FEATUREDLatestNature

ஆந்தைக் குஞ்சும் புளிய மரமும்

Spread the love

ஆந்தைக் குஞ்சும் புளிய மரமும்:

மீனாங்கண்ணி தாவரங்கள் படர்ந்திருந்தன… புளியம் பழத்தோடு சேர்ந்து புளி இலைகளும் நிலத்தில் விழுந்திருந்தன… குப்பைமேனி மூலிகைக்கு நிகராக குப்பைகளும் சிதறியிருந்தன… இந்த சூழலுக்கு இடமளித்தது, வயது முதிர்ந்த புளிய மரம் ஒன்று! அடல்ட் (Adult) காகம் ஒன்றும், அதன் உருவத்தில் கால் பகுதி அளவே இருந்த ஆந்தைக் குஞ்சு ஒன்றும் நேருக்கு நேர் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தன.

இதைப் போன்று ஏற்கனவே ஒரு அனுபவம் எனக்கு இருக்கிறது. முதிர்ந்த பட்டைக் கழுத்து ஆந்தையை (Indian Scops Owl) ரசித்தது முதல் அனுபவம். ஆனால் இம்முறை ஒரு அழகிய குட்டி பட்டைக் கழுத்து ஆந்தை! ஆந்தைக் குழந்தை!…

வழக்கம் போல நான் அருகில் சென்றதும் பயந்துப் பறந்து புளிய மரத்தின் கிளையில் அமர்ந்துக்கொண்டது அந்தக் காகம். மேலிருந்து ஆந்தையை விடாமல் நோட்டமிட்டுக்கொண்டிருந்து. கால் மணி நேரம் ஆந்தைக்கு அருகிலேயே இருந்தேன். காகம் நகர்வதாகத் தெரியவில்லை.

தூக்கிக் கொஞ்சத் தூண்டும் குழந்தை உருவம் அந்த ஆந்தைக்கு. நீரில் நனைந்து உலர்ந்த கம்பிளிப் போல தேகம். செம்மறி ஆட்டிடம் தேகத்தை கடன் வாங்கியதா என்றும் தெரியவில்லை… அப்பாவியான முக பாவனை. ’என்னை தூக்கிக்கொள்’ என்று சொல்வதுபோன்ற பார்வை!

காகம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாக வேண்டும். ’உஸ்… உஸ்’ என்று சத்தம் கொடுத்தும் நகர்ந்தபாடில்லை!… புளிய மரத்தின் பொந்தில் இருக்கும் ஆந்தையின் இல்லத்திற்குள் அதை சேர்க்க வேண்டும். அக்கம் பக்கத்தினர் என்னை பார்த்து ஒன்று கூடினர்… விவரத்தை சொன்னேன்… பதமாக தூக்கி புளிய மர பொந்திற்குள் வைத்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி… கூட்டம் கண்ட காகம் பறந்தோடியது!

இரண்டாம் முறையாக ஒரு ஆந்தையைக் காப்பாற்ற உதவிய திருப்தியும் மகிழ்ச்சியும் எனக்குள்!… நீண்ட நேரம் நிலைக்கவில்லை மகிழ்ச்சி!…

பொந்துக்கு கீழே ஒரு குறியீடு!… ஆம், ஆந்தையின் வீடு விரைவில் சிதைக்கப்படவிருக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக அந்த புளிய மரத்தில் மஞ்சள் சாய குறியீட்டை பதிந்துவிட்டனர். எந்நேரமும் சிதைக்கப்படலாம் வயது முதிர்ந்த புளிய மரம், கூடவே அந்த ஆந்தையும் தான்!…

உலகம் நமக்கானது மட்டுமல்ல!…

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

Leave a Reply