LatestTOP STORIESஅறிவியல்

லட்சம் ஒளியாண்டு கடந்த உங்கள் சொந்த போட்டோன்

Spread the love

சற்றே வித்தியாசமான அறிவியல் தகவல். படித்தால் குழம்பிப் போவீர்கள். அதனால், படிக்காமல் இருப்பதே நல்லது. எச்சரிக்கை..!

இதை உங்களால் நம்பமுடியாது. புரிந்து கொள்வதும் கடினம். இது உண்மையல்ல என்றுதான் கடைசிவரை நினைப்பீர்கள். இதற்குமுன் தமிழில் இதை வேறு யாரும் எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. எழுதி இருந்தால் மகிழ்ச்சியே!

மேலே படிப்பதற்கு முன்னர் உங்களிடம் ஒரு விண்ணப்பம். நான் அறிவியலை உங்களுக்காகத்தான் எழுதுகிறேன். உங்கள் அனைவரையும் அது சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்கூட. ஆனால், அதற்கான என் மெனக்கெடல் மிக அதிகம். ஆனால், நான் எழுதுவதைச் சிலர் அப்படியே காப்பி செய்து தங்கள் பெயரில் போட்டுவிடுகிறார்கள். நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உங்களுக்காகத் தேடி எழுதுவதை ஒரு நொடியில் சிதைத்து விடுகிறார்கள். அறிவியல் யாருக்கும் சொந்தமானதல்ல. நான்கூட இன்னுமொரு ஊற்றிலிருந்துதான் இவற்றைப் பெற்று, புரிந்துகொண்டு எழுதுகிறேன். ஆனால், இந்த எழுத்தும், அதன் அமைப்பும் என்னுடையது. அதற்கான உழைப்பும் என்னுடையது. இதைக் காப்பி செய்து போடும்போது, மூலையில் என் பெயரையும் போடுவது நியாயமல்லவா?

இது எல்லாருக்குமானதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே! அது தவிர்ந்து, இந்தப் பதிவைப் பலர் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

சரி, இனி விசயத்துக்குப் போகலாம் வாருங்கள்.

கண்ணை உயர்த்தி வானைப் பாருங்கள். பல ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்திரங்கள், காலக்ஸிகள் எல்லாம் தெரியும். நாலு முதல் நாலு பில்லியன் ஒளியாண்டு தூரங்களிலெல்லாம் நட்சத்திரங்களையும், காலக்ஸிகளையும் உங்களால் பார்க்க முடியும்.

நான் வழக்கமாகச் சொல்வதுபோல, அவற்றின் ஒளி நம் கண்ணை வந்தடையப் பல ஒளியாண்டுகள் எடுக்கும். உதாரணமாக, ஒரு இலட்சம் ஒளியாண்டு தூரத்தில், ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள் என்றால், அதனுடைய ஒளி உங்களை வந்தடைய ஒரு இலட்சம் ஆண்டுகள் எடுக்கின்றன என்று அர்த்தம். அதாவது, நீங்கள் பார்ப்பது, ஒரு இலட்சம் ஆண்டுக்கு முன்னால் உள்ள நட்சத்திரத்தைத்தான். இதுவரை ஓக்கே. இதுவெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான். இதைப் பல தடவைகள் சொல்லியும் இருக்கிறேன். ஆனால், இனிச் சொல்லப் போவதுதான் புதுசு.

ஒரு இலட்சம் ஒளியாண்டு தூரத்திலிருக்கும் நட்சத்திரத்தில் தோன்றி, ஒருஇலட்சம் ஆண்டுகள் பயணம் செய்து வரும் போட்டோன்களில் ஒருசில, உங்கள் விழித்திரையைத் தொட்டதும் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்கின்றன. அத்தனை போட்டோன்களும், உங்கள் கண்ணை வந்தடைய வேண்டும் என்பதற்காகவே உருவானவை. இது எவ்வளவு அதிசயம் பாருங்கள். உங்கள் கண்களின் விழித்திரையால் உள்வாங்கப்படுவதற்கென்றே, அந்த நட்சத்திரம் சில போட்டோன்களைத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கிறது. அவை உங்களுக்குச் சொந்தமானவை. இதுபோல வானில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உங்களுக்கென்று சொந்தமாகப் போட்டோன்களை உருவாக்கி அனுப்பி வைக்கின்றன. ஆச்சரியமாக இல்ல? ஆனால், நான் சொல்ல வந்தது இதுவல்ல.

ஒரு இலட்சம் ஒளியாண்டு தூரத்திலிருந்து வரும் போட்டோன், உங்களை வந்தடைய ஒரு இலட்சம் ஆண்டுகள் எடுக்கும் என்பது உண்மைதான். அது உங்கள் சார்புப் பார்வையில், ஒளி வேகத்தில் அந்தப் போட்டோன் நகர்ந்து உங்களை அடைய அவ்வளவு காலம் எடுக்கும்தான். ஆனால், அந்த போட்டோனின் சார்பாக நடப்பது என்னவென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது தெரிந்தால் அதிர்ந்து போய்விடுவீர்கள்.

ஐன்ஸ்டைனின் கோட்பாட்டின்படி, ஒரு பொருளின் வேகம் அதிகரிக்க அரிகரிக்க, அந்தப் பொருளிற்கான காலம் சுருங்கிக் கொண்டே போகும். அந்த வேகம் ஒளியின் வேகத்தை அடைந்ததும் காலம் பூச்சியமாகும். அதாவது காலம் நிலையாக உறைந்தது போல (freeze) ஆகிவிடும். அதனால், எப்போது ஒரு போட்டோன் ஒளிவேகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறதோ, அந்தக் கணத்தில் அதற்குக் காலம் இருப்பதில்லை. அதனால், அந்தப் போட்டோனைப் பொறுத்தவரை, அது எந்தக் கணத்தில் தன் பயணத்தை ஆரம்பிக்கிறதோ, அப்போதே போகவேண்டிய இடத்துக்கும் சென்றுவிடுகிறது.

என்ன புரிகிறதா?
ஒரு இலட்சம் ஒளியாண்டு தூரத்திலிருந்து, ஒரு போட்டோன் உங்களை வந்தடைய, ஒரு இலட்சம் ஆண்டுகள் தேவை. அது உங்கள் பார்வையில். ஆனால், போட்டோனின் பார்வையில் காலம் உறைந்துவிடுவதால் அந்தக் கணமே அதன் பயணம் முடிந்துவிடுகிறது. ஒரு இலட்சம் ஒளியாண்டுகள் தூரம் மட்டுமில்லை. 13 பில்லியன் ஆண்டுக்கு முன்னர் நடந்த பெருவெடிப்பின் பயனாக உருவான போட்டோன்கள்கூட, கண்மூடித் திறப்பதற்குள் உங்களிடம் வந்துவிட்டதாகவே நினைக்கும்.

இனி எவராவது உங்களிடம், ‘காலம்தான் பதில் சொல்லனும்’ என்று சொன்னால், ‘யார் காலம், என் காலமா? உன் காலமா?’ என்று திருப்பிக் கேளுங்க.

ராஜ் சிவா

Leave a Reply