வாயுவேகமும் மனோவேகமும்

Spread the love

வாயுவேகமும் மனோவேகமும்
-ராஜ்சிவா(ங்க்).

அற்புதமானதொரு மாலைப் பொழுதில் பௌர்ணமி நிலா வானில் சிரித்துக் கொண்டிருக்கிறது. கண்விரிய அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் இரண்டு வயது மகள் அருகில் வந்து நிற்கிறாள். நிலாவிலிருந்த கண்ணைத் தாழ்த்தி மகளைப் பார்க்கிறீர்கள். மகள் அதைவிட அழகாக மிளிர்கிறாள். நிலா.. மகள்.., மகள்.. நிலா.. என்று மாறி மாறிப் பார்க்கிறீர்கள். அப்போதுதான் அந்தச் சிந்தனை உங்களுக்கு உதிக்கிறது. “எவ்வளவு தூரத்திற்கு அப்பால் இருக்கிறது நிலா. என் மகளைப் பார்த்த மறுகணம் நிலாவைப் பார்க்கிறேன். மாறி மாறிப் பார்க்கிறேன். என் சிந்தனை மகளிலிருந்து நிலாவுக்கு நேர இடைவெளியற்றுப் பாய்கிறது. அப்படியெனில் என் சிந்தனை எவ்வளவு வேகமானதாக இருக்க வேண்டும்? மனோவேகம் என்பது ஒளியின் வேகத்தைவிட அதிகம் என்பதில் சந்தேகமேயில்லை.” என்று நினைத்துக் கொள்கிறீர்கள்.

நிலா என்ன நிலா. வானில் தெரியும் உடுக்களைப் பார்த்தாலும் இதே நிலைதான். உங்கள் சிந்தனை ஒரே கணத்தில் அல்ஃபா செண்டாரி உடுக்களைத் தொட்டுத் திரும்பும். ஒளி சென்று வரவே எட்டு வருடங்கள் ஆகும் அல்ஃபா செண்டாரி உடுக்களை, ஒரே நொடியில் தொட்டுத் திரும்புவீர்கள். இன்னும் மேலே மேலே பல மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்திலுள்ள உடுத்திரள்களையும் தொட்டுத் திரும்பலாம். மனோ வேகம் என்பது கற்பனைக்கும் எட்டாத வேகத்தில் பாயும் அற்புதக் குதிரைதான்.

இப்படித்தான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அவை அத்தனையும் அறிவியல்படி ரொம்பவே தப்பு. தவறான முடிவுகள்.

‘பேரண்டத்தினுள் இருக்கும் எதுவுமே, இன்போர்மேசன் என்னும் தகவல் பரிமாற்றங்கள் உட்பட, எதனாலும் ஒளியின் வேகத்தை விஞ்சிப் பயணிக்க முடியாது’ என்கிறது இயற்பியல். அதனால்தான் என்டாங்கிள்மென்ட் மூலம் இரு துகள்களின் தகவல் பரிமாற்றத்தை ஐன்ஸ்டைனால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘Spoocky action at a distance’ என்று அவர் சொன்னதன் காரணமும் அதுதான். அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. குவாண்டம் துகள்களின் இந்தப் பயமுறுத்தும் செயலுக்கு, தன்வரையில் வேறுவிதமான உதாரணங்களைக் கொடுத்துக் குழப்பினார். தகவல் பரிமாற்றம்கூட ஒளியைவிட அதிக வேகத்தில் நடக்க முடியாது என்று ஐன்ஸ்டைன் நம்பினார். அன்றிருந்த குவாண்டம் இயற்பியலாளர்களுக்கும், ஐன்ஸ்டைனுக்குமிடையே பலவித விவாதங்கள் நடைபெற்றன. இந்த இடத்தில் ஐன்ஸ்டைன் சற்றுத் தோற்றுப் போனது உண்மையே! இந்த ஐன்ஸ்டைனின் நம்பிக்கையைத்தான் நேற்று நான் எழுதிய ‘குவாண்டம் டெலிபோர்ட்டேசன்’ உடைத்திருக்கிறது. தகவல்களை ஒளியின் வேகத்தைவிட மிக அதிக வேகத்தில் அனுப்பலாம் என்பதற்கான முதற்காலடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது நீங்கள், “என்ன உளரல் இது? என்னால் இந்தக் கணத்தில் அல்ஃபா செண்டாரி உடுக்களைப் பார்க்க முடிகிறதே! அதற்கு நான்கு வருடங்கள் எனக்கு எடுக்கவில்லையே? நினைத்த கணத்தில், நிலாவையும், நான்கு ஒளியாண்டு தூரத்திலிருக்கும் அல்ஃபா செண்டாரியையும், மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்திலுள்ள உடுத்திரள்களையும் மாறி மாறி பார்க்க முடிகிறதே! அதுமட்டுமா? நான் சென்ற வருடம் சென்று வந்த நியூயோர்க்கில் இருக்கும் சுதந்திரச் சிலையை, இப்போது நினைத்தாலும், என் மனம் அந்தச் சிலைக்கருகே என்னைக் கொண்டு செல்கிறதே! அப்படியென்றால், என் சிந்தனை ஒளியின் வேகத்தைவிடப் பலமடங்குகள் அதிகமாகத்தானே இருக்க வேண்டும்? எதற்குத் தேவையில்லாமல் எங்களைக் குழப்புகிறீர்கள்? நாங்கள் இந்த விசயத்தில் தெளிவாகவே இருக்கிறோம்” என்பீர்கள். சரிதான். நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட விதம் அப்படி. வாயுவேகம், மனோவேகம். கற்பனைக் குதிரை, அது இதுவென சற்று மிகைப்படுத்தப்பட்டிருக்கிறோம். மெல்ல நிதானமாக இதுபற்றிப் பார்க்கலாம்.

நீங்கள் நிலாவைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது அல்ஃபா செண்டாரியாகவோ அல்லது பல ஒளியாண்டுகளுக்கப்பால் இருக்கும் எதுவாகவும் இருக்கட்டும். நிலாவை நீங்கள் பார்க்கும் செயலானது, தொலைவிலிருக்கும் நிலாவைப் பார்க்க உங்கள் மனம் அங்கு சென்றதாக அர்த்தமில்லை. நீங்கள் நிலாவுக்கு அருகில்கூட செல்வதில்லை. அப்படிச் சென்றால், உங்களுக்குத் தெரியும் நிலாவின் தோற்றமே வேறானது. ஆனால், நீங்கள் நிலாவைப் பார்ப்பதன் காரணம், நிலா உங்களைச் சந்திக்க, உங்கள் கண்ணுக்கு அருகே வந்து காத்திருப்பதுதான். உங்கள் விழித்திரைக்கு மிக அருகிலேயே நிலாவிலிருந்து வந்த ஒளி, ‘என்னைப் பார்!’ எனச் சொல்லிக் காத்திருக்கிறது. அந்த நிலாவின் ஒளி, அப்போது வந்ததல்ல. சில நொடிகளுக்கு முன்னரே நிலாவிலிருந்து புறப்பட்டு வந்தது. அந்த ஒளியையே நீங்கள் நிலாவாகப் புரிந்து கொள்கிறீர்கள். அல்ஃபா செண்டாரி உடுக்களின் ஒளி, நாலு ஆண்டுகளுக்கு முன்னரே புறப்பட்டு, உங்கள் கண் இமையின் கதவுகளைத் தட்டிக்கொண்டு, ‘எங்களையும் பார்!’ என்று எப்போதும் காத்திருக்கின்றன. நீங்கள் வானத்தில் கண்ணை உயர்த்திப் பார்க்கும் கணத்தில், அல்ஃபா செண்டாரி உடுக்களை பார்க்கப் புறப்படுவதில்லை. அவை, நீங்கள் பார்ப்பதற்காகவே நான்கு ஆண்டுகள் பயணத்தினூடாகத் தங்கள் ஒளியை அனுப்பி வைத்திருக்கின்றன. சொல்லப் போனால், நீங்கள் அவற்றைப் பார்ப்பதற்கு நேரமே ஒதுக்கத் தேவையில்லை. உங்கள் சிந்தனையும் வேகமாகப் பயணம் செய்யவில்லை. எல்லாமே விழித்திரைக்கும், மூளைக்குச் செல்லும் நேரம் மட்டுமே!

இதுபோலவே, நீங்கள் கடந்த வருடம் சென்றுவந்த அமெரிக்காவை, இப்போது நினைக்கும்போதும், அங்கு செல்ல முடிவதும். நீங்கள் அமெரிக்கா சென்றுவந்த தகவல் அனைத்தையும் உங்கள் மூளை, தனது ஒரு மூலையில் பதிவுசெய்து வைத்திருக்கிறது. உங்களின் நினைவுத் தேவையைப் பொறுத்து அதைத் தேடி எடுத்து ஞாபகங்களாகத் தருகிறது. நீங்கள் அமெரிக்காவின் சுதந்திரச் சிலைக்கு நினைத்த மாத்திரத்தில் சென்றுவிடவில்லை. உங்கள் மூளைக்குள்ளேயே சிறிய இடத்தில் பயணம் செய்கிறீர்கள். ஒரு அடி நீளத்துக்குள் இருக்கும் மூளைக்குள் நடக்கும் நியூரோன் பாய்ச்சலைத்தான் நாம் மனோவேகம் என்கிறோம். நான் இப்படிச் சொல்வதால், சிந்தனையின் வேகத்தைக் குறைத்துச் சொல்வதாக அர்த்தப்படுத்தி விடாதீர்கள். நம் சிந்தனை என்பது, நியூரோன்கள் மூலமாக மூளைக்குள் நடைபெறும் ஒருவித மின்பாய்ச்சல்தான். சாதாரணமாக நம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தில் பாயும் எலெக்ட்ரோன்கள் போல அங்கு மின்பாய்ச்சல் நடைபெறுவதில்லை. நம் மூளையில் 86 பில்லியனுக்கும் அதிகமாக நியூரோன்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் 100 ட்ரில்லியன் Synapse களால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை வழியே நடைபெறும் வானவேடிக்கைதான் நாம் சிந்தனை என்று சொல்வது. இங்கு அயோன்களே (ions) மூளை மின்னைக் கடத்துகின்றன. ஒரு நொடியில் பல சிக்கலான பாய்ச்சல்கள் நடைபெற்றாலும், ஒளியின் வேகத்தைவிட அவை அதிகமானதல்ல. கணணியில் எப்படியோ, அதுபோன்ற அல்காரிதங்கள் மூளையில் நடைபெற்றே ஒரு ஞாபகத்தை நமக்குக் கொண்டுவருகிறது மூளை. மூளையின் கொள்ளளவும், கணிப்பளவும் அதிகம் என்பது உண்மைதான். ஆனால், அந்த அல்காரித அலசல் வேகம் கணணிகளைவிடச் சற்றுக் குறைவுதான்.

சரி, மெல்லச் சொல்லப் போய், அதிகம் அறுத்துவிட்டேன். வாயுவேகம், மனோவேகம் என்பவை கற்பனைக்கு எட்டாதவைதான். ஆனால், அவை ஒளியின் வேகத்தைவிட அதிகமானதில்லை. அப்படி நாம் புரிந்து கொள்கிறோம் அல்லது புரிய வைக்கப் பட்டிருக்கிறோம். அவ்வளவுதான்.

@ ராஜ் சிவா

Leave a Reply