FEATUREDLatestNature

வீட்டுக்கு முன்னே வேப்பமரம்

Spread the love

வீட்டுக்கு முன்னே வேப்பமரம்
வெப்பக் கொடுமையை போக்கும்மரம்…”

இப்படியொரு பாடல் நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது பாடமாக இருந்தது. அப்போதெல்லாம் வருகின்ற மழையை விரட்டிவிடும் பாடல் வந்திருக்கவில்லை. (அதாங்க ‘rain rain go away…’ பாடல்). அன்றைய கல்வி முறையில், ஆரம்பப் பள்ளிகளில் இருந்த பாடல்களெல்லாம் இயற்கையைக் கொஞ்சிய பாடல்களாய் இருந்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் சமூகமும் இயற்கையை காதலித்த காலங்கள் அன்றிருந்தது. சரி நாம் வேப்ப மரம் பற்றிய விசயத்துக்கு வருவோம்.

தமிழகம் முழுவதிலும் பனைமரத்துக்கு இணையான எண்ணிக்கையில் இருக்கின்ற வேப்பமரம் ஓர் இலையுதிர் மரம். மாசி, பங்குனி மாதங்களில் இலைகள் உதிர்ந்து, கடுங் கோடையான சித்திரை, வைகாசி மாதங்களில் துளிர்த்து பசுமையாகும் மரங்களுள் தலையாயது வேப்பமரம்.

சமீப காலங்களில் தமிழகத்தின் கோடை காலம் மிகக் கொடியதாக அமைந்து வருவதை அனைவரும் அறிவோம். சேயோன் (முருகன்) மேய்ந்த மைவரை உலகமும் (குறிஞ்சி), மாயோன் (திருமால்) மேய்ந்த காடுறை உலகமும் (முல்லை) மனிதனது பேராசையால் பெரு நட்டம் அடைந்துவிட்டதே கோடையின் கொடும் வெப்பத்திற்குக் காரணம்.

முன்பெல்லாம் சாலையின் இருமருங்கிலும் புளிய மரமும் வேப்ப மரமும் பல்கி நிற்கும். வீடுகள் தோறும், வீதிகள் தோறும் வேப்ப மரங்கள் இருந்தன. மேய்ச்சல் நிலங்களில், வேலிகளில், நீர்நிலைகளின் கரையோரங்களில் என வேம்பு வேர்விட்டிருந்தது. பள்ளிகள், அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள் வேப்பமரங்களால் சூழப்பட்டிருந்தன. மனிதர்களுக்கு வேப்பமரத்தின் இருப்பு வேம்பாய்க் கசந்ததால் பேர்பாதிக்கும் மேலாக அழிந்துவிட்டன.

வளிமண்டலத்தின் கீழடுக்கில் ஆக்சிஜன் இருப்பை அதிகப் படுத்துதலில் வேப்பமரம் ஆகப் பெரிய பங்களிப்பைச் செய்து வருகிறது. சில தாவரங்களில் இலை மூலிகையாய் இருக்கும், வேறு சிலவற்றில் தண்டு அந்த வேலையைச் செய்யும், மற்ற சிலதில் வேரில் மருந்திருக்கும், இன்னும் சிலவற்றில் பூவும், பலவற்றில் காயும் கனியும் மருத்துவப் பயனைத் தருவதாய் அமைந்திருக்கும். மரம் முச்சூடும் மருத்துவனாய் இருப்பது வேப்ப மரத்தில் மட்டுமே!

சங்ககாலப் பாடலில் வேம்பைப் பற்றிய பாடல்கள் பல உள்ளன. பாண்டிய மன்னனுக்கு உரிய மாலை, வேப்பம் பூ மாலையாகும். சேரன் மற்றும் பாண்டிய மன்னர்களின் காவல் மரம் வேப்பமரமாகும்.

“வாட வேம்பின் வழுதி கூடல் ” என்பது ஒரு புறப்பாடலின் வரி.

மேற்குலகம் பல வைரஸ்களுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முன்னமே! வேப்ப இலையால் வைரஸ்களை நாம் விரட்ட முற்பட்டுக் கொண்டிருந்தோம். வியாபார உலகம் நம்மையெல்லாம் பற்பசைக்குத் தள்ளிவிட்டுவிட்டு, மீண்டும் வேப்பங் குச்சியை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

பன்நெடுங்காலமாய் இதனுள் இதுதான் மருந்தாய் இருக்கின்றது என்பதை அறியாமலேயே மருந்தாய் உண்டோம், பூசினோம். மாரியாத்தா என்றோம், பேச்சியத்தா ஆக்கினோம், ஆதிபராசக்தியாய் கொண்டாடினோம்.

மருந்தாய் பக்தியாய் வளர்த்த மரம் குறைந்து கொண்டே வருகிறது. நோய்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. வளியை; சூழல் வெளியை; உடல்கடந்து அகத்தை; பசுமை மாறா சுகத்தைத் தருகின்றது வேப்பமரம்.

ஆரோக்கியம் பேண வேண்டுமென்ற சுயநலத்தின் பொருட்டாவது! திங்காத காய் காய்த்து, தின்னப் பழங்கொடுக்கின்ற மருத்துவ பொக்கிசத்தை, உயிர்க்காற்று உற்பத்தி நிலையத்தை, வேப்ப மரத்தை வளர்ப்போம்! கோடையில் குளிர்ந்திருப்போம்!

சாதாரணன் 

Leave a Reply