FEATUREDLatestஅறிவியல்

சூரியனின் சின்ன வீடு 2021 PH27

Spread the love

சின்ன வீடு

சூரியனைச் சுற்றிவரும் கோள்களுக்கெல்லாம் சந்திரன்கள் இருக்கின்றன. கண்ணான கண்ணேயென்று, பூமிக்கு ஒரேயொரு சந்திரன். செவ்வாய்க்கு 2, வியாழனுக்கு 79, சனிக்கு 82 (அம்மாடியோவ்), யூரேனஸுக்கு 27, நெப்டியூனுக்கு 14 என்னும் எண்ணிக்கைகளில் சந்திரன்கள் இருக்கின்றன. வெள்ளிக்கும், புதனுக்கும் மட்டும் இல்லை. ஆனால் இவை இரண்டிற்கும் ஒரு சிறப்புண்டு. சூரியனுக்கு மிக அருகில் இருப்பவை. அதனாலேயே சந்திரன்களும் இல்லை. ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனியே சந்திரன் இருப்பதுபோல, சூரியனுக்குச் சந்திரன்கள் இருக்கின்றனவா? இது என்ன முட்டாள்தனமான கேள்வி. சூரியனின் சந்திரன்கள்தானே கோள்கள்.

கோளைச் சுற்றினால் சந்திரன். சூரியனைச் சுற்றினால் கோள். வெரி சிம்பிள். ஆனால், கோள்கள் மட்டுமே சூரியனைச் சுற்றுவதில்லை. புளூட்டோ மற்றும், ‘சீரிஸ்’ (Ceres), ‘மேக்மேக்’ (Makemake), ‘ஹௌமே’ (Haumea), ‘ஈரிஸ்’ (Eris) போன்ற குள்ளக் கோள்களும் (Dwarf Planets), இலட்சக் கணக்கான விண்கற்களும் (Kuiper belt இல் இருப்பவை) சூரியனையே சுற்றிவருகின்றன. இவை அனைத்தும் சூரியனுக்குச் சொந்தமானவை. ஆனாலும், சூரியனுக்கு மிக அருகில் முதல் காதலியாக அதனுடன் சேர்ந்து சுற்றுவது புதன்தான். அப்படித்தான் நாம் இதுவரை நம்பிவந்தோம். அந்த எண்ணத்திலும் கல் விழுந்துவிட்டது. விழுந்தது விண்கல்.

சிலே நாட்டில் அமைக்கப்பட்ட திறன்வாய்ந்த தொலைநோக்கிமூலம் ஆராய்ந்ததில், சூரியனுக்கு வெகு சமீபத்துக்குச் சென்று ஒரு விண்கல் (Asteroid) அதைச் சுற்றி வருவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் (இப்போ வந்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கித் தொடர் எப்போ வரும் என்று கமெண்டில் கேட்பீர்கள். அது அடுத்து வருகிறது). இந்த விண்கல் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவரும்போது, புதன் மற்றும் வெள்ளியை ஊடறுத்துச் சூரியனுக்கு மிக அருகில் சென்று திரும்புகிறது. சூரியனைச் சுற்றிவரப் புதனுக்கு 88 நாட்கள் எடுக்கின்றன. இந்த விண்கல்லோ, 113 நாட்களில் சூரியனைச் சுற்றுகிறது.

2021_PH27_orbit
2021_PH27_orbit

‘2021 PH27‘ என்று பெயரிடப்பட்ட விண்கல், ஒரு கிலோமீட்டர் பருமனுடையது. அதன் பெயரிலிருந்தே 2021ஆம் ஆண்டுதான் அதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுருப்பீர்கள். 13 ஆகஸ்ட் 2021 இல் அது கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனுக்கு 20 மில்லியன் கிலோமீட்டர் அருகே அது செல்கிறது. புதன் கோளோ, 58 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது.

என்ன இருந்தாலும், காதலிபோலப் புதனை வைத்துக்கொண்டு, இன்னுமொரு (ரொம்பச்)சின்னவீட்டைச் சூரியன் உசார் பண்ணியிருப்பது தப்புத்தான்.

போகப்போக இன்னும் என்னென்னவோ எல்லாம் கண்டுபிடிக்கப் போகிறோமோ?

-ராஜ்சிவா(ங்க்)

Leave a Reply