FEATUREDGeneralLatest

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு – chikki

Spread the love

சிக்கி (Chikki):

’பக்கி’ தெரியும் அதென்னெ ’சிக்கி’! மஹாராஷ்டிரா மாநிலத்தின் லோனாவாலா மலைப்பகுதியின் மையத்தை அடைந்ததும், புன்னகையோடு வரவேற்றன ‘சிக்கி’ (Chikki) இனிப்பு ரகக் கடைகள்! எண்ணிவிட முடியாத அளவிற்கு இந்த இனிப்புக் கடைகள் அப்பகுதியை ஆக்கிரமித்து இருந்தன! ‘Chikki… Fudje…’ என பதாகைகள் தாங்கிய கடைகள் நிச்சயம் சுற்றுலா வருவோரை சுண்டி இழுக்கும் தன்மை உடையன!
நம்ம ஊட்டி வறுக்கி, கோவில்பட்டி கடலைமிட்டாய், மணப்பாறை முறுக்கு போல, லோலானாவாலவிற்கு சிக்கி அடையாளம்! சிக்கியோடு சேர்த்து, ’Fudje’ எனும் ரகமும் அங்கு பிரபலம்! Fudje என்பது சாக்லேட் போல ஒரு இனிப்பு என வைத்துக்கொள்ளலாம். ஃபுட்ஜ் எனும் சாக்லேட் இனிப்பிலும் நிறைய வித்தியாசமான சுவையும் வடிவமும் பிரதிபலித்தன!

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு:

சரி சிக்கியின் கதைக்கு வருவோம்! ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு…’ என பாட்ஷாவில் ரஜினி பேசும் வசனத்தை, ’கடலைமிட்டாய்’ பேசினால் எப்படி இருக்கும்! அதாவது மாணிக்கமாகிய கடலைமிட்டாய், ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு… பாட்ஷா! (சிக்கி) என்பதாக அந்த வசனத்தை உருவகப்படுத்திக்கொள்ளலாம்! இங்கு கடலைமிட்டாய், பம்பாய் பகுதியில் சிக்கி! அதாவது நம்மூரில் கடலைமிட்டாய் ரக இனிப்புகளை அங்கு ’சிக்கி’ என்று அழைக்கிறார்கள்…
கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், தேங்காய் பர்ஃபி போன்ற இனிப்பு ரகங்களே நமது பகுதியில் அதிகம் பரிச்சயமாக இருக்கின்றன! ஆனால் அங்கோ எக்கச்சக்க ரகங்கள்! ’ரகங்களுக்கா இங்கு பஞ்சம்’ என்று சொல்லும் வகையில் கடலை, எள், பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் பழங்கள் போன்றவற்றை வைத்து வெல்லப்பாகு தொடுத்து சிக்கி ரகங்களைத் தயாரிக்கிறார்கள்! நம்ம தமிழ்நாட்டிலும் இந்த இனிப்பு ரகங்களை எளிதாக முயற்சித்துப் பார்க்கலாம். அனைத்து ரகங்களுக்கும் அடிப்படை வெல்லப்பாகு தான்!

வரவேற்கும் சிக்கி:

கடலை, உடைகடலை, தேங்காய், எள், ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், மாம்பழம், தேன் கடலை, கருப்பு எள், முந்திரி, பாதாம், பிஸ்தா, மேலும் சில உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிக்கி ரகங்கள் அனைத்து கடைகளிலும் முன்னின்று நம்மை வரவேற்று சிரிக்கின்றன! அனைத்து சிக்கி ரகங்களும் சேர்ந்த ’மிக்ஸ் சிக்கி’ இனிப்புகளும் அதிகமாக அங்கு விற்பனையாகின்றன! ஒவ்வொரு சிக்கியையும் கொஞ்சம் கொஞ்சம் சுவைத்தால் போதும், ஒரு வேளை பசி இனிப்பாக அடங்கிவிடும்!

அனைவருக்குமான ஃபேவரைட்:

ஆரோக்கியமிக்க கொட்டை ரகங்களையும், உலர் பழங்களையும் சாப்பிட அடம்பிடிக்கும் சிறுவர், சிறுமிகளிடம் சிக்கி ரகங்களை அறிமுகப்படுத்தலாம். ஆசையோடு சேர்த்து ஊட்டத்தையும் இனிப்பு குழைத்து எடுத்துக்கொள்வார்கள் அவர்கள்! கூடவே ’சிக்கி’ என்பதும் ஏதோ கார்டூன் கேரக்டர் போல இருப்பதால் எளிதாக சிறுவர், சிறுமிகளோடு ஒட்டிக்கொள்ளும்! சிறார்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமான ஃபேவரைட்டாக சிக்கி மாறும் என்பதில் எள்’சிக்கி’ அளவும் சந்தேகமில்லை!

ஆரோக்கிய நொறுவை:

‘ஆரோக்கிய நொறுவை’ (Healthy Snack) பட்டியலில் ’சிக்கி ரக இனிப்புகளுக்கு தாராளமாக இடம் கொடுக்கலாம். வெல்லப்பாகு தான் அடிப்படை என்றாலும், ஒவ்வொரு பொருளின் சுவை வெல்லப்பாகோடு ஊடல் கொள்ளும் போது, தனித்த சுவையில் மிளிர்கின்றன சிக்கி ரகங்கள்! மருத்துவ ரீதியாக சிக்கியைப் பற்றி பேசினால் வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் கொள்கலன்களாக சிக்கி ரகங்கள் விளங்கும் என்பது உறுதி!
லோனாவாலாவில் மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் சில இடங்களிலும் சிக்கி ரகங்கள் கிடைக்கின்றன! இருப்பினும் லோனாவாலாவிற்குள் சென்று, ஆசுவாசமாக இயற்கையை ரசித்துக்கொண்டு சில சிக்கி ரகங்களை கடித்து சுவைப்பதே தனி அனுபவம்! லோனாவாலாவிற்குள் சென்று சிக்கி இனிப்புகளை வாங்கினால் விலையும் மிக குறைவே! கிலோ 300 ரூபாயில் தொடங்கி 1400 ரூபாய் வரை ரகங்களுக்கு ஏற்ப சிக்கியின் விலை நீள்கிறது! உலர்பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் சிக்கி ரகத்துக்கே அதிக விலை!
பறவை ஆர்வலராக முதன் முதலாக ‘பக்கி’ பறவையைப் பற்றி கேள்விப்பட்டதும் அடைந்த அதே ஆச்சர்யத்தைக் கொஞ்சமும் குறைவில்லாமல் கொடுத்தது ’சிக்கி’.
மலையின் உச்சியில்… மழை பொழியும் வேளையில் ஒரு தேநீரோ குளம்பியோ மட்டுமல்ல, சிக்கியும் சிறந்த இயற்கை காம்பினேஷன் தான்!…

Leave a Reply