FEATUREDFood

கொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு

Spread the love

கொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு
——————————————————
ஒருவாரம் பத்துநாளாய்ச் சளி இருமல் தொல்லை நம்மைப் பிடித்துக்கொண்டது. ”கோழிக் கொழம்பு வச்சுக் குடிப்பா”, என்றார் அம்மா. “விடுங்கம்மா, நான் பாத்துக்கறேன்”, என்று அவர் கவலையைத் தவிர்த்துவிட்டு அந்த யோசனையைப் பிடித்துக் கொண்டேன். உண்மையிற் சொல்லப் போனால், சென்ற வாரமே இவ்யோசனை நமக்குத் தோன்றியிருக்கத் தான் செய்தது. செயற்படுத்தத்தான் நேரம் வாய்க்கவில்லை.

அம்மாவின் கோழிக் குழம்பு அருஞ்சுவையாய் இருக்கும். மல்லித்தூள், மசாலா வகையறா சற்று, மிகச்சற்று, தூக்கலாய் இருக்கும். அக்குழம்பைச் சுடுசோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டு எழுந்தால், மூக்குச்சளி, தொண்டைச்சளி, நெஞ்சுச்சளி, என எல்லாம் கதறிக்கொண்டு ஓடும். உதடோரம் மிஞ்சும் மிளகுக்காரம் ஒரு குறுகுறுப்பும் சுறுசுறுப்பும் உண்டாக்கும். க்குக்குக் குக்கும் என்று அதன் பின்னரும் ஒரு அரைமணிநேரம் கனைத்துக் கொண்டு கிடப்பேன்.

எம்மில்ல இணையரம்மாவிற்கோ குழம்பில் பொதுவாய் விருப்பில்லை. அவருக்கு வறுவல் வெதுப்பல் முதலான காய்ந்த சரக்குகள் தான் பிடித்தம். சரி, களத்தில் நாமே இறங்கிவிடுவோம் என்று துணிந்தேன். இதில் முன் அனுபவமும் நமக்கு உண்டு. வெற்றி தோல்வி என எல்லாமும் பார்த்த முதிர்ச்சியும் உண்டு தான். “அப்பா! அந்த rubber chicken குழம்ப இனி எப்பவும் பண்ணிறாதீங்க”, என்று மகள் இருவரும் நினைவிராத பருவத்தின் இந்த நினைவை மட்டும் இன்னும் மறக்காமல் வைத்திருக்கிறார்கள்!

கொங்கு நாட்டின் காரக் கோழிக் குழம்பு பலருக்கும் பிடித்ததாகத் தான் இருக்கும் போலும். இணையத்தில் பல பக்கங்கள் செய்முறை விளக்கங்கள், விழியங்கள் என்று நிறைந்திருக்கின்றன. வழக்கம் போல் அவற்றில் ஒன்றிரண்டைக் கண்டு, கூட்டிக்கழித்து, நமக்கென ஒரு செய்முறை வகுத்துக் கொண்டு இறங்கினேன். Trader Joe’s கடையில் ஒன்றரைப் பவுண்டு கோழிக்கால் துண்டுகள் (எலும்பு வேண்டுமே), ஒன்றேகால் பவுண்டு தோல், எலும்பு நீக்கிய தொடைக்கறி (விலை அதிகம், ஆனால், நமக்குத் தூய்விக்கும் வேலை மிச்சம் 🙂 ), ஆக மொத்தம் இரண்டே முக்கால் பவுண்டு இறைச்சி, கிலோக்கணக்கில் ஒன்றே கால் கிலோ இருக்கலாம். (விலை சுமார் எட்டு அமெரிக்க வெள்ளி = 560 இந்திய உரூவாய்). இதெல்லாம் இங்குத் தேவையா என்கிறீர்களா? ஆவணப்படுத்துவது என்று இறங்கிவிட்டால் விரிவாகச் சொல்ல வேண்டாமா? 🙂

சரி விடுங்கள். இனிச் செய்முறை.

கொங்கு நாட்டுக் காரக் கோழிக் குழம்பு: செய்முறை
இந்தச் செய்முறையை முதலில் மூன்று படிகளாய்ப் பிரித்துக் கொள்வோம்.

1. முதலில் இறைச்சியைத் தயார் செய்தல்
2. மசாலா/அரைவை தயார் செய்தல். (இது முக்கியம். ஒரு சோம்பலில் இதை விட்டுவிட்ட காரணத்தால் தான் rubber chicken என்னும் கிண்டலில் இருந்து மீளமுடியாமல் கிடக்கிறேன்).
3. தாளித்தலும் இறுதிச் செயல்களும்.


கோழியைத் துண்டுகளாய் வெட்டிக் கழுவி நீரை வடித்துவிட்டுக் கொஞ்சம் உப்பு, மஞ்சள், மசாலத்தூள், மிளகுத்தூள் முதலானவற்றைப் போட்டுப் புரட்டி எடுத்துக் கொஞ்சம் நேரம் ஊறப்போட்டுவிடவும். (அளவெல்லாம் உங்கள் வசதிப்படி. சொல்லியே ஆக வேண்டுமென்றால், சுமார் ஒரு தேக்கரண்டி உப்பும், ஒரு தேக்கரண்டி மசாலத்தூளும்; அரைக்கரண்டி மஞ்சளும், காற்கரண்டி மிளகுத்தூளும்).

அரைப்பதற்குத் தேவையானவை:

இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை
ஒரு மேசைக்கரண்டி: சீரகம், சோம்பு, கொத்தமல்லி விதை, கருமிளகு, ஒரு வரமிளகாய் (காரம் அதிகமானால் மனைவி சற்றுக் குறைப்பட்டுக்கொள்வாரோ என்று எண்ணி நான் வரமிளகாயை விட்டுவிட்டேன்).
வெங்காயம், தக்காளி (குழம்பு நிறைய வேண்டுமானால், கொஞ்சம் தாராளமாய் இவற்றைச் சேர்க்கவும்)
தேங்காய்ப்பூ (இரண்டு மேசைக்கரண்டி)
மேற்சொன்னவற்றை வரிசையாக எண்ணெயில் ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டுக் கலந்து தாளித்து நன்கு வணக்கி வைத்துக்கொள்ளவும். சற்று ஆறியவுடன் ஒரு அரைவைக்கல்லில் (அதாங்க மிக்சி, வைட்டாமிக்சு போன்றவை) கொஞ்சம் நீர்கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். நன்கு நெகுநெகுவென்று அரைத்துக்கொள்ளுதல் நலம்.

இறுதியாக, தாளித்தலுக்கு மீண்டும் சிறிது வெங்காயம், தக்காளி, அரைக்கரண்டி சோம்பு, பட்டை (ஒன்று), கிராம்பு (நான்கு) எடுத்துக் கொள்ளவும். ஒரு பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்ளலாம். இதிலும் சிறிதளவு உப்புச் சேர்க்கவும். பிறகு இதனோடு ஊறிக் கொண்டிருக்கும் கோழித் துண்டுகளையும் போட்டு ஒரு ஐந்து நிமிடம் பிரட்டவும். அதற்கு மேல் நமக்குப் பொறுமை இராதென்பதால், அரைத்த மசாலாவையும் உள்ளே ஊற்றி நன்கு கலக்கவும். குழம்பு நீர்த்தன்மை பொறுத்து இன்னும் கொஞ்சம் நீரூற்றிக் கொள்ளவும். ஒரு பத்து நிமிடம் கொதித்தவுடன் சுவை எப்படி என்று கணித்து, வேறு ஏதேனும் தூள் தேவைக்கேற்பப் போட்டுக் கொள்ளவும். நான் இன்று இன்னும் கொஞ்சம் கொத்தமல்லித் தூளும், மிளகாய்த் தூளும் கால் கால் கரண்டியளவில் போட்டேன். மிதமான சூட்டில் இன்னும் ஒரு பத்து இருபது நிமிடம்; அடிப்பிடிக்காமல் கிளறியபடி கொதிக்க விடவும். இறுதியே இறுதியாகக் கொத்தமல்லித் தழைகளைக் கொஞ்சம் கிள்ளிக் கலந்து விடவும்.

காரசாரமான கொங்குநாட்டுக் கோழிக் குழம்பு தயார். எனக்கு மட்டுமன்று. மகள் மனைவி இருவருக்கும் கூடப் பிடித்திருந்தது. அதற்குத் தானே இந்தப் பாடு. 🙂

ம்ம்ம்ம் என்று இரசித்து உண்டு முடித்த பின்னர் தான் இந்தப் பதிவும் படமும் பற்றி யோசனை எழுந்தது. உடனே இரண்டு கொத்தமல்லித் தலையைப் போட்டுச் சோடித்துப் படம் பிடித்துக் கொண்டிருக்கும்போது, அப்பக்கமாய் வந்த மனைவி சொல்கிறார்: “அருமையாய் இருந்துச்சுங்க. இதே மாதிரி பண்ணனும்னு இதை ஞாபகம் வச்சுக்கிறதா இருந்தா சொல்லுங்க. ஒரு சின்ன யோசனை மட்டும் சொல்றேன்”.

என்னம்மா என்றபடி நிமிர்ந்து பார்த்தேன்.

“ஒரு வரமிளகாய்ச் சுவை மட்டும் இழப்பாய்த் தெரிகிறது. அடுத்தமுறை அதிலொண்ணு போட்டுறுங்க!”

* * * *

கொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு