்பை வரவேற்பவர்கள், ஏதோ சமூகம் தறிகெட்டு ஓடுவதை ஆதரிப்பவர்கள் என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. எந்த உறவிலும் நேர்மை (iவேநபசவைல) இருக்க வேண்டும். ஏமாற்றையும், துரோகத்தையும் நிச்சயம் நாம் அங்கீகரிப்பது கிடையாது. திருமணம்தாண்டிய உறவை ஆதரிப்பதும் கிடையாது. அது கிரிமினல்பிரச்சனையா, சிவில் பிரச்சனையா என்ற கேள்விக்கு, சிவில் பிரச்சனை என்று நீதிமன்றம் விளக்கியிருக்கிறது.இணையர் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டால், துரோகம் செய்தால் விவாகரத்து செய்ய உரிமை இருக்கிறது. குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின்கீழ், இதை மன ரீதியான வன்முறை என்று மனைவி கூற முடியும், அதற்கான அனைத்து வித நிவாரணங்களும் பெற முடியும், உடல்/மனரீதியான உளைச்சல் என்றஅடிப்படையில் இபிகோ 498 ஏ பிரிவைப் பயன்படுத்தித் தண்டனை வாங்கித் தர முடியும். எனவே இத்தீர்ப்பு திருமணம் தாண்டிய உறவை அங்கீகரிக்கிறது என்றோ, ஊக்கப்படுத்துகிறதுஎன்றோ பொருள் கொள்ள முடியாது.

சபரிமலை தீர்ப்பு

10-50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைஅய்யப்பன் கோயிலுக்குள் வரக் கூடாது என்றுஅக்கோயிலின் விதி முறைகள் ஏற்கனவே இருந்தன.தற்போது, போகலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம்வழங்கியிருக்கிறது. மாதவிலக்கு சமயத்தில் போனால்அது ‘தீட்டு’ என்றும், அது விலங்குகளின் தாக்குதலுக்குவழி வகுக்கும் என்றும் காரணங்கள் கூறப்பட்டன. காலம்காலமாகக் காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும்பழங்குடியின பெண்கள் இதனால் வனவிலங்குகளின்தாக்குதல்களுக்கு இரையானார்கள் என்று சொல்லமுடியுமா? மேலும் பெண்ணுக்கு இது இயற்கை,ஆரோக்கியத்தின் வெளிப்பாடு, இன விருத்திக்கானஏற்பாடு. இதைத் தீட்டு என்று சொல்வது வேடிக்கைதான். தீட்டுக்கு எதிர்ப்பதம் தூய்மை. அப்படியானால்பூப்படையாமல் இருப்பது, மாத விலக்கு இல்லாமல்இருப்பது தூய்மை என்று சொல்ல வருகிறார்களா? அப்போது மட்டும் உடல் கோளாறு என்று மருத்துவர்களிடம் தானே போகிறோம்? சரி, இது தீட்டு என்றால்,அது இல்லாத இதர 27 நாட்களில் வர என்ன தடை? உடல்ரீதியான காரணங்களுக்காக பெண்களுக்கு வழிபாட்டு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கும், பெண்ணின் கவுரவத்துக்கும் எதிரானது, மரபு சார் நடவடிக்கைகள், மத நம்பிக்கை என்று சொல்லி அரசியல் சாசனத்தின் கோட்பாடுகளை சீர்குலைப்பதை ஏற்க முடியாது,பெண்கள் வரக்கூடாது என்று கூறுவது மதம் சார்ந்த நடைமுறையின் அத்தியாவசிய அம்சம் அல்ல என்று நீதிபதிகள்குறிப்பிட்டிருக்கின்றனர். பொது இடத்தில் வழிபடும் உரிமைபெண்ணுக்கும் உண்டு.

சமத்துவத்தை மறுக்க மதத்தைஒரு திரையாகப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம்கூறுகிறது. இத்தீர்ப்பு அனைத்துப் பெண்களையும் சபரிமலை போக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. போகும்உரிமை இருக்கிறது, போகிறவர்கள் தடுக்கப்படக் கூடாதுஎன்று சொல்கிறது. இத்தீர்ப்பு வந்து விட்டதாலேயே மதவிதிகளை மீறி பெண்கள் வரிசையில் நின்று சபரிமலைக்குப் போய் விடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. போகவிரும்புகிறவர்கள் போகட்டுமே! ஒரு தலை பட்சமாக செய்யப்படும் முத்தலாக் விஷயம் அரசியல் சாசனத்தின்சமத்துவ கோட்பாட்டுக்கு முரணானது என்ற வாதங்கள்இதற்கும் பொருந்தும்.வழக்கு நடக்கும் போதே கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, பெண்கள் போகலாம் என்று தான்நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் தாக்கல் செய்தது. பாலின சமத்துவம் என்பது இடதுசாரிகளின் சித்தாந்த ரீதியானநிலைபாடு. இப்போது தீர்ப்பு வந்த பின்னணியில் அதனைநிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறது. போகிற பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை விவாதித்துக் கொண்டிருக்கிறது. அண்டை மாநிலங்கள் பெண் காவலர்களை அச்சமயத்தில் கொடுத்து உதவ வேண்டும்என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அகில இந்திய தலைமைகள் இத்தீர்ப்பை வரவேற்றன. ஆனால் கேரளாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அம்மாநில காங்கிரசும், பாஜகவும் ரகளை செய்து கொண்டிருக்கின்றன. அரசு, மறு சீராய்வு மனு போட வேண்டும் என்று வற்புறுத்தி அரசியல் ஆதாயம் தேடமுயற்சித்து வருகின்றன. சபரிமலை மட்டுமல்ல, மகாராஷ்டிராவில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சனிக்கோவில் மற்றும் ஒரு தர்கா ஆகியவற்றுக்குள்ளும் பெண்கள் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதர மதங்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும் இதைக் கோருவீர்களா என்ற கேள்விகள் வருகின்றன. ஏற்கனவே முத்தலாக், மத நடைமுறை சார்ந்த விஷயம்என்பதை நீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வு ஏற்கவில்லை. அது செல்லுபடியாகாது என்று தான் தீர்ப்பளித்தது. மார்க்சிஸ்ட் கட்சி அப்போதும் வரவேற்றது. பார்ஸி இன பெண்கள் வேறு மதம் சார்ந்தவர்களைத் திருமணம் செய்தால், அவர்களின் நெருப்பு கோயிலுக்குள்போக அனுமதி கிடையாது என்ற விதியை எதிர்த்து தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கிறித்துவ மதத்தில் கணவன் விவாகரத்து கோர வேண்டுமானால், மனைவி திருமணம் தாண்டிய உறவு வைத்திருந்தார் என்பதே போதும். ஆனால் மனைவியைப் பொறுத்தவரை, கணவன் தவறான நடத்தை என்பதோடு தன்னைசித்ரவதை செய்தார் என்பதையும் சேர்த்து நிரூபிக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஜனநாயக மாதர் சங்கம்உள்ளிட்ட பெண்கள் இயக்கங்கள் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.

நீதிபதி சந்திரசூட்‘இச்சட்டம், பெண்ணை ஆணின் உடமையாக்கி, பெண்ணின் கண்ணியத்தையும், சுய மரியாதையையும் தகர்க்கிறது’ என்றும், தலைமை நீதிபதி ‘கணவன், மனைவியின் எஜமானன் அல்ல’ என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா, ‘பிரிவு 497 அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. ஆனால் அது ஒரு தார்மீக குற்றம்’ என்று கூறியிருக்கிறார்.

உடல்ரீதியான காரணங்களுக்காக பெண்களுக்கு வழிபாட்டு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கும், பெண்ணின் கவுரவத்துக்கும் எதிரானது, மரபு சார் நடவடிக்கைகள், மத நம்பிக்கை என்று சொல்லி அரசியல் சாசனத்தின் கோட்பாடுகளை சீர்குலைப்பதை ஏற்க முடியாது, பெண்கள் வரக்கூடாது என்று கூறுவது மதம் சார்ந்த நடைமுறையின் அத்தியாவசிய அம்சம் அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கின்றனர். பொது இடத்தில் வழிபடும் உரிமை பெண்ணுக்கும் உண்டு. சமத்துவத்தை மறுக்க மதத்தை ஒரு திரையாகப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறுகிறது.

கட்டுரையாளர் : அகில இந்திய துணைத் தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்