விண்வெளியில் ஒரு தேநீர் குவளை
விண்வெளியில் ஒரு தேநீர் குவளை
நேற்று ஓரிரு பதிவுகளில் கண்ட விஷயம் என்னை சிந்திக்க தூண்டி விட்டது. ஒரு குழுவில் ஒருவர் ‘கடவுள் இல்லை என்று எதனை வைத்து நாத்திகர்கள் உறுதியாக சொல்கிறார்கள்? கடவுள் இல்லை என்பதற்கு அவர்களிடம் ஆதாரம் இருக்கிறதா?’ என்று சவால் விட்டிருந்தார். நான் அதில் சுருக்கமாக பதில் சொல்லி இருந்தேன். அதனை சற்றே விரிவாக்கி இங்கே பகிர்கிறேன்.
முதலில் அவர் கேட்ட கேள்வியே கொஞ்சம் ஆச்சரியம் தருவது. சிந்தனை ரீதியாக நாத்திகர்கள் ஆன நிறைய பேர் கடவுள் இல்லை என்று நேரடியாக சொல்வதில்லை. நான் கூட அப்படி நினைப்பதில்லை. அது அறிவியல் பூர்வ அணுகுமுறைக்கு எதிரானது. ‘கடவுள் என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை’, இதுதான் சொல்ல வருவது. God is improbable. இந்த உலகம் குறித்து, மானுட வளர்ச்சி குறித்து, மதங்களின் வரலாறு எனக்குத் தெரிந்த அறிவை வைத்து கடவுள் என்ற ஒரு உருவகம் மனிதன் உருவாக்கிய ஒன்று என்ற முடிவுக்கு வருகிறேன். அதற்கான ஆதாரங்கள் ஆயிரக் கணக்காக இருக்கின்றன.
அதுவுமின்றி கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டுமெனில் எந்தக் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும்? பிள்ளையாரா, இயேசுவா, அல்லாவா? யாஹ்வேவா (யூதக் கடவுள்)? அதோடு ஏன் நிறுத்துவானேன்? ஜ்யூஸ் என்ற பண்டைய கிரேக்க கடவுள், இந்திரா, சோமா என்ற வேதக் கடவுளர்கள், அல்-லத், மன்-னத், அல்-உஜ்ஜா போன்ற பண்டைய அரேபியக் கடவுளர்கள், பண்டைய ஈரானில் வழிபடப்பட்ட அஹுர மஸ்தா இவர்களை இல்லை என்று நிரூபிக்க வேண்டுமா?
ஜ்யூஸ் இல்லை என்று கிரேக்கர்களே இப்போது ஒப்புக் கொள்வார்கள். சோமா என்ற கடவுளை இந்துக்களுக்கே பெரும்பாலானோருக்கு இன்று தெரியாது. முக்கிய அரேபிய மதமான இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் அல்லா தவிர மேற்சொன்ன எல்லாக் கடவுளையும் இல்லை என்று ஒப்புக் கொள்வார்கள். யூதர்கள் யாஹ்வே தவிர மீதி எல்லாக் கடவுளையும் இல்லை என்பதை ஒப்புக் கொள்வார்கள். பிள்ளையார், முருகர், ராமர், கிருஷ்ணர், அம்மன் போன்ற தற்போது ‘அமுலில்’ இருக்கும் கடவுளர்களைத் தவிர மீதி பேர் இல்லை என்பதை இந்துக்கள் ஒப்புக் கொள்வார்கள்.
ரிச்சர்ட் டாகின்ஸ் சொன்னது போல நாம் எல்லாருமே ஓரிரு கடவுளைத் தவிர வரலாற்றில் உள்ள மீதி கடவுளர்கள் விஷயத்தில் நாத்திகர்கள்தான், என்ன, நம்மில் சிலர் ஒரு படி மேலே போகிறோம். அவ்வளவுதான். (‘We are all atheists about most of the gods that humanity has ever believed in. Some of us just go one god further.’)

உலகின் மிகப் புராதனமான வழிபாட்டுத் தலம் துருக்கியில் கோபேக்ளி டெபி (Göbekli Tepe) என்ற இடத்தில் இருக்கிறது. சுமார் 12 ஆயிரம் ஆண்டுகள் பழைய தலம் இது.++ அங்கே வழிபடப்பட்ட கடவுள் (கடவுளர்கள்) யார் என்று இன்னமும் தெளிவாகவில்லை. அந்த யாருக்குமே தெரியாத புராதனக் கடவுள்தான் உண்மையான கடவுளாக இருந்து தொலைத்தால் நாமெல்லாம் மொத்தமாக காலி! இந்து, முஸ்லிம், கிறித்துவர், பௌத்தர் எல்லாருக்கும் இறந்த பின் மேலுலகத்தில் வம்பு இருக்கிறது!
சொல்லப் போனால் நாத்திகர்களாகிய நாங்கள் தப்பித்து விடுவோம். ‘கடவுளே, நீங்கள் யார் என்று தெரியாததால் நாங்கள் எதனையுமே வழிபடாமல் சும்மா இருந்தோம்!’ என்று சொல்வது safe! உண்மையில் யார் ‘மேலே’ இருக்கிறார் என்று தெரியாத பட்சத்தில் எதையாவது நம்பி இருப்பதை விட பாதுகாப்பான அணுகுமுறை. 20% chance vs. 0% chance. (இது தமாஷூக்கு சொல்லும் விஷயம்; இதை வைத்து வாதத்தை துவக்காதீர்கள், பிளீஸ்!)
அதுவுமின்றி நிரூபிப்பது என்றால் அறிவியல் ரீதியாக நிரூபிப்பது அல்லவா? அதற்கு என்ன அர்த்தம்? புவி ஈர்ப்பு விசை இருப்பதை நிரூபிக்கலாம். பால்வீதி கேலக்ஸி இருப்பதை நிரூபிக்கலாம். ஹீலியம் என்ற வாயு இருப்பதை நிரூபிக்கலாம். ‘இல்லை’ என்பதை எப்படி நிரூபிப்பது? How do we prove a negativity? நம்மால் கண்ணால் காண இயலாத gamma ray, x-ray, ultraviolet ray போன்றவற்றை கவனிக்க மற்றும் அளக்க கருவிகள் உள்ளன. (இவை இருந்திரா விடில் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிய வந்திருக்காது.) நம்மால் காதில் கேட்க இயலாத ultrasonic soundஐ அளக்க, கவனிக்க கருவிகள் உள்ளன. (To observe and to measure.) கடவுளை கண்ணால் காண இயலாது எனில் அவரை கவனிக்க, பின்தொடர நம்மிடம் இருக்கும் கருவி என்ன? மதம் எதையாவது உருவாக்கி இருக்கிறதா? (தியானம் செய்யவும், தவம் செய்யவும் போன்ற மொக்கை கமெண்ட் பதிபவர்களுக்கு கருட புராணத்தில் தண்டனை குறிப்பிடப்பட்டு இருக்கிறது!)
நோபல் பரிசு பெற்ற பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் நவீன காலத்தின் மாபெரும் சிந்தனாவாதிகளில் ஒருவர். இவரிடம் கடவுளை இல்லை என்று நிரூபித்துக் காட்ட சொல்கிறார் ஒருவர். அதற்கு ரஸ்ஸல் கொடுத்த விளக்கம் மிகப் பிரபலமானது. ‘நான் ஒரு நாள் ஒரு விஷயத்தை அறிவிக்கிறேன்: பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே விண்வெளியில் ஒரு தேநீர் குவளை தொங்கிக் கொண்டு இருக்கிறது. அந்தக் குவளை இதர கிரகங்களைப் போலவே சூரியனை சுற்றி வருகிறது. ஆனால் அது நமது பூமியின் ரேடியோ டெலஸ்கோப்களில் சிக்காது. என்கிறேன். ‘என்னய்யா உளறுகிறாய்? என்று யாராவது கேட்டால் அவரிடம் ‘முடிந்தால் அப்படி ஒரு குவளை விண்வெளியில் இல்லவே இல்லை என்று நிரூபித்துக் காட்டு பார்ப்போம்,’ என்று சொல்வேன். அதற்கு அவர் ரியாக்சன் எப்படி இருக்கும்?

Celestial Tea Pot அல்லது Russel’s Tea Pot என்று இந்த வாதத்துக்குப் பெயர். Logic Theoryயிலும் Scepticism தியரியிலும் இது அடிக்கடி பயன்படுத்தப் படும் ஒரு அணுகுமுறை. அதேதான் இங்கும் பொருந்தும்.
விண்வெளியில் தேநீர் குவளை இருக்கிறது என்று ரஸ்ஸல் அறிவித்தது போலவே ஒருவர் நம்மிடம் வந்து ‘தலையில் ஒரு நதியை தேக்கிக் கொண்டு, சக்தியை பெண்ணாக மணம் புரிந்து கொண்டு இமயமலையில் ஒரு கடவுள் வசிக்கிறார்,’ என்று அறிவிக்கிறார்; இன்னொருவர் ‘கடவுள் ஒரு கன்னியின் வயிற்றில் உதித்து, கொலையுண்டு, ஆனால் மூன்றாம் நாள் விழித்து எழுந்தார்,’ என்று அறிவிக்கிறார்; வேறொருவர் ‘உருவம், குணம் எதுவுமின்றி ஒரு கடவுள் இருக்கிறார்; கடைசியாக ஒரு முக்கிய போதகரிடம் மட்டுமே அவர் ஒரு தேவதையின் மூலம் பேசி இருக்கிறார்,’ என்று அறிவிக்கிறார்.

இவற்றில் எதனை தனியாக இல்லை என்று நிரூபிப்பது?
கடைசியாக, இதனை நான் எழுதத் துணிந்ததன் முக்கிய காரணம் பதிவிட்ட அந்த இரண்டு பேருமே டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை நக்கல் அடித்து இருந்தனர். அது நிரூபிக்கப்படாத ஒன்று என்று அடித்து விட்டு இருந்தனர். அதுதான் அதிர்ச்சியை கொடுத்தது. தியரி என்று ஒன்று அழைக்கப்படுவதாலேயே அது நிரூபணம் ஆகாத ஒன்று என்று ஆகி விடாது. இன்றைய அறிவியலில் ‘தியரி’ என்ற பதம் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஐன்ஸ்டைனின் ரிலேடிவிடி கூட தியரி என்றுதான் அழைக்கப் படுகிறது. க்வாண்டம் தியரி கூட தியரிதான். ஆனால் இவை நிரூபணம் ஆகாத விஷயங்கள் என்று ஓரளவு அறிவுள்ள யாரும் சொல்ல முடியாது.
போலவே Evolution through Natural Selection என்ற ஒன்று நிரூபணம் ஆகி மாமாங்கங்கள் ஆகின்றன. உலகில் எங்கே தோண்டினாலும், வானத்தில் எங்கே பார்த்தாலும் அதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. ‘எங்கு நோக்கினும் சக்தியடா’ என்பது போல எங்கு நோக்கினும் evolution-தான்.
டார்வின் முன்வைத்தது ஒரு கோட்பாட்டு அளவில்தான்; ஆனால் இன்று பரிணாம வளர்ச்சியை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, பரிசோதனைகள் செய்து ஆயிரக் கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டு விட்டன. கணக்கற்ற ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. Evolutionary Biology, Evolutionary Psychology, Anthropology, Paleontology என்று பல்வேறு சிறப்புத் துறைகள் உலகெங்கும் செயல்படுகின்றன. Genetic Engineering, Bio Technology என்று தொழில் நுட்ப பயன்பாடுகள் வந்து விட்டன. பசுமைப் புரட்சி கொண்டு வந்து உலகின் பசியைப் போக்கியது, கான்சர் நோயை கண்டறிவது, அதற்கு சிகிச்சை அளிப்பது, ஜெனெடிக் இன்ஜினியரிங் முறையில் பயிர்களை, செடி, கொடிகளை தேவைப்படும் முறையில் தயாரிப்பது, டெஸ்ட் டியூப் குழந்தை உருவாக்குவது, microevolution முறையில் நோய்த்தடுப்பு மருந்துகளை உருவாக்குவது என்று இன்று உலகில் டஜனுக்கும் மேற்பட்ட விஷயங்கள் மானுட குலத்தின் பயன்பாட்டில் இருந்து நம் வாழ்வை மேம்படுத்தி இருக்கின்றன. பரிணாம வளர்ச்சி பொய் என்றால் இவை எதுவுமே நடைமுறையில் சாத்தியம் ஆகி இருந்திருக்க முடியாது.
க்ளோனிங் முறையில் சிறப்பு உடல் பாகங்களை தயாரிப்பது இதில் முக்கியமானது. கணையம், இதயம் போன்ற அங்கங்களை செயற்கை முறையில் உருவாக்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இன்னும் 40-50 வருடங்களில் இவை வெற்றிகரமாக ஆகி விடும். அப்போது ‘உங்களுக்கு டயபடீஸ்’ என்று டாக்டர் சொன்னால் அமேசான் போய் ‘ஒரு கணையம் பார்சேல்’ என்று ஆர்டர் பண்ணி விட்டு, நாலு குளோப் ஜாமுனை உள்ளே தள்ளலாம்.
வருங்காலத்தில் கர்ப்பமானதும் டிஎன்ஏ பரிசோதனை செய்து ‘குழந்தைக்கு எதிர்காலத்தில் கான்சர் வரும் ஆபத்து இருக்கிறது,’ என்று கண்டுபிடித்து கருவிலேயே மரபணுவை ‘திருத்தங்கள்’ செய்து கான்சர் வராமலேயே செய்து விடலாம். அவ்வளவு ஏன், குழந்தைக்கு கணக்குப் பாடம் படிப்பதில் பிரச்சினை வரும், மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருக்கும் போன்ற விஷயங்களையும் கருவிலேயே திருத்தி சரி செய்து விடலாம். இந்த மாதிரி Designer Babies வருவதன் சமூக விளைவுகள் குறித்து உளவியல் துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. (இந்த மரபணு திருத்த தொழில் நுட்பம் உருவாக்கிய இமானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிஃபர் தௌடனா இருவருக்கும் இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.)

ஆக்ஸ்ஃபோர்ட் உருவாக்கி பரிசோதனை செய்து கொண்டிருக்கும் கோவிட் தடுப்பு மருந்து சிம்பான்சி குரங்குகளை தாக்கும் அடினோவைரஸ் என்ற வைரசின் மரபணுவில் (RNA) இருந்து உருவாக்கப்பட்டது. பரிணாம வளர்ச்சி தத்துவத்தில் நம்பிக்கை அற்றவர்கள் உண்மையில் அந்த தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளக் கூடாது.
இவ்வளவு முன்னேற்றங்களை மானுட குலத்துக்கு கொண்டு வந்த விஷயத்தைத்தான் ‘நிரூபணமே இல்லை’ என்று அலட்சியமாக சொல்கிறார்கள். இவர்களுக்கு டார்வின் பற்றித் தெரிந்தது எல்லாம் ‘குரங்கில் இருந்து மனிதன் வந்தான்’ என்ற ஒற்றை விஷயம்தான். அதைத் தாண்டி எதையுமே படித்திருக்க மாட்டார்கள். ஆர்வமிருப்பவர்கள் போய்ப் படியுங்கள். It will blow your mind.
முடிவாக, மதம் என்ற ஒன்று மூவாயிரம் வருடங்களாக இருக்கிறது. கடவுள் என்ற ஒன்றை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், கடவுள் பெயரை சொல்லி கோடிக்கணக்கான சொத்துக்களை குவித்தவர்கள், கடவுள் பெயரை சொல்லி நூற்றுக் கணக்கான போர்களை உலகெங்கும் துவக்கி மில்லியன்களில் அப்பாவிகள் சாகக் காரணமாக இருந்தவர்கள், இன்றும் கூட கடவுள் பெயரால், கடவுளின் தூதர்கள் பெயரால் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டு வருபவர்கள் யாரும் ஒருவர் கூட கடவுளின் இருப்பு குறித்து ஒரே ஒரு குந்துமணி ஆவணம் கூட முன்வைத்ததில்லை. ஆனால் அதனைக் கேள்வி கேட்பவர்களிடம், முடிந்தால் இல்லை என்று நிரூபித்துப் பார் என்று வெட்கமே இன்றி சவால் விடுகிறார்கள்.
இடையில் ஒரு தேநீர்க் குவளை, மூவாயிரம் வருடங்களுக்கும் கேட்பாரற்று மேலே விண்வெளியில் சுற்றியவாறே இருக்கிறது.
.
.
.

++ – கோபேக்ளி டெபியின் படம்….☝
Srithar subramaiam