GeneralLatestNewsSocialmediaTOP STORIES

திட்டமிட்டது 50 ஆயிரம் சேர்ந்தது 2 லட்சம்

Spread the love

திட்டமிட்டது 50 ஆயிரம் சேர்ந்தது ரூ. 2 லட்சம்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தோழமை சேவை மையத்தின் நிர்வாக குழு கூட்டம் புதன்கிழமை இரவு கூடியது.

இதில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

தோழமையில் இருந்து கணிசமான நிதியும், நிர்வாக குழு உறுப்பினர்கள் அளித்த நிதியும் உடனடியாக வசூலானது.

ஞாயிற்றுக்கிழமை பொருள்களை அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையில் “ஞாயிற்றுக்கிழமை வரை ஏன் காத்திருக்க வேண்டும் 15 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பி பாரதி கண்ணன் தலைமையிலான தன்னார்வக் குழு நண்பர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டி
கொண்டிருக்கிறார்கள்.
அவர்களோடு இணைந்து இன்று இரவே பொருட்களை அனுப்பலாம்” என தோழமையின் துணைச்செயலாளர் கண்ணன் ஆலோசனை தெரிவிக்க
பொருள் சேகரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தன்னார்வக் குழு நண்பர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருள்களை பல்வேறு பகுதியிலிருந்து சேகரித்து வர இறுதியில் தேர்ந்தது
சுமார் 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்.

சேகரித்த பொருள்கள் எல்லாம் தோழமை சேவை மையத்தில் குடும்பத்துக்கு தேவையான வகையில் தனித்தனியாக பார்சல் செய்யப்பட்டு அனுப்புவதற்கு ஆயத்தமானது.

பகல் முழுவதும் நிவாரணப் பொருள்கள் திரட்டுவதில் தீவிரம் காட்டிய
தன்னார்வ குழு நண்பர்களான பாரதி கண்ணன், கார்த்திக் குமார், அருள்ஜோதி, ஷியாம்சுந்தர், தனசேகர் ஜெயராஜ் ஆகிய இளம் தோழர்கள் களைப்பை பற்றி கவலைப்படாமல் அன்று இரவே நிவாரணப் பொருள்களோடு திருவாரூர் நோக்கி புறப்பட்டு சென்றனர்.

ஏதோ ஒரு பகுதிக்கு கொடுத்துவிட்டு வந்தோம் என்றில்லாமல் நிவாரண பொருட்கள் சென்று சேராத கிராமங்கள் எது என்று விசாரித்து அறிந்து அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து எல்லைப் பகுதிக்கு வரச் சொல்லி இருந்தனர்.

இவர்கள் நினைத்தது போலவே திருவாரூர் பகுதிக்குச் சென்ற பொழுது பிரதான பகுதியில் இருந்தவர்கள், நிவாரண பொருட்களை ஏற்கனவே பெற்றவர்கள் எல்லோரும் வாகனத்தை வழிமறித்து பொருள்களை வழங்கக்கோரி வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் அந்த இடையூறுகளை தாண்டி அவர்களிடமிருந்து தப்பித்து நிவாரண பொருள்களே சென்று சேராத ராயநல்லூர், கோட்டூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பொருள்களை வழங்கிவிட்டு திரும்பியுள்ளனர்.

நிவாரணப் பொருள்களே கிடைக்காத அந்தப் பகுதி மக்கள் இவர்களின் வாகனத்தை கண்டவுடன் ஆனந்த கண்ணீரோடு வரவேற்றுள்ளனர்.

பொருள்கள் வழங்க வேண்டும் என்பது மட்டுமே நமது நோக்கம் என்று எண்ணம் கொண்ட இளைஞர்கள் பொருள்களை மக்களுக்கு வழங்குவது போல் போட்டோ கூட எடுக்காமல் அவர்களுக்கு பொருள்களை சீக்கிரம் வழங்க வேண்டும் என்பதிலேயே முனைப்புக் காட்டி உள்ளது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

அதேபோல் தோழமை சேவை மைய நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் சுகுமார், கண்ணன், பரணிதரன், அர்ஜுனன், சீனிவாசன், மூர்த்தி ராமமூர்த்தி அருணாச்சலம், பிரேமா பரணிதரன் ஆகியோர் நிவாரணப் பொருள்களை திரட்டியது, பேக்கிங் செய்து செய்தது என முனைப்பாக செயல்பட்டார்கள்.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

நாங்கள் கேட்காத நிலையிலும்
அடுத்த சுற்றுக்கான வசூல் நடந்துகொண்டிருக்கிறது.

மீண்டும் செல்வோம் டெல்டா மாவட்டம் நோக்கி….
ரகுகுமார் இ