FEATUREDHealthLatest

சாதாரணமான மனிதர்கள் அன்றாடப்  பயன்பாட்டுக்கு மிதிவண்டி வாங்குவதற்கு சில குறிப்புகள்

Spread the love

சாதாரணமான மனிதர்கள் அன்றாடப்  பயன்பாட்டுக்கு மிதிவண்டி வாங்குவதற்கு சில குறிப்புகள்.

RS Prabu

நாள்தோறும் 5 – 15 கிலோமீட்டர் வரைக்கும் அருகிலுள்ள கடைகளுக்குச் சென்றுவர, அலுவலகம் செல்ல, நண்பர்களைச் சந்திக்க, தேநீர் பருக, குழந்தைகளை பள்ளி/சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்துச்செல்ல எந்த மாதிரி மிதிவண்டி வாங்குவது என்று பலருக்கு நிறையவே குழப்பம் இருக்கிறது.

நாம் எதற்கு மிதிவண்டி வாங்குகிறோம், நம்முடைய நோக்கம், பயன்பாடு என்ன என்பதை மட்டுமே இங்கு பார்ப்போம்.

நண்பர்கள் எல்லோரும் வைத்திருக்கிறார்கள், சமூக ஊடகங்களில் சைக்ளிங் என்று புகைப்படம் இடுபவர்கள் பலரும் பயன்படுத்துகிறார்கள் என்று விலை உயர்ந்த மிதிவண்டி ஒன்றை வாங்கிவிட்டுஇதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?’ என்று அதற்கு முட்டுக் கொடுப்பார்கள் தயவு செய்து மாற்றுப்பாதையில் பயணிக்கவும். அவை எல்லாமே Features, Benefits and Advantages என்று அந்தந்த கம்பெனிகளின் விளம்பர brochure-இல் அடித்துக் கொடுக்கப்பட்டவையே!

உடல் எடையைக் குறைப்பது என்பது ஒரு தீவிர இலக்கு. அதற்கு 80% உணவுமுறை, 20% உடற்பயிற்சி சார்ந்த ஒழுக்கம் மட்டுமே தேவை; சந்தையில் கிடைக்கும் expensive cycle அல்லது high end gym membership மூலம் மேஜிக் எதுவும் நடந்துவிடாது.

Healthy lifestyle என்று இன்ஸ்டாகிராமுக்காக வாழ்வது வேறு. அதற்கு 50000 ரூபாய்க்கு சைக்கிள், 20000 ரூபாய்க்கு ஜிம் சந்தா, 10000 ரூபாய் ஷூ என பலவும் தேவை. ஆனால் நன்றாக கவனித்துப் பார்த்தால் கட்டட வேலை செய்பவர்கள், பைப்லைன் குழி வெட்டுபவர்கள் நிச்சயமாக நடுத்தர, உயர்நடுத்தர வருவாய்ப் பிரிவினரை விட healthy lifestyle கொண்டவர்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பது ஓரு ஸ்விட்ச் போட்டால் நடப்பதல்ல. சைக்கிள், ஜிம், ஜாகிங், யோகா என்று ஏதாவது ஒன்றை ஆரம்பித்துவிட்டால் சமோசாவும், ஐஸ்கிரீமும் தினமும் சாப்பிடலாம் என்று ஆகிவிடாது.

மிதமான உடற்பயிற்சிக்காக, வேலைக்குச் சென்றுவர, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சுற்றிவர அன்றாடம் 5 – 10 கிலோமீட்டர் அளவில் சுற்றிவர சாதாரண BSA ladybird cycle போதுமானது. ஆண்களும் இதை ஓட்டலாம்; பெண்கள் சைக்கிளை ஓட்டினால் தலையில் உள்ள கிரீடம் எதுவும் சாலையில் விழுந்துவிடாது.

ஆறடிக்கும் உயரமாக உள்ள ஆண்கள் பழைய மாடல் ஹீரோ அல்லது ஹெர்குலஸ் சைக்கிள் வாங்கி ஓட்டலாம். முடிந்தால் நடுவில் உள்ள கம்பியில் மனைவி அல்லது தோழியை உட்கார வைத்து ஓட்டி வந்து கெத்து காட்டலாம். எதிரில் செல்பவர்கள்வாழறான்யாஎன்று கமென்ட் அடித்துவிட்டுச் செல்லக்கூடும்!

கியர் இல்லாத இந்த வகை மிதிவண்டிகளின் டயர் அகலம் குறைவு. பெட்ராக், ரால்கோ போன்ற நைலான் டயர்கள் எப்படியும் இரண்டு மூன்று ஆண்டுகள் உழைக்கும். காற்று அடிப்பதைத் தவிர பராமரிப்பு செலவு என்று எதுவும் கிடையாது.

அன்றாட casual use-க்கு MTB வகை மிதிவண்டிகள் ஆகவே ஆகாது. டயர்களின் அகலம் கூடுதலாக இருப்பின் தரையில் உராய்வு அதிகமாகும். இது ஓட்டுபவரை விரைவில் களைத்துப்போகச் செய்யும். ஆறு மாதத்தில் சலிப்படைந்து, எதற்குமே பயன்படாமல் அல்லது வாங்கிவிட்டோமே என்று வாரம் ஒருமுறை எடுக்கப்படும் பல மிதிவண்டிகள் இந்த வகையைச் சேர்ந்தவையே.

Resistance முக்கியம் என்பவர்கள் படத்தில் கடைசியில் உள்ள stationary cycle வாங்கி உட்கார்ந்த இடத்திலேயே ஓட்டலாம்.

இந்த மிதிவண்டிகள் எல்லாமே தோராயமாக 7000 ரூபாயில் புதியது கிடைக்கும். முன்னும், பின்னும் 3M எதிரொளிப்பான் பட்டையை (Retro Reflective Sticker) ஒட்டி வைத்துக்கொள்வது போதுமானது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மிதிவண்டியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். போக்குவரத்து அதிகமாக உள்ள நகரங்களை இணைக்கும் சாலைகளில் இரவு நேரங்களில் வருபவர்கள் தேவைப்பட்டால் flickering LED வைத்துக்கொள்ளலாம்.

விசாரித்துப் பார்த்தால் இதுபோன்ற மிதிவண்டிகள் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடமும் அருகிலுள்ள கடைக்காரர்களிடமும் நிறைய கிடக்கும். அதில் நமக்கு ஏற்ற ஒன்றை ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கி கொஞ்சம் பராமரிப்பு வேலைகள் பார்த்து வைத்துக்கொள்ளலாம்.

இருபது, முப்பது மரங்களை நட்டு சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவனாகக் காட்டிக்கொள்வதைக் காட்டிலும் பயன்படுத்தப்பட்ட ஒரு மிதிவண்டி, பைக் அல்லது கார் வாங்கி பராமரித்து ஓட்டுவது, அதன் lifecycle- நீட்டிப்பது பன்மடங்கு சுற்றுச்சூழலைக் காப்பாற்றக்கூடியது.

புதிய பொருள் ஒன்றை வாங்குவது நமக்கு affordable என்பது வேறு. ஆனால் அது உண்மையிலேயே தேவைதானா அல்லது நமது ஈகோவுக்குத் தீனி போட செய்யும் காரியமா, peer pressure-இல் செய்கிறோமா என்று தனிமையில் ஒருமுறை நிதானமாக யோசித்துப் பார்ப்பது நல்லது.

சைக்கிளை பைக் என்று செல்லும் நபர்களிடம் புதிதாக ஓட்ட ஆரம்பிப்பவர்கள் யோசனை கேட்பதைத் தவிர்ப்பது நலம்.

விலை குறைவான traditional model மிதிவண்டிகளில் ergonomics இருக்குமா, injury ஆகிவிடாதா என்று மண்டையைக் குழப்பிக்கொள்ள தேவையில்லை. நம் கிராமங்களில் பால்கார்கள், ஜஸ் விற்பவர்கள், பழைய இரும்பு வியாபாரத்துக்கு வருபவர்கள் எல்லாம் கிட்டத்தட்ட 100 கிலோ எடையுடன் அந்த சைக்கிளில்தான் பயணிக்கிறார்கள்.

நாம் ஓட்டும் பத்து, இருபது கிலோமீட்டர் தூரத்துக்கு உள்காயம் ஆகிவிடும் என்றால் மிதிவண்டி ஓட்டாமல் இருப்பதே நல்லது.

Jogging செல்ல ஆசைப்பட்டு ஷூ வாங்கி மைதானத்துக்குச் செல்பவர்களுக்கு வரும் முதல் சவால் என்பது வாரத்துக்கு நான்கு நாட்கள் முறையாக அங்கு செல்வது மட்டுமே. அதன்பின் மூன்று கிலோமீட்டர், ஐந்து கிலோமீட்டர் என்று மெல்லோட்டம் பழகி, பத்து கிலோமீட்டர் தூரத்தை நிற்காமல் கடந்தால் அது ஒரு பெரிய சாதனை. ஏதாவது ஒரு போட்டியில் கலந்துகொண்டு 5km அல்லது 10km  ஓடி புகைப்படம் எடுத்துக்கொள்வது மிகப்பெரிய சாதனை. பின்னர் சிலர் படிப்படியாக அரை மராத்தான் பயிற்சி எடுப்பார்கள், பலர் அப்படியே தேங்கி விடுவார்கள்.

ஆனால், மராத்தான் ஓடும் கோஷ்டி ஒன்று இருக்கும். தினசரி பயிற்சிக்கே 5 – 10 கிலோமீட்டர் ஓடுவார்கள். ஏதாவது உட்காயம் ஆகிவிட்டாலும் இரண்டு மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்துவிட்டு, மறுபடியும் மைதானத்துக்கு வந்து விடுவார்கள். பல வருட அனுபவத்தில் காயம் ஆகாமல் தவிர்ப்பது எப்படி, அப்படியே ஆகிவிட்டாலும் அதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்று கற்றிருப்பார்கள். தக்க நபர்களிடம் ஆலோசனை பெறத் தயங்க மாட்டார்கள்.

அவர்களைப் பார்த்து ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு ஷூ, டவுசர், பனியன் வாங்கிவிட்டால் மட்டும் போதாது. ஷூ தானாக ஓடாது!

மிதிவண்டி ஓட்டுவதற்கும் அதேதான். சைக்கிள் தானாக ஓடாது. முதலில் அதை தினசரி பழக்கமாக மாற்ற வேண்டும். சைக்கிளிங் பண்ணுகிறேன் என்று காலையிலும், மாலையிலும் அதைப்  பிடித்து உலுக்குவதைவிட, அது ஒரு இயல்பான பழக்கமாக வர வேண்டும்.

10-20 கிலோமீட்டர் வரை மிதிவண்டியில் இயங்குவது என்பது நமது அன்றாட நடவடிக்கையாக மாற வேண்டும். அதன்பின் ஐம்பது, நூறு கிலோமீட்டர் ஓட்டும் தொழில்முறை குழுக்களுடன் இணைந்து செல்லலாம். அதற்காக புதிய விலை உயர்ந்த மிதிவண்டி வாங்குவது worth spending. அப்படிப் பார்க்கப்போனால்  அதுவரைக்கும் எரிபொருள் செலவுக்கு மிச்சப்படுத்திய தொகையில் புதிய மிதிவண்டி வாங்கியதாகவே இருக்கும்.

ஏதாவது மிதிவண்டி தொடர்பான போட்டிகள், ட்ரையத்லான் போன்ற professional events-இல் கலந்து கொள்பவர்களைத் தவிர மற்றவர்கள் தவணை முறையில் மிதிவண்டி வாங்குவது முட்டாள்தனமே. கடன் கிடைக்கிறது என்பதற்காக ஊதாரித்தனமாக செலவு செய்வதை எப்படி முட்டுக் கொடுத்தாலும் நியாயப்படுத்த முடியாது.

சாதாரண மிதிவண்டி என்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூச்சப்படாமல் எடுத்துப்  பயன்படுத்துவார்கள். நண்பர்கள், உறவினர்கள் யாராவது எடுத்துச் சென்றுவிட்டு பத்து நளைக்குத் திருப்பி தரவில்லை என்றாலும்வச்சிருக்கானா, இல்ல உடைச்சு போட்டுட்டானான்னு தெரியலயேஎன்று மனதுக்குள் உழல வேண்டியதில்லை.

யாராவது ஓசி கேட்டால்இதுல எப்படி கியர் போடனும்னு தெரியுமா?’ என்று ஆரம்பிக்காமல் சாவியை மட்டும் கொடுத்துவிட்டு நம் வேலையைப் பார்க்கலாம்.

டிஸ்கவரி சேனல் புகழ் பியர் கிரில்ஸ் How to stay alive என்ற புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும்  சொல்லுவார். “Keep it simple, stupid. That will save your ass”.

மிதிவண்டி ஓட்டுவது சூப்பர் டூப்பர் சைன்ஸ், அரிய புதிய அபூர்வ ஹாபி எல்லாம் ஒன்றும் கிடையாது.  இதுக்குப்போயி போறவன், வர்றவன்கிட்டயெல்லாம் யோசனை கேட்டுகிட்டு இருக்காம, அதை சும்மா எடுத்து எடுத்து ஓட்டுங்கப்பா!!

 

RS Prabu

Leave a Reply