LatestNature

வரை ஆடு

Spread the love

வரை ஆடு
வால்பாறை சாலை .
தமிழ்நாடு

அருகி வரும் இனங்களில் ஒன்றான வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காகும். ஒரு காலத்திலே நூற்றிற்கும் குறைவான எண்ணிக்கையை எட்டிய போது வரையாடுகள் அதிக அக்கரையோடு பாதுகாக்கப்பட்டன. வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட சரணாலயம் கேரளாவில் மூணாறுக்கு அருகே இரவிகுளத்தில் அமைந்துள்ளது . 2014ல் நடத்தப் பட்ட வரையாடுகள் கணக்கெடுப்பின் படி இரவிகுளத்தில் இவற்றின் எண்ணிக்கை 846 ஆகும். 1996ல் இது 640 ஆக இருந்தது. இன்று அது 1000 த்தைத் தொட்டிருக்கலாம். இரவிகுளம் ,மூணாறு, அகத்தியமலை , ஆனைமலை, முக்குறுத்தி, ஸ்ரீ வில்லிப்புத்தூர், மேகமலை போன்ற இடங்களில் இவை வசிக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் ஒரு வட்டார வாழ் உயிரியே இந்த வரை யாடுகள். ( Endemic peacies) ஆங்கிலத்தில் ( Nilgiri Tahr) நீல்கிரி தார் என்பதே இவற்றின் பெயராகும். செங்குத்தான மலைச்சரிவுகளில் ஏறவும் இறங்கவும் உதவும் விதமாக இவற்றின் குளம்புகள் அமைந்துள்ளன. பாறைகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் இவற்றின் குளம்புகள் V வடிவில் விரிந்து சறுக்கி விழாமல் நிற்க உதவுகின்றன. இன்று உலக அளவில் 2500 ற்கும் குறைவான ஆடுகளே எஞ்சியிருப்பதாகப் புள்ளி விபரங்கள் ‍ உள்ளன. இவற்றின் பேறுகாலக் காலம் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும்.6 முதல் 71 வரையிலான கூட்டங்களாக இவை வசிப்பதாகச் சில கணக்குகள் உண்டு. கூட்டத்தின் தலைவி பெண் ஆடு ஆகும். ஆண் ஆடுகள் கூட்டத்தோடு வசிப்பது இல்லை. இணை சேரும் காலங்களில் (இனப்பெருக்க காலங்களில்) மட்டும் இவை கூட்டத்தோடு இணைகின்றன. மற்ற நேரங்களில் இவை தனித்தே காணப்படுகின்றன. வருடத்திற்கு ஒரு குட்டி மட்டுமே இவை ஈனுகின்றன. அபூர்வமாக இரண்டு குட்டிகள் ஈனுவதும் உண்டு. இனப்பெருக்க காலங்களில் ஆண் ஆடுகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும். வெற்றி பெறும் ஆண் ஆடு கூட்டத்தில் உள்ள பல பெண் ஆடுகளும் இணை சேருகிறது. வேட்டையாடும் விலங்குகளை விட இவற்றின் வாழிடச் சூழல் அழிந்ததே இவற்றின் எண்ணிக்கை குறையக் காரணம் எனலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த புல்மேடுகள் அழிக்கப்பட்டுத் தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். எஞ்சியிருக்கும் வரையாடுகள் காக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Leave a Reply