FEATUREDFoodGeneralSocialmediaஅறிவியல்யாவர்க்குமாம் வேதியியல்

வெங்காய வேதியியல்

Spread the love

வெங்காய வேதியியல்!!

கிறித்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னம் வெங்காயம் நடு ஆசியாவில் தோன்றி உலகம் முழுதும் பரவியதாகக் கருதப்படுகிறது. ஆயினும், பழஞ்சீனாவிலும், எகிப்து, துருக்கி, உரோம் நாடுகளில் வெங்காயம் அதிகளவு பயன்படுத்தப் பட்டிருப்பதற்கான சான்றுகள் இன்றளவும் இருக்கின்றன. எகிப்தியச் சமயச்சடங்குகளில் குருமார்கள் வெங்காயத்தை ஏந்திக்கொள்வது மரபு. வெங்காயத்தின் காரநெடியானது இறந்தவர்களை எழுப்பவைக்கும் ஆற்றலுள்ளது என்ற நம்பிக்கை இருந்ததால், இறந்தவர்களின் உடலங்களைப் பதப்படுத்துகையில் (மம்மிகள்), அவற்றின் கண்களின்மீது வெங்காயம் வைக்கப்பட்டே கட்டப்பட்டிருக்கிறது. பழந்தமிழகத்தில் இறந்தவர்களை தாழிகளில் வைத்து புதைக்கும்போது நெல்மணிகளையும் வைத்துப் புதைக்கும் மரபு இருந்ததைப்போல எகிப்தில் இறந்தவர்களின் உடலத்துடன் வெங்காயமும் வைத்துப் புதைக்கப்பட்டது. பிரமிடுகளைக் கட்டிய கட்டுமானத் தொழிலாளர்களுக்குக் கூலியாக வெங்காயம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று வெங்காயத்தைப் பற்றி பல குறிப்புகள் கிடைக்கின்றன.

அன்றைய உரோம் நாட்டில் உணவுக்காகவும், நாய்க்கடிக்கு, வாய்ப்புண்ணுக்கு, முடி உதிர்தலுக்கு, கண்பார்வைக் குறைபாட்டுக்கு மருந்தாகவும் வெங்காயம் பயன்பட்டது என்று கிபி 23 ஆம் ஆண்டில் வாழ்ந்த இயற்கை மெய்யியலாளரும், இயற்கை மற்றும் வரலாற்றாய்வு தொடர்பான பல நூல்களை எழுதிய “மூத்த பிளினி” (Pliny the Elder) குறிப்பிடுகிறார். அதோடு தனது நூலொன்றில், “கடல்கடந்து (தமிழ்நாட்டிலிருந்து) கொணரப்படும் மணிக்கற்களுக்காக, உரோமானியப் பெண்கள் நாட்டிலிருந்த தங்கம் முழுவதையும் தீர்த்துவிட்டார்கள்” என்று எழுதியக் குறிப்பையும், கொங்குநாடெங்கும் கிடைத்த உரோம் நாணயங்களையும், உரோமில் கிடைத்த தமிழ்நாட்டு மாணிக்கக்கற்களையும் கொண்டுதான், சேரநாட்டு முசிறி, மாந்தைத் துறைமுகங்களில் தொடங்கி, பாலைக்காடு, கொங்குநாட்டு கொடுமண(ம்)ல், பொதினி(பழனி), கரூர் மற்றும் சோழநாட்டுக் கடற்கரைத் துறைமுகங்களான கொற்கை, பூம்புகார் வழியாக, யவனர்கள் (உரோமானியர்கள்) சீனாவுடன் வணிகம் செய்தார்கள் என்று அறியமுடிகிறது.

வெங்காயம், ‘அல்லியம்’ என்னும் வகையைச் சார்ந்த தாவரம். வெங்காயம் என்றச் சொல்லை, ‘வெறுமை+காயம்’ என்றுப் பகுத்து எழுதி பண்புத்தொகையாகவும், அதன் தோலை உரிக்கஉரிக்க உள்ளுக்குள் ஏதுமிராது என்று கொண்டுகூட்டியும் பொருள் கொள்ளலாம். வெங்காயத்தை “உருளி அல்லது உள்ளி” என்கிறது பழந்தமிழ். இன்று வரை, தெலுங்கிலும், மலையாளத்திலும் “உள்ளி” என்றே வழங்கப்படுகிறது. நம்மைப்போன்றோர் “உள்ளி-அல்லி” என்று எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளலாம். தமிழாய்வோர், உள்ளியம்-அல்லியம் பற்றியும் ஆராயலாம். பன்னெடுங்காலமாக, நம் மண்ணில் ‘உள்ளிக்காய்’ எனப்படும் வெங்காயம் உண்ணப்பட்டு வந்திருக்கிறது. சரகர், சன்கிதர் என்னும் வடஇந்திய மருத்துவ அறிஞர்கள், வெங்காயம் உணவுச் செரிமானத்தை அதிகரிக்கச் செய்யும் என்றுச் சொல்லியிருக்கிறார்கள். 15 ஆம் நூற்றாண்டுப் புலவரான காளமேகப்புலவர் தனது சிலேடைப்பாடலொன்றில் “வெங்காயம்” என்றே குறிப்பிடுகிறார்.

கடந்தாண்டுகளில் உலகளவில், வெங்காய உற்பத்தியில் இந்தியாதான் முதலிடத்தில் இருந்துவந்திருக்கிறது. ஆனால், “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன” கதைபோல, கடந்த 2016 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4-மில்லியன் டன்கள் குறைந்து (உற்பத்தி சரிந்து) சீனாவுக்கு அடுத்து இரண்டாமிடத்துக்கு வந்துவிட்டோம். இந்தியாவில் மட்டும், கிட்டத்தட்ட முப்பது வகையான வெங்காயங்கள் பயிரிடப்படுகின்றன. கர்நாடக வெளிர்சிவப்பு (பல்லாரி), மராட்டிய இளஞ்சிவப்பு, ஆந்திர வெள்ளை, ஐரோப்பிய (இசுபானிய) கருநீலம், அமெரிக்க இனிப்பு வெங்காயங்கள் உலகப் புகழ்பெற்றவை. தமிழ்நாட்டுக்கே உரிய சின்னவெங்காயம் வெறும் 60 நாளைய பயிர்தான். ஆனால், உலகில் வேறெங்கும் சின்னவெங்காயம் பயிரிடப்படுவதாகத் தெரியவில்லை.

வெங்காய வேதியியலைப் பார்ப்போம்!!

வெங்காயத்தின் மணத்துக்கும், காரச்சுவைக்கும் அதிலிருக்கும் “அல்லினேசு” என்னும் நொதிதான் காரணம். உயிர் வளர்ச்சிக்கு அடிப்படையான உயிரி அமிலங்கள் (DNA/RNA) மற்றும் புரதங்கள் உருவாக்கம் முதல், உண்ணுவது, நுகர்வது, செரிப்பது, கழிப்பது, விதை முளைத்துச் செடியாகி, பூ பிஞ்சாகிக் காயாகிப் பழமாவது, விந்தணு கருவாகிக் குழந்தையாகி, பாலூட்டி என்று உயிரி உடலின் அத்தனை செயல்பாடுகளையும், நொதிகள்தாம் செய்துமுடிக்கின்றன. காட்டாக, வெட்டுப்பட்ட ஆப்பிள்பழம் வெகுவிரைவாக பழுப்பு நிறமாகிவிடுகிறதல்லவா? இதற்கு, ‘தைரோசினேசு’ என்னும் நொதிதான் காரணம். ‘தைரோசினேசு’ நொதிதான் ஆப்பிளில் இருக்கும் பீனால் மூலக்கூறுகளை குயினோன் எனப்படும் பழுப்புநிற மூலக்கூறுகளாக மாற்றுகின்றன.

வேதியியலில் நொதிகளின் பெயர்களைக் குறிப்பிட “ஏசு” என்னும் (வேதி)விகுதியை கரிமப்பொருளின் பின்னொட்டாகச் சேர்த்துக்கொண்டுதான் நொதிகளைக் குறிப்பிடவேண்டும். உதாரணமாக, தைரோசின்-கரிமச்சேர்மம், ‘ஏசு’ பின்னொட்டு இணைத்து, ‘தைரோசினேசு’ எனப்படுகிறது. அதுபோல, வெங்காயத்தின் வேதிப்பொருள் அலிசினுடன், ஏசு என்னும் பின்னொட்டு சேர்க்கப்பட்டு, அல்லினேசு என்று குறிப்பிடப்படுகிறது. மனிதவுடலில் மட்டும் கிட்டத்தட்ட 75000 நொதிகள் இருக்கின்றன. அப்படியானால், மனிதவுடலுக்குள் மட்டும் ஒவ்வொரு நொடிக்கும் 75000 வேலைகள் நொதிகள் மூலம் நடந்துகொண்டு இருக்கின்றன என்பதை உணரலாம். இந்த வேலைகளில் தொய்வு அல்லது மாற்றம் நடக்கும்போதுதான் நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வருகிறதே ஏன்?

பச்சோந்தி தம் நிறத்தை மாற்றிக்கொண்டும், ஓங்குநிலை ஒட்டகங்கள் கடித்துவிடாதவாறு சப்பாத்திக்கள்ளியின் புறமெங்கும் முள்கள் வளர்ந்திருப்பதைப்போல, வெங்காயமும் வெளிச்சூழல்களிலிருந்துத் தற்காத்துக் கொள்கிறது. வெங்காயத்தில், கந்தகம் (Sulphur) கலந்த கரிமவேதிப்பொருள்கள் மிக அதிகமிருக்கின்றன. அவற்றுள், “கந்தகம் பிணைந்த சிசுடீன் அமினோஅமிலமும்” ஒன்று. போருக்குத் தயாராகும் படைவீரனைப் போல, தற்காப்புக்காக, இந்த கந்தக அமிலம் சிறுசிறு பைகளில் அடைக்கப்பட்டு வெங்காயத் தோலிலைகளில் தாக்குதலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன.

வெங்காயம் வெட்டுப்படும்போது, அதன் தோல் பைகளில் அடைபட்டிருக்கும் “கந்தக அமிலம்” சிதறி வெங்காயம் முழுதும் விரவிக்கிடக்கும் ‘அல்லினேசு’ நொதியுடனும், தண்ணீருடனும் வெகுவிரைவாக (மைக்ரோ வினாடிகளில்) வினைப்பட்டு, “புரப்பேந்தையால் கந்தக ஆக்ஃசைடு” என்னும் வேதிப்பொருளாக மாறி வெளியேறுகிறது. இந்த கந்தக ஆக்ஃசைடுக்கு கண்ணீர்ச்சுரப்பியையும் அதற்கான நரம்பையும் தூண்டும் வல்லமை உள்ளதனால்தான் வெங்காயத்தை வெட்டும்போதே அழத்தொடங்கிவிடுகிறோம்.

வெங்காயம்-பயன்கள்:

நம்முடலுக்கு இரும்பு, செம்பு, துத்தநாகம், குரோமியம், சோடியம், பொட்டாசியம் போன்ற மாழைகளைப்போலவே கந்தகமும் இன்றியமையாத நுண்ணூட்டம். வெங்காயத்தில் கந்தகம் மிகுந்த அமினோ அமிலங்கள், விட்டமின்கள் குறிப்பாக விட்டமின்-C மற்றும் புற்றுச்செல்களை அழிக்கவல்ல கரிமகந்தகச் சேர்மங்கள் அதிகமிருக்கின்றன. அவற்றுள், வெங்காயத்திலிருக்கும் ஃபிளேவினாய்டு (பூக்களின் நிறமி) வகை சேர்மங்களில் ஆனியானியன்-A (ONA), ஆந்த்ரோசயனின் மற்றும் குவார்செட்டின் மிக முக்கியமானவை. பெண்கள் வெங்காயத்தை அதிகமாக உட்கொள்ளும் போது, வெங்காயத்திலிருக்கும் ONA கருப்பை புற்றுசெல்களை வளரவிடாமல் தடுப்பதால், கருப்பைப் புற்றுநோயால் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என்றொரு மருத்துவப் புள்ளிவிவரம் சொல்கிறது.

கருப்பைப் புற்று மட்டுமல்ல, கல்லீரல், கணையம், மார்பகம், குடல் விதைப்பை மற்றும் உணவுக்குடல் போன்ற உறுப்புகளில் தோன்றும் புற்றுநோய்களிலிருந்தும் வெங்காயம் நம்மைக் காக்கிறது. நீரிழிவுக் குறைபாடு, இதயநோய்கள், எலும்பு தொடர்பான நோய்களும் வெங்காயத்தை அதிகம் உட்கொள்ளுவதால் குறைகின்றன என்று சான்றுகள் கிடைக்கின்றன. வெங்காயம் நமக்கு வரம்தான்.

ஆயினும், வெங்காயப்பயிர் என்பது குறுகிய காலப்பயிராகும். இது ஏனைய பயிர்களைவிட அதிக நோய்தாக்குதலுக்கும், பூச்சித்தாக்குதலுக்கும் உள்ளாவதாலும், வெங்காய நடவில் பயிர்களுக்கிடையேயான இடைவெளி மிகவும் குறைவு என்பதாலும், நடவு நடுவதற்கு முன்பே களைக்கொல்லியுடனும், பூச்சிக்கொல்லியுடனும் தான் உழவர்கள் பயிர்செய்ய வேண்டியதாக இருக்கிறது. இதற்கு மாற்றாக இயற்கை முறைகள் முன்னிறுத்தப் பட்டாலும், நாட்டின் வெங்காயத் தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்கு உகந்ததாக இல்லை என்பதே உண்மை.

அண்மையில், வெங்காயம் பயிரிட்டு நட்டமான உழவர் ஒருவர் வீதியில் வெங்காயத்தைக் கொட்டிச்சென்ற காணொளியைப் பார்த்தபோது மனதில் தோன்றிய பதிவு இது.

செ. அன்புச்செல்வன்
08/12/2018

Doctor anbuchezian