ஸ்டெர்லைட் இறுதி வாதத்தில் என்ன நடந்தது

Spread the love

ஸ்டெர்லைட் விவகாரத்தை எவரெல்லாம் உளசுத்தியோடு அணுகுகிறீர்களோ அவர்கெளல்லாம் இன்று நடந்த இறுதி வாதத்தில் என்ன நடந்தது என்பதை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

👇

இன்று 10.12.2018 ஆம் நாள் அன்று, காலை பத்தரை மணிக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோயல் தலைமையில், ஸ்டெர்லைட் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

நீதியரசர் கோயல் தவிர்த்து, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் இரண்டு நீதிபதிகளும், இரண்டு சுற்றுச்சூழல் நிபுணர்களும் கொண்ட ஐந்து பேர் உள்ளிட்ட அமர்வு ஆகும்.

நீதிபதிகள் வந்து அமர்ந்தவுடன், வைகோ எழுந்து இந்த வழக்கில் என்னை ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டும் என்று நான் தாக்கல் செய்த மனு மீது, எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.

ஆனால், கடந்த 12 நாள்களுக்கு முன்பு (28.11.2018) நீதிபதி தருண் அகர்வால் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட அன்று, நீதிபதி அவர்களே நீங்கள் பிறப்பித்த ஆணையில், தமிழக அரசோடு சேர்ந்து இந்த வழக்கில் பங்கேற்றவர்கள் இங்கே எந்த வாதமும் செய்ய முடியாது. அரசாங்க வக்கீலுக்கு உதவியாகத்தான் இருக்க முடியும் என்ற உத்தரவு எந்த அடிப்படையில் நீதி ஆகும்? அப்படி ஆணையிட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது?

நீதிபதி கோயல்: பிறகு பேசலாம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்கறிஞர் பேசட்டும் என்றார்.

வைகோ: அரசு வழக்குரைஞர் வைத்தியநாதன் இப்பொழுது பேச முடியாது. என்னுடைய மனுவுக்கு ஒரு முடிவு தெரியாமல், இந்தத் தீர்ப்பு ஆயத்தில் எதுவும் நடக்க நான் விட மாட்டேன். என் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்று சொல்லுங்கள். பரவாயில்லை. அதை எதிர்த்து நான் உச்சநீதிமன்றம் செல்வேன்.

நீதிபதி கோயல்: இந்தப் பிரச்சினையைப் பிறகு பார்ப்போம். இப்பொழுது அவர் பேசட்டும்.

வைகோ: மாண்புமிகு நீதிபதி அவர்களே, நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிகவும் மதிப்பவன் நான். முதல் நாள் அமர்வில் நான் எழுந்தவுடன், நீங்கள் யார்? என்று கேட்டீர்கள். நான் என்னை ஒரு தரப்பாகச் சேர்க்க மனு தாக்கல் செய்துள்ளேன் என்றேன். உட்கார். எதுவும் பேசக்கூடாது என்றீர்கள்.
நான் 1969 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தவன். 49 ஆண்டுகள் ஆகின்றன. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்களால், ஜூனியர் வழக்கறிஞராக வார்ப்பிக்கப்பட்டவன். தமிழ்நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியனிடம் ஜூனியராக இருந்தவன். மிகச்சிறந்த வழக்கறிஞர் என்.டி. வானமாமலை அவர்களுடன் சேர்ந்து வழக்கு நடத்தி இருக்கின்றேன். இதுவரை எந்த நீதிமன்றத்திலும் யாரும் என்னை அவமதித்தது இல்லை. 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை எதிர்த்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி வருகின்றேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த ரிட் மனு எண். 5769 வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தர்மாராவ், பால் வசந்தகுமார் அமர்வு, 2010 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 28 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தீர்ப்பு அளித்தார்கள்.

ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை நாடியது.

உச்சநீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகள் நடந்த வழக்கில், 25 அமர்வுகளில் நான் பங்கேற்று இருக்கின்றேன். பின்னாளில் தலைமை நீதிபதியாக வந்த நீதியரசர் லோதா, என் வாதங்களைப் பாராட்டினார்.

2013 ஏப்ரல் 2 ஆம் நாள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், பட்நாயக், கோகலே அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்குத் தீர்ப்பு அளித்தாலும், அந்தத் தீர்ப்பில் என்னுடைய பொதுநல நோக்கத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நான் வாதாடியதையும் பாராட்டியதோடு, மிக சக்திவாய்ந்த பல வழிகளில் பலம் பெற்ற நிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும் என்று தங்கள் தீர்ப்பிலேயே என்னைப் பாராட்டி இருக்கின்றார்கள்.

2013 ஆம் ஆண்டு, இதே பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து நான் வாதாடி இருக்கின்றேன். பசுமைத் தீர்ப்பு ஆயம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தது.

அதனை எதிர்த்து நான் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீடு இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. ஸ்டெர்லைட்டை எதிர்த்து மறியல் உண்ணாவிரதம் நடைப்பயணம் எனப் பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றேன். எந்தப் போராட்டத்திலும் துளி அளவு வன்முறையும் ஏற்பட்டது இல்லை.

இந்த வழக்கில் மற்றவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத ஸ்டெர்லைட் நிர்வாகம், என் மனுவை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏன் எதிர்க்கின்றது? காரணம், என்னைச் சமரசம் செய்ய முடியாது. என்னை வளைக்க முடியாது. இந்தத் தீர்ப்பு ஆயத்தில் ஸ்டெர்லைட் குறித்து முன்கூட்டியே முடிவு செய்து கொண்டு வந்து உட்கார்ந்து இருக்கின்றீர்கள். நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகின்றீர்கள் என்பதையும் என்னால் ஊகிக்க முடியும். என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டால் அதைச் சந்திப்பேன்.

நான் அரசியல் விளம்பரத்திற்காக எதிர்ப்பதாக ஸ்டெர்லைட் தரப்பு கூறியுள்ளது. நான் பொதுத் தொண்டு ஆற்றுவதற்காக அரசியலுக்கு வந்தவன். அன்றைய பிரதமர் வாஜ்பாய் கேபினெட் அமைச்சர் பதவி தருகிறேன் என்றபோதும் நிராகரித்தவன். மிசா, பொடா சட்டங்களின் கீழ் ஒட்டுமொத்தமாக ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கின்றேன். அண்மையில் பதவி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைப் பற்றியே வெளியில் இருந்து வருகின்ற அழுத்தங்களுக்கு ஆளாகின்றார்கள் என்று குற்றம் சாட்டினார். பல நீதிமன்றங்களில் இதுதான் நடக்கின்றது.

என்னுடைய மனு மீது முடிவு தெரிவியுங்கள். இல்லையேல், இந்தத் தீர்ப்பு ஆயத்தில் எதுவும் நடக்காது.

உடனே நீதிபதி கோயல், பக்கத்தில் இருந்த நீதிபதிகளிடம் பேசிவிட்டு, நீங்கள் வாதங்களை எழுப்ப அனுமதிக்கிறேன் என்று கூறினார்.

அங்கிருந்த பல வழக்கறிஞர் வைகோ அருகில் வந்து கைகுலுக்கிப் பாராட்டினார்கள்.

வழக்கு தொடர்ந்து நடந்தது.

பகல் 1 மணி அளவில், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரை மணி நேரம் தான் வாதாட வாய்ப்புக் கேட்டார்.

உடனே நீதிபதி கோயல் வைகோவைப் பார்த்து, நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்.

நான் 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்வேன் என்று சொன்னார். ஆனால், அரிமா சுந்தரம் 2.40 வரை வாதங்களை எடுத்து வைத்தார். அடுத்து நீதிபதி கோயல் வைகோ வாதாட அனுமதி கொடுத்தார்.

வைகோ முன்வைத்த வாதம் வருமாறு:

என் நண்பர்அரிமா சுந்தரத்தின் கடிகாரத்தில் அரை மணி நேரம் என்பது ஒன்றரை மணி நேரம் ஆகும். எனக்கு 25 நிமிடங்கள் தரப்பட்டுள்ளன. நான் முக்கியமான சில வாதங்களை முன்வைக்கின்றேன்.

ஸ்டெர்லைட் ஆலையை, மராட்டிய மாநிலத்தில் இரத்தினகிரியில் விவசாயிகள் உடைத்து நொறுக்கினார்களே, மாநில அரசு உரிமத்தை இரத்து செய்ததே, அதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏன் உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்குத் தொடுக்கவில்லை?

கோவா அரசு நுழையாதே என்றது. குஜராத்அரசு இங்கே வராதே என்றது. தமிழ்நாட்டில் அன்றைய அண்ணா தி.மு.க. அரசில் அனுமதி வாங்கி, ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடியில் எங்கள் தலையில் கல்லைப் போட்டது. நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. இந்தியாவிலேயே பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து முதலில் வாள் உயர்த்தியவர்கள் எங்கள் தென்னாட்டு வீரர்கள்.

மக்கள் மன்றத்தில் போராடி விட்டு, நீதிமன்றத்திற்கு நான் சென்றேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது. உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. 2013 ஏப்ரல் 2 இல் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை வாசித்தவுடன், நீதிபதிகளைப் பார்த்து, நீதி கிடைக்கும் என்று கதவைத் தட்டினேன்; நீதி கிடைக்கவில்லை என்றேன்.

உடனே நீதிபதி பட்நாயக் என்னைப் பார்த்து, நீங்கள் பொதுநலனுக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் போராடுகின்றீர்கள். பாராட்டுகின்றேன். தொடர்ந்து போராடுங்கள் என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர அடர்த்தியில் இருந்து தாமிரத்தைத் தயாரிக்கும் உலையின் உயரம் 60 மீட்டர்கள்தான் இருக்கின்றது. ஒரு நாளைக்கு 391 டன் உற்பத்தி ஆகும்போது அந்த உயரம் சரிதான். ஆனால், இப்பொழுது ஒரு நாளைக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்கின்றார்கள். 1200 டன் தாமிர அடர்த்தி அதில் போடப்படுகின்றது.

1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி ஒரு பார்முலா இருக்கின்றது. அந்த விதிகளை முழுமையாக இதோ வாசிக்கின்றேன். அந்தக் கணக்குப்படி புகைபோக்கியின் உயரம் 99.6 மீட்டர் இருக்க வேண்டும்.
இதனால் வெளியாகின்ற நச்சு வாயுக்கள் உயரம் குறைவாக இருப்பதால் மக்கள் உயிருக்கு எமனாக ஆகின்றது.

என் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தருண் அகர்வால், தற்போதுள்ள சிம்னி உயரத்திற்கு ஏற்றவாறு உற்பத்தியைக் குறைக்க வேண்டும். அல்லது உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அங்கே பல புகைபோக்கிகள் இருக்கின்றன. தாமிர அடர்த்தி போடுகின்ற இடத்திலும் இரண்டு புகை போக்கிகள் இருக்கின்றன என்று அப்பட்டமான பொய்யைச் சொன்னார். நீதிபதி அவர்களே, உங்கள் அமர்வில் இருக்கின்ற இரண்டு நிபுணர்களுள் ஒருவரைத் தூத்துக்குடிக்கு அனுப்புங்கள். நேரடியாக அவர் பார்க்கட்டும். தாமிர அடர்த்தியைப் பயன்படுத்தும் உலையில் ஒரு புகைபோக்கிதான் இருக்கின்றது. ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் அதன் வக்கீலுக்கும் நான் சவால் விடுகிறேன். இத்தனை ஆண்டுகள் நச்சு வாயுவை வெளியேற்றி, பொதுமக்கள் உடல்நலனுக்குக் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

இன்று நான் உங்களிடம் தாக்கல் செய்த கோப்பில், 14 ஆம் பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பாருங்கள். உலகத்தில் உள்ள பல்வேறு தாமிர ஆலைகளில் புகை போக்கியின் உயரம் 100 மீட்டர்களுக்கும் அதிகமாகவே உள்ளது. விநோதம் என்ன என்றால், ஸ்டெர்லைட் நிர்வாகம் இரண்டாவதாக ஒரு ஆலையை அங்கே நிறுவத் திட்டமிட்டு இருக்கின்றதே, அதன் புகைபோக்கி உயரம் 165 மீட்டர் என்று அவர்களே குறித்து உள்ளார்கள். இப்போது இயங்குகின்ற ஆலையின் புகைபோக்கியை உடனே மாற்ற முடியாது. ஆண்டுக்கணக்கில் ஆகும். பெரும்பொருள் செலவு ஆகும்.

அமெரிக்காவில் அசார்கோ என்ற தாமிர உற்பத்தி ஆலை, 100 ஆண்டுக்கால நீதிமன்றப் போராட்டத்திற்குப் பின் மூடப்பட்டது. 30 ஆண்டுகள் ஆகியும் சுற்றிலும் உள்ள நிலங்களை இன்னமும் சீர்திருத்த முடியவில்லை.

மே 22 ஆம் தேதி போராட்டத்தில்,வெளி மாநிலங்களில் இருந்து குண்டர்களும், நக்சல்பாரிகளும் வந்தார்கள் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறினார். இது அப்பட்டமான பொய். வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், குறிப்பாகப் பெண்கள் எனப் பொதுமக்கள் இலட்சம் பேருக்கு மேல் திரண்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றனர். அவர் திட்டமிட்டே துப்பாக்கிச் சூட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

ஸ்டெர்லைட்டை எதிர்த்துக் குரல் கொடுக்க வந்த ஸ்னோலின் என்ற 11 வயது மாணவி, வாய்க்குள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து கோரமாகக் கொல்லப்பட்டார். திரேஸ்புரத்தில் ஒரு மீனவச் சகோதரி, தன் பிள்ளைக்குச் சோறு கொண்டு போகும்போது, பத்தடி தொலைவில் இருந்து காவல்துறை சுட்டதில், தலைக்குள் குண்டு பாய்ந்து மூளை சிதறித் தரையில் விழுந்தது. 13 பேரும் குறிபார்த்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தமிழக அரசின் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு இது.

இந்தத் தீர்ப்பு ஆயத்தில் இதுகுறித்து விசாரிப்பதற்கு இடம் இல்லை என்றாலும், நடந்த உண்மையை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், சுற்றுச்சூழலுக்காக உலக நாடுகளின் விருதுகளை வாங்கியவர். முன்னாள் நீதிபதிகளையும், முன்னாள் காவல்துறை அதிகாரிகளையும் கொண்ட, உண்மை அறியும் குழுவை அழைத்துச் சென்று, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை, பொதுமக்களை நேரில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை நடக்கின்றது.

இந்தியாவுக்கே வருமானம் போய் விட்டது. தாமிரம் இறக்குமதி செய்கிறோம் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் மிகவும் ஆதங்கப்பட்டார். இந்தியாவின் வருமானத்திற்காக நாங்கள் சாக வேண்டுமா? மும்தாஜ் மகால் என்ற ஒரு பெண்ணின் கல்லறைதான் தாஜ்மகல். உலக அதிசயங்களுள் ஒன்று. அந்தத் தாஜ்மகல் மாசுபடாமல் பாதுகாக்க, யமுனைக்கரையில் கோடிக்கணக்கான வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த பல தொழிற்சாலைகளை உச்சநீதிமன்றம் மூடி விட்டதே?

ஸ்டெர்லைட் ஆலையை 99.9 விழுக்காடு மக்கள் எதிர்க்கின்றார்கள். இதில் வேதனை தரும் செய்தி என்ன என்றால், தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே இவ்வளவு காலமும் செயல்பட்டார்கள். அதனால்தான், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் பலமாக வாதாடுகிறார். 44 மாதங்கள் ஆலையை ஓட்டுகின்ற அனுமதி இல்லாமலேயே ஆலையை இயக்கினார்கள் என்று நான் உச்சநீதிமன்றத்தில் கூறினேன்.

உண்மைகளை மறைப்பதும், தவறான தகவல்கள் தருவதும் ஸ்டெர்லைட்டின் வழக்கம் என்று, உச்சநீதிமன்றமே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒன்றுதான், தூத்துக்குடி மாநகர மற்றும் சுற்று வட்டார மக்களைப் பாதுகாக்கும்.

சரியாக 25 நிமிடங்களில் நான் வாதத்தை முடித்து விட்டேன் என்hறர் வைகோ. நீதிபதி கோயல், ஆமாம்; சொன்னபடியே முடித்து விட்டீர்கள் என்றார்.

நீதிபதி கோயல் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று வழக்கை முடித்து வைத்தார்.

(எதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமோ அதை மறைப்பதே நமது பத்திரிகை தர்மம்)

Summary