FEATUREDLatestNature

ஆசியக் குயில் காளகண்டம்

Spread the love

ஆசியக் குயில் ( ஆங்கிலத்தில் Asian koel, Eudynamys scolopaceus) என பெயர்க்கொண்ட இப்பறவை ‘காளகண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இப்பறவை இந்தியா , இந்திய துணைக்கண்டம் , சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும். பெண் குயில் பழுப்பு நிற உடலும் அதில் வெண் புள்ளிகள் நிறைந்தும் இருக்கும்.தனியாகவோ இணையுடனோ மரங்கள் நிறைந்த தோட்டம், தோப்புகளில் இவற்றைக் காணலாம்.

குயில் ஒரு அடையுருவி (‘brood parasite’) “புல்லுருவி என்னும் சொல் பொதுவாக parasite என்பதற்கு வழங்கும் பெயர். ஏழைகளின் உழைப்பை உறிஞ்சி வாழ்பவன் என்னும் வகையில் குமுகச் சூழலிலும் பரவலாகப் பயன்படும் சொல்.வேறு ஓர் இனத்தின் ஊட்டச்சத்தை உறிஞ்சி வாழும் பிறிதோர் இனத்துக்கு உருவி என்று சொல்வர். புல்லுருவி, நாயுருவி முதலிய சொற்கள் இப்படி ஏற்பட்டதே. உணி, உண்ணி என்னும் சொற்களும் இத்தகைய பொருளில் ஆளும் சொற்கள். இங்கே கரவாக பிறிதோர் இனப்பறவையின் அடையில் தன் முட்டையை இடுவதால், அடைகாக்கும் உழைப்பை உருவி வாழ்கின்றது எனலாம். அடையுருவி என்பது அடைகாக்கும் உழைப்பை உருவி (கரவாக உறிஞ்சி) வாழ்வதாக பொருள்கொள்ளலாம்.”

இது பரவலாக அனைவரும் அறிந்த விஷயம்தான் மற்ற பறவைகளைப் போல குயில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை, அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும். குயிலின் முட்டையினையும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலதான் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.

உணவு பெரும்பாலும் பழங்கள், நெல்லி போன்ற சிறு கனிகள்; சமயங்களில் கம்பளிப்புழுக்களும் பூச்சிகளும்.

(பெண்களின்) இனிமையான குரல் வளத்திற்கு உவமையாக குயிலின் கூவலைக் கூறுதல் வழக்கத்தில் இருந்தாலும், உண்மையில் இனிமையான குவூ குவூ சத்தத்தை எழுப்புவது ஆண்குயிலே. தாழ்ந்த ஒலியுடன் இனிமையாகத் துவங்கும் குவூ கூப்பாடு படிப்படியாக சத்தம் அதிகரித்து, ஏழாவது அல்லது எட்டாவது கூப்பாட்டுடன் திடுமென நின்று விடும்; பிறகு மீண்டும் அதே கதியில் பாடல் ஆரம்பிக்கும். ஆண் குயிலின் குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் – கிக் – கிக் என்ற கூப்பாடு சாதரணமாக இருக்கும்.

**படத்தில் இருக்கும் ஆசிய பெண் குயில் காலையில் அத்தி பழத்தை ருசித்துக்கொண்டிருக்கும்போது கேமராவில் சிறைபிடித்தேன்**

— Kaikondrahalli Lake, Sarjapur Road

Leave a Reply