யாவர்க்குமாம் வேதியியல்-6

Spread the love

யாவர்க்குமாம் வேதியியல்-6
#Chemistry_for_everyone

ஜெர்மனியின் தலைநகர் ‘பெர்லின்’ க்கு அடுத்த பெரிய நகரம் ‘ஹம்பர்க்’. இது வடபுலக்கடலில் இருந்து 100 மைல்கள் உள்ளே தள்ளி, ‘எல்பி’ என்னும் நதிக்கரையில் இருந்தாலும், பலநூறு ஆண்டுகளாக, இது துறைமுக நகரமென்றே குறிப்பிடப்படுகிறது. கப்பல் கட்டுமானங்களுக்கும், வணிகத்துக்கும் பெயர்பெற்ற இந்த மாநகரில்தான் ஹென்னிக் பிராண்ட் என்னும் ஆல்கெமிஸ்ட் பிறந்தார். நோய் தீர்க்கவல்ல, செம்பைத் தங்கமாக மாற்றும் மந்திரக்கல்லை கண்டுபிடிக்க வேண்டுமென்ற அவரின் தீரா வேட்கையையும், அதை மனிதச்சிறுநீரில் இருந்து தயாரித்துவிடலாமென்று அவர் நம்பியதையும் கடந்த பதிவில் பார்த்தோம்.

பலநூறு லிட்டர்கள் சிறுநீரை தனக்குத் தெரிந்தவரிடமெல்லாம் வாங்கிச் சேமித்து அதைக் கலன்களில் நிரப்பி, சிறிது சிறிதாக எடுத்து அதைச் சுண்டக்காய்ச்சினார். கரிபோல குழைமமாகி, இறுதியில் தீய்ந்துபோன அடிவண்டலும்தான் கிட்டியது. கறுப்பான அந்த அடிவண்டலைச் சாடிகளில் சேமித்து, அதை நொதிக்கவைத்து, அதில் “புழு” உருவாகும் வரைக் காத்திருந்தார். நீங்கள், உவ்வே… என்று சொல்வது எனக்குக் கேட்கிறது.

இங்கே ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். நம் சிறுவத்தில், நன்றாக வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு செடியின்மீது சிறுநீர் கழித்து விளையாடியிருப்போம். பெரும்பாலும் கிராமப்புறப் பள்ளியில் படித்தவர்கள் இதைச் செய்திருக்கலாம். தொடர்ந்து இரண்டுமூன்று நாள்கள் ஒரே செடியின்மீது சிறுநீர் கழிக்க, அது வாடிவதங்கிப் பின்னர் காய்ந்துவிடுமல்லவா? காரணம் சிறுநீர் என்பது யூரிக் அமிலமும், இன்னபிற நுண்ணூட்டக் கழிவுகளும் செறிந்த கலவை என்பதால்தான். உடலில் இருக்கும் உறுப்புகள் இரத்தத்திலிருந்து நுண்ணூட்டங்களை எடுத்துக்கொண்டு, கழிவுகளை இரத்தத்தில் விட்டுவிடும். இந்தப் பரிமாற்றத்தை புரதங்கள் தாம் செய்கின்றன. அதாவது, கழிவுகள் மிகுந்த இரத்தமானது, சிறுநீரகத்தில் இருக்கும் ‘நெப்ரான்கள்’ எனப்படும் சிறுநீர்வடிகட்டியை அடைந்து கழிவுகள் சிறுநீராக வடிகட்டப்பட்டு சிறுநீர்ப்பையில் சேகரமாகி நிறையும்போதுதான் நமக்குச் சிறுநீர் கழிக்கத்தோன்றுகிறது. நெப்ரான்கள் என்பன சிறுநீரகத்தில் இருக்கும் 5 முதல் 55 மிமீ நீளமான சன்னமான குழாய்கள். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 50 இலட்சங்கள் வரை நெப்ரான்கள் இருக்குமாம். ஒரு சிறுநீரகத்தில் இருக்கும் மொத்த நெப்ரான்களை இணைத்து நீட்டினால் 100 கிலோமீட்டருக்கு மேல் வருமென்று சொல்கிறது அறிவியல். அதாவது, நம் உடலுறுப்புகள் கழிக்கும் கழிவுகள் ஒவ்வொரு முறையும் 100 கிலோமீட்டர்களுக்கும் மேலாகப் பயணித்துதான் சிறுநீராக வெறியேறுகின்றன.

நுண்ணூட்டமான யூரியா மிகுந்த சிறுநீரானது செடியின் மீது படும்போது வாடிவிடுவதற்கு “சால மிகுத்து” அதன்மீது சிறுநீர் பெய்வதால்தான். ஆனால், ஹென்னிக், கலன் கணக்கில் வாங்கிய சிறுநீரைச் சுண்டக்காய்ச்சித்தானே சாடிகளில் நொதிக்க வைத்தார். அப்படியானால், சாடிகளில் சேமித்த அந்த அடிவண்டல்களில், யூரியாவும் இன்னபிற நுண்ணூட்டங்களும் செறிந்துதானே இருக்கும்? அதில் எப்படி “புழு” வளரமுடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆகவே, புழு வளர்வதற்குத் தேவையான வேறு நுண்ணூட்டங்கள் இருக்கலாம், அவற்றைக்கொண்டு, மந்திரக்கல்லைத் தயாரித்துவிடலாமென்று நம்பினார் ஹென்னிக். ஆகவேதான், சிறுநீர் தீய்ச்சலை ‘புழு’ உண்டாகும்வரை நொதிக்க வைத்தார்.

அவ்வாறு நொதித்துப்போன கரிய குழைமத்தை எடுத்து மணலுடன் கலக்கி, எரியும் செந்தணலில் போட, அது சிறுசிறு துளிகளாக வெடித்து வெடித்துச் சிதறின. சிதறிய தீக்கங்குகள் யாவும் விண்மீன்கள் ஒளிர்வதைப்போல வெண்ணிறத்தில் ஒளிர்ந்து கொண்டே சிதறின. அவ்வாறு தரைமீது விழுந்த சிதறல்கள் யாவும் தரையைக் குடைந்து மீண்டும் கருநிறச் சாந்தாக மாறிப்போயின. ஆனால், அவற்றைச் சேமிக்க முடியாமல் தவித்தார் ஹென்னிக். வெண்ணிற ஒளியுடன் சிதறியத் துளிகளில் சில அருகில் வைத்திருந்த தண்ணீர்க்குடுவையில் விழுந்தன. அவ்வாறு விழுந்ததுதான் தாமதம், தீக்கங்குச் சிதறல்கள் நிறைந்த குடுவை வெண்ணிறத்தில் மின்சார விளக்கைப்போல ஒளிரத்தொடங்கியது. தீக்கங்குகள் எதுவும் கருநிறமாக மாறாமல், வெண்பருத்தி போல தண்ணீருக்குள் சேகரமாகி, வெண்ணொளி வெள்ளத்தைத் துப்பியதைக் கண்டு, தான் மந்திரக்கல்லைக் கண்டுபிடித்து விட்டதாக மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் ஹென்னிக் பிராண்ட்.

வெண்ணிறமாக ஒளிர்ந்த அந்தத் தனிமம் தான் பாஸ்பரஸ். மனிதச் சிறுநீரில் யூரிக் அமிலத்துடன், பாஸ்பேட்டுகளும் அதிகமிருப்பதால் தான் அதிவெப்பநிலையில் எரிக்க பாஸ்பரஸ் தனியே மீண்டது. இது தண்ணீரில்தான் நிலையாக இருக்கும். ஆகவே, தண்ணீரில்தான் சேமிக்கப்படவேண்டும். தண்ணீரை விட்டு வெளியே எடுத்தால் சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றுடன் (ஆக்சிஜனுடன்) வேகவினையாற்றித் தீப்பற்றிக்கொள்ளும். இதனால்தான், நம்மூர் சித்துவேலைகள் செய்யும் மந்திர/தந்திரவாதிகள் நிறைசொம்பு நீரும், அதனுள்ளே சுடுகாட்டு எலும்புகளை எரிக்கும்போது பெறப்பட்ட பாஸ்பரஸை சேமித்துக்கொண்டு, பச்சை மரங்களையும், அப்பாவி உயிரினங்களை மந்திர நீரால் எரித்துக்காட்டி மக்களை அச்சமூட்டினர். பகலுச்சி வேளையிலும், நடுநிசியிலும்
மட்டுமே பேய்-பிசாசுகள் திரியுமென்று மக்களை நம்பவைத்தார்கள். எப்படி?? பகலெல்லாம் வெயிலால் வெப்பமடையும் மண்ணானது, இரவுநேரங்களில் உறுஞ்சிய வெப்பத்தை வெளியேற்றிக் குளிரும். அவ்வாறு, வெப்பம் வெளியேறும் போது, நெகிழ்வான மண்ணமைப்பைக் கொண்ட இடுகாட்டுப் புதைகுழிகளிலிருந்து, மனித உடம்பிலிருந்த பாஸ்பேட்டுகள் பாஸ்பரஸ் வளிகளாக மாற்றம் பெற்று, மண்விரிசல்கள் வழியே மேலே வரும். அப்போது, வெளிச்சூழலில் இருக்கும் காற்றுடன் வினைப்பட்டு தீப்பிடித்துக்🔥 கொள்ளும். இத்தகைய இடுகாட்டுத் தீயைத்தான் கொள்ளிவாய்ப் பிசாசுகள் என்றனர் நம்மவர். மந்திரவாதிகள் நடுநிசியில், இடுகாட்டில் யாகம் வளர்ப்பதெல்லாம் இந்த தந்திர வேலைகளுக்காகத்தாம். ஆகவே, ஹென்னிக், மந்திரக்கல்லைக் கண்டுபிடித்தாரோ இல்லையோ, பாஸ்பரஸ் என்னும் தனிச்சிறப்பான தனிமத்தைக் கண்டுபிடித்தது தான் வேதியியலில் முதல் ஆராய்ச்சி.

ஆனால் ஹென்னிக் இந்தக் கண்டுபிடிப்பை இரகசியமாக வைத்துக்கொண்டதால், பின்னாளில் இராபர்ட் பாயல் வந்து பாஸ்பரஸை உலகுக்கு அறிமுகம் செய்தார். ஆனாலும், பாஸ்பரஸைக். கண்டுபிடித்த பெருமை ஹென்னிக் பிராண்ட் டையே சாரும்.

முனைவர் செ. அன்புச்செல்வன் MSc PhD MRSC