FEATUREDLatestNature

கொரில்லாக்களுடன் ஓர் நாள் – வனங்களில் ஒரு தேடல்

Spread the love

முள்றியின் டைரி: 41 வனங்களில் ஒரு தேடல் 3 : கொரில்லாக்களுடன் ஓர் நாள்….

வெ.பாலமுரளி.

மலை கொரில்லாக்கள் ருவாண்டா , யுகாண்டா மற்றும் காங்கோவில்தான் வசிக்கின்றன.

நான் இதுவரை எராளமான முறை ருவாண்டா சென்றிருந்தாலும் கூட, இதுவரை கொரில்லாவைத் தேடும் மலையேற்றம் போனதில்லை.

நேரம் கிடைப்பதில்லை என்பது ஒரு காரணம் என்றாலும் கூட, கொரில்லாக்களை நாம் பார்க்க அனுமதிக்கும் ஒரு மணி நேரத்திற்கு அவர்கள் வசூலிக்கும் கட்டணம் கண்ணைக் கட்டுவதாக இருந்ததே முக்கியமான காரணம்.

இன்னொரு காரணம் உடல்நிலை . என்னுடைய இதயத்தில் ஸ்டண்ட் பொருத்திய டாக்டர், முடிந்த வரை மலையெல்லாம் ஏற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார். அவர் அப்படிச் சொல்லியபோது நான் வாய் விட்டு சிரித்தது இன்னும் ஞாபகத்தில் உள்ளது, நானாவது மலையேற்றம் போவதாவது என்று நக்கலாக.

‘அடுத்தடுத்த நொடிகளில் வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் அதிசயங்கள் எத்தனை எத்தனையோ’ என்று மதன் ஒரு வசனம் எழுதியிருப்பார், அன்பே சிவம் படத்தில். அதுபோல நான் 2106 இல் கொரில்லாக்களைத் தேடி ஒரு மலையேற்றம் செல்வேன் என்று இதற்கு முன்னால் கனவிலும் கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை.

‘இன்றைக்கு செத்தால், நாளைக்குப் பால்’ என்று விவேக் காமெடி ஒன்று உண்டு. அந்த இலக்கணப் படி , வருவது வரட்டும் என்று ருவாண்டாவில் ஒரு மலையேற்றம் செல்வது என்று சமீபத்தில் ( செப்டம்பர் 2016) முடிவெடுத்தேன் . லண்டனிலிருந்து நண்பர் ஒருவரும் சேர்ந்து கொள்ள ஜாலியாகக் கிளம்பி விட்டேன் ( செத்தால்தானே சுடுகாட்டிற்கு வழி தெரிகிறது) .

ருவாண்டாவின் தலைநகரமான கிகாலியிலிருந்து 2 மணி நேரம் பயணம் செய்து ஒரு சிறியகிராமத்தில் முதல் நாள் தங்க வைத்தார்கள். மறு நாள் காலை எரிமலை பார்க் எனப்படும் அந்த மலையின் அடிவாரத்தில் வைத்து குரூப் குரூப்பாகப் பிரித்தார்கள் . எங்களுக்கு ‘பாப்லா’ என்னும் கொரில்லாக் குடும்பம் ஒதுக்கப் பட்டது. 35 உறுப்பினர்கள் கொண்ட அந்த குடும்பத்தைத் தேடுவதுதான் அன்றைக்குத் தொழில் என்று சொல்லப்பட்டது ( கரெக்ட். இந்த வயதில் ‘ ஐ ஸ்பை’ விளையாட்டெல்லாம் கொஞ்சம் டூ மச்தான். என் செய்வது ? விதி வலியது.). மொத்தம் 3000 மீட்டர் ( 3 கி.மீ) மேலே செல்ல வேண்டும் என்றும் சொல்லப் பட்டது. அப்போதுதான் எனக்கு அந்த விளையாட்டின் தீவிரமே புரிந்தது (உங்களுக்கே தெரியும். எப்போவுமே நான் கொஞ்சம் லேட்டுதான்).

கெட்ட நேரத்திலும் நல்ல நேரம் போல் , அதில் 2 கி.மீ ஐ காரில் சென்றடைந்து அங்கு காரைப் பார்க் செய்து விட்டு, அங்கிருந்து 1 கி.மீ நடந்தால் போதும் என்று சொன்னவுடன் தான் எனக்குக் கொஞ்சம் மூச்சே வர ஆரம்பித்தது.

எங்கள் க்ரூப்பில் என்னையும் என் லண்டன் நண்பரையும் தவிர மற்ற எல்லோருமே அமெரிக்கா, கனடாவிலிருந்து வந்திருந்தனர். கிட்டத்தட்ட எல்லோருமே வயதானவர்கள். அவர்களைப் பார்த்ததும் எனக்குக் கொஞ்சம் தெம்பாக இருந்தது. அவர்களால் கண்டிப்பாக வேகமாக ஏற முடியாது, எனவே சும்மா ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு நின்று நின்று போய் விடலாம் என்று மன மில்க் குடித்தேன்.

காரைப் பார்க் பண்ணி விட்டு மலையேற ஆரம்பித்தோம்.

அங்கு போர்ட்டர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். என்னுடைய கேமரா பேக், ட்ரைப்பாட் எல்லாவற்றையும் அவர்களே எடுத்துக் கொண்டு எனக்கு முன்னால் நடக்க ஆரம்பித்தார்கள் ( அந்த லக்கேஜ் மட்டுமே 15 கிலோவுக்கும் மேல்) . முடிந்தவரை நிமிர்ந்து பார்க்க வேண்டாம் என்று எங்கள் கைடு சொன்னதையும் மீறி நிமிர்ந்து பார்க்க, லேசாகக் கண்ணைக் கட்டியது. மலை மிகவும் செங்குத்தாக இருந்தது. சில்வர்ஸ்டோன் நடித்த Cliff Hangers நடித்த படம் ஏனோ ஞாபகத்திற்கு வந்து கலவரத்தை இன்னும் கொஞ்சம் கூட்டியது. ஒரு பத்து மீட்டர் ஏறுவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தலை ஸ்லோ மோஷனில் சுற்ற ஆரம்பித்தது.

சரி …மற்ற மக்களைக் கூட்டு சேர்க்கலாம் என்று அவர்களைத் தேட, பக்கிகள் ரொம்ப வருடங்களாக மலை ஏறிப் பிராக்டீஸ் போலிருக்கு. சர சரவென்று ஏறி எங்கேயோ போய்க் கொண்டிருந்தார்கள் . வழக்கம் போல நாமதான் கடைசியா ????? வெளங்குச்சு….என்று என்னை நானே நொந்து கொண்டு ‘ இட்ட அடி நோக எழுந்த அடி கொப்புளிக்க’ என்று நம்ம கம்ப நாட்டான் சொன்னது போல, புதுப்பெண் மாதிரி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மேல் நோக்கி செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

சென்ற இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை வந்து சென்ற நிமோனியா, நுரையீரலில் விட்டுச் சென்ற காயங்கள் அப்போதுதான் ‘ நான் உள்ளேன் ஐயா’ என்று ஞாபகப் படுத்தியது. கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து ‘ ஆஞ்ஜைனா’ வும் நானும் உள்ளேன் ஐயா என்றது. நாம் தவறு செய்து விட்டேமோ என்று யோசிப்பதற்குள் 100 மீட்டர் கடந்திருந்தது.

சும்மா சொல்லக் கூடாது. கூட வந்த போர்ட்டர்கள் ஆபத்பாந்தவன்களாக ஓடி வந்தார்கள். கையில் உள்ள ஏராளமான லக்கேஜூடன் என்னையும் ஒரு லக்கேஜாகக் கருதி ஒருவன் என் கையைப் பிடித்து இழுக்க, இன்னொருவன் என் முதுகைப் பிடித்துத் தள்ள, ஜருகண்டி ஜருகண்டி என்று திருப்பதி க்யூவில் நகர்வது போல மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தேன்.

இது பத்தாது என்று ‘ கொரில்லாக்கள் பிரேக்ஃபாஸ்ட் முடிந்து தூங்கும் நேரம் நெருங்குகிறது. தூங்குவதற்குப் புதருக்குள் போய் விடும். வேகமாக வாருங்கள்’ என்று என் கைடு வேறு நெருக்கடி கொடுக்க நான் வெறுத்தே போய் விட்டேன் ( இவெய்ங்கெளுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதோ? )

அந்தா இந்தா என்று மலை உச்சியில் உள்ள பார்க்கின் சுற்றுப் புற வேலியை அடைந்தோம். அங்கே வனக்காவலர்கள் வந்து சேர்ந்து கொள்கிறார்கள். எல்லோர் கைகளிலும் மிகவும் நவீன வகைத் துப்பாக்கிகள். முதல்ல, கொரில்லா நம்மைத் தாக்க வந்தால் கொரில்லாவைச் சுடுவார்கள் போலிருக்கு என்று நினைத்தேன். ஆனால், உல்ட்டாவாம். நாம கொரில்லாவை ஏதேனும் செய்ய நினைத்தால் ,உடனே நம்மைச் சுட்டுருவாய்ங்கெளாம்.( நம்மகிட்ட்டேயே காசை வாங்கிக்கிட்டு, என்ன்ன்ன்ன்ன்ன ஒரு வில்லத்தனம்….?????) .

அவர்கள் கொடுத்த சில இன்ஸ்ட் ரக்‌ஷன்ஸ்:

1. முடிந்தவரை அவைகளின் கண்களை சந்திப்பதைத் தவிர்க்கவும் ( அது ஒண்ணும் பிரச்சினையில்லை. நாம வீட்டுலேயே அப்படித்தானே இருக்கோம்)

2. அவைகள் சினேக பாவத்துடன் உங்களுடன் வந்தாலும் , நீங்கள் விலகி விடுங்கள் ( நமக்கு புது ஃபேஸ்புக் ஃபிரெண்ட்ஸ் கிடைக்கப் போறாய்ங்கென்னு சந்தோஷமா இருந்தேன். அதுலேயும் மண்ணைப் போட்டுட்டாய்ங்கெ )

3 . சில சமயம் அவை ( நம்ம தாமரைக்கனி ஸ்டைலில்) உங்களை வந்து லேசாகத் தட்டலாம் (?????!!!!!). அப்படிச் செய்தால், நீங்கள் எந்தக் காரணம் கொண்டும் பதிலுக்கு அது போல செய்ய வேண்டாம் ( இவெய்ங்கெ காமெடிக்கு ஒரு அளவேயில்லை) .

4. திடீரென்று அவைகள் கோபம் கொண்டு உங்களைத் தாக்க வந்தால், உடனே தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்து விடவும். ( இதுவும் நமக்கு வீட்டில் பழகிப் போன ஒரு விஷயம்தான். ஸோ…நோ ப்ராப்ளம்). உடனே அவை ( பாவம் என்று எண்ணி) நம்மை ஒன்றும் பண்ணாமல் விட்டு விட்டுப் போய் விடும் ( அட….அவை நம்ம வீட்டம்மாவை விட பெட்டர் போலிருக்கே என்று உங்களுக்கு (ம்) தோன்றுகிறதா? )

அந்த இடத்தில், நமக்கு மிகவும் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் விட்டு விட்டு வரச் சொல்கிறார்கள். நம் பொருட்களைப் பார்த்துக் கொள்ள சில போர்ட்டர்கள் அங்கேயே இருந்து கொள்கிறார்கள்.

அப்போதுதான் நிஜமான ஒரு காட்டுக்குள் நாம் நுழைகிறோம். அது நாம் கென்யாவில் பார்க்கும் திறந்தவெளி காடுகள் மாதிரி கிடையாது. மூங்கில் மரங்களும், காட்டுச் செடிகளும் நிறைந்த அடர்ந்த காடு. நிறைய நிறையப் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன ( பாம்பும் இருக்குமோ ?). சமவெளி என்பதே சுத்தமாகக் கிடையாது. சில சமயம் நம்முடைய கால்கள் எக்குத் தப்பாக ஏதேனும் ஒரு குழிக்குள் போய் மாட்டிக் கொள்கிறது. செம த்ரில்லிங். நாம் தத்தக்காப்பித்தக்கா என்றுதான் நடக்க வேண்டியுள்ளது.

முன்னே சென்ற எங்கள் கைடு, ‘பாப்லா’ குடும்பத்து அங்கத்தினர் ஒருவரைப் பார்த்து எங்களுக்கு சிக்னல் செய்ய, நான் என் கேமராவைத் தயார் செய்யலாம் என்று முயற்சி செய்யும் நேரத்தில் ஒரு கால் மட்டும் எசகு பிசகாக மாட்டிக் கொள்ள , இன்னொரு கால் ஒரு பள்ளத்தில் போய் பதிக்க எங்க போயி ISO வை செட் பண்ண. குருட்டாம்போக்கில் தட தடவென்று க்ளிக்க ஆரம்பித்தேன். இந்த லட்சணத்தில் இரண்டு கேமராக்கள் வேறு. அந்தக் களேபரத்தில் மேலே மாட்டிக் கொண்ட காலை விடுவிக்கும் எண்ணத்தில் வெடுக்கென்று இழுக்க , ஒரு மாதிரி எசகு பிசகாக அந்தப் பள்ளத்தில் உருண்டேன். (வழக்கம் போல )அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கீழே விழுந்த மாதிரியே சில லோ ஆங்கிள் புகைப்படங்கள் வேறு எடுத்தேன் ( கையில கேமரா இருப்பதால் நம்மை யாரும் சந்தேகமே பட மாட்டாய்ங்கெ).

இதற்குள் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட நம்ம ஃபேமிலி மெம்பர்கள் எங்களுக்கு மிகவும் அருகில் நடமாடத் தொடங்கி விட்டார்கள். எல்லாமே நாம் தொடும் தூரத்தில். பயங்கர எக்சைட்டிங் ஆகி விட்டது. நானும் இரண்டு கேமராக்களிலும் மாற்றி மாற்றி சுட்டுத் தள்ளி விட்டேன். உடனே எங்கள் கைடு ‘சில்வர் பேக்.. சில்வர் பேக்’ என்று குரல் கொடுக்க , நான் அவசர அவசரமாக அந்த இடத்திற்குத். தாவினேன் ( ஹி…ஹி….ஹி….பழக்க தோஷம்) .

சில்வர் பேக் என்பவர்தான் குடும்பத் தலைவர். அவருக்கு 12 அல்லது 13 வயது ஆகும்போது முதுகில் ஒரு க்ரே கலரில் பட்டையாக ஒரு கோடு விழுகிறது. உடனே அவர் ‘பத்ம ஶ்ரீ’ என்பது போல ‘சில்வர் பேக்’ என்னும் பட்டத்தைப் பெறுகிறார். சீனியாரிட்டி படி அவர் பின்னாளில் குடுப்பத்தலைவர் அந்தஸ்தையும் பெறுகிறார். அங்கிருக்கும் பெண்கள் கூட்டத்தையும் அவரே பொறுப்புடன் ( !!!!!) பார்த்துக் கொள்கிறார்.

சரி மேட்டருக்கு வருவோம்.

கைடு குரல் கேட்டவுடன், நான் அங்கு செல்ல எத்தனிக்க மறுபடியும் பேலன்ஸ் தவறி அந்த சில்வர்பேக் முன்னாடியே போய் விழுந்தேன். முதலில் அவர் ஒன்றும் பெரிதாக என்னைக் கண்டு கொள்ளவில்லை ( நம்ம ஃபேமிலி மெம்பர்தானே என்று எண்ணியிருக்க வேண்டும்) . உடனே அவரைக் க்ளோஸப் ஷாட் சில எடுத்தேன். அப்போது என்னை யாரோ தட்டிக் கூப்பிடுவது போலத் தெரிய திரும்பிப் பார்த்தேன். டமாலென்று தூக்கிப் போட்டு விட்டது.

ஒரு 7 அல்லது 8 வயது இருக்கும் ஒரு (கொரில்லா) சிறுவன் என்னுடைய ஷூவைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு ஹார்ட் பீட் உச்சத்தில் எகிறியது. உடனே அவரை ஃபோட்டோ எடுப்பதா இல்லை கைடு சொன்னது போல தலையைக் குனிந்து அவரைக் கடந்து செல்ல விடுவதா என்ற குழப்பத்தில் இருக்கும்போது, ‘ உர்ர்ர்ர்ர்’ என்று உறுமல் ஓசை ஒன்று கேட்க, பக்கத்தில் இருந்த ‘சில்வர் பேக்’ என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ” ம்க்கும்…புள்ளையை ஒழுங்கா வளர்க்கத் தெரியலை, என்னையைப் பார்த்து முறைத்து என்ன பிரயோஜனம் ” என்று எனக்குள் நானே முணு முணுத்துக் கொண்டு, தலையைக் குனிந்து கொண்டு அந்தத் தகப்பனும் புள்ளையும் ஒதுங்கிச் செல்ல வழி கொடுத்தேன்.

அவையனைத்தும் அங்கிருந்த செடி கொடிகளைத் தின்று கொண்டே அருகில் இருந்த புதருக்குள் மறையத் தொடங்கின. அட….மிகவும் சரியாக ஒரு மணி நேரம் நமக்குத் தரிசனம் கொடுத்திருக்கின்றன. ஆச்சரியம். இதற்குள் மணியும் 12 ஆகி வெயில் தலை உச்சிக்கு நேரே வந்தது. திரும்ப ஆரம்பித்தோம்.

யூக்கலிப்டஸ், பச்சை, அதிமதுரம், துளசி, ஆடுதொடா என்று அந்தக் காடு முழுவதும் ஒரே முலிகை மயம். ஏராளமான அரிக்கும் வகைச் செடிகள் வேறு. நான் அந்த மாதிரி அடர்ந்த காட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறை. அட்டகாசமான அனுபவம்.

கீழே இறங்கிய பிறகுதான் தெரிந்தது, உடல் முழுக்க ஏராளமான விழுப்புண்கள். நம்ம தமிழ்ப் படங்களில் ஹீரோ ஒரே ஒரு தம்மாத்துண்டு பிளேடை வைத்துக் கொண்டு வில்லன் உடல் முழுக்க கோடு கோடாய் போடுவாரே, அது போல உடல் முழுக்க ஏராளமான கோடுகள்.

அவை கிளப்பிய வலிகளும் எரிச்சல்களும் அடங்க இரண்டு மூன்று நாட்கள் ஆகின.

இருந்தாலும், சுகமான வலிகள்.

வெ.பாலமுரளி.

Leave a Reply