FEATUREDGeneralLatestSocialmedia

இங்கிலாந்தின் கல்விக் கூடங்கள்

Spread the love

இங்கிலாந்தின் கல்விக் கூடங்கள்
——————————–

இங்கிலாந்து, நிலப்பரப்பில் ஏறக்குறைய தமிழ்நாட்டின் அளவே, தலைநகரம் லண்டன்.இக்கட்டுரை இங்கிலாந்து கல்விக்கூடங்கள் பற்றிய ஆய்வு கட்டுரை அல்ல, என் அனுபவ கட்டுரை.

இங்கிலாந்தில் பெரும்பாலும் கல்விக்கட்டணம் இல்லாத அரசுப் பள்ளிகளே நிறைந்துள்ளது. இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒன்று போல் ஆரம்பப்பள்ளிகள் இருக்கும், சிறு குழந்தைகளும் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில். ஊரின் பரப்பளவு மற்றும் மாணாக்கர் எண்ணிக்கையைப் பொறுத்து உயர்நிலைப் பள்ளிகளும், சிறப்புப் பள்ளிகளும் அமைத்திருக்கிறார்கள். தனியார் பள்ளிகள் ஊருக்கு ஒன்று காண்பதே அரிது. ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்த உடனே ஒரு சிவப்பு நிறப் புத்தகம் (Red Book) தருகிறார்கள், இதில் அவர்களது பிறந்த தேதி, உயரம், எடை, தடுப்பூசி பதிவுகள் குறித்து குடும்ப மருத்துவர் மற்றும் தாய்சேய் நல செவிலியர் (Health Visitor) விவரங்கள் பராமரிக்கிறார்கள். குழந்தையின் எட்டு மாதம், ஒரு வருடம், இரண்டு வருடம் என மூன்று முறை உடல் மற்றும் மன வளர்ச்சியை தாய்சேய் நல செவிலியர் பரிசோதிப்பர். மூன்று முதல் ஐந்து வயது வரை அடிப்படைக் கல்வி (Foundation) நர்ஸரி பள்ளிகளில் வழங்கப்படுகிறது, இது கட்டாயக் கல்வி இல்லை. நர்ஸரி பள்ளிகளில் பிரதானமாக விளையாட்டும் அதன்வழி கற்கும் அனுபவங்களும் மட்டுமே, அங்கு எழுதப் படிக்க அவ்வளவாக சொல்லித் தருவதில்லை.

அனைத்துக் குழந்தைகளும் கட்டாயமாக ஐந்து வயது முதல் பள்ளியில் சேரவேண்டும், இல்லையெனில் முறைப்படி வீட்டிலிருத்தி கல்வி புகட்ட அனுமதி பெறவேண்டும். அரசுக் கல்வித் துறையின் ஆப்ஸ்டெட் (OFSTED – Office for Standards in Education) எனும் அமைப்பு, பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறது. கவுன்சில் எனப்படும் நகராட்சிகள் அந்தந்தப் பகுதியின் பள்ளிகளைப் பராமரிக்கின்றனர், வீட்டிற்கு மிக அருகில் உள்ள பள்ளியில் சேர முன்னுரிமை அளிப்பர் அல்லது தரவரிசைப்படி முன்னிலையில் இருக்கும் பள்ளியைப் பெற்றோர் விரும்பினால் அங்கு இடமிருப்பின் வழங்குவர்.

ஆசிரியர் பணி இங்கு மிகக் கடினம், முதல் வகுப்பிலிருந்தே பாடங்களை வெகு ஆழமாக ஆராய்ந்து திட்டமிடுதல் வேண்டும். குழந்தைகளின் கற்கும் ஆற்றலுக்கு ஏற்ப, வகுப்பில் இரண்டு அல்லது மூன்று குழுக்களாகப் பிரித்து அதற்கேற்ப பாடத்திட்டம். கற்கும் அனைத்தும் செயல்முறையில் கற்பித்தல், புலன்வழிக் கல்வி மற்றும் குழந்தையின் வழிநடப்பில் (Child-led learning) அவர்களின் திறன் சார்ந்த கற்றல் வழிமுறைகள் பின்பற்றுதல் வேண்டும். உணவு இடைவேளைக்கு கூட செல்ல இயலாமல் இருக்கும் ஆசிரியர்களே அதிகம், வீட்டிற்கும் வேலைகளை எடுத்துச் சென்று செய்வர், அப்பணியின் மேல் பேரார்வம் இருந்தால் மட்டுமே இங்கு ஆசிரியர் பணி செய்ய இயலும். ஆறு வாரங்களுக்கு ஒருமுறை ஓரிரு வாரம் விடுமுறையென வருடத்திற்கு பதின்மூன்று வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

நோட்டுப்புத்தகங்கள், பென்சில், பெயிண்ட் என சகலமும் அனைவருக்கும் இலவசம், அனைத்தும் பயன்படுத்திய பின் பள்ளியிலேயே வைத்து விட்டு வருவார்கள். காலை இடைவேளையில் பாலும், ஏதேனும் ஒரு பழமும் குழந்தைகளுக்கு வழங்கப்படும், மதியம் பள்ளிகளிலேயே சூடாக சமைத்த உணவுகள் வழங்குவர், வீட்டிலிருந்தும் எடுத்துச் செல்லலாம். குறிப்பிட்ட அளவு வருமானத்திற்குக் குறைவாக ஈட்டுவோரின் பிள்ளைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு தள்ளுபடி விலையிலும் தருவர். எந்தக் குழந்தை இலவசமாக உண்கிறது என்பது சொல்லிலோ செயலிலோ உணர்த்தப் படுவதில்லை, இது பாராட்டக் கூடிய பண்பு. குழந்தைகளின் உணர்வுகளுக்கும் சுயமரியாதைக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஆரம்பப் பள்ளியில் அதிக முக்கியத்துவம் தரப்படுவது ஆங்கிலம், ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் (!) பிறகு சிறிது கணிதத்திற்கும் மற்ற பாடங்களுக்கும் தரப்படும். வாரமொருமுறை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஒரே ஒரு தாளில் ஐந்து நிமிடத்தில் செய்து முடிக்குமளவு வீட்டுப்பாடம் வரும். ஆனால், நாள்தோறும் ஒரு பாடம் சாராத கதைப் புத்தகம் (reading book), பிள்ளைகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற வீட்டிற்குக் கொண்டுவருவர். ஓரளவு எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தவுடன் ஏதேனும் ஒரு எழுத்தாளரின் நூல்கள் அந்த வருடத்திற்குப் பரிந்துரைக்கப் படும், அவற்றை வாசித்து விவாதித்தல், அந்நூல் சார்ந்த இடங்களை நேரில் சென்று பார்த்தல், கற்று புரிந்த விடயங்களைக் கட்டுரையாகத் தொகுத்தல் என குழந்தைகள் அலசி ஆராய்வார்கள். புத்தகம் வாசித்தல் ஆங்கிலேயர்களின் தொட்டில் பழக்கம், பிறந்த குழந்தைக்கும் ஏதேனும் புத்தகம் படித்தே இரவில் தூங்க வைப்பார்கள். சம காலத்து இந்தியக் கல்விமுறையை ஒப்பிட்டால், இங்கே பாடப்புத்தகம் இல்லை, கிளாஸ் ஒர்க், ஹோம் ஒர்க் என நோட்டுப் புத்தகங்கள் இல்லையே, நிஜமாகவே ஏதேனும் கற்பிக்கிறார்களாவென கலக்கமாக இருக்கும். ஆனால், வாழைப்பழங்களில் ஊசிகளை ஏற்றுவது போல பிள்ளைகள் அறியாமலே அவர்களின் அறிவை வளர்ப்பார்கள்.

பெற்றோர் வாரமொருமுறை வகுப்புக்குச் சென்று தங்கள் பிள்ளைக்கோ அல்லது பிற குழந்தைகளுக்கோ கதைகளை வாசிக்கும் வாய்ப்பு இருக்கும். பள்ளிகள் அந்தப் பகுதியில் வாழும் மக்களுடனும் பெற்றோர்களுடனும் தொடர்பில் இருப்பர் (local community engagement), இது பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு நிதிதிரட்டி ஏதேனும் உபகரணங்கள் வாங்கவோ இன்னபிற உதவிகள் செய்யவோ வழி வகுக்கிறது. பெற்றோர்கள் தேர்தலில் போட்டியிட்டு பள்ளி கவர்னர்களாக நியமிக்கப்படுவர், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியைப் பராமரிக்கும் கவுன்சிலுடன் இணைந்து கவர்னர்கள் பணியாற்றுவார்கள்.

ஆங்கிலேயர்கள் புத்தக வாசிப்புக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் தருவது இசைக்கும், விளையாட்டுக்கும். ஆரம்பப் பள்ளிகளிலேயே இசைக்கருவிகள் இசைத்தல் மட்டும் பாடுவது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சிறு அளவிலாவது இருக்கும், விளையாட்டுக்கு அதிக நேரம் பாடஇடைவேளைகளிலும் உடற்கல்வி வகுப்புகளாவும் அளிப்பார்கள். குறைந்தது இருபது மீட்டராவது தானாக நீச்சலடிக்கக் கற்றுத் தருவார்கள். மேலும் வீதிகளில் பாதுகாப்பாக சைக்கிள் ஓட்ட பயிற்சி யளிப்பார்கள். ஏழு வயது முதலே உடல் சார்ந்த கல்வியை சிறுகச் சிறுக இருபாலருக்கும் போதிப்பார்கள், ஆண் பெண் உடல் வேறுபாடுகள், குட்-டச், பேட்-டச் என விவரமும், தங்களின் உடலை பிறர் தீண்டினால் பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளில் பிள்ளைகள் பயமின்றிப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கும் முறையிலும் இருக்கும். புகைபிடித்தல், மது மற்றும் போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வுக் கல்வியும் புகட்டுகிறார்கள்.

 

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு வருடம் இருமுறை, பிள்ளைகளின் தனித்துவம், கற்கும் முறை என விளக்கமளிப்பர். வேறு கோரிக்கைகள் இருப்பின் எப்பொழுதாகினும் ஆசிரியரை அணுகி அவரின் வகுப்பு முடியும் நேரம் கேட்டுப் பேசலாம். இரண்டாவது வருட வகுப்பின் இறுதியில் மற்றும் ஆறாம் வகுப்பின் இறுதியில் SATs (Scholastic Assessment Test) தேர்வு இருக்கிறது என்றார்கள், நானும் வீட்டில் ஏதேனும் சொல்லித்தர வேண்டுமோவென நினைத்து வகுப்பாசிரியரிடம் கேட்டேன், அதற்கு அவர் சொன்ன பதில் ‘எதுவும் சொல்லித்தர வேண்டாம், பரீட்சை பற்றிப் பேசி குழந்தைக்கு மனஅழுத்தம் தரவேண்டாம், ஒரு மாதம் முழுவதும் அவர்களுக்குத் தெரியாமலே பரீட்சை நடக்கும், இறுதியில் சராசரி மதிப்பெண் கணக்கெடுப்போம். இந்தப் பரீட்சை நான் எப்படி சொல்லிக் கொடுத்துள்ளேன் என்பதற்கே ஒழிய பிள்ளைகளுக்கானது அல்ல’ என்றார். கையெழுத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை, ஒருமுறை கோழிக் கிறுக்கலில் பிழைகளோடு எழுதிய பக்கத்தில் ‘எக்ஸ்செலன்ட் ரைட்டிங்’ என எழுதியிருந்தார், எனக்கு பொறுக்காமல் கேட்டேவிட்டேன், அதற்கு வந்த பதில், ‘எழுதுவதென்பது கையெழுத்து குறித்து அல்ல, எழுதிய கருத்துக்களும் மொழியின் ஆளுமையும் எவ்வாறுள்ளது (Creative Writing) என்பதைக் குறித்துள்ளேன்’ என்றார். எனக்கு கல்வி கற்றலை வேறு கோணத்தில் பார்ப்பதுபோல் இருந்தது.

பள்ளிநேரம் முடிந்து ஒருமணி நேரம் தோட்டக்கலை, கராத்தே, கால்பந்து, ஸ்டெம் (STEM – Science, Technology, Engineering and Math) எனப் பல குழுக்கள் நடத்துவர், விருப்பப்படுவோர் அவற்றில் இணைந்து கொள்ளலாம். ஆறாம் வகுப்பு முடித்து பதினோரு வயதில் உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்வதில் இரு வகையான பள்ளிகள் உண்டு, அனைத்து நிலை கற்கும் திறன்கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகள் (Comprehensive Schools) எனவும், நுழைவுத்தேர்வின் அடிப்படையில் திறமையைப் பரீட்சித்து அனுமதி வழங்கும் க்ராமர் ஸ்கூல்கள் (Grammar Schools) எனவும் அழைக்கப்படுகிறது. க்ராமர் ஸ்கூல்களைப் பொருத்தளவில் இருவேறு கருத்துகள் நிலவுகிறது, நுழைவுத்தேர்வு கூடாது, தேவையில்லாமல் பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் அளிக்கிறது என்றும், அவ்வாறெல்லாம் இல்லை, படிப்பில் கெட்டிக்காரர்களை மெருகேற்றி நல்ல வாய்ப்பை இந்தப் பள்ளிகள் அளிக்கிறது என்பதாகவும் உள்ளது. இப்பள்ளிகளில் சேர்க்க ஒரு சில பெற்றோர்கள் இரண்டு ஆண்டுகள் வரை நுழைவுத்தேர்வு பயிற்சி அளிக்கிறார்கள், எனவே பணம் படைத்தவர்கள்தான் இப்பள்ளியில் நுழையமுடியும் எனும் கருத்தும் உள்ளது. எனது அனுபவத்தில், நான் ஒன்றரை வருடம் இந்தியா செல்ல வேண்டிய சூழ்நிலையால் நுழைவுத்தேர்விற்கு இருமாதம் இருக்கும் சூழ்நிலையிலேயே திரும்ப இங்கிலாந்து வந்தோம். சரி எழுதித்தான் பார்க்கட்டுமேவென்று நானே பயிற்சி அளித்து எழுதவைத்தேன், பரீட்சை எளிதென்று சொல்லமாட்டேன் ஆனால் ஆர்வம் இருப்பின் தேர்ச்சி அடையலாம்.

எனது உயர்நிலைப் பள்ளி அனுபவம் க்ராமர் பள்ளிகள் பற்றியதே. ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் திரிந்த பிள்ளைகள் ஏழாம் வகுப்பில் சேர்ந்தவுடன், இருமடங்கு கற்பித்தல் தொடங்கியது. ஆங்கிலம், கணிதம், அறிவியல், அந்நிய மொழி ஒன்று (ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ்…), வரலாறு, புவியியல், சமையல், தையல், விளையாட்டு, மதங்களைப் பற்றிய கல்வி, என குருவிகள் தலையில் பனங்காய்கள். ஆரம்பப்பள்ளியில் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்ட பாடமெல்லாம் வாழைஇலை விருந்துபோல் கற்பிக்கப்படும். இப்பொழுதும் பாடப்புத்தகங்கள் வீட்டுக்கு வராது, நோட்டுப் புத்தகங்கள் மட்டும் வீட்டுப்பாடம் எழுதுவதற்கு வரும், நாம் உதவ அவசியமிருக்காது, பிள்ளைகளே செய்துகொள்வார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் பாடத்தை அதிகபட்ச கவனத்துடன் கற்பிக்கிறார்கள். உதாரணத்திற்கு சமையல் வகுப்பு (Food technology), வாரம் ஒருமுறை வரும் வகுப்பில் கற்பித்து வருட இறுதியில், கேக், பிஸ்கட், தாய்லாந்துக் கோழிக் குழம்பு, சீனாவின் நூடுல்ஸ், மெக்ஸிகோவின் தக்காளி சாதம் வரை செய்ய பொருட்களைப் பட்டியலிட்டி வாங்கி, கழுவி, வெட்டி, சமைத்துப் பின் சுத்தம் செய்வதுவரை கற்றுத் தருகிறார்கள். தையல் வகுப்பிலும் துணிக்கு சாயமேற்றுதல், அளவுக்கு வெட்டித் தைத்தல், எம்பிராய்டரி என எனக்குத் தெரியாததெல்லாம் என் மகனுக்குத் தெரியும்.

இசைக்கு ஒரு தனித்துறை இருக்கும், இசையில் முனைவர் பட்டம் வரை பெற்ற ஆசிரியர்கள், அனைத்துக் கருவிகளை வாசிப்பதிலும் பாடுவதிலும் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளியின் இசைக்குழுவை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்து வருடத்திற்கு மூன்றுமுறை கச்சேரிகள் நடத்துவர். கச்சேரிகளின் தரமும் நேர்த்தியும் அதற்கு அவர்களின் உழைப்பும் என்னை வாய் பிளக்க வைக்கும். இசையில் விருப்பமில்லாத குழந்தைகளை பங்கேற்க வற்புறுத்துவதில்லை.

உயர்நிலைக் கல்வியிலும் ஆங்கிலப் புலமைக்கு அதீத முக்கியத்துவம், கதை எழுத, ஏதேனும் தலைப்பில் வாதிட, ஷெல்லி, பைரன் என அனைத்து விதமான கவிஞர்களின் கவிதைகளை பொருள்விளக்கம், மொழியாளுமை, என அலசி ஆராய, ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஒவ்வொரு காட்சியாகக் கற்று, அந்த நாடகத்தை அரங்கத்தில் பார்த்து அதன் தொடர்ச்சியாக கட்டுரை எழுதுதல், மற்றும் இருபக்க நீளத்திற்கு பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பட்டியலிட்டு அத்தனையையும் வாசித்தல் என மொழிப்பாடத்திற்கு முழுநேரமும் தேவைப்படும்.

அந்நிய மொழி (Foreign Language) கற்றல் முறை முற்றிலும் மாறுபடுகிறது. அந்த மொழியின் எழுத்துக்கள், பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், இலக்கணங்களை கணிதம் போல் கற்கிறார்கள். அந்நியமொழிப் பாடத்தேர்வு மூன்று நிலைகளாக நடத்தப்படுகிறது, பேசும்திறமையை ஆராயும் தேர்வு, இதில் படங்களைக் காட்டி அதைப்பற்றிப் பேசுமாறும், உரையாடல் திறன் பொறுத்தும் மதிப்பெண்கள். அடுத்தது, Listening Test எனப்படும் அம்மொழியில் பேசும் பதிவுகளைக் கேட்டு அதுகுறித்து வரும் கேள்விகளுக்கு பதில் எழுதுதல், இதில் மொழியைப் புரிந்துகொள்ளும் தன்மை மற்றும் பதிலில் மொழியாளுமை ஆகியவற்றை ஆராய்ந்து மதிப்பெண்கள். மூன்றாவதாக மொழிமாற்றும் திறன் (Translating Ability) குறித்து தேர்வு, ஒரு கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து வேற்று மொழிக்கோ அல்லது அம்மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கோ மொழிமாற்றம் செய்து எழுதவேண்டும். இம்முறையில் அந்நிய மொழி கற்பித்தலை, நான் இந்தியாவில் ஆங்கிலம் கற்பித்தலோடு பொருத்திப் பார்ப்பேன், தாய்மொழி தமிழ்வழி கல்விபயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாட, மொழிமாற்றம் செய்ய, கேட்டு பதில் சொல்ல எனக் கற்பித்தால் அவர்களின் மொழியாளுமை மற்றும் ஆங்கிலம் பற்றிய தேவையில்லாத அச்சம் மறையும் என நினைப்பேன்.

பதினோராம் வகுப்பில் ஜி.சி.எஸ்.இ (GCSE – General Certificate of Secondary Education) எனப்படும் பொதுத்தேர்வு நடைபெறும், அதற்கான ஆயத்தம் ஒன்பதாம் வகுப்பில் தொடங்கப்படுகிறது. எட்டு முதல் பதினோரு பாடங்கள் வரை தேர்வு எழுதலாம், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் ஒரு வேற்றுமொழி கட்டாயம் கற்க வேண்டும். பிற பாடங்கள் மாணாக்கர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். க்ராமர் பள்ளிகளில் பதினோரு பாடங்கள் கற்க பரிந்துரைக்கிறார்கள், உதாரணத்திற்கு பொருளாதாரம், தொழில் மேலாண்மை, கணினியியல், இசை, நாடகம், உடற்கல்வியியல், வரலாறு, புவியியல் இன்னும் பல. ஒவ்வொரு பாடத்தையும் மிக ஆழமாகக் கற்கிறார்கள், புவியியல் கற்கும் மாணவர்கள் அது சார்ந்த தகவல்களை நேரில் பல இடங்களுக்குச் சென்று திரட்ட வேண்டும், அதனடிப்படையில் தேர்வு எழுதுவர். இசையைப் பாடமாகத் தேர்வு செய்தவர்கள் குறைந்த பட்சம் இரண்டு இசைக்கருவிகள் வாசிக்க அறிந்துகொள்ள வேண்டும், இரு இசைத்தொகுப்புகள் தாமாக உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும். ஒன்பது பத்து பதினோராம் வகுப்புப் பாடங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரே பரிட்சையாக ஜி.சி.எஸ்.இ-ல் எழுதுகிறார்கள்.

இதன் பிறகு பனிரெண்டாவது பதின்மூன்றாவது வகுப்புகள் பயில்கிறார்கள். இந்தப் பருவம் ஏ-லெவல்ஸ் (A-Levels) என்பர், பல்கலைக் கல்விக்கு ஆயத்தமாவதாகவும் தங்களின் எதிர்கால தொழில் சார்ந்த ஆர்வத்திற்கும் ஏற்ற மிக முக்கியமான பருவமாகக் கருதப்படுகிறது. ஏதேனும் மூன்று அல்லது நான்கு பாடங்களைத் தேர்வு செய்து இவ்விரு வருடம் கற்கலாம், கட்டாய மொழிப்பாடங்கள் இல்லை. ஒவ்வொரு பாடமும் செயல்முறைக் கல்விவழி என்பதால் மிக அதிக உழைப்பு தேவைப்படும், இந்தியக் கல்லூரிகளில் பட்டப்படிப்பைக் காட்டிலும் கடினமான பாடத்திட்டங்கள்.

இந்த இருவருடப் படிப்பில் மிக முக்கிய அம்சமாக நான் கருதியது, பல்கலையில் கற்கக் போகும் பாடத்திற்கு ஏற்ற தொழில் அனுபவம் பெறுதல். இந்த அனுபவம் அந்த தொழிலில் உண்மையான ஆர்வம் உள்ளதா, செய்ய இயலுமாவென அறிந்துகொள்ள உதவுகிறது. கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, இம்பீரியல் போன்ற பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு கற்க போட்டி அதிகம், ஜி.சி.எஸ்.இ மற்றும் ஏ-லெவல்ஸ் ஆகியவற்றில் பெற்ற கிரேடுகள், தொழில் சார்ந்த அனுபவங்கள், இசை, ஆங்கில மொழிப்புலமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அனுமதிப்பர். பட்டப்படிப்பு முதல் கட்டணம் செலுத்தவேண்டும், கல்விக்கடன் அனைவருக்கும் உண்டு.

சிறப்புப் பள்ளிகளைப் பற்றி பேசாமல் இக்கட்டுரை முடிவுறாது. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு என ஊருக்கு ஒன்றாவது சிறப்புப் பள்ளிகள் இருக்கும், இந்தப் பள்ளிகளில் சக்கர நாற்காலியில் வரும் குழந்தைக்கும் சம வாய்ப்பு இருப்பது போல் விளையாட்டு மைதானமும், நீச்சல் குளங்களும், சமையலறைகளும் அமைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் தேவையைப் பொறுத்து கவனிக்க, கற்பிக்க ஆட்கள் இருப்பர். மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்தவுடன் தனித்துவமாக வாழ்வதற்கான திறமைகளை வளர்க்கிறார்கள், அவர்களுக்கு படிப்பில் அதிக அக்கறை தருவதில்லையோ என எனக்குத் தோன்றும். சிறப்புக் குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயது வரை கல்வி இலவசம்.

குறைகளே இல்லாத கல்வி அமைப்பு போன்று இந்தக் கல்விமுறை இதை வாசிப்பவர்களுக்குத் தோன்றலாம், ஆனால் படிப்படியாக அரசாங்கம் கல்விக்கு ஒதுக்கும் நிதியைக் குறைத்துக் கொண்டே வருவதனால் பள்ளிகள் தரமான கல்வியை அளிக்கத் திணறும் நிலை இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. இதற்காக பல தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும் போராடி வருகின்றனர். இக்குறை களைந்து நோக்குங்கால், இலவசக்கல்வி இவ்வளவு தரமாக அனைவருக்கும் வழங்க ஆவன செய்யும் அரசைப் பாராட்டியே ஆகவேண்டும். பள்ளியில் கற்பிக்கப்படும் அவர்களின் தாய்மொழியாம் ஆங்கிலத்தில் புலமையும், புத்தகம் வாசிக்கும் பழக்கமும், உடற்பயிற்சியும், இசையும், வாழ்க்கைக்கல்வியும் குழந்தைகளை எல்லா விதத்திலும் வார்த்து எடுத்து தன்னம்பிக்கை உள்ள நன் மக்களாக ஆக்குகிறது.

Kasthuri Subramanian
10.12.2018.