FEATUREDHealthLatest

கொரோனா ஞாயிறு

Spread the love

கொரோனா ’ஞாயிறு’: (மரு.விக்ரம்குமார்)

வாழ்க்கையில் முதன் முதலாக இப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமையை சந்திக்கப் போகிறோம்! வெளியிலும் சரி (தெருக்களில்) உள்ளுக்குள்ளும் (வீடு/மனதுக்குள்ளும்) சரி, சலசலப்பில்லாமல், நடமாட்டமில்லாமல் இருப்போமானால், அடுத்து வரும் நாட்களில் நம் அன்பு சகோதரர்களையும் சகோதரிகளையும் மிகப்பெரிய ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும்.

ஒரு மிகப்பெரிய ’நோய்க் காப்பை’ உருவாக்குவதற்கான வாய்ப்பு உங்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது. அடுத்தவர்களுக்காக இந்த ஞாயிறை வீட்டுக்குள்ளேயே செலவழிப்போம்! அவசர உலகத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் நாம் அடிக்கடி ஒரு ஓய்வான ஞாயிறு கிடைக்காதா என்று ஏங்கியிருப்போம் இல்லையா! அப்படியான ஞாயிறு கிடைத்திருக்கிறது!… பயன்படுதுவோமே!…

நம்மை நாமே ’தனிமைப்படுத்திக் கொள்ளல்’ நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யப் போகிறது! இப்போது ஒவ்வொருவரும் மனிதநேயமிக்க மருத்துவர்களே! பிறருக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க நீங்கள் காரணமாகப் போகிறீர்கள்! மிகப்பெரிய கொரோனா நோய்த்தொற்று சங்கிலியை சுட்டெரிக்கும் நெருப்பாக அனைவரும் மாறுவது மிகவும் அத்தியாவசியம்.

நம்பிக்கையோடு காலையில் கண் விழிப்போம்… செய்திகளை அவ்வப்போது கவனிப்போம்… வீட்டுக்குள் அமர்ந்து உறவுகளோடு நேரம் செலவழிப்போம்! கூட்டாக மகிழ்வோம்… தொலைக்காட்சிப் பெட்டி நிகழ்ச்சிகளை 80 90களில் கூட்டமாக அமர்ந்து ரசித்தது போல இப்போது ரசிப்போம்! கதை பேசுவோம்… நிறைய உரையாடுவோம்… சூழலைப் பற்றி சிந்திப்போம்… நிம்மதியாக உறங்குவோம்!… திங்கள் காலையில் நற்செய்தியை எதிர்ப்பார்ப்போம்!…

வாய்ப்பு இருப்பவர்கள் ஞாயிறு தனிமைப்படும் செயல்பாட்டினை கூடுதல் நாட்களுக்குத் தொடருங்கள்!… இப்போது தனிமைப்படுத்திக்கொள்வது பிறரிடமிருந்து நோய்ச் சங்கிலியை அறுக்க மற்றும் நம்மில் தொற்று இருப்பின் பிறருக்குப் பரவாமல் தடுப்பதற்காகவும் தான்!… நம்மால் ஏன் முடியாது?…

கொசுக்களை எதிரிகளாக பார்த்த நிலை மாறி, சக மனிதர்களை எதிரிகளாக பார்க்கும் நிலை அதிகரித்திருக்கிறது. ஆனால் இப்போதைய சூழலில் நமக்கு தேவை மனிதமும் ஆரோக்கியமான மன நிலையும் தான் அன்பர்களே!

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

Leave a Reply