யாவர்க்குமாம் வேதியியல்-5

Spread the love

யாவர்க்குமாம் வேதியியல்-5
#Chemistry_for_everyone

“செட்டிப்பிள்ளைக்கு நொட்டிச்சொல்லிக் குடுக்கணுமா” என்று கொங்குப்புறத்தில் சொலவடை உண்டு. அதாவது, வணிகம் செய்யும் செட்டியார் வீட்டுப்பிள்ளைகள் பிறப்பிலேயே கூர்மதியுடையவர்கள்!! அவர்களுக்கு எதையும் மேம்போக்காகச் சொன்னால் போதும்!! வலிந்து சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொருள். சோழநாட்டுப் பூம்புகாரில் உதித்து பல்மொழித்திறத்துடன் கடல்கடந்து கிழக்காசிய நாடுகளில் வணிகம் செய்து புகழ்பெற்ற சாதுவன், சேர/கொங்குநாட்டிலிருந்து அரேபியக்கடல் வழியாக எகிப்து நாட்டின் செங்கடல் துறைமுக நகரமான குவாஸீர்-அல் குவாதீம் (Quseir-Al-Qadim) வரை சென்று யவனர்களுடன் (இன்றைய இத்தாலி-அன்றைய உரோம்) வணிகம் செய்த கண்ணன், சாத்தன், விட்ணுதத்தன் போன்ற பழந்தமிழ் வணிகர்கள், “பனங்கல்கண்டு” இருக்கிறதா அண்ணாச்சி??!! என்று கேட்டால், கடையில் இருப்பு இல்லையென்றால், வாடிக்கையாளரிடம் இல்லையென்று சொல்லாமல், “பனங்கருப்பட்டி” இருக்கிறது என்று நேர்மறையாகச் சொல்லி வணிகம் செய்யும் நம்மூர் நாடார்கள் வரையில் யாண்டும் யாவரும் கூர்த்த மதியாளர்கள் தாம்.

நம்மூர் வணிகர்களே இப்படி என்றால் உலகத்தை வணிகத்தாலேயே ஆட்சி செய்யத்துடிக்கும் மேற்குலக வணிகர்களும் கூர்மதி உடையவர்களாகத்தானே இருந்திருப்பார்கள். அப்படியொரு வணிகர்தான் “ஹென்னிக் பிராண்ட்”. கிபி 1669 ஆண்டில் ஜெர்மனியில் பிறந்தவர். கண்ணாடிப்பொருள்கள் விற்கும் சிறுவணிகம் செய்து எதிர்பார்த்த பணம் செய்ய முடியாததால் ஆல்கெமிஸ்ட்டாக மாறினார். இப்போதைய டுபாக்கூர் டாக்டர்களைப்போலவே, மருத்துவப்படிப்பு ஏதும் படியாமலேயே தான் ஒரு மருத்துவர் என்றும், தன கையெழுத்துக்குப் பின்னால் M.D. என்றும் போட்டுக்கொண்டார். செவிவழிக் கதையில் கேட்டறிந்த (Philosopher’s Stone) மந்திரக்கல்லைத் தயாரித்து, அதன்மூலம் தீராத நோய்களையும் தீர்க்கும் வல்லமையுடைய, மூப்புப்பிணியறுத்து எப்போதும் இளமையுடன் இருக்கச்செய்யும் மூவாமருந்தை உருவாக்க முடியுமென்றும், அதே கல்லைக்கொண்டு பாதரசத்தைத் தங்கமாக மாற்றமுடியுமென்றும் நம்பிக் களத்தில் இறங்கினார்.

அப்படியொரு மூவாமருந்து கோமியத்தில் இருக்கிறது என்று நம்மவர்கள் நம்புவதைப்போல, மனிதர்களின் சிறுநீரில் மந்திரக்கல் இருக்கிறது என்று நம்பினார் ஹென்னிக். அதாவது, “பிண்டத்தை அறிந்துகொண்டால் அண்டத்தை உணர்ந்துகொள்ளலாம்” என்னும் கருதுகோளின்படி மனித உடலில் இருக்கும் நீர்மங்களின் பண்புகளை ஆய்ந்தால் மூப்பும்-சாவும் வராத வாழ்வைக் கொடுக்கும் மருந்தைத் தயாரித்துவிடலாம் என்று நம்பினார்.

ஆகவே, முதலில் சிறுநீரைச் சுண்டக்காய்ச்சி
மந்திரக்கல்லாக்க முயன்றார். ஆனால், அவ்வாறு கல்லாக்க அவரொருவரின் சிறுநீர்மட்டும் போதவில்லை. சொன்னால் நம்பமாட்டீர்கள். அவர் வாழ்ந்த, அக்கால ஹம்பர்க் நகரத்தில் மனிதச்சிறுநீர்ச் சேகரிப்போரை யாரும் வியப்பாகப் பார்க்கவில்லை. காரணம், பயிர்களுக்கு உரமாகவும், தோல் பதனிடுதலிலும் ஏன் பல் துலக்குவதற்காகவும் சிறுநீரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிறது ஹம்பர்க் நகரக் குறிப்புகள். ஆகவே, எப்படியும் மந்திரக்கல்லைக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற வேட்கையில், தானறிந்தவர்களிடமெல்லாம் சிறுநீரைக் கேட்டுப்பெற்றார். அவ்வாறு, அவர் சேமித்து ஆய்வுக்காகப் பயன்படுத்திய சிறுநீர் மட்டும் சில ஆயிரம் லிட்டர்கள் என்கிறது அவரைப்பற்றிய நூலொன்று.* (Herbert Breger, Notiz zur Biographie des Phosphor-Entdeckers Henning Brand Studia Leibnitiana, Vol. 19, pp. 68-73, 1987.)

முனைவர் செ. அன்புச்செல்வன் MSc PhD MRSC
12/10/2018

அதுசரி மந்திரக்கல்லைக் கண்டுபிடித்தாரா இல்லையா? நாளை பார்க்கலாம்!!

தொடரும்…